பக்கங்கள்

Monday, June 10, 2019

அதிகாலை கனவு-27.

சத்தியம் தவறாத உத்தமனா/ தியாகியா..???


ஆறாம் வகுப்பில் வயதுக்கு வந்து ஏழாம் வகுப்பில் படிக்கும்போது திருமணம் முடிக்கப்பட்டவர் என்சகோதரி... திருமணம் முடித்த எட்டாவது மாதத்தில் குறை பிரசவத்தால் ஒரு குழந்தை இறந்துவிட... அடுத்த குழந்தை பத்தாவது மாதத்தில் பிறந்து சில நாளில் இறந்துவிட்டது..


பிள்ளை பெறும்  இயந்திரமான என் சகோதரி.  மூன்றாவதாக  ஒரு பெண் குழந்தை நான்காவதாக இரண்டாவது பெண் குழந்தை. ஆண் குழந்தைக்காக ஐந்தாவதாக...ஆண்குழந்தை ஆறாவதாக ஆண் குழந்தை  ஆகா   ஆறு குழந்தைகள் பெற்றெடுத்து இரண்டை பறிகொடுத்து விட்டு இருக்கும் நான்கு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு என் தாயார் மூலமாக என் தலையில் விழுந்தது...எப்படி.. என்றால்.....

கடைசி பிள்ளை பிறந்த சில மாதங்களில். அவர்கள் வளர்க்கும் பசு மாட்டை  கதிர் அறுத்த வயல்களில்   மாட்டின் கயிற்றை பிடித்துக் கொண்டு மேய்ச்சலுக்கு விட்டு நின்று கொண்டிருந்தார் ஒழுங்கா மேய்ந்த அந்த மாடு அடுத்த இடத்தில் மேய்வதற்க்காக கயிற்றை பிடித்துக் கொண்டிருந்த என் சகோதரியை இழுத்துக் கொண்டு ஓடியது... பலமில்லாத என் சகோதரி மாட்டின் கயிற்றை விடாமல் இழுத்து பிடிக்க..பசுமாடும் தன் பலத்தால் இழுக்க..கயிற்றோடு என் சகோதரி கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் நேற்று அறுக்கப்பட்ட கதிர் சுனை என் சகோதரியின் இரு கண்களையும் பதம் பார்த்துவிட்டது.  ஒரு வருடம் இல்லை.இரு வருடம் இல்லை..ஐந்து வருடத்திற்க்கு  அரவிந்த் கண் மருத்துவமனை அரசு மருத்துவமனை என்று அலைந்து பார்வை திரும்ப கொண்டுவர முடிவில்லை
என்னனென்னமோ பெயர் சொன்னார்கள்.....சத்து குறைபாடு என்றார்கள்..

என் தாயாராலும் என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை... கிராமத்தில் இருந்தவர்களை அடிக்கடி போய் பார்த்தும் கடன் பெருகி வருமானம் குறைந்து  அன்றாட தேவைகளைகூட நிறைவேற்ற முடியாமல் தவித்த நிலையில் என் தாயார் தன் மகள் மருமகன் பேரப்பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்துவிட்டார்
  முப்பத்திமூன்றாவது வயதில் சுயமாக தொழில் தொடங்கி முப்பத்தி ஐந்தாவது வயதில் திருமணம் முடிக்க என் உறவுக்காரரும் நண்பர் ஒருவரும் என் தாயாரிடம்  பேசிய போதுதான்.. என் தாயாரின் கருத்தும் முடிவும் தெரிந்தது..நான் திருமணம் செய்து கொண்டால் வரப்போகும் மருமகள் தன் மகளையும் பேரப்பிள்ளைகளையும்  வளர்க்க விடமால் தன் மகனை மாற்றிவிடுவாள்... என்று  பல்வேறு குடும்பங்களில் அன்று நடந்த நடப்பை தெரிந்து கொண்டு  என்னிடம்  தன் நிலை..தன் மகள் நிலை பேரப்பிள்ளைகளின் நிலை எல்லாவற்றையும் தான் வேலை செய்யும் எஜமானிகள் சொல்லிக் கொடுத்தபடி என்னிடம் பேசி..கசிந்துருக வைத்துவிட்டார்...இயல்பாகவே... இரக்க குணமுள்ள நான்.. என் தாயாரின்  அழுகைக்கும் அழுதபடியே பேசிய பேச்சுக்கும் இரக்கத்துக்கு அடிபணிந்து அவர்  கேட்டபடியே சத்தியம் செய்து கொடுத்து.. என் தாயார் இறக்கும்வரை அதாவது இரண்டுவருடத்துக்கு முன்பு வரை கொடுத்த சத்தியத்தை காப்பற்றி வந்தேன்.

