எல்லோருக்கும் தெரிந்தது தான்; பெரியாரை கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பனத்தனத்தின் எதிர்ப்பாளராகவுமே பார்க்க வைத்து அவரது பல சிந்தனைகளை புதைக்கும் செயலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால், இந்த தாடிக்கார கிழவர் எதை பற்றி தான் சிந்திக்கவில்லை / எதை பற்றி தான் கருத்துக்களை சொல்லவில்லையென யோசித்து பார்த்தால் ஆச்சரியத்தை விட அதிர்ச்சி தான் மிஞ்சுகிறது.
நவீன விவசாயம், பசிக்கு மருந்து, மாற்று உணவு, கர்ப்பத்தடை, குடும்பக்கட்டுப்பாடு, திராவிடம், தேசியம், கல்வி, மறுமணம், பரீட்சை, வர்ணாசிரமம், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், சாதி, சட்டம், ஒழுக்கம், மூடநம்பிக்கை, முட்டாள்தனம் என எல்லா இடத்திலும் எல்லா களத்திலும் நம்மை தற்காத்துக்கொள்ள ஆயுதங்களை விட்டு சென்றிருக்கிறார் பெரியார்.
இன்றைய தேதியில், மதவெறியும், போலியான தேச பக்தியும் நம்மை கட்டியணைக்க வரும் வேளையில், இந்த கருப்பு சட்டை கிழவரின் கைத்தடியை கடன் வாங்கித்தான் அவைகளை அடித்து விரட்ட வேண்டும்.
பெரியாரின் ஒட்டு மொத்த சிந்தனைகளையெல்லாம் ஒரு சிறு ட்வீட்லங்கரில் அடைத்து விட முடியாது. ஆனால் கடல் நீரை கையளவு கிண்ணத்தில் அள்ளி வந்தாலும், அது அதே கடல் நீர் தானே.
இன்றைய நாட்டு நடப்புக்கு பொருத்தமான பெரியாரின் சிந்தனைகளில் சிலவற்றை மட்டும் இங்க பதிவிடுகிறேன். இதை பதிவிடும் நோக்கம் ஒன்றே ஒன்று தான்; தயவு செய்து அவரின் கருத்துக்களை படியுங்கள், பின்பற்ற வேண்டுமென்று அவசியமெல்லாம் இல்லை, ஆனா படியுங்கள், ஏனெனில், 'நான் சொல்கிறேன் என்பதற்காக நான் சொன்ன எல்லாவற்றையும் நம்ப வேண்டாம்' என சொன்ன ஒரே சிந்தனைவாதி தந்தை பெரியார் மட்டும் தான்.
பெரியார் இதில் பல கருத்துக்களையும் கேள்விகளையும் எழுப்பி 70-80 வருஷங்கள் முடிந்து விட்டன. இது தான் அவர் காலங்கள் தாண்டி வாழும் சிந்தனையாளர் என்றும், நம் காலம் முடியும் வரை அந்த கிழவரின் கரம் பிடித்து நடக்க வேண்டும் என்றும் நம்மை தெளிய வைக்கும் காரணி.
இது மாட்டுக்கறிக்கு:
பூச்சிகளையும் புழுக்களையும் அழுக்குகளையும் மலத்தையும் சாப்பிடும் கோழியையும் மீனையும் மனிதர்கள் சாப்பிடும் போது, புல்லும் புண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் சாப்பிடும் மாட்டின் இறைச்சியை ஏன் சாப்பிடக்கூடாது?
இது ஜல்லிக்கட்டுக்கு:
தமிழன் தன்னை இந்தியன் என நினைத்ததால் தமிழர் வீரத்தையும் கலையையும் பண்பாட்டையும் இழந்தான்; தமிழன் தன்னை இந்து என கருதியதால் மானத்தையும் ஞானத்தையும் உரிமையையும் இழந்தான்.
இது Demonetisationக்கு:
படிப்பு வேறு அறிவு வேறு என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், படித்த முட்டாள்களுக்கு எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். பெரும் தவறு செய்பவர்கள் எல்லோருமே படித்த மூடர்களாய் தான் இருப்பார்கள்.
இது Anit-Indianக்கு:
......... இந்த லட்சணத்தில் கல்வியோடு இப்ப தேசபக்தியும் புகட்டப்படுகிறது. இது அறிவு வளர்ச்சிக்கு ஆபத்தான காரியமாகும். கடவுள் பக்தி மத பக்தி போலவே இந்த தேசபக்தியும் மனிதர்களின் அறிவு வளர்ச்சியை நாசமாக்கி விடுகிறது. அதிலும் நமது நாட்டு தேசபக்தி நினைப்பதற்க்கே பயங்கரமா இருக்கிறது. இது பழைமையை பேசி பின்னாள் போக பார்க்கிறதே தவிர முன்புறம் பார்ப்பதில்லை.
