வெள்ளி 09 2024

20 ஆண்டுகள் கடந்த .. நடந்த கதை.

 

ஆலிவர் ரோடு வீட்டின் வாசலில் சந்தடி இல்லாமல் வந்து நின்ற போலீஸ் வண்டிகளில் இருந்து, தபதபவென பூட்ஸ் கால்கள் குதித்து வீட்டைச் சூழ்ந்து நின்றன. போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவைத் தொடர்ந்து, ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியின் பின் கட்டையால் கலைஞர் வீட்டு கேட்டில் போட்டிருந்த பூட்டை ஓங்கி அடித்து உடைக்க, மடை திறந்த காக்கி வெள்ளமாக அத்தனை பேரும் உள்ளே பாய்ந்தார்கள். 30-6-2001 ராஜாத்தி அம்மாளும் கனிமொழியும் கேட்கக் கேட்கப் பதிலே சொல்லாமல், கலைஞர் உறங்கிக்கொண்டு இருந்த அறைக்குள் புகுந்தார்கள். அந்நேரம் விழித்து இருந்த கலைஞர், கைதுக்கான காரணங்களைக் கேட்டு வாக்குவாதம் தொடங்க, அதற்குள் மாறன் வீட்டுக்கும் ஸ்டாலின் வீட்டுக்கும் தகவல் பறந்தது. வீட்டில் இருந்து மாறன் ஓடோடி வந்து சேர்ந்தபோது, கலைஞரை... கையையும் காலையும் பிடித்துத் தூக்கிக்கொண்டு இருந்தனர் போலீஸார். ''ஐயோ... ஐயோ...'' என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கலைஞர் கதறிக்கொண்டு இருந்தார். போலீஸ் இழுபறியில் கலைஞரின் மூக்குக் கண்ணாடி ஒரு பக்கம் எகிறி விழுந்தது. தடுக்க வந்த மாறனை குண்டுகட்டாகச் சுமந்தபடி வெளியே கொண்டுவந்து வீசினார்கள். வாசலில் தரையில் படுத்தபடி தர்ணா செய்ய முயன்ற பரிதி இளம்வழுதிக்கு இடுப்பில் பூட்ஸ் காலால் பலமான ஓர் உதை. துடித்துப் புரண்டு எழுந்து சுதாரிப்பதற்குள், கலைஞரை காரில் ஏற்றிக்கொண்டு போலீஸ் அணிவகுப்பு அரசினர் தோட்டத்தை நோக்கிப் பறந்தது. அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள சி.பி.சி..டி. அலுவலகம்.... கடந்த ஆட்சியில் பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்த சண்முகசுந்தரம் பதறி அடித்துக்கொண்டு வர, அதற்குள் அரசினர் தோட்ட வளாகத்தின் எல்லா வாயில்களிலும் ராணுவ அணிவகுப்புபோல போலீஸ் வண்டிகள் திரண்டு நின்றன. அதையும் மீறி, சண்முகசுந்தரம் எப்படியோ உள்ளே நுழைந்துவிட, பத்திரிகையாளர்களை உள்ளேவிட மறுத்தது போலீஸ். மீறி உள்ளே ஓடிச் சென்ற சுமார் 30 பத்திரிகையாளர்கள் தடிகளால் காட்டுத்தனமாகத் தாக்கப்பட்டு, போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். கண நேரத்தில் தாங்கள் கைது செய்யப்பட்டதை நம்பவே முடியாமல், ஆட்சிக்கு எதிரான கோஷங்களை நிருபர்கள் உரக்க எழுப்ப, அவர்களை சுமந்தபடி வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் நோக்கி வேன் பறந்தது. அந்த நேரம் கணவர் அரவிந்தனுடன் வந்து சேர்ந்தார் கனிமொழி. ''எக்காரணம் கொண்டும் உங்களை உள்ளேவிட முடியாது!'' என்று அங்கே இருந்த டெபுடி கமிஷனர் சொல்ல, ''இது பொது வளாகம். இதற்குள் செல்லவிடாமல் என்னைத் தடுக்க, உங்களுக்கு ஏது உரிமை?'' என்று கனிமொழி