வியாழன் 15 2015

ஒரு ஒய்யாரக் கொண்டையில் இருந்த ஈறும் பேனும்


படம்- வினவு..
கர்நாடகா லோக் ஆயுக்தா : ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
லோக்பாலும் லோக் ஆயுக்தாவும் ஊழலை ஒழிக்க வந்த இரட்டைக் குழல் துப்பாக்கியாக வருணிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடகா லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழலும் அதிகாரமுறைகேடுகளும் அந்தச் சித்திரத்தில் சாணியை அடித்துவிட்டன. “மற்றவர்கள் ஊழல் செய்தால் லோக் ஆயுக்தாவில் முறையிடலாம்; அந்த லோக் ஆயுக்தாவிலேயே ஊழல் நடந்தால் யாரிடம் முறையிடுவது?” – எனக் கேட்டு விக்கித்து நிற்கிறார்கள் ஊழலுக்கு எதிராகப் போராடிவரும் சமூக ஆர்வலர்கள். எனினும், இந்த விவகாரத்தை இவ்வளவு எளிமையாக – அந்தத் தெய்வத்தையே விசாரிப்பது யார் என்பது போன்ற நாடகபாணி வசனத்திற்குள் சுருக்கிவிட முடியாது.

கர்நாடகா லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழலில் அந்த அமைப்பின் தலைமையே சம்பந்தப்பட்டிருப்பதுதான் இங்கே கவனங்கொள்ளத்தக்கது. அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவ், அவரது உறவினர் கிருஷ்ண ராவ், லோக் ஆயுக்தாவின் இணை கமிஷனர் (Joint Commissioner) சையது ரியாஸ், லோக் ஆயுக்தாவின் தலைமை நிலைய ஊழியரான வீ.பாஸ்கர், ஹோட்டே கிருஷ்ணா – இவர்கள்தான் லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழல், அதிகாரமுறைகேடுகளின் சூத்திரதாரிகள்.
பதவி ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகள்தான் இந்தக் கும்பலின் பலியாடுகள். அத்தகைய அதிகாரிகளைத் தொலைபேசி அல்லது கைபேசி வழியாகத் தொடர்புகொள்ளும் இந்தக் கும்பல், “நீங்கள் இலஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் இருக்கிறது. அதை அமுக்குவதற்கு இவ்வளவு பணம் வேண்டும்; இல்லையென்றால் மானம் மரியாதையோடு ஓய்வுபெற்றுப் போக முடியாது” என மிரட்டிப் பணம் பறித்து வந்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 2013-ல்தான் கர்நாடகா லோக் ஆயுக்தாவின் தலைமை நீதிபதியாக பாஸ்கர் ராவ் நியமிக்கப்பட்டார். பாஸ்கர் ராவுக்கு நெருக்கமான இந்தக் கும்பல், அவர் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளிலேயே 109 அதிகாரிகளை மிரட்டி, ஏறத்தாழ 180 கோடி ரூபாய் அளவிற்குப் பணம் பறித்திருக்கிறது. அதிகாரிகளை மிரட்டுவதற்கு லோக் ஆயுக்தா தலைமை அலுவலகத் தொலைபேசியையும், அவர்களை மிரட்டி வரவழைத்துப் பேரம் நடத்துவதற்கான இடமாக லோக் ஆயுக்தாவின் தலைமை அலுவலகத்தையும் பயன்படுத்தி வந்திருக்கிறது, இக்கும்பல். திருடன் தலையாரி வீட்டில் ஒளிந்துகொண்ட பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கோ தலையாரி வீடே அலிபாபா குகையாக இருந்திருக்கிறது.
இக்கும்பலால் மிரட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற செயற்பொறியாளர், தன்னிடம் “ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக” லோக் ஆயுக்தாவின் போலீசு கண்காணிப்பாளர் சோனியா நாரங்கிடம் வாய்வழியாகப் புகார் அளித்தார். இதனையடுத்து 23 அதிகாரிகள் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் புகார் அளித்தனர். இவற்றின் அடிப்படையில் சோனியா நாரங்க் விசாரணை நடத்தி, அஸ்வின் ராவ் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தார். லோக் ஆயுக்தாவின் துணை நீதிபதி ஆதி சுரேஷ் இந்த ஊழல் குறித்து ஒரு உள் விசாரணை நடத்த உத்தரவிட்டு, பத்திரிகைகளுக்கும் இந்த ஊழல் குறித்த தகவல்களை அளித்தார்.
முதற்கட்ட விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபொழுதே, அவற்றை முடமாக்கும் சதித்தனத்தில் இறங்கினார், தலைமை நீதிபதி பாஸ்கர் ராவ். லோக் ஆயுக்தா போலீசு கண்காணிப்பாளர் சோனியா நாரங்க் நடத்தும் விசாரணைக்குத் தடை விதிக்குமாறு லோக் ஆயுக்தா கூடுதல் போலீசு டி.ஜி.பி பி.எஸ்.மீனாவிடம் தெரிவித்த பாஸ்கர் ராவ், இந்த ஊழல் புகார்களை பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசு விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
கர்நாடகா லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழல் குறித்து முறையான விசாரணை கோரி லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைமை நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவின் தலைமையில் பெங்களூருவில் நடந்த ஆர்ப்பாட்டம்.
