பக்கங்கள்

Sunday, September 13, 2015

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் முதல் குடிகார நகரம்..

Prpc Milton Jimraj என்பவர் Jim Raj Milton மற்றும் 2 பேர்ஆகியோருடன்


மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்!

தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில்தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள். ஏன் இப்படி? ஏனென்றால், திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் கைகளில் பணப்புழக்கமும் அதிகம். குறிப்பாக வார இறுதிகளில் திருப்பூரின் குடி எகிறுகிறது. அதிகபட்ச நிறுவனங்களில் சனிக்கிழமைதோறும் சம்பளம் போடுகின்றனர். வாரச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தால், ஞாயிறு முழுக்கக் குடிதான். திங்கட்கிழமை வரையிலும் இந்தக் குடி நீள்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் குடித்துவிட்டு திங்கட்கிழமைகளில் வேலைக்கு வருவது இல்லை. அன்றும் விடுமுறை போலவே இருக்கிறது என்பதால், திங்கட்கிழமைக்கு 'சின்ன ஞாயித்துக்கிழமை’ என்று திருப்பூரில் பெயர்.

'இதை ஞாயிறு, திங்கள்னு பார்க்கிறதைவிட, கையில காசு தீர்ந்துபோற வரைக்கும் குடிப்பாங்கன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்காக வார சம்பளத்தைப் பத்திரமா வெச்சுக்கிட்டு வாரம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறது இல்லை. அந்த ரெண்டு நாள்ல வெறியோட குடிச்சுட்டு செவ்வாக்கிழமை வேலைக்குப் போறது... அடுத்த அஞ்சு நாளைக்கு வேலை பார்த்துட்டு மறுபடியும் குடி. அதாவது இவங்க வேலை பார்க்கிறதே குடிக்கத்தான்னு ஆயிடுச்சு...' என்கிறார் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றின் மேனேஜர் சோலைமலை.
அப்படியானால் ஞாயிறு, திங்கள் தவிர்த்த மற்ற நாட்களில் குடிப்பது இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அந்த இரண்டு நாட்களிலும் அதி தீவிரக் குடி; மற்ற நாட்களில் தீவிரக் குடி. அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காக கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர். முன்பணம் வாங்காத தொழிலாளர்கள் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் முன்பணம் வாங்கி, மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். திருப்பூரில் மட்டும் ஏன் இப்படி குடித்துத் தீர்க்க வேண்டும்? முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, பொண்டாட்டி, புள்ளைங்களை யார் பார்க்குறது?’ என்று கேள்வி கேட்க நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லை. கசக்கிப் பிழியும் வேலையின் காரணமாக நண்பர்கள்கூட இவர்களுக்கு இருப்பது இல்லை. ஒரு மனிதன் சமூகத்துடன் இணையும் புள்ளி எதுவும் கிடையாது. மேலும், சொந்த ஊரில் இருந்தால் கல்யாணம், காட்சிக்குப் போக வேண்டும்; மொய் செய்ய வேண்டும்; ஊர்த் திருவிழா, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செலவு வரும் என்பனபோன்ற அன்றாட நெருக்கடிகள் இருக்கும். சம்பாதித்த பணத்தை அதற்கென செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இங்கு அது இல்லை. இரண்டாவது, வேலை கிடைப்பது குறித்த அச்சம் தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த வாரம் ஒரு கம்பெனி, அடுத்த வாரம் ஒரு கம்பெனி என்று போய்க் கொள்ளலாம். எங்கும் எப்போதும் வேலை தயாராக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையைத் தருகிறது. இப்போது கையில் இருப்பதைக் குடித்து அழித்தாலும், நாளையே சம்பாதித்துவிட முடியும் என எதிர்மறையான நம்பிக்கை கொள்கின்றனர்.

