பக்கங்கள்

Friday, September 25, 2015

மனிதகுல வரலாற்றில் அரை நூற்றாண்டு காலத்துக்கு இரண்டு சிந்தனையாளர்கள்

கார்ல் மார்க்ஸும், பிரெட்ரிக் ஏங்கெல்ஸும்.......கார்ல் மார்க்ஸும், பிரெட்ரிக் ஏங்கெல்ஸும்..............
‘‘நான்கு தமிழ்ப் புலவர்கள் கூடும் இடத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷனைப் போடு’’ என்றார் தந்தை பெரியார். அந்த அளவுக்கு குடுமிப்பிடிச் சண்டை இருக்கும் என்பதே அவரது கணிப்பு.

இரண்டு சிந்தனையாளர்கள் கூடினால்?... சொல்லத் தேவையில்லை. ஒருவருக்கொருவர் விடும் மூச்சுக் காற்றையே நிறுத்துவதற்கு முயற்சி செய்வார்கள். இப்போது சில சிந்தனையாளர்கள் அந்தக் காரியத்தை கனகச்சிதமாகச் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

ஆனால், மனிதகுல வரலாற்றில் அரை நூற்றாண்டு காலத்துக்கு இரண்டு சிந்தனையாளர்கள் ஒன்றாகவே சிந்தித்து, ஒன்றாகவே பழகி, ஒன்றாகவே வாழ்ந்து மறைந்தார்கள் என்றால் அது கார்ல் மார்க்ஸும், பிரெட்ரிக் ஏங்கெல்ஸும்தான்.

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஏறக்குறைய ஒரே வயது கொண்டவர்கள். ஏங்கெல்ஸைவிட மார்க்ஸ் இரண்டு வயது மூத்தவர். அவ்வளவுதான். ஜென்னியை, மார்க்ஸ் காதலித்ததற்கு இணையானது ஏங்கெல்ஸ் மீது மார்க்ஸ் வைத்திருந்த நட்பு.

‘‘நான் எழுதியது அனைத்தையும் ஏங்கெல்ஸுக்குக் காண்பிப்பேன். அவர் சரி என்றால்தான், அச்சகத்துக்கு அனுப்புவேன். ஏங்கெல்ஸ் எனக்கு முழு உலகம்’’ என்று சொல்லிக்கொண்டவர் மார்க்ஸ். இருவரும் ஒரே மேஜையில் உட்கார்ந்து மான்செஸ்டர் நூலகத்தில் படித்தார்கள். வீட்டில் ஒரே மேஜையில் உட்கார்ந்து எழுதினார்கள். இருவரும் சேர்ந்து ஒரே புத்தகத்தைத் தயாரித்தார்கள். மார்க்ஸ் எழுதியதை ஏங்கெல்ஸ் திருத்துவார். ஏங்கெல்ஸ் எழுதியதை மார்க்ஸ் செழுமைப்படுத்துவார். பார்க்கும்போதெல்லாம் பேசிக்கொண்டே இருந்தார்கள். பேசுவதற்காகவே பார்த்துக் கொண்டார்கள். நாளை எது தொடர்பாக பேச வேண்டும் என்பதை முந்தைய நாளே முடிவு செய்துகொண்டார்கள். ஒரே அறையில் எதிரெதிர் திசையில் நடந்தபடியே விவாதங்கள் செய்வார்கள். வெட்டவெளியில் ஒன்றாக நடந்தபடியே பரிமாறிக்கொள்வார்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள 40 ஆண்டுகள் அவசியப்படவில்லை. முதல் முறை சந்தித்தபோது தொடர்ச்சியாக 10 நாட்கள் மார்க்ஸோடு தங்கினார் ஏங்கெல்ஸ். அந்த 10 நாட்களிலேயே மார்க்ஸின் மேதைமையை ஏங்கெல்ஸ் உள்வாங்கிக்கொண்டார். ஏங்கெல்ஸின் கூர்மையை மார்க்ஸ் அறிந்து கொண்டார். கள்ளங்கபடம் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத, உள்நோக்கம் இல்லாத நல்ல நட்புக்கு ஒரு மணித்துளி போதும் என்று நமக்குப் புரிய வைக்கிறார்கள்.

முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான நிலையை விளக்கிக் கூறியவர்கள் மார்க்ஸும் ஏங்கெல்ஸும். சமுதாய உறவுகளின் வளர்ச்சியை அளவிட்டார்கள். மதக் கோட்பாடுகளுக்குப் பதிலாக விஞ்ஞானத்தை மாற்றாக வைத்தார்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சியை அளவிட்டுச் சொன்னது டார்வின். மனிதகுல வரலாற்றின் வளர்ச்சியைச் சொன்னவர்கள் மார்க்ஸும் ஏங்கெல்ஸும். ‘‘இதுவரை வந்த தத்துவ ஞானிகள் உலகைப் பற்றி விளக்கம் மட்டுமே செய்தார்கள். ஆனால் உலகை மாற்றுவது என்பதே முக்கியமானது’’ என்றார் மார்க்ஸ். அவரும் அவரது நண்பரும் உலகை மாற்ற உண்மையில் சிந்தித்தவர்கள்.

பாட்டாளிகளைப் பற்றி மட்டுமே சிந்தித்த மார்க்ஸும் ஏங்கெல்ஸும் பாட்டாளி வர்க்கத்தில் பிறந்தவர்கள் அல்ல. சொத்துடைமை வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். மார்க்ஸின் தந்தை வழக்கறிஞர். ஏங்கெல்ஸின் குடும்பத்துக்கு ஜவுளி தொழில் இருந்தது. மார்க்ஸ் சட்டம் படித்தார். ஏங்கெல்ஸ் அவரது அப்பாவின் தொழிலைக் கவனித்தார். அப்பாவிடம் இருந்த புத்தகங்களைப் படிப்பதன் மூலமாக சமூகம் தெரிய ஆரம்பித்தது மார்க்ஸுக்கு. பழைமைவாத குடும்பம் என்பதால் கிறிஸ்துவ சபை ஈடுபாடு ஏற்படுகிறது ஏங்கெல்ஸுக்கு.

மார்க்ஸ் வழக்கறிஞராக ஆகிவிடுகிறார். ராணுவத்தில் சேர்ந்துவிடுகிறார் ஏங்கெல்ஸ். இருவருமே சிந்தனைச் சிற்பிகள் என்பது அவர்களது முதல் கட்டுரையிலேயே தெரிந்து போனது.
‘ஒரு மனிதன் மனிதகுலத்துக்குச் சேவை செய்ய நினைத்தால், அவனுடைய மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்’’ என்பது மார்க்ஸ் எழுதிய முதல் கட்டுரையில் இருந்த வரிகள். மக்களை, அவர்களது எஜமானர்கள் நல்லவர்கள்போல் நடித்து எப்படி கொடுமையாக நடத்துகிறார்கள் என்பது ஏங்கெல்ஸ் எழுதிய முதல் கட்டுரையின் சாராம்சம்.

‘உனக்கு எது பிடிக்குமோ அதைச் செய்’ என்று அனுமதி வழங்கிய தந்தைக்கு மகனாகப் பிறந்தவர் மார்க்ஸ். ‘எனக்குப் பிடித்ததைத்தான் நீ செய்ய வேண்டும்’ என்று கட்டுப்பாடு போட்ட தந்தைக்கு மகனாகப் பிறந்தவர் ஏங்கெல்ஸ். இரண்டு வெவ்வேறு வளர்ப்பு முறைகள் கொண்டவர்களை ஒன்றாக ஆக்கியது அவர்களது வர்க்க சிந்தனை.

இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் ஒரே தெருவில் இருந்தார்கள். பல ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் இருந்தார்கள். மார்க்ஸ் வாழ்வின் அனைத்துச் சலனங்களின்போதும் ஏங்கெல்ஸ் இருந்துள்ளார். ஏங்கெல்ஸுக்கு எல்லாமுமாக மார்க்ஸ் இருந்துள்ளார்.

ஏங்கெல்ஸ் எழுதியதில் தலைசிறந்த புத்தகங்களில் ஒன்று ‘டூரிங்குக்கு மறுப்பு’ என்பதாகும். அது, இயற்கை விஞ்ஞானம் பற்றியது. அந்தப் புத்தகத்தை ஏங்கெல்ஸ் தயாரிக்க மார்க்ஸ் கடுமையாக உதவினார். மூலதனத்தின் முதல் பாகம் மட்டும்தான் மார்க்ஸ் உயிரோடு இருக்கும்போது வெளியானது. மறைவுக்குப் பிறகுதான் மற்ற நான்கு பாகங்களும் வெளிக்கொண்டு வரப்பட்டது. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், மூலதனத்தின் கையெழுத்துப் பிரதிகளை தனது மகள் எட்காரிடம் கொடுத்து, ‘‘இதை ஏங்கெல்ஸிடம் கொடு. அவர் எதையாவது செய்யட்டும்’’ என்றார் மார்க்ஸ். தனது பணிகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு மார்க்ஸின் மூலதனத்தைச் செம்மைப்படுத்தி வெளியிடுவதில் உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டவர் ஏங்கெல்ஸ். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எழுதிய கடிதங்களை மொத்தமாகப் படித்துப் பார்த்த லெனின், ‘‘இவர்களது நட்பு பண்டையக் காலக் கதைகளை மீறிய உணர்ச்சி மிகுந்த நட்பு’’ என்று மகுடம் சூட்டினார்.