வாதாடத் துவங்க, ''ஏய்... சொன்னா, மரியாதையாப் போயிடணும்...'' என்று அந்த அதிகாரி மட்டமான வார்த்தைகளில் இறங்க, வந்து சேர்ந்திருந்த நிருபர்களே திகைப்பில் உறைந்து போனார்கள். அடுத்த சில நிமிடங்களில் கனிமொழியின் தோளில் கை வைத்து அந்த அதிகாரி தள்ள, நிலைமை படுமோசம் என்று புரிந்துகொண்டவராக அவரது கணவர் அரவிந்தன், கனிமொழியை சமாதானப்படுத்தி ஓரமாக அழைத்துச் சென்றார். வெகு நேரக் கெஞ்சலுக்குப் பிறகு, ஆயிரம் விளக்கு உசேன் மற்றும் கனிமொழியை மட்டும் உள்ளே நுழைய அனுமதித்தது போலீஸ். சி.பி.சி..டி. அலுவலகத்தில் கலைஞருடன் இருந்த சண்முகசுந்தரத்தை நாம் செல்போனில் தொடர்புகொள்ள, ''என்ன வழக்கு... எதற்காக கைது என்று சொல்ல மறுக்கிறார்கள். அடுத்து எங்கே கொண்டு செல்லப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை...'' என்றார் சண்முகசுந்தரம் குரல் கம்ம! அதே சமயம், டி.ஆர்.பாலு எம்.பி-யுடன் ஒரு காரில் வந்த மாறனை அரசினர் தோட்டத்தின் பிரதான நுழைவாயிலில் தடுத்து நிறுத்தியது போலீஸ். வாயிலில் மறித்துப் போடப்பட்டிருந்த இரும்புத் தடுப்பை முட்டித் தூக்கி எறிந்தபடி மாறனின் கார் உள்ளே பறந்துவிட்டது. பிற்பாடு அவரை விரட்டிச் சென்ற போலீஸார், கலைஞரின் கண் எதிரேயே தாக்கித் தள்ளி இருக்கிறார்கள். சட்டை காலரைப் பிடித்து சுழற்றி அடித்தனர். கலைஞரை போலீஸ் படை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீதிபதி அசோக்குமார் வீட்டுக்குக் கொண்டுபோகிறார்கள் என்று தகவல் கிடைத்து, நிருபர்கள் அங்கே பறந்தனர். அங்கும் சாலையே தெரியாத அளவுக்குக் குவிந்துகிடந்த போலீஸார், நீதிபதியின் குடியிருப்புக்கு 100 அடி தூரத்திலேயே நிருபர்களைத் தடுத்து நிறுத்தினர். ''செய்தி சேகரிப்பது எங்கள் உரிமை!'' என்றபடி நிருபர்கள் முன்னேற, ''உங்களைத் தடுப்பது எங்கள் கடமை!'' என்று வக்கிரமாகச் சொன்ன ஒரு போலீஸ் அதிகாரி, லத்தி சார்ஜுக்கு உத்தரவு போட்டார். அவ்வளவுதான் ரணகளம் தொடங்கியது. சரமாரியாக போலீஸ் லத்திகளால் பின்னியெடுக்க... ரத்தம் பெருக்கெடுக்க... அங்குமிங்கும் அலைபாய்ந்த நிருபர்கள், ''ஆட்சி அராஜகம் ஒழிக!'' என்று கோஷம் போட்டபடி, தொடர்ந்து நீதிபதியின் வீட்டை நோக்கி முன்னேறினார்கள்




சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு, கலைஞரை ஏற்றிக்கொண்டு கார் வர, அதைத் தொடர்ந்து மாறன், மு..தமிழரசு ஆகியோர் வரிசையாக வந்தனர். காரை சில நிமிடம் வாசலிலேயே நிறுத்தி கலைஞரை ஒரு படமாவது எடுத்துவிடலாம் என்று நிருபர்களும் டி.