திங்கள் 18 2019

நினைவலைகள்-88.


மகளிர் தினத்தை பற்றி ராஜசங்கீதன்.....

இதோ வந்து விட்டது சர்வதேச மகளிர் தினம். இந்த நாளுக்கான வரலாறை எந்த வெகுஜன ஊடகமும் பதிவு செய்யாது என்ற அபரிமிதமான நம்பிக்கையுடன் இப்பதிவை எழுதுகிறென். அதிகபட்சம் போனால் துப்பட்டா பறக்கவிட்டு, அழகை மட்டுமே பெண்ணின் அடையாளமாக ஆக்கும் நிகழ்ச்சிகளும் தனிமனிதவாதம் ததும்பும் பேட்டிகளும் இந்த நாளை நிரப்பக்கூடும். ஆனால் இவை எதுவுமல்லாத காரணங்களுக்குத்தான் மகளிர் தினம் அனுஷ்டிப்பு தொடங்கப்பட்டது.

மகளிர் தினம் தோன்றியது பெண்களின் போராட்டம் ஒன்று அமெரிக்காவில் 1857ம் ஆண்டு முறியடிக்கப்பட்டதன் நினைவாகத்தான் என இணையமெங்கும் தகவல் பரப்பப்படும். நம்பாதீர்கள். வழக்கம் போல் கம்யூனிச வரலாறை மறைக்க விரும்பும் அமெரிக்க வருடிகளின் கட்டுக்கதை அது. ஆனால் பெண்ணுக்கான தினமென முதலில் கொண்டாடப்பட்டது 1909ம் ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவில்தான். கொண்டாடியது அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி. பெண்களுக்கான ஓட்டுரிமையையும் சமூக அங்கீகாரத்தையும் வேலை நேர குறைப்பையும் வலியுறுத்தி திரண்ட கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பெண்ணுக்கான தினம் கொண்டாடப்பட வேண்டிய தேவை ஐரோப்பாவுக்கும் பரவியது. 1910ம் ஆண்டு சர்வதேச சோஷலிச மகளிர் மாநாடு நடந்தது. க்ளாரா ஜெட்கின் போன்றோரின் முன்னெடுப்பில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினமென ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டுமென்ற முடிவெடுக்கப்பட்டது. ஓட்டுரிமை மற்றும் வேலையில் பாலின சமத்துவம் ஆகியவை வலியுறுத்தப்பட வேண்டும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன. பாரிஸ் கம்யூன் அரசை நினைவு கூறும் வகையில், மார்ச் 9, 1911ம் ஆண்டில் முதல் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது, லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எல்லாம் சரி, ஏன் மார்ச் 8 என்று கேட்கலாம்.

ரஷியாவில் புரட்சியின் தொடக்ககாலத்தில், பிப்ரவரி 23, 1917 அன்று பிரம்மாண்டமான போராட்டம் ஜார் மன்னனின் அரசை எதிர்த்து பெண்கள் தொடுத்தனர். தலைமை தாங்கியது அலெக்சாந்த்ரா கொலந்தாய். முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம் அது. ஜார் மன்னனின் அரசு உணவு விநியோகத்தை போரின் காரணமாக கட்டுப்படுத்தியது. அன்றாட உணவுக்கே திண்டாடும் நிலை. உழைக்கும் பெண்களின் தலைமையில் மொத்த ரஷ்ய பெண்களும் ஜார் மன்னனுக்கு எதிராக வெகுண்டெழுந்து ‘Bread and peace' என முழங்கினர். போர் தேவையில்லை என்றும் உணவும் அமைதியுமே தேவை எனவும் கோஷங்கள் எழுப்பினர். ஜாரும் வீழ்ந்து, அக்டோபர் புரட்சியும் வெல்லப்பட்ட பின், சோவியத் யூனியனில் அலெக்சாந்த்ரா கொலந்தாய் மற்றும் லெனினால் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் அங்கீகரிக்கப்பட்டது, மட்டுமல்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியம் உறுதிப்படுத்தப்பட்டது. கருக்கலைப்பு உரிமையும் வழங்கப்பட்டது. பெண்ணுக்கான முதல் அரசு பதவிகள் வழங்கப்பட்டன. பிப்ரவரி 23 என்பது ஆங்கில காலண்டரில் மார்ச் 8 ஆகும்.

1970கள் வரை மகளிர் தினம் சோஷலிச நாடுகளான ரஷியா, சீனா ஆகியவற்றில் மட்டும்தான் கொண்டாடப்பட்டது. 1975 வாக்கில்தான் ஐ நா அங்கீகரித்தது. அமெரிக்கா செய்தது என்ன? சீனாவிலும் ரஷியாவிலும் உழைக்கும் மகளிர் தினம் என கொண்டாடப்படும் நாளை, சர்வதேச மகளிர் தினம் என மட்டும் சுருக்கி கொண்டாட காரணம் அமெரிக்காதான். அப்படித்தான் பெண்ணை ஒரு சந்தைப்பொருளாக மீண்டும் ஆக்க முடியுமல்லவா?

சோவியத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட உழைக்கும் மகளிர் தின படங்களை இங்கு இணைத்திருக்கிறேன். இன்றின் பெரும்பான்மையான மகளிர் தின படங்களை பாருங்கள், இவற்றில் இருக்கும் பெண்களின் அரசியலுணர்வை பெற்றிருக்காது. ஏனெனில் இன்று கொண்டாடப்படுவது சர்வதேச மகளிர் தினம்தான். உழைக்கும் மகளிர் தினம் அல்ல. சர்வதேச மகளிர் தினத்தில் தாய்மையை, காதலை, அன்பை எல்லாம் கொண்டாடலாம். உழைக்கும் மகளிர் தினத்தில் அரசியலுணர்வை, அதிகார பிரதிநிதித்துவத்தை, சமத்துவத்தை வலியுறுத்த வேண்டியிருக்கும்.

மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் காரணமும் தேவையும் என்ன தெரியுமா? அது கொண்டாடப்படும் காலத்தில், சமூகரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெண் சந்திக்கும் பிரச்சினைகளையும் கடக்க வேண்டிய பாதையையும் அடையாளப்படுத்திடத்தான்.

இங்குள்ள படங்களாகத்தான் இன்று நீங்கள் கொண்டாடும் மகளிர் தினம் தொடங்கப்பட்டது என்பதை ஞாபகத்தில் இருத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு அருகில் இருக்கும் பெண் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் எங்கே இருக்கிறார் என்பதை ஆராய்ந்து அறிந்து அவருக்கும் அதை அறிவுறுத்துவதிலிருந்து இன்றைய கொண்டாட்டத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம்

2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...