காதல்:
காதலும் அன்பும் ஒருவரிடம் மட்டும் தான் இருக்கவேண்டும் என சொல்வது முரண்பாடான ஒன்று. காதல் என்பது மிக மிக அற்பமான சாதாரண விஷயம், காதலுக்கு அடிமையாவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்கு சிறிதும் பொருந்தாது. ( இதை சொன்ன வருஷம் 1940, நவம்பர் )
Media:
உலகில் பத்திரிக்கைகள் 2 விதமானவை, மக்கள் வாழ்க்கையை முன்னேற்ற நடத்தப்படுபவை, தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக்கொள்ள நடத்தப்படுபவை. நாட்டில் காலிகள் அயோக்கியர்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றால், அவர்களை சார்ந்திருக்கும் பத்திரிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
ஜாக்டோ-ஜியோ ஸ்ட்ரைக்:
தொழிலாளிக்கு எவ்வளவு கூலி தரலாம் என விவாதிக்க தான் அரசியல் திட்டத்தில் கொள்கையாக இருக்கிறதே தவிர, ஒரு முதலாளி இவ்வளவுக்கு மேல் சம்பாதிக்கக்கூடாது என ஏதாவது கொள்கையோ திட்டமோ இருக்கா?
No comments:
நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மையெல்லாம் அநேகமாக செத்துப்போனவர்களிடம் தானே தவிர உயிரோடு இருப்பவர்களிடம் இல்லை.
Exam:
உருப்போட்டு ஒப்புவிப்பது என்பதே எந்த படிப்புக்கும் பரிட்சையாக இருக்கக்கூடாது. அப்படியானால் அர்ச்சகனும் புரோகிதனுமே ஒப்புவிக்க முடியும். உத்தியோகம் கொடுக்கப்படும் காலத்தில் தான் பரீட்சிக்கப்பட வேண்டுமே தவிர, ஒவ்வொரு வருடமும் தேர்ச்சிக்காக பரீட்சிக்க கூடாது.
சினிமா:
நம்ம பெண்கள் அலங்கார பொம்மைகளாகவும், ஆண்களின் கண்களுக்கு விருந்தானத்திற்கும் முக்கிய காரணம் இந்த பாழாய் போன ஒழுக்கமற்ற சினிமா படங்களே ஆகும்.
கூவாத்தூர் ரிசார்ட்:
ஸ்தல ஸ்தாபனங்களில், சட்ட சபைகளிலும், பாராளுமன்றத்திலும், மற்ற இடங்களிலும் நமது மக்கள் பிரதிநிதிகள் நடந்துக்கொள்ளும் தன்மைகளை பார்த்தால் நமது ஜனநாயகத்தின் யோக்கியதை விளங்கவில்லையா?
நாத்திகன்:
நாத்திகன் என்பவன் கடவும் இல்லை என்பவன் என்று அர்த்தம் கிடையாது. புராண, இதிகாச, வேத சாத்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களே, அவற்றை பகுத்தறிந்து ஆராய்ந்து பார்ப்பவர்களே நாத்திகர்.
டிவி விளம்பரங்கள்:
பெண்கள் நகைகளின் மேலும் சேலைகள் மீதும் பிரியத்தை ஒழியுங்கள். இவற்றில் பிரியம் வைத்தால் ஜவுளிக்கடைகளின் அலங்காரத்திற்கு தினம் தினம் புது சேலைகள் மாற்றி நிறுத்திவைக்கப்படும் பொம்மைகள் போலத்தான் மதிக்கப்படுவீர்கள்.
பசுவதை:
இந்துக்கள் தான் பசு விஷயத்தில் மோசமாக நடந்துக்கொள்கிறார்கள். வண்டியிலும் ஏரிலும் செக்கில் பூட்டி இழுத்து அது சாகும் வரை உபத்திரவிக்கிறார்கள். பருவத்தில் காளைகளை கட்டிப்போட்டு விதர்களை நசுக்குகிறார்கள். பாலை கன்றுக்கு கொடுக்காமல், புல்லை போட்டுவிட்டு பாலை தாங்கள் குடிக்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள்.
காதல் கல்யாணம்:
வாழ்க்கை துணை விஷயத்தில் காதல் மட்டும் போதாது. அறிவு அன்பு கல்வி பொருத்தம் வேலை அனுபவமெல்லாம் வேண்டும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருந்தது என்றால், அப்போதைய அறிவுக்கு அது போதும்.
பாபா ராம் ரஹீம் வகையறா:
கடவுள் தன்மை என்பது அயோக்கியத்தன்மைகள் தஞ்சமடைய பாதுகாப்பான இடமாகி விட்டது. அவர்களுக்கு தண்டனை என்பதும் சிறைச்சாலை என்பதும் காலிகள் உடலை இளைப்பாறி உடலை தேற்றிக்கொண்டு வரும் இடமாகி விட்டது.
