Prpc Milton Jimraj
நீதிக்கு பாதுகாப்பு!- உத்தரவும் உரிமைப் போரும்!
------------------------------------------------------------
------------------------------------------------------------
”உயர்நீதிமன்றத்தில் இப்போது என்ன நடக்கிறது? வழக்கறிஞர்களின் செயல் இதற்கு முன் இல்லாத அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது. நீதிபதிகள் பய உணர்வுடன் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். வழக்கறிஞர்களுக்கான உள்ள மூன்று சங்கங்களும் என்ன செய்கின்றன? சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்பவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் தானா?” -இப்படி உயர்நீதிமன்ற நிலவரம் பற்றி கோபத்தோடு வெளிப்படுத்தியவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து. இதை தொடர்ந்து உயர்நீதி மதுரைக் கிளையைச் சேர்ந்த 15 வழக்கறிஞர்களை அகில இந்திய பார் கவுன்சில், வழக்காட தடை விதித்தது. அது போல மதுரை பார் அசோசியேஷனும் வெளியேற உத்தரவிடபட்டது.
ஒரு சின்ன பிளாஷ்பேக்...
சில மாதங்கள் முன் ’கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்’ என உத்தரவிட்டார். உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன். இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மதுரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் தர்மராஜ், செயலாளர் ஏ.கே. ராமசாமி மீது சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டது. இதற்கிடையே மதுரையில் ஆயிரகணக்கான வழக்கறிஞர்கள் திரண்டு நீதித்துறை ஊழல் ஒழிப்பு பேரணி ஒன்றை நடத்தினர். இதில் ஊழல் செய்த நீதிபதிகள் என ஒரு பட்டியலை வெளியிட்டார்கள். செப்-14-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ் சிவஞானம் அமர்வு முன் திரண்ட 11 வழக்கறிஞர்கள் ’தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்’ என பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் இடையிலான விவகாரம் உச்சநீதிமன்றம், சட்டமன்றம் வரை ஒலித்து தணலாக தகிக்க தொடங்கியது.
இந்நிலையில்’நாங்கள் அராஜகம் செய்பவர்களல்ல... மக்களுக்காகவே நிற்பவர்கள்’ என்று கூறும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோவன். மேலும் ஒரு உத்தரவு தங்களுக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் அதை மீறும் உரிமையும், போராடுகிற உரிமையும் ஜனநாயத்தில் அனைவருக்கும் உண்டு அப்படி கேள்வி எழுப்பிய மதுரை வழக்கறிஞர்கள் மீது கண்டம்ப்ட் ஆஃப் கோர்ட்னு போட்டுருக்காங்க. அதே சிவில் நீதிபதிகள் பணி நியமனம் சம்பந்தமான உத்தரவில் ஊழல், சாதி பாராபட்சம் உண்டு என நீதிபதி சி.எஸ். கர்ணன் உத்தரவுக்கு உடனே ஸ்டே கொடுக்கிறது அதே உயர்நீதிமன்றம் ஏனிந்த பாரபட்சம்?
’தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும்’ என வழக்கறிஞர்கள் அறவழியில் போராடினர். ஆனால் இதைக் கண்ட தலைமை நீதிபதி, ’நீதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக காவல்துறையோ வழக்கறிஞர்களைக் கண்டு பயப்படுகிறது. எனவே மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) பாதுகாப்பு நீதிமன்றத்திற்கு வேண்டும்’ என்கிறார். பிப் 19, 2009-ல் போலிஸ் மிகப்பெரிய தடியடி தாக்குதலை, வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற வளாகத்தில் நடத்தியது. அதில் நீதிபதிகள் கூட காயமடைந்தனர். அப்போது கூட கேட்காத மத்திய பாதுகாப்பை இப்போது ஏன் கேட்கிறார்கள்.
சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு கேட்பது வழக்கறிஞர்கள் மீது ஒரு பீதியை உருவாக்கும் செயல் ஆக தற்போது சட்டமியற்றுதல், ஆட்சி செய்தல் இரண்டையும் நீதிமன்றம் தானே எடுத்துக் கொண்டால் இரண்டுக்கும் எதிரான ஜனநாயக போராட்டத்தை மக்களின் நீதிமன்ற பிரதிநிதிகளான நாங்கள் முன் எடுத்து செல்வோம்’ என்றார் அழுத்தமாக.
போலிஸ் உதவி கமிஷனர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”வழக்கறிஞர்கள் மது பாட்டிலோடு வருகிறார்கள், பெண் போலீசை கிண்டல் செய்கிறார்கள், யோகா வகுப்பு நடத்த விடாமல், வழக்கறிஞர் மில்டன், ரஜினி தடுக்கிறார்கள், மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி அதை மேற்கோள் காட்டி சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு தேவை என்கிறார். ஆனால் சட்டமன்றத்தில் பேசிய ஜெ. 5.8.2015ல் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இறுதி ஆணையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். அந்த உத்தரவில் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட வில்லை’ என கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் மில்டனிடம் பேசினோம்.
”கிரானைட் கொள்ளை, தாதுமணல் கொள்ளை இப்படி சிலவற்றில் நீதிபதிகள் மீது புகார்கள் எழுந்து, அது தலைமை நீதிபதிக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு தீர்வுமில்லை, ஜக்கி வாசுதேவ் மீது புகார்கள் இருக்க அவர் நிறுவனம் மூலம் யோகா நடத்துவது சரியில்லை என்று மனு கொடுத்தோம். நீதித்துறை முறைகேடுகள் குறித்து விசாரிக்க தனி முறையை ஏற்படுத்தணும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய பெஞ்ச் பார் ரிலேசன்ஷிப் மூலம் பேசி தீர்த்துக்கொள்ள கமிட்டி இருக்கு. அதன் மூலம் செய்யணும். அதைவிட்டு கண்டம்பட் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது” என்றார் ஆணித்தரமாக.
நீதியைப் பெற மக்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது நீதிமன்றம் என்ற அஸ்திவாரம் தான். அந்த அடித்தளத்தில் நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் என்ற இரண்டு தட்டுகளும் சமமான புரிதலோடு இருந்தால் மட்டுமே நீதித் தராசு சரியாக இருக்கும்.
-சே.த. இளங்கோவன்
-நக்கீரன், செப் 30-அக். 02
//நீதியைப் பெற மக்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது//மன்னிக்கவும்? பணக்காரர்களுக்கு பழகிய நாய்குட்டி மாதிரி! ஏழைகளுகுகு எப்பவும் எட்டா தூ,.....ரத்தில்!
பதிலளிநீக்குமடியிலே கனம் இல்லையென்றால் வழியிலே பயம் எதற்கு ?
பதிலளிநீக்குவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
பதிலளிநீக்குபணம்அறம்
நன்றி
இவ்வளவு விளக்கமாக இப்போதுதான் அறிகிறேன்.
பதிலளிநீக்குநீதிக்கே பாதுகாப்பு...ரொம்ம்ம்ம்ப நல்லாருக்குப்பா நாடு...அருமையான பாதையில் பயணிக்கிறது....அதுக்குதான் நீதி தேவதைக்குக் கண்ணுல கறுப்புத் துணி கட்டிருக்காங்க போல நீதி மன்றத்துல...ஹும்
பதிலளிநீக்கு