வி. கேமராக்காரர்களும் நெருக்கியடிக்க... யாருமே எதிர்பாராதது நடந்தது. லேசாகத் தயங்கி நின்ற வாகன அணிவகுப்பு திடீரெனச் சீறலுடன் வேகம் எடுத்து சாலையில் நேராகப் பாய்ந்தது. கலைஞரை வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகிறார்கள் என்று எப்படியோ தெரிந்து கொண்ட நிருபர்கள் கார்களிலும் டூவீலர்களிலும் பறந்தனர். அங்கே போய்ச் சேர்ந்தபோது, வேப்பேரி காவல்நிலையத்தின் உயர்ந்த கதவுகள் உள்ளே மூடப்பட்டு இருந்தன. (அதற்கு முந்தைய நாள்தான் 150-க்கும் மேற்பட்ட நிருபர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட கொடுமை நடந்த அதே இடம்!) போலீஸ் ஸ்டேஷனை நெருங்க முயன்ற நிருபர்களுக்கு, அங்கேயும் காட்டுத்தனமான தாக்குதல் பரிசாகக் கிடைத்தது. விழுந்த அடிகளில் இரண்டு மூன்று கேமராக்கள் நொறுங்க, உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, கிடைத்த இண்டு இடுக்கில் எல்லாம் புகுந்து ஓடினார்கள் நிருபர்கள். அதில் பெண் நிருபர்களைக்கூட விடாமல்... அவர்கள் தரையில் தடுக்கி விழுந்தபோதும் லத்தியால் தாக்கித் தள்ளியது போலீஸ். ''சிறையில் அடைக்கப்படும்வரை கலைஞரை யாரும் ஒரு புகைப்படம்கூட எடுத்துவிடக் கூடாது. அவருடன் யாரும் ஒரு வார்த்தைகூட பேசிவிடக் கூடாது. அதைக் கவனத்தில் கொள்ளுங்கள்'' என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனிடம் இருந்து வந்த உத்தரவுதான் இத்தனைக்கும் காரணம் என்று பிற்பாடுதான் புரிந்தது. ஒரு வழியாக ஸ்டேஷனின் பக்கவாட்டு காம்பவுண்டு சுவரைத் தாண்டிக் குதித்து, இருட்டில் பதுங்கியபடி அந்தக் கட்டடத்தை நெருங்கினர் சில நிருபர்கள். அங்கே கண்ட காட்சியில் அவர்கள் ரத்தம் உறைந்தது. தொடர்ந்து உரத்த குரலில் கேள்விகள் கேட்ட முரசொலி மாறனின் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினார் ஒரு போலீஸ்காரர். இன்னொருவர் ஸ்டேஷனுக்குள் இருந்த நாற்காலியை அவரை நோக்கி எட்டி உதைக்க, மாறனின் காலில் சுளீரெனத் தாக்கியது அந்த நாற்காலி. இதனைத் தொடர்ந்து மாறன் வாய்விட்டு அலறியது ஸ்டேஷனுக்கு வெளியிலும் கேட்டது. அரை மணி நேரம் உள்ளே கலைஞரை வைத்து இருந்தவர்கள், அப்போதும் கைதுக்கான காரணத்தைச் சொல்லவில்லை. மறுபடி அவரை நீதிபதி விட்டுக்கே கூட்டிக்கொண்டு கிளம்பினார்கள். கலைஞர் காரைத் தொடர்ந்து தன் காரில் கிளம்பப் போனார் மாறன். மின்னலெனப் பாய்ந்து சென்று அவர் காரில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு ஓடி மறைந்தார் ஒரு காவலர். ரத்தம் வடிந்த கால்களுடன் தள்ளாடியபடி வாசலுக்கு ஓடி வந்து அங்கு நின்று இருந்த ஒரு ஆட்டோவில் ஏறி அதை மாறன் கிளம்பச் சொல்ல, அதற்குள் சன் டி.வி-யின் கவரேஜ் கார் வந்து நிற்க... அதில் ஏறிக்கொண்டார். வேப்பேரி ஸ்டேஷனுக்குள் இருந்த கனிமொழியைத் திடீரென வெளியேவிட மறுத்தது போலீஸ். ஓர் அதிகாரியிடம் அவர் வாதாடத் துவங்க, அவரது கையைப் பிடித்து இழுத்தபடி உள்ளே சென்றார் அந்த அதிகாரி. அடுத்த சில நொடிகளில், கனிமொழி வீறிட்டு அலறும் சத்தம். அதைத் தொடர்ந்து விம்மி அழுதபடி அவரும் ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டார்... வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறிய கலைஞரின் கார் மட்டும் நீதிபதியின் வீடு