வறுமை, மார்க்ஸையும் அவரது குடும்பத்தையும் தின்றது. அவரது வீட்டில் இருந்த அத்தனைப் பொருட்களையும் ஜப்தி செய்யும் அளவுக்குக் கடன். வீட்டில் எடுக்க எதுவும் இல்லாமல் குழந்தை படுத்திருந்த தொட்டிலையும் விளையாடிய பொம்மைகளையும் எடுத்துப் போய்விட்டார்கள். ‘‘வெறும் தரையில் என்னுடைய குழந்தைகள் குளிரால் உறைந்துபோக என்னுடைய மார்பகங்கள் வேதனை மிகுந்து வலி எடுத்து படுத்திருக்க வேண்டியதாயிற்று” என்று மனைவி ஜென்னி புலம்பிக் கண்ணீர் வடிக்கும் அளவுக்கும், ‘‘என்னுடைய படுமோசமான எதிரிக்குக் கூட இந்த நிலைமை வரக் கூடாது’’ என்று மார்க்ஸ் புலம்பும் அளவுக்கும் வறுமை வாட்டியது. அப்போது ஏங்கெல்ஸ் என்ன செய்தார் தெரியுமா? மான்செஸ்டரில் ஒரு நிறுவனத்தில், தனக்காக மட்டுமல்ல, தனது நண்பனுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதற்காகவே வேலையில் சேர்ந்தார்.

‘‘பிறக்கும்போது குழந்தைக்குத் தொட்டில் வாங்க பணம் இல்லை. இறக்கும்போது சவப்பெட்டி வாங்க பணம் இல்லை’’ என்று ஜென்னி சொல்லும் அளவுக்கு வாழ்க்கை இருந்தாலும் யாரோடும் மார்க்ஸ் சமரசம் செய்து கொள்ளவில்லை. ‘நியூ ரெயினிஷ்சி ஜிட்டுங்’ என்ற இதழை மார்க்ஸும் ஏங்கெல்ஸும் நடத்தினார்கள். ‘கைதுகள்’ என்ற கட்டுரை எழுதியதற்காக இருவர் மீதும் வழக்கு பாய்ந்தது. நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மார்க்ஸ், ‘‘பகைவர்களின் எறியீட்டிகளுக்கு முன்பாக குனிந்து ஒதுங்கி நின்று போராடிக்கொண்டிருப்பதே நமது தரப்பின் மிகப்பெரிய தியாகம். பத்திரிகையின் கடமை அத்தகையதாகவே இருக்கிறது’’ என்று சொன்னபோது வழக்கத்துக்கு விரோதமாக நீதிமன்றத்திலேயே பலரும் கைதட்டினார்கள். ‘‘சரியான உண்மை விவரங்களை மிகச் சரியாக சொல்லி அவைகளில் இருந்து சரியான முடிவுக்கு வந்ததுதான் எங்கள் குற்றமா?’’ என்று அப்போது கேட்டார் ஏங்கெல்ஸ். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை சரியான உண்மை விவரங்களை மிகச் சரியாகக் கூறுபவர்கள் மீதுதான் வழக்குகள் பாய்ச்சப்படுகின்றன. இந்த வழக்குக்குப் பிறகுதான் அவர்கள் இருவரும் அதிகம் எழுதினார்கள். சரியானவர்கள் அப்படித்தான் செய்வார்கள்.

