பக்கங்கள்

Thursday, February 06, 2014

வெள்ளை கொக்கு என் கைளிலே..................சிறுகதை

நகராட்சி ஆரம்ப பள்ளியில் இருக்கும்  அய்ந்தாவது வரை படித்துவிட்டு அடுத்தாக ராஜம் வித்தியாலய நடுநிலைப்பள்ளியில் ஆறாவது வகுப்பில் புதிதாய் வந்த சேர்ந்த மாணவன் பெயர் கணேசன்.

 புதிய இடத்தால்.புதிய முகத்தால் ஏற்ப்பட்ட மிரட்சியால் சில நாட்கள் யாருடனும் ஒட்டாமல் இருந்தான. அந்த மிரட்சியுடனும் பயத்துடனும் ஒட்டாமல் இருந்த நாட்களில் இவனுடன் நட்பு  பாராட்டினான் உடன் படித்த முருகேசன் என்பவன்.

நாட்கள் சென்று வாரங்கள் கடந்து மாதங்கள் வந்தன. கணேசனுக்கு மிரட்சியுமில்லை.படிக்காததினால் டீச்சர் அடிக்கும்  பிரம்பு அடிக்கும் பயமில்லாமல் மரத்துப் போயின அவனுக்கு..

கணேசனுடைய டீச்சர் ஊதிவிட்டால்,தூசியைவிட முன்னே பறந்து செல்லும் ஒல்லிக் குச்சி டீச்சர். மற்ற டீச்சரெல்லாம் குட்டி யானை மாதிரி இருந்தாலும் இவன் டீச்சர் ஒல்லியாகவே இருந்தார் . அதோடு எப்பப் பார்த்தாலும் கைக்குட்டையால் மூக்கை சிந்திக் கொண்டே இருக்கும். அந்த டீச்சர்

வீட்டுப்பாடம் எழுதி வராததினால்.டீச்சரைவிட கொஞ்சம் தடியாக இருக்கும் குச்சியால் கணேசனை அடிக்கும்போது, கணேசனுக்கு டீச்சர்மேல் கோபம் வருவதற்குப் பதிலா.பரிதாபம்தான் வரும்  .

தன்னை அடித்தாவது டீச்சருக்கு பலம் வரட்டும் என்பான். வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டு  வராததற்கு அதுவும் ஒரு காரணமாக்கி விட்டான்

சில வேளைகளில், குச்சியை தூக்கி அடிக்க முடியாமல். வகுப்புக்கு வெளியில் முட்டி போட வைத்து விடுவார்.

கணேசனுக்கும் முருகேசனுக்கும் அடி வாங்குவதைவிட முட்டி போடுவது மிகவும் சிரமாயிருந்தது. சிரமாயிருந்தது என்பதைவிட பயமாக இருந்தது.
அதற்குக் காரணம் பள்ளி பிரின்சிபால் அய்யாவின் கொட்டுதான்.

முட்டி போட்டு இருப்பதை அய்யா பார்த்துவிட்டால்.அவ்வளவுதான் அய்யாவிடம் கொட்டுவாங்காமல் தப்பிக்க முடியாது. அப்படி கொட்டு வாங்கி விட்டால் ஒரு வாரத்துக்காகவது மண்டை வீங்கி வலி எடுக்கும்.

இந்த வலிக்கு பயந்தேதான். ஒவ்வொரு வாரத்திற்கு ஒரு வகுப்பு மாணவ-மாணவியரும்  பள்ளி யை சுத்தம் செய்ய அதிகாலை ஆறு மணிக்கு  தவறாமல் சென்றுவிடுவார்கள். பள்ளியின் சுத்தம் செய்யும் வேலைக்கு செல்லாதவர்கள் அன்று முழுவதும் முட்டி போடுவதோடு அந்த அய்யாவின் கொட்டு வேறு வாங்கி தொலைக்கனும்.

இந்தக் கொட்டுக்கு பயந்தே,முட்டி போடச் சொல்லும் நாட்களில் மாணவர்கள் அழுது புரண்டு அழுது விடுவார்கள்.  ஒரு வகுப்புக்கு முப்பது மாணவ மாணவியர்கள் உள்ளதில் கணேசனையும் முருகேசனையும் சேர்த்து ஆறு பேர்கள்தான் வீட்டுப்பாடம் எழுதி வராதவர்கள்.

 கொ்ட்டுக்கு பயந்த முருகேசன்  வீட்டுப்பாடத்தை தனக்கு எழுதிக் கொண்டு, சீக்கிரமாகவே வகுப்புக்கு  வந்து நண்பனுக்கு எழுதிக் கொடுப்பான். கணேசன் வீடு பள்ளிக்கு சற்று தொலைவில், முருகேசன் வீடோ,ரெம்ப தூரத்தில்.

இப்படியாக நண்பர்கள் இருவரும் அய்யாவின் கொட்டுலிருந்து தப்பித்து வந்தனர். ஒரு நாள் ஒல்லி டீச்சரின் அடி குச்சி காணாமல் போய்விட்டது. ஒல்லி டீச்சருக்கோ நண்பர்கள் இருவருர் மீது சந்தேகம். நண்பர்கள் இருவருக்கும்  டீச்சரிடம் போட்டு கொடுக்கும்  சக மாணவனான சேது ராமன் மீது சந்தேகம்

டீச்சர் நண்பர்கள் இருவரையும் மிரட்டி உருட்டி பார்த்தும் சத்தியம்மேல் சத்தியம் செய்து தங்களுக்கு தெரியாது என்று சாதித்தனர். நண்பர்கள் இருவரும் கொதித்து போயி. அன்று மதியம்  அன்றைய தமிழ்நடிகர். ஜேம்ஸ்பான்டான ஜெய்சங்கர் பாணியில் சேதுராமனை டூசு்ம் டசும் கொடுத்து விட்டனர்.

