வியாழன் 08 2013

இதனால்தான் சேரனும் திவ்யாவின் தாயும் புலம்புகிறார்கள்.......

.

சினிமாத் துறையில் பணமும் புகழும் பெற்ற சேரன். தன் மகளை மீட்க வேண்டும் என்று நீதிமன்ற வாயிலில் தொலைகாட்சிக்கு பேட்டியளிக் கிறார்.

திவ்யாவின் தாயார் தேன்மொழியும்.தன் காதலனுடன் திருமணம் முடிந்து கணவன் இளவரசன் வீட்டில் இருந்த  தன் மகளை  தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். என்றார்.

இரண்டும் வேறு  வேறு வழியில் வந்ததாக இருந்தாலும் ஒரே நோக்கத்துடனும் சுயநலத்துடனும் ஒரு வித ஆதங்கத்துடனும் கோபத்துடன்தான் செயல்பட்டார்கள்.

ஒன்று சாதிவெறி என்று பகிரங்கமாக தெரிந்தது.இன்னொன்று மோசடி,ஏமாற்று என்று வேறு முகமாக வருகிறது.

இதில்.இறந்துபோன இளவரசன், ஒரு சாப்ட்வேர் பொறியாளராக வெளி நாட்டில் வேலை பார்ப்பவராகவோ, அல்லது வேறு தொழில் அதிகாரியாகவோ இருந்திருந்தால், 

திவ்யாவின் தந்தை நாகராசனும், ஆட்கொணர்வு மனு போட்ட தேன்மொழியும்  சாதி வெறியர்களின் தூண்டுதல்களுக்கும் சாதிவெறிக்கும் பலியாகி இருப்பார்களா?. 

அட,திவ்யாவுதான் நான் அம்மாகூட இருப்பேன்னு சொல்லியிருக்குமா?

.இன்நேரம்.சாதிவெறிக்கும், தங்களை தூண்டிவிட்ட சாதி வெறியர் களுக்கும் பாடை கட்டி இருப்பார்கள். துள்ளி குதிக்கும் உள்ளுர் சாதி வெறியர்களுக்கு எதிராக, தனக்கு பிடித்த கணவருடன் வெளிநாட்டில் வாழும் என் மகளின் வாழ்வை கெடுக்கும் சாதி வெறியர்களை தண்டிக்க்கோரி புகாரும் கொடுத்து இருப்பார்கள்..

இங்கு சாதி வெறிக்கு மாற்றாக கொஞ்சம் பொருளாதாரம் மாற்றாக இருக்கிறது

சேரன் மகள் விசயத்திலும் பொருளாதாரம்தான் பிரதானமாக இருக்கிறது. தாமினியின் காதலன் சந்துரு. ஒரு அமைச்சரின் மகனாகவோ, ஒரு தொழில் அதிபராகவோ, இல்லை.சேரன் சார்ந்திருக்கிற சினிமாவிலோ பிரபலமான இயக்குநகராகவேர், நடிகராகவே இருந்திருந்தால்,

சேரனும்.அமிரும் சொல்கின்ற  சந்துருவின் கெட்ட பழக்கவழக்க நடவடிக்கைகள்  பணக்காரரின் அந்தஸ்தாக மாற்றப்பட்டு இருக்கும் அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டு இருக்கும்.

கேட்கும் வரதட்சனை கொடுத்தும், மனதுக்கு பிடித்த மாப்பிள்ளையை மணமுடித்தும், பெற்றொர்களால் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களில் பிரச்சனைகள் இல்லாமலா இருக்கிறது.

அல்லது உயிர்க்கு உயிராக காதலித்து,காதலுக்கு எதிராக நின்ற பெரும் படையை எதிர்த்து திருமணம் முடித்தவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாமலா இருக்கிறது. அல்லது தோன்றாமல்தான் இருக்கிறதா?

பிரச்சனையே இல்லாத மனிதர்கள்தான் உண்டா?? சமூகமும்தான் உண்டா? ஒவ்வொரு நிகழ்வுகளிலும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன.

மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய குடும்பஸ்தர் ஒருவர். தன் வீட்டுப் பெண்களை தன்னைப்போல் கஷ்டப்படும் நபருக்கு மணம் செய்து கொடுக்க  முன்வருவரா? வரமாட்டார். அப்படியே அவருக்கு மணம் வந்தால் அவருடைய துனைவியார், மணக்கபோகும் பிள்ளைகள் சம்மதிக்குமா??.

ஒரே சாதியில் உள்ள ஆதிக்கசாதிவெறியர் தன் மகளையோ, மகனையோ தன் சாதி வெறிக்கொடி வளர,  இல்லாத வீட்டிலுள்ளவர் நல்லவராக, தன்சாதிக்காக பாடுபவராக இருந்தாலும் அவர்களுக்கு  மணம்தான் செய்து கொடுப்பாரா??? இல்லை.அந்த வீட்டீல்தான் பெண் எடுப்பாரா ?

கஷ்டப்படுபவரே,தன் குடும்பத்தைவிட சற்று வசதிபடைத்த குடும்பத்தைதான் தேடுகிறார்கள். அது காதலாக இருந்தால் ரெம்பவும் வரவேற்று காதலுக்கு பச்சை கொடி காட்டி தாங்கள் காதலுக்கு ஆதரவாளராக காட்டி பீற்றிக் கொள்கிறார்கள்.இப்படித்தான் செல்வந்தர்களின் காதலும்,


இதுவன்றி,அவர்களுக்கு, தங்கள் எண்ணத்துக்கு விரோதமாகவா, எதிர்கால திட்டத்துக்கு மாறாகவோ, காதல் கீதல் என்று எதுவும் நடந்துவிட்டால், சிங்கமாக,புலியாக,சிறுத்தையாக மாறிவிடுவார்கள்.

சேரன்கூட தான் இயக்கிய பொற்காலம் படத்தில் முரளி தன் தங்கை ஊமைப் பெண்ணுக்கு தன் அந்தஸ்க்கு மேல்தான் மணமகன் பார்ப்பார். அந்தச் சிந்தனைதான் சேரனின் சொந்தப்பிரச்சனையிலும் தெரிகிறது.

பொற்கால படத்தில் முரளியுடன் இருக்கும் வடிவேலு முறை மாப்பிள்ளையாக இருந்தாலும், வடிவேலு பேசும் வசனங்கள் சேரனுக்கு சினிமாத்தனமாக தெரிகிறது.

சாதி மறுப்பு திருமணம் செய்கிறவர்கள்கூட, தங்கள் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றபடி வசதியான குடும்பத்தில்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது மாதரி....

புரட்சிகர கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கட்சியில் கூட கட்சிக்காக பாடுபடும் ஏழைத்தோழன் குடும்பத்துக்கும், வசதியானதோழனின் குடும்பத்துக்கும் திருமண சம்பந்தமும் சுலபத்தில் ஏற்ப்படுவதில்லை . 

இப்படித்தான் எல்லோரும் காதலுக்கு மரியாதை செலுத்து கிறார்கள.

கெட்டவனோ,கெட்டவளோ,புரிந்த காதலோ,புரியாத காதலோ,சாதிவெறியர்கள் சொல்லும் நாடகக்காதலோ, காசு பறிக்கும் காதலோ,உண்மைக் கதலோ, கள்ளக் காதலோ, அத்தகைய காதலை 

மனித நேயத்துடன் சீர் தூக்கி பார்த்து அங்கீகரிக்கும் அளவுக்கு நாகரிகமுள்ள  மேன் மக்கள் நிறைந்த அளவுக்கு வளர்ந்தவிட்டதாக சொல்லப்படும் சமூகத்தில். அந்த சமூகத்தில் வாழுபவர்களும் சரி,  மேன் மக்களும்சரி, இன்னமும் மனிதர்களாய் வளரவேயில்லை.

ஒரு ஏழையின் காதல் வளர்வதற்கும் உண்மைக்காதல்வெற்றி பெறுவதற்குமான ஒரு சமூகம்.

