ஞாயிறு 06 2016

மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!

மாமேதை மார்க்ஸ் பிறந்தநாள் 200-ஆம் ஆண்டு !
ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு !!


முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே!
1917 நவம்பர் 7 என்பது வெறும் தேதியல்ல. பஞ்சைப் பராரிகளின் ஆத்திரப் பெருமூச்சு. வரலாறு தலைகீழாய்க் கவிழ்த்துப் போடப்பட்ட நாள் சவுக்குகளின் பிடி கைமாறிய நாள். நூற்றாண்டுகால அந்தகாரத்தினுள் கோடி நட்சத்திரங்கள் மலர்ந்த நாள். வீழ்த்தப்பட்டவர்கள் வர்க்கமாய் எழுந்த நாள். கையேந்திக் கேட்டவர்கள் கைநீட்டி எடுத்துக் கொண்ட நாள். உரிமைக்காக ஏங்கியவர்கள் அதைப் பறித்துக் கொண்ட நாள். அதிகாரம் செலுத்த ஆண்டைகளும் அதிகாரிகளும் தேவையில்லை என நிரூபித்த நாள். முடியாதென அறிஞர்கள் நகையாடியதையெல்லாம் மக்கள் முடித்துக் காட்டிய நாள். அதிகாரத்தின் இறுமாப்பு தகர்த்தெறியப்பட்ட நாள். மேகங்களுக்கு மேல் வாழ்ந்து பழகிய மத பீடங்கள் தரையிறக்கப்பட்ட நாள்.
1917 நவம்பர் 7 என்பது வெறும் தேதியல்ல. அரசாங்கம் வேறு மக்கள் வேறு என்ற பழைய சரித்திரம். மக்களே அரசாங்கம் எனத் திருத்தி எழுதப்பட்ட நாள். ஆலைகளில் சிறைப்பட்ட தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தில் அமர்ந்த நாள்.விவசாயிகளின் வியர்வையால் வளம் பெற்ற நிலங்களெல்லாம் அவர்களுக்கே சொந்தமான நாள். சம்மட்டி ஏந்திய கைகள் அரசியல் சட்டம் வரைந்த நாள். ஏர் கலப்பை ஏந்திய கைகள் பூமிப் பந்தின் ஆறில் ஒரு பங்கைத் தாங்கிய நாள். மனிதனின் பேராற்றல் கட்டவிழ்த்து விடப்பட்ட நாள். கூட்டுத்துவம் என்கிற ஓவியம் உயிர்பெற்று சட்டகத்தினுள்ளிருந்து எழுந்து வந்த நாள்.
1917 நவம்பர் 7ம் தேதியில் அரங்கேறியது வரலாற்றின் மற்றுமொரு நிகழ்வு அல்ல. பரிணாம வரலாற்றில் மனிதக் குரங்கிலிருந்து மனித மூதாதை உருவானதற்கு இணையான நிகழ்வு. நிதி, நீதி, காவல், படை, நிர்வாகம் என அரசின் அனைத்து அலகுகளையும் மக்களே செலுத்த முடியும் என்பதை நிரூபித்த நிகழ்வு. பராரிகள் பாராள முடியும் என்பதை பறைசாற்றிய நிகழ்வு. செல்வத்தைப் படைத்தவர்கள் அதன் எஜமானர்களாகவும் முடியும் என்பதை உணர்த்திய நிகழ்வு. நூற்றாண்டுகளாய் அறிவு மறுக்கப்பட்டவர்கள் மனித குலத்தின் மொத்த அறிவையும் சில நாட்களிலேயே சுவீகரித்துக் காட்டிய நிகழ்வு.மனித வாழ்க்கை வாயில் துவங்கி வயிற்றைக் கடந்து ஆசண வாயில் முடியும் ஒன்றல்ல என்பதை உணர்த்திய நிகழ்வு. கட்டளையிடும் படைத்தலைவன் மேல் களமாடும் வீரனுக்கு பதிலளிக்கும் கடமை உண்டென்பதை நிறுவிய நிகழ்வு.
வரும் திங்களன்று 7.11.2017 அன்று சோவியத் யூனியனை சாதித்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா துவங்குகிறது. இந்த ஆண்டு முழுவதும் சோவியத் யூனியன் குறித்த கட்டுரைகள், கதைகள், விவாதங்கள், வீடியோக்கள் அனைத்தும் வெளியிடுவோம். மேற்குலகிலேயே பொதுவுடமை வேண்டும் என்று இளைய தலைமுறை முழக்கமிடும் நாளில் இந்த நூற்றாண்டு விழா இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டி, உலக மக்களை விடுவிக்கும் கடமையை தொழிலாளி வர்க்கம் நிறைவேற்றும்.
– வினவு

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....