இருந்த குடியிருப்புக்குள் நுழைந்தது. அவரைப் பின் தொடர்ந்து நிருபர்கள் உள்ளே நுழைய முயல, அந்தக் குடியிருப்பின் கனத்த கேட்டை வேகமாக அடித்து மூடியது போலீஸ். அப்போது கேட்டின் இடுக்கில் கால்கள் சிக்கி ஒரு பெண் நிருபர் வாய்விட்டுக் கதற... அது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கேட்டை முரட்டுக் கரங்களால் அழுந்த மூடியபடியே இருந்தனர் போலீஸார். ஒட்டுமொத்த நிருபர்களும் ஒரு போலீஸ்காரரை இழுத்துச் சென்று, சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர். அந்தப் போலீஸ்காரரை மீட்க மறுபடி நிருபர்கள் மீது லத்தி சார்ஜ். ரத்தக் காயம்... சிதறி ஓட்டம்! அப்போது உள்ளே கலைஞருடன் இருந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டோம். ''சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில் 12 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் உண்டாக்கிவிட்டதாக, கலைஞர் மீது மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு புகார் கொடுத்திருக்கிறார். கலைஞர் தவிர, மேயர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி, பொன்முடி ஆகியோரும் இதில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்...'' என்று படபடப்பான குரலில் பேசிய சண்முகசுந்தரம், அடுத்தடுத்து நீதிபதி வீட்டுக்கு உள்ளே நடந்தவற்றை விவரித்துக்கொண்டே வந்தார்

கலைஞருக்கு 'வர்டிகோதொந்தரவு இருப்பதால் அவரால் தொடர்ந்து 10 நிமிடங்கள் நிற்பதுகூட இயலாத காரியம் என்று அவருடன் சென்ற அவரது குடும்ப டாக்டர் கோபால் எடுத்துச் சொல்லி இருக்கிறார். கழுத்து வலி, முதுகு வலி ஆகியவையும் கலைஞரை வாட்டுவதாக நீதிபதியிடம் சொன்னார். ''அதற்காக பட்டு மெத்தையில் வைத்தா பராமரிக்க முடியும்?'' என்று பக்கத்திலேயே நின்றிருந்த போலீஸ் அதிகாரி கமென்ட் அடிக்க, துடித்துப்போய் அவரை ஒரு கணம் பார்த்தாராம் கலைஞர். தொடர்ந்து நடந்த வாக்குவாதங்களுக்குப் பிறகு ஜூலை 10-ம் தேதி வரை கலைஞரை ரிமாண்டில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி. குடும்ப டாக்டர் கோபால் தவிர, அரசு டாக்டர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, கலைஞரின் உடல்நிலையை உடனடியாக சோதிக்க வேண்டும் என்றும், இதற்காக அவரை சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இது நடந்து கொண்டு இருந்தபோதே அடுத்தடுத்து கார்கள் வெளியே வந்து நின்றன. தயாளு அம்மாள், செல்வி, மு.. தமிழரசு மூவரும் முதலில் உள்ளே போனார்கள். அடுத்து ராஜாத்தி அம்மாள், கனிமொழி, அரவிந்தன் ஆகியோர் சென்றனர். கடைசியாக வந்து நின்ற காரில் இருந்து மாறன் இறங்கியபோது, ஒட்டு மொத்தக் கூட்டமும் நடுங்கிப்போனது. நார் நாராகக் கிழிந்துபோயிருந்த வேட்டியை உயர்த்திப் பிடித்தபடி, உள்ளே இருந்த அண்டர்வேர் தெரிவதுபற்றிக்கூட உணராதவராக, தள்ளாட்ட நடை