அப்படி,  எந்த ஒரு வேறுபாடு அற்ற சமூகம் வளர்வதற்கும், தோன்றுவதற்க்கும் எந்தவித அறிகுறியும்  தெரியவில்லை, 

இதனால்தான்  காதலித்து வெற்றி கண்டதாக சொல்பவர்களும்  களத்தில் குதித்து சாதிவெறியர்களுக்கு பலம் சேர்க்கும் விதமாக, காதலை எதிர்த்து புலம்புகிறார்கள்.  

இதனால்தான் உண்மைக்காதல் தொடர்ந்து பலியாகி வருகிறது. .உண்மைக்காதலர்களும்  பலியாடுகளாக இருக்கின்றனர். .



11 கருத்துகள்:

  1. தோழர் வ.போ காதல் திருமணமா?

    பதிலளிநீக்கு
  2. “எல்லாமே பணத்துக்குத் தாண்டா” என்று சும்மாவா சொன்னார்கள். இருந்தாலும் இளவரசன்-திவ்யா காதலை இதனுடன் ஒப்பிடமுடியாது. ஏனென்றால் சந்துருவைப் பற்றிய பல விடயங்கள், அவனது குடும்பத்தின் பின்னணி என்பன தாமினிக்கே தெரியாது போலிருக்கிறது. ஆனால் இளவரசனின் சாதி தொடக்கம், அவனது குடும்பத்தின் நிலை, கல்வி எல்லாம் தெரிந்து கொண்டு தான் திவ்வியா அவனைத் துரத்தி, துரத்தி காதலித்தார். திவ்யாவின் வற்புறுத்தலால் தான், இளவரசன் திவ்யாவைக் கூட்டிக் கொண்டு போய் பதிவுத் திருமணம் செய்தான்.

    சாதிப்பேய்கள் தலையிடாதிருந்தால், இடைக்கிடையே சில பிரச்சனைகளை அவர்களுக்கிடையே வந்திருந்தாலும், எங்கோ ஒரு மூலையில் ஒற்றுமையாக வாழ்ந்து தானிருப்பார்கள். அதனால் சேரனின் மகளின் பிரச்சனையை திவ்யா-இளவரசன் சோகக்கதையுடன் ஒப்பிடுவது வெறும் அபத்தம். இளவரசனின் அநியாயச் சாவுக்கு தாமும் ஒருவகையில் காரணம் என்ற மனவுறுத்தல் சில சாதிமான்களுக்கு இருப்பதால் தான், சேரனின் மகளின் விடயத்துடன் இளவரசனின் காதலை ஒப்பிட்டு, பதிவுக்கு மேல் பதிவெழுதி மன ஆறுதல் பெற முயற்சிக்கிறார்கள். ஆனால் இளவரசனின் அநியாயச் சாவுக்கு காரணமாக, அல்லது தூண்டு கோலாக இருந்தவர்களை கடவுள் ஒருநாள் நிச்சயமாக தண்டிப்பார். இளவரசனைப் போல் ஒரு தமிழன் தனது பிறப்பை நொந்து கொண்டு சாகும் நிலைமை மறுபடியும் யாருக்கும் ஏற்படக் கூடாது.

    பதிலளிநீக்கு
  3. வியாசன் sir
    பாவம் சார் நீங்க .எத்தனை பேர் செத்துருகிகாங்க இந்த கேவலமான தமிழ்நாட்ல பிறந்தடுக்காக

    பதிலளிநீக்கு
  4. Very well written- excellent analysis.

    உண்மை சுடும்; என்றுமே உண்மை சுடும்..!

    பதிலளிநீக்கு
  5. //அத்தகைய காதலை

    மனித நேயத்துடன் சீர் தூக்கி பார்த்து அங்கீகரிக்கும் அளவுக்கு நாகரிகமுள்ள மேன் மக்கள் நிறைந்த அளவுக்கு வளர்ந்தவிட்டதாக சொல்லப்படும் சமூகத்தில். அந்த சமூகத்தில் வாழுபவர்களும் சரி, மேன் மக்களும்சரி, இன்னமும் மனிதர்களாய் வளரவேயில்லை.

    ஒரு ஏழையின் காதல் வளர்வதற்கும் உண்மைக்காதல்வெற்றி பெறுவதற்குமான ஒரு சமூகம்.//

    Disagree with you.

