பக்கங்கள்

Monday, September 28, 2015

தீட்டும்..குவார்ட்டர் பாட்டிலும்..

Prpc Milton JimrajPrpc Milton Jimraj என்பவர் Jim Raj Milton மற்றும் 3 பேர் ஆகியோருடன்
குடி, மனிதர்களின் சுயமரியாதையை அகற்றி, தூர வீசிவிட்டது; மான உணர்ச்சியைத் துண்டித்து, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.
உண்மையில் இதுதான் மிகப் பெரிய கவலைக்குரிய அம்சம். சுயமரியாதையையும் மான உணர்ச்சியையும் ஒருவன் இழந்துவிட்டால் அவன் அடிமைக்குச் சமம்.
டாஸ்மாக் மதுக்கடைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எத்தனையோ செய்திகள் வெளிவருகின்றன. போதும், போதும் என்ற அளவுக்கு புள்ளிவிவரங்களும் வெளியாகின்றன. பெரும்பாலும் இவை நகர்ப்புறம் சார்ந்தவை. உண்மையில், கிராமப்புறங்களில்தான் டாஸ்மாக்கின் பாதிப்புகள் மிக அதிகம். மாதாந்திர ஊதியமோ, வேறு தொழில் வாய்ப்புகளோ இல்லாத கிராமப்புறங்களில் பெரும்பாலும் விவசாயமும், அதைச் சார்ந்த கூலித் தொழில்களுமே நிறைந்திருக்கின்றன. வாங்கும் தினக்கூலியைக் கொண்டுவந்து டாஸ்மாக் கல்லாவில் கொட்டிவிட்டுத்தான் வீடு வந்து சேர்கின்றனர் தொழிலாளர்கள்.
ஒரு கிராமப்புற டாஸ்மாக் கடையின் வருமானம், நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகம். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இருக்கும் கருவேப்பிலங்குறிச்சி என்ற ஊரில் ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. இந்தக் கடையின் ஒரு நாள் வருமானம் 1 லட்சம் ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் வரை. பண்டிகை நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும். குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் என வைத்துக்கொண்டால், வருடத்துக்கு 365 லட்சங்கள் அல்லது 3.65 கோடி ரூபாய். ஒரு சின்னஞ்சிறிய ஊரில் ஆண்டு ஒன்றுக்கு 3.5 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள் என்பது எத்தனை பெரிய அதிர்ச்சி?! இந்தத் தொகை, சரக்குக்கானது மட்டும்தான். சைட் டிஷ், சிகரெட் தனிக் கணக்கு.
கருவேப்பிலங்குறிச்சி டாஸ்மாக் கடையில் காலை 10:30 மணிக்கு நாம் நின்றிருந்தபோது ஒருவர் சரக்கைக் கடன் கேட்டுக்கொண்டிருந்தார். ''காலையிலேயே கடன் கேட்டுக்கிட்டு... ஓடிப்போயிரு... அடிச்சேபுடுவேன்'' என்று விரட்டினார் கடையில் இருந்தவர். அவர் சளைக்கவில்லை. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப வந்து கடன் கேட்டுக்கொண்டே இருந்தார். இதற்கு இடையில் குடிக்க வருவோரின் முகங்களையும், அவர்கள் கைகளில் இருக்கும் சரக்கையும் ஏக்கத்துடன் பார்த்துக்கொள்கிறார். அவரின் சரக்குத் தாகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடையில் இருப்பவரிடம் பிச்சை எடுப்பதைப்போல கெஞ்சு கிறார். கடைக்காரர், இப்போது நாகரிகமான வார்த்தைகளைக் கைவிட்டு மிக மோசமான கெட்ட வார்த்தைகளுக்கு மாறுகிறார். ஓங்கிய கை அடித்துவிடுமோ என்ற நிலையில்தான் கிளைமாக்ஸ்! அதுவரை கெஞ்சிக்கொண்டு இருந்தவர், அண்ட்ராயர் பாக்கெட்டில் கைவிட்டு 50 ரூபாய்த் தாளை எடுத்துத் தருகிறார்.
''ஏன்யா... காசை வெச்சுக்கிட்டுத்தான் இவ்வளவு நேரமா சீன் போட்டியா?'' எனக் கடைக்காரர் இன்னும் கடுப்பாக, உதட்டோரப் புன்னகையுடன் ஒரு கட்டிங்கை வாங்கிக்கொண்டு பின்பக்கம் செல்கிறார் அந்தக் குடிவிரும்பி. அவர் ஏன் பணத்தை வைத்துக்கொண்டே கடன் கேட்க வேண்டும்? ஏனெனில், அந்தக் காசு அவருக்கு அன்றைய நாளின் அடுத்த குடிக்குத் தேவைப்படுகிறது. இப்போது கடன் வாங்கிக் குடித்தால், இந்தக் காசை பிறகு குடிப்பதற்கு வைத்துக்கொள்ளலாம். இதுதான் அவரது எண்ணம். அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றி நிச்சயம் அவர் கவலைப்பட மாட்டார். ஆனால், அடுத்த வேளை குடியைப் பற்றி முன்யோசனையுடன் இருக்கிறார். இதற்காக அவர் மானம், மரியாதையை இழக்கவும் தயாராக இருக்கிறார் என்பது முக்கியமானது.
கிராமப்புறங்களில் ஒரு சுடுசொல் பெரும் ரத்தக்களறியை உருவாக்கிய உதாரணங்கள் உண்டு. ஆனால், அதே கிராமப்புற மனிதர்கள் இன்று காதில் கேட்கத் தயங்கும் வசவு வார்த்தைகளை எந்தக் கூச்சமோ, சொரணையோ இல்லாமல் ஏற்றுக்கொள்கின்றனர் என்றால், இதற்கு 'சகிப்புத்தன்மை’ எனப் பெயரிட முடியுமா? குடி, மனிதர்களின் சுயமரியாதையை அகற்றி, தூர வீசிவிட்டது; மனிதர்களின் மான உணர்ச்சியைத் துண்டித்து, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. உண்மையில் இதுதான் மிகப் பெரிய கவலைக்குரிய அம்சம். சுயமரியாதையையும் மான உணர்ச்சியையும் ஒருவன் இழந்துவிட்டால் அவன் அடிமைக்குச் சமம். 'அடிமைக்கு அவன் அடிமை என்பதை உணர்த்து... அவனே கிளர்ந்து எழுவான்’ என்றார் அம்பேத்கர். இந்தக் குடி அடிமைகளுக்கு அவர்கள் அடிமை என்பதை யார் உணர்த்துவது? உணர்த்தவேண்டிய அரசோ, ஊற்றிக் கொடுப்பதில் பெருமிதம் அடைகிறது; புதிய அடிமைகளை உற்பத்திசெய்ய இலக்கு நிர்ணயிக்கிறது.