அடி வாங்கிய சேதுராமனோ.ஒன்னுக்கு ரெண்டா.டீச்சரை ஒல்லீக்குச்சி தேவாங்கு என்று கேலி செய்வதாக  மூட்டி கொடுத்துவிட்டதோடு, அடி குச்சியை  இவர்கள் ஒடித்துவிட்டதாகவும் பொய் சொல்லி ஒடித்த குச்சியை டீச்சரிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

ஏற்கனவே,நண்பர்கள் இருவரையும் சந்தேகம் கொண்ட டீச்சர் கோபம் கொண்டு கொதித்து போயி,நாளைக்கு வகுப்புக்கு வரும்போது அவுங்க அவுங்க அப்பா.அம்மாவை கூட்டிட்டு வரனும்.கூட்டிட்டு வரலேன்னா அய்யா விடம் சொல்லிடுவேன் என்று டீச்சர் கண்டிப்பாக சொல்லி விட்டார்.

 நண்பர்கள் இருவரையும் மாட்டி விட்ட சந்தோசத்தில் சேதுராமனும் அவனின் சேத்தாளிகளும் காலரை தூக்கவிட்டுக் கொண்டு டீச்சரிடம் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டனர்.

மறுநாள் நண்பர்கள் இருவரும் வகுப்புக்கு வந்தவுடன் டீச்சரிடம் தங்கள் அம்மாக்கள் நாளைக்கு வருவதாக சொல்லியதை சொன்னார்கள். டீச்சர் சந்தேகம் கொண்டு பார்க்க..., சத்தியம் செய்தார்கள்.

இவர்களின் சத்தியத்தை நம்பாத டீச்சர் இவர்கள் இருவரையும் தனியாக உட்கார வைத்தார். அடுத்த ஆறாம் வகுப்பு  “பி” பிரிவு டீச்சர் லீவு போட்டுள்ளதால் அந்த வகுப்பை கவனிப்பதற்க்காக, வகுப்பு தலைவி கிருஷ்ன வேணியை கவனிக்க சொல்லிவிட்டு, சத்தம் போடக்கூடாது, அமைதியா.க பாடம் படிக்கனும் என்று மிரட்டல் விட்டுட்டு அடுத்த வகுப்புக்கு சென்று விட்டார் டீச்சர்.

தனியாக அமர்ந்திருந்த கணேசனும் முருகேசனும் கசு குசுன்னு மெதுவாக பேசினார். இதைக கவனித்த கிருஷ்னவேணி “ டேய் கணேசா...........பேசாதடா..
பேர எழுதி வச்சுருவேன் ஆமா...... என்றாள்.

முருகேசன், ஒரு விரலைக்காட்டி“பிளீஸ்” ஒரு வாட்டி.இனிமே பேசமாட்டான் என்று வேண்டினான். சிறிது நேரம் வகுப்பு அமைதியாக இருந்தது.

ஒவ்வொரு மாணவ மாணவியரும் அமைதியாக தங்களின் விரல்களை பார்த்த வண்ணம் ஊமைச் சாடையாக  கிசு கிசுத்தனர்.

நண்பர்கள் இருவரும் என்னவென்று கவனித்தனர். கைகளிலுள்ள விரல் நகங்களில் வெள்ளை கொக்கு இருக்கிறதா என்று பார்த்தனர். சிலருக்கு வெள்ளை சிறு புள்ளியாகவும் சிலருக்கு விரல் நகங்கள் மஞ்சளாகவும் பலருக்கு எதுமே இல்லாமல் இருந்தன.

சேதுராமன்  பத்து விரல் கை  நகங்களில் ஒரு நகத்தில் மட்டும் வெள்ளை கொக்கு இருப்பதை அனைவருக்கும் காட்டிக் கொண்டு இருந்தான்.

கணெசனும் தன்விரல் நகங்களை பார்த்தான் அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பத்துவிரல் நகத்திலும் வெள்ளை கொக்கு பறந்தபடி இருந்தது.
தன் நண்பன் முருகேசனிடம் காட்டினான்.

”டேய, ஆமடா”  என்று வாய் பொளந்தான். சேது ராமனை தோற்கடித்த சந்தோசத்தில்“ வெள்ளை கொக்கு என் கைகளிலே” என்று கத்தியபடி மற்ற மாணவர்களிடம் தன் கை விரல் நகங்களிலுள்ள வெள்ளை கொக்குவை காட்டி வெற்றி முழக்கமிட்டான்.

அந்த வெற்றி முழக்கத்துக்கு அறிகுறியாக வகுப்பு கரும்பலகையில் கிருஷ்னவேணியால் கணேசன் பெயரும் முருகேசன் பெயரும், பொறிக்கப்பட்டன. மூன்றாதவதாக சேது ராமன் பெயரும் மற்ற சிலரது பெயரும் எழுதப்பட்டன.


 பின் குறிப்பு்----

 கைவிரல் நகங்களில் வெள்ளை கொக்கு பறந்து இருந்தது இரத்த சோகையின் அறிகுறி என்று பத்தாவது படித்து பெயில்  ஆகி  ஊரு சுற்றிக் கொண்டு இருந்த பின்னாளில்தான்  தெரிந்தது கணேசனுக்கு......

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com