    காதலையும் கலியாணத்தையும் போட்டுக்குழப்பிகொண்டதால் வந்த பிரச்சினையிது.

    காதல் இருவர் தொடர்புடடையது மட்டுமே. மணம் அவரகளைப் பிரதானமாக வைத்து மற்றவர் செய்துபார்ப்பது.

    இருவர் மட்டுமே உலகம் என்று அந்த இருவர் மட்டுமே நினைத்துவிட்டால் அவர்களிருவரும் தம்மனம் போன போக்கில் மணம் செய்துவாழலாம். பதிவுத்திருமணம். போன்று அல்லது மணமே இல்லாமல் லிவ் இன் ரிலேசன்ஷிப். அவர்கள் உங்கள் பதிவு நபர்களல்ல.

    உங்கள் பதிவுநபர்களுக்கு - அதாவது இளவரசன்-திவ்யாவுக்கு - தாமின்-சந்துருவுக்கு - சமூக அங்கீகாரம் தேவைப்படுகிறது. அவர்கள் மணத்தை ஒரு சாரார் ஆதரவு தெரிவிக்காவிடில் இன்னொருவராவது தெரிவிப்பார்கள். சந்துரு குடும்பம்; இளவரசன் குடும்பம்.

    நீங்கள் சொல்லிம் உலகம் கிடையவே கிடையாது. மணம் வெறும் மாலை மாற்றலன்று தோழரே. அதற்குமப்பால்.

    மணம் செய்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க முடியாது எப்போதும். மணம் செய்வதில் கலவி ஒரு சிறிய பங்கு மட்டுமே. மணம் ஆயிரங்காலத்துப்பயிர் என்பார்கள். We should live on. Living means many many things. I loved him. She loved me. We got married. Over ? No. Coz. life begins there onwards.

    எனவே மணம் என்பதில் பணம் ஒரு பெரிய பங்காற்றுகிறது. அதை நிராகரிக்க முடியாது.

    எனவே அப்பெண், அல்லது அந்த ஆணத்தவிர்த்துவிட்டு, மற்றவர்கள் பணத்தை நோக்கவேண்டியாதிகிறது.

    ஒரு ஏழை ஒரு ஏழையைத்தான் காதலிக்கவேண்டும். ஒரு பணக்காரியைப்பார்த்து மையல் கொண்டுவிடலாம். தப்பில்லை. ஆனால் அவளிடம் சென்று காதல் செய்ய முயற்சிக்கூடாது.

    உண்மைக்காதல் எனபது ஒரு அப்ஸ்ட்ராக்ட் நோஷன் (abstract notion) அது கான்கிரீட் (concrete notion) ஆவதற்கு பலபல காரணிகள் தேவை. மனிதனேயம் என்ற சொல்லையே நீங்கள் ஆராயவில்லை. Loose application.

    Money is sought only to foster the humanity for the couple. On money, a good married life can be built - and that is humanity truly, Sir.

    ஒரு செல்வச்செழிப்பின் வளர்ந்த நபரை குடிசையில் கூழ் குடிக்கும் ஒருவனுடன் அனுப்பிவாழவைத்து எப்படி மனித நேயமாகும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கைக்கு பணம் மிக மிக முக்கியம். ஆனால் கூட்டில் இருந்து பறக்கும் பறவைகளை பண மரத்தில் போய் அமரு என தாய்ப்பறவை நிர்பந்திக்க முடியாது, வேண்டாம். இரை சேர்ப்பதும், சேர்க்காததும், வாழ்வதும், மரிப்பதும் அவரவர் தனி விருப்பம். கவுரவம் காக்க பிள்ளைகளின் மனதை கட்டாயப்படுத்தி கட்டுப்படுத்த நினைப்பது அயோக்கியத் தனம். பிள்ளைகள் 18/21 வயதை தாண்டியதும், அவர் தனி மனிதர்கள் நல்லதோ, கெட்டதோ அவரவர் முடிவுகளை அவரவர் எடுக்க விடுங்கள்.

      நீக்கு
  6. பணமே பிரதானம், பணமே பிரதானம், பணமே பிரதானம்.