குடிகாரர்கள் சுயநினைவு இழந்து, சொரணைஇல்லாமல் வாழ்வது அவர்களின் உடல்நலக் கேடாக மட்டும் முடிவது இல்லை. அவர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனை சீரழிவுகளையும் சகித்துக்கொள்கின்றனர். மணல் கொள்ளையாக இருந்தாலும், விலைவாசி உயர்வாக இருந்தாலும், அனைத்தையும் ஒருவித மயக்க நிலையில் வேடிக்கை பார்க்கப் பழகியுள்ளனர். சரியாகச் சொல்வதானால், அப்படி எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதற்கு அரசு இவர்களைப் பயிற்றுவிக்கிறது. இதன் விளைவை அரசியல், சமூக இயக்கங்கள் நேரடியாக எதிர்கொள்கின்றன. மக்களிடம் எந்த ஒரு சமூகச் சிக்கல் குறித்தும் பேசவோ, பிரசாரம் செய்யவோ முடியவில்லை. அதைச் செவிமடுத்துக் கேட்கவும், இணைந்து போராடவும் அவர்கள் தயார் இல்லை. பலர் குடியின் பிடியில் வீழ்ந்துகிடப்பது ஒரு காரணம் என்றால், மற்றவர்கள் குடியின் விளைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிகாரக் கணவனால் சிரமப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களின் சொந்தப் பிரச்னையைச் சமாளிக்கவே வலு இல்லாதபோது, அவர்கள் எப்படி சமூகப் பிரச்னைக்குக் குரல் கொடுக்க முன்வருவார்கள்? எனவே, வேறு எந்தச் சிக்கல் குறித்தும் மக்களிடம் விவாதிப்பதற்கு, குடியை ஒழிப்பது ஒரு முன்நிபந்தனை ஆகிவிட்டது. இந்தத் தடுப்பை உடைத்தால்தான் அடுத்ததற்கே போக முடியும். குடியை வைத்துக்கொண்டே மற்ற சமூகச் சிக்கல்களை அகற்றுவது சாத்தியமற்றது.
கருவேப்பிலங்குறிச்சியில் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய்க்குக் குடிக்கிறார்கள் எனப் பார்த்தோம். இந்த ஊரிலாவது பத்து கடைகள் இருக்கின்றன. நான்கைந்து ஹோட்டல்கள், ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்கின்றன. ஆனால், இது எதுவுமே இல்லாத அச்சுஅசல் கிராமப்புறப் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஊர் காவனூர். பக்காவான கிராமம். ஒரு சிறு சந்தில் நுழைந்து நடந்தால், ஒருபக்கம் வயல்வெளிகளும், மறுபக்கம் எருமை மாடுகளும் சூழ்ந்திருக்க, ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. இந்தக் கடையில் ஒரு நாளைக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடக்கிறது. யார் காசு? இந்த ஊரில் எல்லோரும் பெரும் செல்வந்தர்கள் அல்ல. இருப்பது எல்லாம் மிக, மிக அடிமட்டக் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் உடல்நோக உழைக்கும் பணம் சிந்தாமல், சிதறாமல் மதுக்கடைகளுக்குத்தான் வருகிறது. இந்தக் கிராமத்தின் மளிகைக்கடையில் ஒருநாள் வியாபாரம் 10 ஆயிரம் ரூபாய்தான் என்பதை ஒப்பிட்டுப்பார்த்தால் குடியின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். பணம் மட்டும் அல்ல... இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்கள் நேரடியாகப் பொருட்களையே கொடுத்து சரக்கு வாங்குகின்றனர். மண்வெட்டி, கடப்பாறை, அரிசி, பருப்பு, பெட்ரோல்... எனப் பண்டமாற்றுக்குப் பயன்படும் பொருட்களின் பட்டியல் நீள்கிறது.
டாஸ்மாக் வந்த பிறகு கிராமங்களின் சமூக இயல்பு அடியோடு சீர்குலைந்துவிட்டது. ஊர்மந்தை, சாவடி, வாய்க்கால் கட்டை, கோயில் வாசல், மரத்தடி நிழல் என முன்பு எங்கு எல்லாம் ஆண்கள் ஒன்றுகூடுவார்களோ... அந்த இடங்கள் அனைத்தும் இன்று திறந்தவெளி பார்களாக இருக்கின்றன. சாலையில் செல்பவர்கள் பார்க்கிறார்களே என்கிற தயக்கமோ, அச்சமோ இல்லாமல் இளைஞர்கள் குடிக்கிறார்கள். குடும்ப நிகழ்வோ, ஊர்த் திருவிழாவோ சரக்கு இல்லாமல் முழுமை அடைவதே இல்லை. இவர்கள் குடித்துவிட்டு வீசிய பிளாஸ்டிக் டம்ளர்களும் தண்ணீர் பாக்கெட்டுகளும் பாட்டில்களும் எங்கும் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. கோயில் வாசலில் ஒரு தலித் சிறுவனின் கால் பட்டுவிட்டால் 'தீட்டு’ என சாமியாடும் இவர்கள், குடித்த குவார்ட்டர் பாட்டில்களை அதே கோயில் பிராகாரங்களில்தான் வீசுகின்றனர்
- பாரதி தம்பி, 
குடி குடியை கெடுக்கும், 
ஆனந்தவிகடன், 30/09/2015