அதே நேரம் இந்தச் சிக்கலை தொழிலாளர்களின் கோணத்தில் இருந்து மட்டும் மதிப்பிடுவது சரியற்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 'வெறுங்கையோடு திருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்’ என்ற நிலை இருந்தது. அது உண்மையும்கூட. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்படி திருப்பூரில் உழைத்து முன்னேறினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஒற்றை ஆளாக திருப்பூர் வந்து கடும் உழைப்பால் சொந்த ஊரில் நிலபுலன் வாங்கி, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்று அப்படியானவர்களைப் பார்ப்பது அரிது. முன்பு, வாங்கிய சம்பளம் குடும்பத்துக்குப் போனது. இப்போது நேராக டாஸ்மாக் செல்கிறது. 'ஏழைத் தொழிலாளர்கள் உழைக்கும் பணத்தை, குடியின் பெயரால் இந்த அரசு வழிபறி செய்கிறது’ என்ற குற்றச்சாட்டு எவ்வளவு உண்மை என்பதை திருப்பூரில் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஒரு பனியன் நிறுவனத்தின் கோணத்தில், தொழிலாளர்களின் குடி அவர்களைப் பாதிக்கிறதா? 'நிச்சயம் பாதிக்கிறது' என்கிறார் திருப்பூர் ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லோகநாதன். 'ஒவ்வொரு திங்கட்கிழமையும் உற்பத்தித் திறன் கணிசமாகக் குறைகிறது. மற்ற வார நாட்களை ஒப்பிட்டால், திங்கட்கிழமை அன்று 40 சதவிகித உற்பத்தி குறைகிறது. குடிக்கு அடிமையான ஒரு தொழிலாளியால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. அவரது வேலை செய்யும் திறன் மோசமாகக் குறைந்துகொண்டே செல்கிறது. அவரால் வேலையில் கவனம் செலுத்த முடிவது இல்லை. அதேபோல நைட் ஷிஃப்ட் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, குடியின் காரணமாக கணிசமாகக் குறைந்துவிட்டது. அதையும் மீறி வந்தாலும் குடித்துவிட்டு வருகின்றனர். இதனால் நைட் ஷிஃப்ட்டில் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பணிபுரிய பல நிறுவனங்கள் அனுமதிப்பது இல்லை. வேலை முடிந்து, பேருந்தில் டிராப் செய்ய போகும்போது, 'கடையை மூடிருவாங்க... சீக்கிரம், சீக்கிரம்’ என டிரைவரை தொழிலாளர்கள் அவசரப்படுத்துகின்றனர். அதே நேரம் குறைந்த ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் மட்டும்தான் குடிக்கிறார்கள் என்பதல்ல... எங்கள் கம்பெனியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர் ஒருவர், வாங்கும் சம்பளத்தில் 30 ஆயிரத்தை குடித்தே அழிப்பார். மாலை 7 மணிக்குப் பிறகு எவ்வளவு தலைபோகும் வேலையாக இருந்தாலும் அவரைப் பிடித்துவைக்க முடியாது. இப்படி தொழிலாளர்கள், முதலாளிகள் என திருப்பூரின் அனைத்துத் தரப்பினரையும் குடி, மோசமாகப் பாதிக்கிறது' என்கிறார்.

இது திருப்பூரின் கதை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் தேவை அதிகம் இருக்கிற அனைத்து இடங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. குடிப்பழக்கம் உள்ள தொழிலாளர்கள் திடீர், திடீரென வேலைக்கு மட்டம் போட்டுவிடுகின்றனர். அவர் ஒரு கடையின் புரோட்டா மாஸ்டராக இருந்தால், அன்று அந்தக் கடையின் வருமானம் கெடுகிறது. அல்லது அவசரஅவசரமாக வேறொரு மாஸ்டரை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவுப் பொருளின் சுவை சீராக இல்லை எனில், வாடிக்கையாளரைத் தக்க வைக்க முடியாது. ''அதுக்காக குடிக்கிற ஆளைக் கண்டிக்கவும் முடியாது. உடனே நின்னுடுவார். கண்டும், காணாதது மாதிரி போகவேண்டியிருக்கு'' என்கிறார்கள் சிறுதொழில் நடத்துபவர்கள். இப்படித் தொடர்ந்து குடிக்கும் தொழிலாளர்களின் வேலைத்திறன் மோசமாகப் பாதிக்கப்படுகிறது என்றால், குடிப்பதையே ஒரு வேலையாகச் செய்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