    பணம் இருந்து விட்டால் பார்ப்பனரும் பறையரும் சம்மந்திகள் ஆவர், இந்து வீட்டுக்கு முஸ்லிம் மருமகளும் வருவார், தமிழன் சிங்கள பெண்ணையும் மணப்பார். பணமிருந்து விட்டால் சாதி, மதம் எல்லாம் வீசி எறியப்படும்.

    இதுவே சத்தியம், சத்தியம், சத்தியம்.

    பதிலளிநீக்கு
  7. பிரதானம். சத்தியம் என்ற சொற்களைவிட எதார்த்தம் என்ற் சொல்லே சரி. பணம் பாதளம் வரை பாயும்போது அதால் இலகுவாக சாதியையும் ஏற்றத்தாழ்வுகளையும் அழிக்க முடியும்.

    திவ்யா - இளவரசன் கதை, கொங்கு வேளாளக்கவுண்டர், வன்னியர், தேவர்களுக்கு தலித்துக்கள் மேல் வெறுப்பு அவர்களை ஆதிக்கம் செய்து அடிமைகளாக வைத்திருக்க பேரவாக்கொளல் - இவையெல்லாம் பொருளாதார மாற்றங்களின் விளைவே என தற்போது ஆராயும் சமூகவிய்லாளர்கள் சொல்லிவருகிறார்கள்.

    இளவரசன் கிராமம் கொழுத்தப்பட்டதன் பின்னனி அவர்களின் பொருளாதார வளர்ச்சியை நசுக்கவே என்றும் அதற்கு திவ்யா இளவரசன் கதை போர்வையாகப்பயன்படுத்தப்பட்டது என்பதும் சமூகவியலாளர் சொல்லிக்கொண்டிருப்பது.

    அதே போலவே பள்ளர்கள் மூது தொடுக்கப்படும் தாக்கல தென்மாவட்டங்கள். தேவர்கள் - பழம்பெருமை பேசி தம் இளையதலைமுறைய வளரவிடாமற்செய்ய அவர்களிடையே வேலையில்லாத்திண்டாட்டமும் வறுமையும் குடிபுக, அதற்கு மாறாக பள்ளர்கள் பொருளாதார ந்ன்னிலையை அடைய அடைய - முன்னால் அடிமைகள் தம்மை விட் உய்ரவதா - என்ற பின்னணி எண்ணமே ஜாதிக்கல்வரங்களின் அடிப்படை.

    கொங்கு வேளாளக்கவுண்டரிடம் கைகட்டி அடிமைக்கூலிகளாக வேலைபார்த்த தலித்துகள் இன்று அவர்களிடம் வேலை பார்க்கவில்லை. அவர்கள் த்ன்னிச்சையாக தங்கள் வாழ்க்கையைத் தேடி வெற்றியும் கண்டுவர, அது அக்கவுண்டரின் தலித்து எதிர்ப்பாக மாறுகிறது.

    இக்கருத்துகளின் சாராம்சங்களை தி ஹிந்துவில் கேம்பிரிஜ் கலாசாலை பேராசிரியரின் கட்டுரையிலும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்து செய்திக்கட்டுரையிலும், கொடியங்குளம் தலித்துகள்மீது நடந்த தாக்குதலகளுக்குப்பின் வந்த ஹிந்தியர்ன் எக்ஸ்பிரச் கட்டுரைகளிலும் காணலாம்.

    கண்ணதாசன் சொற்களைக் கவனிக்கவும்.

    "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது. 'கருடா சவுக்கியமா?'
    "இருக்குமிடத்திலிருந்தால் எல்லாம் சவுக்கியமே" கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது"

    என்ன அர்த்தமது?

    இங்கே தலித்துகள் அன்று போல கைக்கூலிகளாக இருந்து வறுமையில் உழன்று, சேரிகளில் அடிப்படை வசதிகளில்லாமல் கழிந்து, முன்னேறவிரும்பினாலும் முயன்றாலும் உரிமைகள் மறுக்கப்பட்டு - இருந்தால், எல்லாம் சவுக்கியமே என்கிறார் கண்ணதாசன்.