இந்தத் தில்லுமுல்லுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் இன்னொருபுறமோ கர்நாடகா உயர்நீதி மன்றம் லோக் ஆயுக்தா துணை நீதிபதி ஆதி சுரேஷ் உத்தரவிட்டிருந்த உள் விசாரணைக்குத் தடை விதித்தது. சமூக ஆர்வலர்களும், வழக்குரைஞர்களும் வழக்கம் போல சி.பி.ஐ. விசாரணை கோர, அதற்கு, “லோக் ஆயுக்தா சுதந்திரமான அமைப்பு; அதனைக் கலைக்க முடியுமே தவிர, அதன் மீது விசாரணை நடத்த உத்தரவிட முடியாது. அதன் விதிகளிலேயே அதனை விசாரிப்பதற்கான வழிமுறைகள் இல்லை” எனத் தெளிவுபடுத்தினார், கர்நாடகா மாநில முதல்வர்.
ஆயிரம் இருந்தாலும் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லியாக வேண்டுமல்லவா! இந்த ஊழலை விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திருக்கிறது, கர்நாடகா அரசு. அக்குழு அஸ்வின் ராவ் உள்ளிட்ட சிலரைக் கைது செய்ததோடு, அவர்களைத் தமது காவலில் வைத்து விசாரணையை நடத்திவருகிறது. இந்த விசாரணையை ஒரு நாடகம் எனக் குற்றம் சுமத்தியிருக்கிறார், கர்நாடகா லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைமை நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. “பாஸ்கர் ராவ் தனது மகனைக் காப்பாற்ற முயலுகிறார்; மற்றவர்களோ அதன் மூலம் தங்களையும் சேர்த்துக் காப்பாற்றிக் கொள்ள முயலுகிறார்கள்” எனக் குறிப்பிட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையை அம்பலப்படுத்தியிருக்கிறார், அவர்.
***
லோக்பால், லோக் ஆயுக்தா மட்டுமல்ல, மைய ஊழல் தடுப்பு கமிஷன் (Central Vigilance Commission), தகவல் அறியும் உரிமைச் சட்டம், இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் (Whistle Blower Act) – என கடந்த சில ஆண்டுகளில் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு பல புதிய சட்டங்களும், புதிய அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. குடிமைச் சமூக அமைப்புகளும் தன்னார்வலர்களும் மட்டுமின்றி, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரும் இத்தகைய அமைப்புகளைக் கைதட்டி வரவேற்பதோடு, நிலவுகின்ற அரசியல் கட்டமைப்புக்குள்ளேயே இவற்றின் மூலம் ஊழலையும் அதிகார முறைகேடுகளையும் ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் முயன்று வருகின்றனர். அவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த மோசடியான நம்பிக்கை ஏற்கெனவே பல்லிளித்துவிட்டது என்பதற்கு கர்நாடகா லோக்ஆயுக்தாவையும் தாண்டிப் பல உதாரணங்கள் உள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிறவி ஊனம் கொண்டதாகும். இராணுவம் மற்றும் உளவுத் துறை நிறுவனங்களிடமிருந்து அவற்றின் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெற முடியாதபடி அவற்றுக்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விலக்கின் மூலம் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அந்நிறுவனங்களில் புழுத்து நாறும் ஊழலையும் மறைத்துவிட முடியும். அதேசமயம், மற்ற துறைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இச்சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுவிடுவதும் சாத்தியமானதல்ல.
உச்சநீதி மன்ற நீதிபதிகளின் மருத்துவத்திற்கு அரசு எவ்வளவு செலவு செய்கிறது என்ற விவரத்தைக் கேட்டுத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், “இது நீதிபதிகளின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகும்” எனக் கூறி, அந்த விவரத்தை அளிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது. இப்படி ஒவ்வொரு துறையும் ஏதோவொரு காரணத்தைக் கூறித் தகவல்களை அளிக்க மறுப்பதும், தகவல்களுக்குப் பதிலாக வெற்றுக் காகிதக் குப்பைகளை அனுப்பி வைத்து ஏமாற்றுவதும் இந்த விவகாரத்தில் சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. மேலும், உச்சநீதி மன்றம், சி.பி.ஐ., மத்திய பணியாளர் தேர்வாணையம், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல அரசுத் துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து தம்மையும் விலக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்துள்ளன.