இப்போது மாலை 6 மணி என்று வைத்துக்கொள்வோம். மாநிலம் முழுக்க இருக்கும் 4,000-த்துக்கும் அதிகமான டாஸ்மாக் பார்களில் அமர்ந்து குறைந்தபட்சம் 50 லட்சம் பேராவது குடித்துக்கொண்டிருப்பார்கள். அதாவது, சமூகத்தின் உற்பத்தியில் பங்கேற்க வேண்டிய 50 லட்சம் மனித ஆற்றல்கள், சமூகத்தின் அழிவில் பங்கேற்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் குடிப்பதற்காக இரண்டு மணி நேரத்தைச் செலவிடுகின்றனர் எனக் கொள்வோம்.

50 லட்சம் பேர் X 2 மணி நேரம் = 1 லட்சம் மணி நேரம்.

இத்தனை பிரமாண்டமான நேரத்தை, அதற்கான மனித ஆற்றலை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால், தமிழ்நாட்டில் எஞ்சியிருக்கும் 18,000 ஏரி, குளங்களையும் ஒரே மாதத்தில் தூர் வாரிவிடலாம். பல மகத்தான அதிசயங்களை நிகழ்த்தவல்ல கோடிக்கணக்கான இளைஞர் கூட்டம் நம் கண் முன்னே குடித்துக் குடித்தே வீழ்கிறது. முன்பு எல்லாம் குடித்துவிட்டு சாலையில் வீழ்ந்துகிடப்பவர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பார்கள். இப்போது டாஸ்மாக் இருக்கும் ஒவ்வொரு வீதியிலும் இரண்டு பேர் போதையில் மல்லாந்து கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பது இன்னும் கொடுமை.

உண்மையில் நாம் ஒரு தலைமுறையையே குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம். ஒரு தலைமுறை இளைஞர்களின் உடல்களில் இருந்து ரத்தத்தை உறிஞ்சி, ஆல்கஹாலை செலுத்திக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஆயிரம் ஆயிரமாக, லட்ச லட்சமாக நோயில் வீழ்ந்து

மடிந்துபோகிறார்கள். உடல் சிதைந்து உறுப்புகள் உருக்குலைந்து உயிரின் வேதனையில் மரணத்துக்காக ஏங்குகின்றனர். தன் குடிமக்களை வாழ்வில் இருந்து மரணத்துக்கு அழைத்துச் செல்கிற இந்த அரசாங்கத்தை இதற்கு மேலும் 'மக்கள் நல அரசு’ () என்று அழைக்க முடியுமா? அதற்கான அருகதையை இந்த அரசு இழந்துவிட்டது!

- போதை தெளிவோம்...
குடி குடியை கெடுக்கும் - 6, ‪#‎Ban‬ Tasmac
பாரதி தம்பி, ஆனந்தவிடகன் - 16 Sep, 2015

21 comments :

 1. கஷ்டப்பட்டு உழைத்து... ம்...

  ReplyDelete
  Replies
  1. கஷ்டப்பட்டு உழைத்த பணமெல்லாம் தண்ணியில.....

   Delete
 2. படிக்கும்போதே வேதனையாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. சம்பாதித்த பணமெல்லாம் போவதோடு குடல் வெந்து சாக வேண்டியதும் இருக்கே...அய்யா....

   Delete
 3. (கருத்துரையில்) திட்டு தாயாய் இருந்தால்
  'நல்ல' 'தாய்' திட்டம்.!!!!

  ReplyDelete
  Replies
  1. மகன் செத்தாலும் பரவாயில்லை...மருமகள் தாலிய அறுக்கனும்னு நிணைக்கிற தாய்ப்பா இந்த. 'மக்கள் நல அரசு’

   Delete
 4. டாஸ்மாக் மூடுவிழா எப்போது
  தமிழ்நாடு விடியும் அப்போது
  இறைவா இருளகற்று

  ReplyDelete
  Replies
  1. எந்தக் காலத்தில நண்பா ...இறைவன் இருளை அகற்றி இருக்கிறது.அதுவும் குடித்துவிட்டு ஆட்டம்தான் போட்டு இருக்கு..