போட்டு இறங்கினார் மாறன். ''நான் வயசானவன்... ஹார்ட் பேஷன்ட்... அடிச்சிட்டாங்க... முடியலை... என்னால எதுவுமே முடியலை...'' என்று அவர் சொல்ல, குடியிருப்பின் கேட்அருகே நின்றிருந்த துரைமுருகன் வாய்விட்டுக் கதறத் தொடங்கிவிட்டார். ''தலைவர் செருப்பை போட்டுக்கக்கூட அந்தப் பாவிங்க அவகாசம் கொடுக்கலை. இதோ நான் கொண்டாந்திருக்கேன்...'' என்றபடி வெண்ணிறச் செருப்பை மாறன் முன் துரைமுருகன் நீட்ட, அவர் சொல்வதைப் புரிந்து கொள்ளக்கூடத் திராணி இல்லாதவராத, விழிகள் மேலே செருக நீதிபதியின் வீட்டை நோக்கி நடந்தார் மாறன். ரிமாண்ட் உத்தரவு போடப்பட்டு, நீதிபதி வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார் கலைஞர். அவரது குடும்பத்துப் பெண்கள் அத்தனை பேரும் கண்ணீரும் கம்பலையுமாக தலைவிரி கோலமாக அவரைத் தொடர்ந்து வர, ஆறுதல் சொன்னபடியே காரில் ஏறப் போனார் கலைஞர். அடுத்த காட்சி சென்னைப் பொது மருத்துவமனையில்தான் இருக்கும் என்று கணக்குப் போட்டு நூற்றுக்கணக்கான தி.மு.. தொண்டர்களும் பிரமுகர்களும் அங்கே ஓடினர். சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தும் கலைஞரை போலீஸ் அங்கே கொண்டு வரவில்லை. பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி மாஜிஸ்திரேட் சொன்னதையும் மீறி, தங்களது கொடூரக் கண்ணாமூச்சி விளையாட்டின் அடுத்த கட்டமாக, கலைஞரை நேரடியாக சென்னை மத்தியச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று விட்டனர். ஜெயில் வளாகத்தை நெருங்க முடியாதபடி மேலே இருந்த பாலத்திலேயே அத்தனை பேரும் தடுத்து நிறுத்தப்பட, அங்கே இருந்தே கேமராக்கள் ஜூம் செய்யப்பட்டன. காருக்குள் இருந்து லுங்கியும் கிழிந்த சட்டையுமாக இறங்கிய கலைஞர் மெள்ளத் தலையை நிமிர்த்தி பாலத்தின் மேல் குவிந்துகிடந்த பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களைப் பார்த்து கையசைக்க... ''தலைவா! நீ யாருக்கு என்ன பாவம் செஞ்சே? போலீஸ்காரங்களுக்கு சம்பளத்தை ஏத்திக் கொடுத் தியே... அந்தப் பாவத்துக்காகத்தான் உன்னை வீட்டில் அடிஅடினு அடிச்சாங்களா தலைவா?'' என்று உரக்கக் கதறியபடியே மயங்கி விழுந்தார் ஒரு தி.மு.. தொண்டர். சிறையின் முன்பு இருந்த சிமென்ட் தளத்தில் அப்படியே சப்பணமிட்டு அமர்ந்த கலைஞர் ஓங்கி உயர்ந்த சிறைக் கட்டடத்தை ஒரு தரம் நிமிர்ந்து பார்த்தார். குடும்ப டாக்டர் கோபாலும், கனிமொழியும் அடக்க மாட்டாமல் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள். உடனடியாக சுதாரித்துக் கொண்ட கனிமொழி, மேலே நிமிர்ந்து பாலத்தின் மேலே இருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து, ''தலைவருக்கு சிறைச்சாலை பயம் இல்லை... ஆனால், நீதிபதி உத்தரவு போட்ட மருத்துவ வசதி எதுவும் சிறைச்சாலைக்குள் அவருக்குக் கிடைக்கப்போவது இல்லை. அவரைச் சிறையில் தள்ளினால் மறுபடி பார்க்க முடியுமா என்பதே