ஞாயிறு 10 2017

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை..



அந்தப் பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக்கொண்டு தனது பணிக்குக் கிளம்புவார். ஏனெனில், அவர் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுகிலும் சில ஆண்கள் சாணத்தையும் சேற்றையும் மண்ணையும் வாரி வாரி அவர் மீது வீசுவார்கள். அவற்றை அமைதியாக எதிர்கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும், புடவையை மாற்றிக்கொள்வார். அவர் செய்த குற்றம்தான் என்ன? கல்வியின் அவசியத்தை உணர்ந்து, பெண்களுக்கும் கல்வி கற்பித்தார். விதவை என முடக்கப்பட்ட சிறுமிக்குப் புதுப்பாதை காட்டினார். அனைவரும் சமம் என்று மனிதத்தை தூக்கிப் பிடித்தார். அவரே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை, சாவித்ரி புலே. 

மராட்டிய மாநிலத்தில் 1831-ம் ஆண்டு பிறந்த சாவித்ரி, தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் என்பவருக்கு மனைவி ஆனார். அவர் கணவரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து அகமதாபாத்தில் மிஸ்.பாரார் கல்வி நிலையத்திலும், பிறகு புனேவில் உள்ள மிஸ்.மிட்செல் கல்வி நிலையத்திலும் சாவித்ரியைப் படிக்கவைத்தனர். 1848-ம் ஆண்டு தம்பதியர் இருவரும் இணைந்து பெண்களுக்கென முதல் பள்ளியை உருவாக்கினர். அவர்களுக்கென 1863-ம் ஆண்டு தனி நூலகத்தையும் நிறுவினர். கல்வி பணியோடு நில்லாமல் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டனர். சிறுவயதில் கணவனை இழந்தப் பெண்களுக்கும் சிறுவயதிலே பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கும் ஆதரவு அளித்தனர். அதற்கென தனியாக இல்லம் ஒன்றைத் தொடங்கினர். பெண் குழந்தைகளை சிசுக் கொலையிலிருந்து மீட்டு எடுத்தனர். குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். சாதியின் பெயர் சொல்லித் தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கல்வி அளித்தனர். விதவை மறுமணம், சாதிக் கலப்புத் திருமணம் என அனைத்து சமுதாயத் சீர்திருத்தங்களுக்கும் குரல் கொடுத்தனர். 


இந்தப் புனித செயலுக்கு அவர்களுக்குக் கிடைத்தது பூங்கொத்தோ, வாழ்த்துகளோ அல்ல. சமுதாயம் புறக்கணித்தது. அவர்கள் உறவினர்களால் வீட்டைவிட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள். கேட்க இயலாத வசைச் சொற்களை வீசினர். எங்கும் கல்வீச்சு அவர்களை வரவேற்றது. அதற்கெல்லாம் சாவித்ரி புலே புன்னகையை மட்டுமே தந்தார். 'கல்வி என்னும் புனிதத்தை உலகத்துக்கு வழங்கும் எனக்கு, இந்தக் கற்கள் மலர்களாகவே தோன்றுகின்றன' என்றார். தொடர்ந்தது சமுதாயப் பணியாற்றினார்சாவித்திரி புலே. 

"கல்வி என்பது இது சரி இது தவறு என்று ஆராயும் திறனைத் தரவேண்டும். அது மெய்யும் பொய்யும் உணரவைக்க வேண்டும்' என்ற கோட்பாட்டின் மூலம் புது பாடத்திட்டத்தை அன்றைய மராட்டிய அரசுக்குப் பரிந்துரைத்தார். திருமணங்களின்போது பெண்ணை படிக்கவைப்பேன் என்று மாப்பிள்ளையை மணமேடையில் உறுதிமொழி எடுக்கவைத்தார். அவர் எழுதிய நூல்களும் கவிதைகளும் இன்றளவும் சமூகத்தின் காயங்களுக்கு மருந்து அளித்து வருகின்றன. 

1897-ல் இந்தியாவில் பிளேக் பரவிய காலகட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்தார். இதனால் அந்த நோய் சாவித்ரியையும் தொற்றிக்கொண்டது. மார்ச்- 10 1897-ம் ஆண்டு பிரியா விடை பெற்றார். 

பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே குற்றமாக கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதி சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர். ஓர் சமுதாயத்தின் பிழையைத் திருத்தும் போராளியான இவர், வாள் இல்லா வீராங்கனை. ஆசிரியராகப் பலரது தலை எழுத்தை மாற்றியவர். குரு, மாதா, பிதா என்று பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர். இத்தகைய திடப் பேராண்மைகொண்ட ஆசானை, வழிகாட்டியை, விடிவெள்ளியை மறந்தது காலத்தின் கொடுமை. பெண் உருவில் அவர் அற்புதத்தை நிகழ்த்தவில்லை; அற்புதமே பெண் உருவானது

-VIKATAN 

6 கருத்துகள்:

  1. போராளிகள் பாறையைப்பிளந்துதான்
    முளைத்து வந்திருக்கிறார்கள்,அவர்களின் தீரமும் போராட்டமும் வெம்மை மிகுந்தவை ,எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டுபவை.

    பதிலளிநீக்கு
  2. வியக்கத்தகு பெண்மணி சாவித்ரி புலே
    ஒரு வாரத்திற்குப் பிறகு இன்றுதான் கணினி திறக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் இது காலத்தின் கொடுமைதான் :(

    பதிலளிநீக்கு
  4. அனைவரும் சமம் என்று மனிதத்தை தூக்கிப் பிடித்தவர் பற்றிய பதிவு. அருமை.

    பதிலளிநீக்கு
  5. போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியவர்

    பதிலளிநீக்கு
  6. இந்த நாட்டில் 'அவாள்' குலத்தில் பிறக்காதது இந்தப் பெண் செய்த தவறு. இவர் மட்டும் அவாளாகப் பிறந்திருந்தால், இந்தியாவின் இரும்பு மங்கையாக போற்றப் பட்டிருப்பார்.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...