   Delete
 5. குடிகாரனாய் நிறுத்தா விட்டால் குடியை ஒழிக்க முடியாது

  ReplyDelete
  Replies
  1. சும்மா...கிடந்த சங்கை ஊதி கெடுத்துவிட்டு....பிறவு தத்துவமா ...? சரியா..நண்பரே....

   Delete
 6. கடைசி வரி நச் :)

  ReplyDelete
  Replies
  1. கிளைமேக்ஸ்..எப்பவுமே...நச்சுனுதான் இருக்கும் நண்பரே....

   Delete
 7. இந்நிலைக்கு காரணமான அரசை பாராட்ட பல மைந்தர்கள் உள்ளார்கள். சற்றும் மறந்து கூட விமரிசனம் செய்ய மாட்டார்கள்.
  இப்படிப்பட்ட அவல நிலையை மாற்ற அரசு முன் வர வேண்டும். இப்போது தான் 2 லட்சம் கோடி முதலீடு வருகிறதே.

  ReplyDelete
  Replies
  1. குடி மக்களின் குடியை கெடுக்கும் மக்கள் நல அரசுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்கத்தான் நோபல் இருக்கானே... அதுக்கு மானமும் சுயமரியாதை இல்லாம இருக்கும் அடிமைகளும் கைதட்டுமே....

   Delete
 8. வேதனை.. எத்தனை குடும்பங்கள் கண்ணீரில் நிற்கின்றன.
  அடிமைகளுக்கு இது தெரியவே தெரியாதா? தாங்கள் தின்றால் போதும் என்ற வெறி மனநிலை இது. அனைத்து விதத்திலும் தமிழரை அவர் மக்களை வைத்து அழிக்க நினைக்கும் கெடுமதி. மக்கள் அறிவு பெற்றால் இந்நிலை மாறும்.

  ReplyDelete
  Replies
  1. மக்கள் அறிவு பெறுவதற்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டையும் தடைகளும் இருக்கிறது.. இவைகள் நீங்கா ஒழிய மக்கள் அறிவு பெறுவது இந்த நூற்றாண்டில் நடவாத காரியமாய தெரிகிறது நண்பரே...

   Delete
 9. வேதனையாக இருக்கிறது,
  இந்த அரசு மட்டும் அல்ல, அனைவரும் இப்படித்தான், மாற்றம் பெற நாம் தான் நினைக்க வேண்டும்.
  பகிர்வு அருமை வலிப்போக்கரே, உடல் நலம் தானே?
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி! நண்பரே.... உடல் நலம்தான் நண்பரே.......

   Delete
 10. இப்படி வருத்தப்பட அவசியமே இல்லை. நம்ம ஆட்களுடைய திறமை உங்களுக்கு புரியலே. பெருவாரியான தொழிலாளர்கள் வேற ஸ்டேட்டு காரங்க தானே. ஒரு பக்கம் குடுக்கிற மாதிரி குடுத்து, அப்படியே நமக்கே திரும்பி வருதில்லே!!!! தெறமை தானுங்க

  ReplyDelete
 11. அடடா....எம்புட்டு திறம.....

  ReplyDelete
 12. இதை முழுவதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் நானும் திருப்பூரில் ஒன்பது ஆண்டுகள் நண்பர்களோடு வாந்த அனுபவம் இருக்கிறது.இன்னும் சொல்லப்போனால் நானே பல நாட்களிதுபோல இருந்தது உண்டு.நீங்கள் விவரித்த அனைத்த சம்பவங்களையும் அனுபவித்து இருக்கிறேன்..திருப்பூரின் தெருக்களில் தொலைத்த இதயத்தைத் தேடி இன்னும் சில ஞாபகங்கள் அடிக்கடி வந்து செல்கின்றன்..உங்களின் பதிவை படித்தபின்பு மனம் கொஞ்சம் வலிக்கிறது முன்பு வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி..இருப்பினும் மறக்கமுடியாத ஞாபகங்களை நினைவூட்டியமைக்கு நன்றி..

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com