மார்க்ஸுக்கு இறுதி நாட்களில் உணவு சாப்பிட முடியவில்லை. பால் தவிர, வேறு எதுவும் உள்ளே போகவில்லை. நலம் குன்றிய நண்பனை பார்க்க 1883-ம் ஆண்டு மார்ச் 14-ம் நாள் மதியம் இரண்டு மணிக்கு வருகிறார் ஏங்கெல்ஸ். எல்லோரும் அழுதுகொண்டிருக்கிறார்கள். ‘மேலே போங்கள்’ என்கிறார் மார்க்ஸின் மகள் ஹெலன். மேலே செல்கிறார், ஏங்கெல்ஸ். சாய்ந்து கிடக்கிறார் மார்க்ஸ். தனது நண்பன் இதுவரை விரும்பிய எல்லாப் புத்தகங்களையும் தேடித் தேடி வாங்கித் தந்த ஏங்கெல்ஸ், தன் நண்பனுக்காக சவப்பெட்டியும் வாங்கினார்.

மார்க்ஸ் எங்கே புதைக்கப்பட்டார் தெரியுமா? லண்டன் ஹைகேட் கல்லறையில் சமுதாயத்தாலும் மாதா கோயிலாலும் நிராகரிக்கப்பட்ட மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார். தத்துவாசிரியனை அடக்கம் செய்துவிட்டு பேசிய ஏங்கெல்ஸ், ‘‘யுக யுகாந்திரத்துக்கும் மார்க்ஸ் பெயர் நிலைத்து நின்று நீடித்திருக்கும். அவருடைய மாபெரும் பணியும் என்றும் நிலைத்திருக்கும்’’ என்றார்.

அவர் புகழ் நீடித்திருப்பதற்கும் நிலைத்திருப்பதற்கும் என்ன காரணம்?

மார்க்ஸிடம் அவர் மகள், ‘‘அப்பா! உங்களுக்கு மகிழ்ச்சி தரும் கருத்து எது?’’ என்று ஒருமுறை கேட்டாள். ‘‘போராடுவது’’ என்று பதில் அளித்தார் மார்க்ஸ். ‘‘அப்பா, உங்களுக்கு துயரம் தரும் கருத்து எது?’’ என்று மகள் கேட்டாள். ‘‘கீழ்ப்படிவது’’ என்று பதிலளித்தார் மார்க்ஸ். கீழ்ப்படியாமல் போராடுவோம். புழுவாக இருந்தாலும் புலியாக இருந்தாலும் போராடியதே வாழும். சமரசம் செய்வது வீழும்!

நன்றி! -ப.திருமாவேலன், ஜூனியர் விகடன்.

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

12 comments :

 1. வணக்கம் நண்பரே! இரு தத்துவஞானியையும் படித்துள்ளேன்! இன்றும் தெரிந்து கொண்டேன்! பகிர்வுக்கு நன்றிகள்!! எத்தனை காலத்துக்கு இது .,.....!!
  இந்தியாவில் யாரும் இல்லையோ?????

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவில்...இதுவரை இல்லையென்றே தோன்றுகிறது..ஒரு வேளை நமக்கு தெரியாமலும் இருக்கலாம்.நண்பரே......

   Delete
 2. அருமையான விடயங்கள் தந்தீர்கள் நண்பரே நன்றி

  ReplyDelete
 3. உலகத்திலேயே அதிக மக்களை சென்று சேர்ந்த தத்துவத்தைப் படைத்த மேதைகளைப் பற்றி அருமையான விஷயங்கள் !

  ReplyDelete
  Replies
  1. அந்த நண்பர்களான மேதைகளை பற்றி மறக்காமல் இருப்பதற்குத்தான் பதிவிட்டேன் நண்பரே

   Delete
 4. என்ன ஒரு நட்பு. நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 5. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் ஒரே தெருவில் இருந்தார்கள். பல ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் இருந்தார்கள். மார்க்ஸ் வாழ்வின் அனைத்துச் சலனங்களின்போதும் ஏங்கெல்ஸ் இருந்துள்ளார். ஏங்கெல்ஸுக்கு எல்லாமுமாக மார்க்ஸ் இருந்துள்ளார்.
  இப்படி
  எவராவது இங்குள்ளனரா?

  ReplyDelete
  Replies
  1. எனது சிற்றறிவுக்கு தெரிந்தவரை...இதுவரை இல்லையென்றே தோன்றுகிறது நண்பரே.........

   Delete
 6. புழுவாக இருந்தாலும் புலியாக இருந்தாலும் போராடியதே வாழும். சமரசம் செய்வது வீழும்!
  ஆம் உண்மைதானே,,,,, போராடியதே வாழும். வாழ விரும்பினால் அல்லவா வலிப்போக்கரே,
  நல்ல மனிதர்கள் பற்றிய பகிர்வு அருமை.
  தொடருங்கள்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி! தொடருகிறேன்.. முனைவர்.சீ.மகேசுவரி.அவர்களே!!

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com