வாமன ஜெயந்தி வாழ்த்துறவங்களுக்கு:
மாற்றான் பெண்களிடம் கிருஷ்ணன் செய்த லீலையை பற்றி வாய் பிளந்து பேசி கை தட்டி கேட்பவன், தனது வீட்டிலே கிருஷ்ணனை அதே லீலைகளை நடத்த விடுவானா?
பெரியார் கருத்துக்கள் இந்த காலகட்டத்திற்கு உதவாது என்ற கிச்சாவுக்கு சொல்லியிருக்கார்:
பழைய அபிப்ராயங்கள் எல்லாம், அது எதுவானாலும் பரிசோதனை செய்யப்படலாம். அப்படி பரிசோரிப்பது நடுநிலையில் தவறாமல் இருந்தால் வேண்டும். பரிசோதிக்க வேண்டுமென பேசிவிட்டு பின்வாங்குபவன் யாராயிருந்தாலும் கோழையாவான்.
இன்னமும் நமக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தேவையான சிந்தனைகளையும் நாம் கேட்கவேண்டிய கேள்விகளையும் நூறாண்டுகளுக்கு முன்பே போதித்து போய் விட்டார் இந்த சுயமரியாதைக்காரர். மோடியை நினைக்கும் போது இந்த தாடியையும் நினைக்க வேண்டுமென அதே நாளில் அவருக்கே முன்பே பிறந்திருக்கிறார் இந்த கிழவாடி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் ;-) :-)
சித்தர்களுக்கு சாவில்லையென்று கதையடிப்பார்கள்.
"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே" என்று ஒரு சித்தரே பாடிய பாடல் உண்டு.
யோகமும் தியானமும் செய்து சைவம் பழகி 70 வயதில் இறந்த ரமணர் பலருக்கு மகரிஷி என்றால், அதற்கு மேலும் முப்பது வருடங்கள் மூத்திர பையை சுமந்துக்கொண்டு இந்த தமிழ் மக்களின் வாழ்க்கை மற்றும் சிந்தனை முன்னேற்றத்திற்கு ஓயாது உழைத்தவர் பெரியார்.
தமிழ் அழியும் வரை பெரியார் சிந்தனைகள் வாழும், பெரியாரின் சிந்தனைகள் அழியும் போது தமிழர் அழிந்திருப்பர்
////மாற்றான் பெண்களிடம் கிருஷ்ணன் செய்த லீலையை பற்றி வாய் பிளந்து பேசி கை தட்டி கேட்பவன், தனது வீட்டிலே கிருஷ்ணனை அதே லீலைகளை நடத்த விடுவானா ?////
பதிலளிநீக்குசெருப்படி கேள்வி நண்பரே
பெரியார் சொன்னது அனைத்தும் தீர்க்க தரிசனமான வார்த்தைகள் :)
பதிலளிநீக்குபெரியாரின் சிந்தனைகள்
பதிலளிநீக்குஎன்றும்அழியாது
அதனால் தான் அவர் பெரியார்....
பதிலளிநீக்கு// நாத்திகன்:
பதிலளிநீக்குநாத்திகன் என்பவன் கடவும் இல்லை என்பவன் என்று அர்த்தம் கிடையாது. புராண, இதிகாச, வேத சாத்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களே, அவற்றை பகுத்தறிந்து ஆராய்ந்து பார்ப்பவர்களே நாத்திகர்.//
கடவுளை இல்லை என்று மறுப்பவர்கள் தமிழில் நாத்திகர் என்று அழைக்கபடுவார்கள் என்றே நான் இது வரை அறிந்தது. எனக்கு தெரிந்த ஒரு சில பாஷைகளிலும் அதன் பொருள் அப்படியே தான் உள்ளது.
பெரியார் சொன்னது போல் புராண, இதிகாச, வேத சாத்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களே அவற்றை பகுத்தறிந்து ஆராய்ந்து பார்ப்பவர்களே நாத்திகர் என்றால், புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்கள் ஆனால் அதே நேரம் மலைக் குகையில் கடவுள் வந்து எனக்கு கதை சொன்னார், என்று அடித்து விடுபவர்களும் அதை நம்புவர்களும், நாத்திகர்களாகிவிடுகிறார்கள் ஒரே குழப்பமான கொள்கை.
கடவுளை இல்லை என்று மறுப்பவர்களை தமிழில் எப்படி அழைக்க வேண்டும் என்பதை பெரியார் தொண்டன் வலிப்போக்கர் தெரிவிக்க வேண்டும்.
வலிபோக்கர் ஒரு மார்க்ஸியவாதி என்றல்லவா நான் முன்பு நினைத்திருந்தேன்.