15 comments :

 1. #குடியை வைத்துக்கொண்டே மற்ற சமூகச் சிக்கல்களை அகற்றுவது சாத்தியமற்றது.#
  இதற்குத்தானே அய்யா அரசு இந்த பாடு பட்டு குடியை வளர்க்கிறது :)

  ReplyDelete
  Replies
  1. குடியை வளர்க்கும் அரசுக்கு மக்கள் அரசு என்று பெயரும் உண்டு நண்பரே....

   Delete
 2. குடி குடியை கெடுக்கும் சரிதான்!மம்மி +கூனர்கள் குடியா கெடுகிறது???? சுயமரியாதை தன்மானம் இழந்தால் அடிமை!!! ஒன்றகோடி பேர்! அடிமைகளை உருவாக்குவதிலும் நம்பர் ஒன் தமிழ் நாடு! மம்மி நாமம் வாழ்க!!!!!

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் நாமாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நண்பரே.......

   Delete
 3. மக்களின் அறிவு, தன்மானம் எல்லாமே அடகு வைக்கப்பட்ட நிலை...

  ReplyDelete
  Replies
  1. இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அடகு வைக்கப்பட்டதுவிட்டது நண்பரே...மீட்கத்தான் முடியவில்லை....

   Delete
 4. உண்மை சுடுகிறது

  ReplyDelete
  Replies
  1. உண்மை மட்டுமா சுடுகிறது...குடி அரசும்தான் நண்பரே........

   Delete
 5. எனக்கு தெரிந்த ஊர் தான்,,,
  வேதனையாக இருக்கு,
  அருமையான பகிர்வு வலிபோக்ரே,,,

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கு தெரிந்த ஊர் என்பதால் வேதனைப்பட்டுத்தான் ஆற்ற வேண்டும் நண்பரே.....

   Delete
 6. மக்கள் நடத்தும் அரசை குடிஅரசு என்றுதானே சொல்கிறோம்....

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே....குடி மக்களின் குடியை கெடுக்கும் குடிஅரசு என்றுதான் சொல்கிறோம் நண்பரே......

   Delete
 7. மக்கள் தங்கள் சுய மரியாதையையும் இழந்து கொண்டிருக்கின்றார்கள்.வேதனை கொடுமை...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com