சந்தேகம்தான்...'' என்று சொல்லிக் கதறினார். நீதி கேட்டு கலைஞர் அங்கேயே உண்ணாவிரதம் இருக்கப்போவதாகச் சொல்ல, ஒட்டு மொத்த போலீஸ் அதிகாரிகளும் அவரை பெருங்கூட்டமாகச் சூழ்ந்து கொண்டு மிரட்டும் குரலில் கைகளை ஆட்டி, ஏதோ சொன்னார்கள். கலைஞரும் பதிலுக்குக் கைகளை வீசி அவர்களுக்கு பதில் சொல்ல... இந்த வாக்குவாதம் சுமார் அரை மணி நேரம் நீண்டது. அதே சமயம் சிறையின் உள்ளே இருந்த ஒரு போலீஸ்காரர் ஃபைபர் சேர் ஒன்றை கலைஞர் அமர்வதற்காக எடுத்து வர, பாய்ந்து சென்ற ஓர் அதிகாரி அந்தக் காவலரை அடிக்காத குறையாகப் பாய்ந்து, உள்ளே திருப்பி விரட்டினார்

 

ஒருவழியாக காலை 7.50 மணிக்கு மத்திய சிறையின் கதவுகள் கலைஞரை உள்வாங்கிக் கொண்டபோது, பாலத்தின் உச்சியில் இருந்து ஒட்டுமொத்த ஜனமும் கதறித் தீர்த்தது. வளாகம் எங்கும் கதறல் சத்தம்! அதே சமயம் அங்கு வந்து சேர்ந்தார் ஸ்டாலின் மனைவி துர்கா. அவர் மகன் உதயநிதியும் மகள் செந்தாமரையும் இறங்கினர். ''போட்டுட்டாங்களா... நிஜமாவே தலைவரை உள்ளே போட்டுட்டாங்களா?'' என்று நம்ப முடியாதவராக மறுபடி மறுபடி நிருபர்களிடம் கேட்டார் துர்கா. ''உங்கள் வீட்டுக்குள்ளும் போலீஸ் புகுந்ததாமே...?'' என்று நாம் கேட்க, ''ஆமாம். மேயரைத் தேடிக்கிட்டு வர்றதா சொன்னாங்க. அவர் வீட்டில் இல்லைனு சொன்னபோதும், எங்களைத் தள்ளிவிட்டுட்டு உள்ளே புகுந்து சூறையாடினாங்க. வாசல் கேட்டில் தொடங்கி, உள்ளே இருக்கிற அறைகள்வரை கைக்குக் கிடைத்ததை எல்லாம் உடைச்சுத் தள்ளினாங்க. பொம்பளைனுகூடப் பார்க்காம திரும்பத் திரும்பக் கையைப் பிடித்து இழுத்து. 'உன் புருஷன் எங்கேனு சொல்லு!?’னு என்னை சித்ரவதை பண்ணாங்க...'' என்று துர்கா சொல்ல, மகள் செந்தாமரை, ''இவ்வளவு பத்திரிகைகாரங்க நாட்டில் இருக்கீங்களே... இந்தக் கொடுமையை யாருமே தட்டிக் கேட்க மாட்டீங்களா?'' என்று தாயின் தோளில் சரிந்து விம்மினார். ஸ்டாலின் மகன் உதயநிதி நம்மிடம், ''எதுக்குக் கைது... வாரன்ட் இருக்கா? என்பது போன்ற எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை. 'உங்கப்பன் பயந்து ஓடிட்டானா?’னு எகத்தாளமா என்னைக் கேட்டாங்க. இப்ப எங்க அப்பா எங்கே இருக்கார்னே தெரியலை...'' என்று உதயநிதி குமுறி அழுதார். சென்னைக்கு உள்ளேயே ஸ்டாலின் மடக்கிக் கைது செய்யப்பட்டதாக செல்போனில் ஒரு தகவல் வந்து சேர்ந்தது. அனால், அது உண்மை இல்லை என்பது பின்னர் தெரிந்தது. காலை 8.30 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு வந்த ஸ்டாலின் அங்கு வந்த இல.கணேசனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். ''அப்பாவை அராஜகமாக அடித்து, இழுத்துக் கைது செய்து கொண்டு போயிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்துப் பெண்களிடம் போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டனர். எல்லா வெறியாட்டத்துக்கும் காரணமானவர்களைத் தண்டிக்காமல், எனது அரசியல் வாழ்க்கை ஓயாது. நானும் இன்னும் சிறிது நேரத்தில் நீதிபதி முன்பு சரண்டர் ஆகப் போகிறேன்...'' எனப் படபடப்புடன் நிருபர்களிடம் சொல்லி முடித்தார். முன்னாள் அமைச்சர்கள் கோசி.