    அதில் அர்த்தமுள்ளது.

    என்ன அர்த்தம் என் கணிப்பின்படி?

    ஜாதிக்கலவரங்கள் வாரா. "பறையனும் பள்ளனும் கூலியுயர்வு கேட்டால் கொடுத்திடவேண்டுமா? எனக்கூறியபடியே தானே நாயுடுக்கள் கீழவெண்மணியில் பெண்டிரையும் குழந்தைகளயும் எறித்துக்கொன்றார்?. கேடகாமலிருந்தால்? பரதேசி படத்தைப் பாருங்கள். Bweggars should not be choosers. கொடுத்த்தை வாங்கிட்டுப்போடா பன்னிப்பயலே!

    தமிழகம் அமைதிப்பூங்காவா இருக்க செய்ய வேண்டிவை:

    1. இட ஒதுக்கீடை ஓபிசிக்களுக்கு மட்டும் கொடுத்து, தலித்துகளுக்கில்லாமல் செய்ய வேண்டும்
    2. தலித்துகளுக்கு வெளிநாடு செல்ல விசா வழங்கப்படக்கூடாது. வழங்கினால் அங்கு போய் சம்பாதித்துவிடுவான்.
    3. சேரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யக்கூடாது
    4. அங்கு எவரும் செங்கல் வீடுகள் கட்டக்கூடாது.
    5. கல்வியில எந்த உதவியும் செய்யக்கூடாது.
    6. 5ம்வரை தமிழ்மட்டும் எழத வாசிக்க கற்றுக்கொடுக்கக் கூடாது.
    7. எந்த வேலைக்காண திறமைகளையும் கற்றுக்கொடுக்ககூடாது. பிட்டர் டர்னர். காரணம் we need unskilled labour which is possible if dalits are not trained.
    8. கண்ணதாசனின் பாடல் வரிகள் தமிழ்க்குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. //என்ன அர்த்தமது?

    இங்கே தலித்துகள் அன்று போல கைக்கூலிகளாக இருந்து வறுமையில் உழன்று, சேரிகளில் அடிப்படை வசதிகளில்லாமல் கழிந்து, முன்னேறவிரும்பினாலும் முயன்றாலும் உரிமைகள் மறுக்கப்பட்டு - இருந்தால், எல்லாம் சவுக்கியமே என்கிறார் கண்ணதாசன்.//

    திரு,குலசேகரன்,

    மன்னிக்கவும், கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உங்களின் கருத்து ஒரே குழப்பமாக இருக்கிறது. :)

    கண்ணதாசனின் இந்த பாடல் அடிகள்
    “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது. 'கருடா சவுக்கியமா?'
    "இருக்குமிடத்திலிருந்தால் எல்லாம் சவுக்கியமே" கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது"

    என்ற பாடல் வரிகள் தலித்துகளின் நிலைமைக்குப் பொருந்தும் போல் எனக்குப் படவில்லை. அதாவது கருடனால் பாம்பை தாக்க முடியவில்லை, ஏனென்றால் அது சிவனின் கழுத்தில் பாதுகாப்பாக, கருடனால் தொடமுடியாத வகையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அதாவது உயர்ந்த இடத்தில் இருக்கும் போது, எல்லாம் நன்றாக அதாவது செளக்கியமாக தானிருக்கும் என்பது தான் கவிஞர் கண்ணதாசனின் அந்த பாடல் வரிகளின் கருத்தே தவிர தலித்துகள் தாமும், தம் பாடுமாக, கவுண்டர்களை விட்டு விலகி தன்னிச்சையாக வாழ முனைந்தாலும் அவர்கள் உயர்ந்த இடத்தில், கவுண்டர்களால் எட்ட முடியாத அல்லது பழி வாங்க முடியாத பாதுகாப்பான நிலையில் இல்லை. அதனால் அந்த பாடல் வரிகள் தலித்துகளுக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  9. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. அவை வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
  10. இல்லாதான் காதல் இயல்பில் இடையூறு
    செல்வந்தன் சொல்லும் நெறி !

    எல்லாம் நேரம் !

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...