இதற்கு அப்பால், தகவல் உரிமை ஆணையங்கள் அரசின் எடுபிடியாகச் செயல்பட்டு வருவதற்குத் தமிழகத் தகவல் ஆணையத்தை முன்மாதிரியாகக் குறிப்பிடலாம். தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் இரண்டு ஆணையர் பதவிகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பாமல் காலியாக விட்டிருப்பதன் மூலம் ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கி வைத்திருக்கிறது, அ.தி.மு.க. அரசு. தகவல்களை உரிய காலத்தில் தராத அதிகாரிகள் மீது அபராதம் விதிக்க வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறிப்பிடுகிறது. ஆனால் தமிழகத் தகவல் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீபதியோ, “அரசு அதிகாரிகள் மீது அபராதம் விதித்து அரசு கருவூலத்தை நிரப்ப நான் விரும்பவில்லை” எனக் கூறி, அதிகாரிகளின் பாதுகாவலனாகத் தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் அதிகாரிகள் தகவல்களைத் தராமல் கிடப்பில் போடுவதற்கான வழியைத் திறந்து வைத்துள்ளார், அவர்.
தமிழக அரசின் விளம்பரங்களுக்காக செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்த விவரங்களைத் தருமாறு சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ. இளங்கோ விண்ணப்பித்த மனுவிற்குப் பதில் தராமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், இது குறித்த விசாரணை தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி முன் நடந்தது. அப்பொழுது சிவ.இளங்கோ தன் முன்னே நாற்காலியில் அமர்ந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, அவர் தன்னைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகப் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி அவரைக் கைது செய்ய வைத்தார், ஸ்ரீபதி. அரசிடமிருந்து தகவல் கேட்டால் கைதுதான், சிறைதான் என இதன் மூலம் எச்சரித்திருக்கிறது, தமிழக அரசு.
மைய ஊழல் தடுப்பு ஆணையத்தில் கடந்த ஜனவரி 2007 தொடங்கி செப்டம்பர் 2014 முடிய அதிகாரமுறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக 3,634 புகார்கள் பதியப்பட்டுள்ளன. இதில் 1,063 புகார்கள் மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதில் 78 வழக்குகளில் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் – இடமாறுதல், பதவி உயர்வும் சம்பள உயர்வும் நிறுத்திவைப்பு என்ற வகையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஊழலில் ஈடுபட்ட ஒரு அதிகாரி மீதுகூட கிரிமனல் குற்றவழக்கு தொடர பரிந்துரைக்கப்படவில்லை. இது, ஊழல் தடுப்பு ஆணையம் என்பது சோளக்காட்டுப் பொம்மையைவிட நகைப்புக்குரிய நிலையில் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இப்படி புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் கேலிக்குரியதாக இருக்கின்ற அதேபொழுதில், மோடி அரசோ ஊழல் தடுப்புச் சட்டங்களில் கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது காணப்படும் வீரியத்தையும் பிடுங்கிவிடும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. பொருளாதார வளரச்சிக்குச் சாதகமாக அதிகாரிகளின் சுதந்திரமான செயல்பாடுகளை உத்தரவாதப்படுத்துவதற்கு, ஊழலையும், நேர்மையான பிழையையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டம்-1988-ல் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென நிதியமைச்சரே பரிந்துரை செய்திருக்கிறார். இத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்து நிற்கின்றன. இதன் பொருள் இயற்கை வளங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கைமாற்றிவிடுவதில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளைச் சட்டபூர்வமாக்குவது தவிர வேறில்லை.
இதனையடுத்து, அரசு இயந்திரத்துக்குள் நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்துவோரைத் தடுக்கும் நோக்கத்தோடு இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தங்களைச் செய்திருக்கிறது, மோடி அரசு. இதன்படி, ஊழல் புகார்களைத் தெரிவிக்கும் இடித்துரைப்பாளர்கள் தமது பெயர், முகவரியை மறைத்துக் கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்பது கைவிடப்பட்டு, அவர்கள் தமது அடையாளத்தை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும்; ஊழல் புகார்களைத் தெரிவிப்பவர்களை அரசு அலுவல் இரகசியச் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது என்பதும் கைவிடப்பட்டு, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தும் திருத்தங்களும் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு அப்பால் தேசப் பாதுகாப்பு, அந்நிய நாடுகளில் இருந்து பெறப்படும் பகிர்ந்துகொள்ள முடியாத தகவல்கள், வர்த்தக நலன்கள் ஆகியவை குறித்த புகார்களை விசாரிப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டு, இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் மேலும் நீர்த்துப் போகுமாறு திருத்தப்பட்டுள்ளது.
காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான் லோக்பால் சட்டம் என்ற பஞ்சு மிட்டாய் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. ஊழலைச் சகித்துக்கொள்ளாத யோக்கியவானாகக் காட்டிக்கொள்ளும் மோடி அரசோ, இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செவது என்ற பெயரில் இந்த பஞ்சு மிட்டா சட்டத்தையும் முடக்கி வைத்திருக்கிறது. இதன் விளைவாக, மைய அளவில் செயல்பட வேண்டிய லோக்பால் அமைப்பை உருவாக்குவதையும் தடுத்து வைத்திருக்கிறது.
இந்தக் குழிபறிக்கும் வேலைகள் ஒருபுறம் நடந்துவர, தகவல் அறியும் உரிமைச் சட்டம், இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் போன்றவை ஊழலை ஒழிப்பதைவிட, அவற்றை ஆதரித்துச் செயல்படுபவர்களைத்தான் அபாயகரமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. தகவல் உரிமை ஆர்வலர்கள் கொல்லப்படுவது இன்னமும் நாடெங்கும் தொடர்ந்து நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் உரிமைச் செயற்பாட்டாளர் மதியழகன் தற்பொழுது குண்டர் சட்டத்தில் கைது செயப்பட்டிருக்கிறார். காரணம், ராசிபுரம் அருகேயுள்ள மோளப்பாளையத்திலுள்ள ஒரு மலையைச் சட்டவிரோதமாக வெட்டியெடுத்ததில் அம்மாவட்ட ஆட்சியர் வரை பலருக்கும் உள்ள பங்கை வெளிக்கொணர்ந்து, அந்தக் கொள்ளையை எதிர்த்துப் போராடியதுதான், அவர் செய்த ‘குற்றம்’. வியாபம் ஊழலை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் பாண்டேவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பை தில்லி போலீசு விலக்கிக் கொண்டுவிட்டதால், அவர் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இருப்பதற்குள்ளேயே கர்நாடகா லோக் ஆயுக்தா அமைப்புதான் உருப்படியானது என்று பேசப்பட்டு வந்த நிலையில்தான், அதன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறியிருக்கிறது. இந்நிலையில் மற்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் லோக் ஆயுக்தாக்களின் யோக்கியதையைப் பற்றிப் பேச வேண்டிய தேவையேயில்லை. பழைய அமைப்புகள் போலவே இப்புதிய அமைப்புகளும் தமது கடமைகளை ஆற்ற மறுத்து, அதற்கு எதிராகத் திரும்பிவிட்டன. அன்னா ஹசாரேயும் ஆம் ஆத்மி கட்சியினரும் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்டு, இப்புதிய அமைப்புகள் குறித்து உருவாக்கிய பிரமையெல்லாம் தகர்ந்து தவிடுபொடியாகிவிட்டது.
இருப்பவர்களுக்குள்ளே கொஞ்சம் யோக்கியவான் என வடிகட்டிப்பட்டுதான் நீதிபதி பாஸ்கர் ராவ் கர்நாடகா லோக் ஆயுக்தாவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரோ புறங்கையை நக்கிவிட்டார். ஆனாலும், நடுத்தர வர்க்க அறிவுத்துறையினர் லோக் ஆயுக்தா போன்ற நிறுவனங்களுக்கு இன்னும் ஆகச்சிறந்த, அப்பழுக்கற்றவர்களைத் தேடிப் பிடித்து நியமிப்பதுதான் தீர்வு எனக் கூறி, இந்தப் பொத்தலை அடைத்துவிட முயலுகிறார்கள். இந்த சூப்பர்மேன் தத்துவமெல்லாம் அந்நியன், இந்தியன் போன்ற சினிமாக்களுக்குத்தான் பொருந்திப் போகுமே தவிர, தனியார்மய யுகத்தில் நடைபெறும் ஊழலைத் தடுக்க மயிரளவிற்குக்கூடப் பயன் தராது. நம் கண் இருப்பவர்களெல்லாம் ஸ்ரீபதி, பாஸ்கர் ராவ் போன்ற பசுந்தோல் போர்த்திய புலிகள்தான். அத்திபூத்தாற் போல ‘அப்பழுக்கற்றவர்கள்’ இந்த நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டாலும், அவர்களும் கூடத் தமக்குத் தேவைப்படும் ஊழியர்களுக்கும், தமது நடைமுறைக்கும் ஏற்கெனவே ஊழலால் நிறைந்து இருக்கும் அரசு இயந்திரத்தைதான் நம்பியிருக்க வேண்டும் எனும்பொழுது, இந்த நிறுவனங்கள் கூத்தில் கோமாளி வேடம் போடுவதைத் தாண்டி வேறு எதையும் சாதிக்க முடியாது.
இவையெல்லாம், ஊழல், அதிகார முறைகேடுகளை நிலவுகின்ற அமைப்பு முறையைப் பயன்படுத்திக் கொண்டு ஒழித்துவிட முடியாது என்பதையும், அதற்கு இந்த அமைப்பு முறையைச் சாராத புதிய மக்கள் அதிகார அமைப்புகளை நிறுவ வேண்டிய அவசியத்தையுமே எடுத்துக் காட்டுகின்றன.
– திப்பு
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015