தாய் சொல்லை தட்டாத நானும்  என் உடன் பிறப்புக்கு என்னை விட்டால் வேறு நாதியில்லை என்பதால்... நானும் அவர்களை வளர்க்க பல உழைப்புகளில் ஈடுபட்டேன். என்னுடன் படித்த ஆசிரியர் நண்பர் பணிபுரியும் பள்ளியில் இரு ஆண்பிள்ளைகளை  சேர்த்து படிக்க வைத்தேன் மூத்த பெண் குழந்தை பள்ளிக்கு செல்ல அடம் பிடித்ததால் ஏழாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டது இரண்டாவது பத்தாவது வரை படித்துவிட்டு மேல் படிக்க விரும்பவில்லை.கடைசியாக இரு மருமகள்களை என் சகோதரி மற்றும் அவரின் கணவரின் விருப்படியும் ..முடிவுப்படியும்அவர்கள் பார்த்த மாப்பிள்ளைகளுக்கே திருமணம் முடித்து வைத்தேன்  . என்தாய் இறந்த ஒரு வருடம் கழித்து மூத்த மருமகனுக்கு  அவன் விருப்பப்படியும் அவன் தந்தை-தாயின் பெருமைப்படியும் அவர்கள் பார்த்த பெண்னை மணமுடித்து வைத்தேன்..அடுத்த மருமகன்.. எதற்கும் பிடி கொடுக்காமல் இருப்பதாலும் நான் சொல்வதற்கு எதற்கும் செவி சாய்க்காமல் இருப்பதாலும்  எனக்கும் கடனும் பெருகிவிட்டதாலும்  இதனால் அவனுக்கு மணமுடிக்கும் நிகழ்ச்சி நிரல் மட்டும் தள்ளிக் கொண்டே போகிறது. அந்தக் கதையை அடுத்து சொல்கிறேன். 

நான் திருமணம் முடிக்காமல் இருக்கும் காரணத்தை சுட்டிக் காட்டியே என் தெருக்காரிகளின்-காரன்களும் இவர்களோடு  என் தந்தை வழி உறவுக்காரர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் . ஆட்பட்டுவருகிறேன்... அது பெரியகதை...

இதோடு என் தெரு.. நாட்டாமையும் தெருக் கோயிலின் பூசாரி மற்றும் அவனின் வைப்பாட்டி. காதலி.சின்னவீடு பெரியவீடு போன்றர்கள் என் இடம் வீட்டை அபகரிக்க தொடுத்த இம்சைகளாலும்.. சுயமாக தொடங்கிய தொழிலால் வருமானத்தை பார்க்க வேண்டிய நிலையில் தவியாய் தவித்து போனதாலும்....திருமணம்..உறவு எதுவும் என்று நினைத்துப் பார்க்கக்கூட முடியாத நிலையில் இருந்தேன்....என்று    ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தவற்வையும் நடந்தவற்றையும் நண்பரிடம் சொல்லி முடித்தபோது..
நண்பரின் முகம் சற்று வாடிப் போயிருந்தது...

அமைதியாக இருந்த நண்பர்.... உண்மையிலே   நீ  தியாகிதாண்டா.... அதுல எனக்கு எந்த சந்தேகம்...இல்லை என்று நண்பர் சொன்னபோது...

வேறு ஒரு நண்பர் சொன்னது... என் கனவை கலைத்தது.... எவன்டா சொன்னது உன்னை தியாகியென்று... நீ இஇ.....அவ்வளவு  சத்தியம் தவறாத உத்தமனடா ..
போடா  கேனப்பயலே....கூமுட்ட...கிறுக்கன்டா...

2 comments :

  1. சத்தியம்தான் நண்பரே பலரது வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாக அமைகிறது.

    ReplyDelete
    Replies
    1. காலம் கடந்துதான் இந்த உண்மை எனக்கு தெரியவருகிறது நண்பரே..

      Delete

.........