8 கருத்துகள்:

  1. அரசு கருவூலத்தை நிரப்ப நான் விரும்பவில்லை”//அதான் தண்ணிகடை இருக்கே கவலை ஏனய்யா! சூப்பர்

    மற்றவர்கள் ஊழல் செய்தால் லோக் ஆயுக்தாவில் முறையிடலாம்; அந்த லோக் ஆயுக்தாவிலேயே ஊழல் நடந்தால் யாரிடம் முறையிடுவது?” //சொல்வதற்கு ஒன்றுமில்லை!! அய்யோ அய்யோ !!!!

    பதிலளிநீக்கு
  2. இவையெல்லாம், ஊழல், அதிகார முறைகேடுகளை நிலவுகின்ற அமைப்பு முறையைப் பயன்படுத்திக் கொண்டு ஒழித்துவிட முடியாது என்பதைத்தான் நிருபிக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  3. என்னைக்கேட்டால் இதன் அடிப்படை தவறு மக்களிடமே... நண்பரே இலவசத்தை என்று மக்கள் வேண்டாமென்று சொல்கின்றார்களோ... அன்றுதான் நாடு உருப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவப்பட்ட மக்களை பலிகடாவாக்கிவிட்டீர்கள் நண்பரே...

      நீக்கு
  4. இவையெல்லாம், ஊழல், அதிகார முறைகேடுகளை நிலவுகின்ற அமைப்பு முறையைப் பயன்படுத்திக் கொண்டு ஒழித்துவிட முடியாது என்பதையும், அதற்கு இந்த அமைப்பு முறையைச் சாராத புதிய மக்கள் அதிகார அமைப்புகளை நிறுவ வேண்டிய அவசியத்தையுமே எடுத்துக் காட்டுகின்றன.

    இது தான் உண்மை நண்பரே, எங்கும் வியாப்பித்திருக்கும் செயல் இது.

    பதிலளிநீக்கு
  5. வேலியே இப்படி பயிரை மேயலாமா?

    பதிலளிநீக்கு
  6. வேலியே பயிரை மேயாமல் இருப்பதுதான் இன்றைக்கு அதிசியம் நண்பரே....

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...