மணி, நேரு ஆகியோர் கைது... முன்னாள் அமைச்சர்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்துக் கைதாவார்கள் என்ற செய்தி சிறை வளாகத்துக்கு வெளியே இருந்த கலைஞர் மகள் செல்விக்கு வந்து சேர, ''அண்ணே... இந்த நாட்டுல என்னண்ணே நடக்குது? இப்படி தலைகால் தெரியாம ஆட்டம் போடுறாங்களே... அவங்க உருப்படுவாங்களா?'' என்று வீரபாண்டியாரை நோக்கிக் கதறலுடன் கேட்க, செல்விக்கு பதில் சொல்ல வந்த வீரபாண்டியாருக்கு வாய் கோணிக்கொண்டது. வெடித்துக் கிளம்பிய அழுகையை அடக்க முடியாமல் நடு ரோட்டில் அப்படியே உட்கார்ந்துவிட்டார் வீரபாண்டி ஆறுமுகம். ஸ்டாலின் வீட்டில் போலீஸ்.......... 30-ந் தேதி, இரவு 1.10 மணி! சென்னை மேயர் மு.. ஸ்டாலினை தேடி, அவரது வேளச்சேரி வீட்டுக்கு விரைந்தார்கள் ஒரு பெண் போலீஸ் உட்பட 4 போலீஸ்காரர்கள்! ஏரியவே வெகு நிசப்தமாக இருந்தது! ஜீப்பை விட்டு இறங்கிய போலீஸ்காரர்கள், ‘கேட்அருகே இருந்த வாட்ச்மேனிடம், "ஸ்டாலின் இருக்காரா?" என்றனர். "அய்யா, வெளியூர் போயிருக்கிறார்?" என்று வாட்ச்மேன் படபடப்புடன் பேச, "அப்படின்னா... ‘கேட்டை திறந்து விடுங்க; நாங்க செக் பண்ணிக்கிறோம்" என்ற போலீஸ்காரர்கள் வலுக்கட்டாயமாக வாட்ச்மேனின் தோளில் கை வைத்து இழுக்க... "லேடிஸ் மட்டும்தான் உள்ளே இருக்காங்க; என்னால் எதுவும் செய்ய முடியாதுங்க அய்யா!" என்று கெஞ்சினார் வாட்ச்மேன்! சரி! காலையில நாங்க பார்த்துக்கிறோம்; இந்த லட்டரை வீட்டுல கொடுத்திடுங்க"" என்று மிரட்டலுடன் போலீஸ் பேச... பிடிவாதமாக வாங்க மறுத்துவிட்டார் வாட்ச்மேன். உடனே அங்கிருந்து விலகிய போலீஸ்காரர்கள் அடுத்த 15 நிமிடத்தில், ஒரு பெரும் போலீஸ் படையுடன் மீண்டும் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டனர்! இந்த முறை வாட்ச்மேனிடம் எதையும் பேசாத போலீஸ் படை, ‘கேட்ஏறி திடுதிடுவென உள்ளே குதித்தது. சிலர்கேட்டை திறக்க முற்பட்டு... பிறகு வாட்ச்மேனிடம் சாவியை பிடுங்கி கேட்டை திறந்தனர். உள்ளே நுழைந்து மெயின் கதவை உடைக்க முயற்சி செய்தும், படபடவென தட்டியும் ஆர்ப்பாட்டம் செய்ய... கதவை திறந்து வெளியே வந்தார் ஸ்டாலின் மனைவி துர்கா! கதவு திறந்ததும் ஸ்டாலின் இருக்காரா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த போலீஸ்காரர்கள் அங்கும் இங்கும் அறைகளுக்குள் ஓடினார்கள்

 

அவர் வெளியூர் போயிருக்கார்; அவர் இல்லாத நேரத்தில் இப்படி அர்த்த ராத்திரியில் ரகளை செய்யறது உங்களுக்கே நல்லாயிருக்க?" என்று ஸ்டாலின் மனைவி சத்தம் போட, போலீஸ்காரங்ககிட்டே கை நீட்டி பேசறீங்களா? உள்ளே வெச்சுக்கிட்டு நாடகம் ஆடாதீங்க! என்று சொல்லிய போலீஸ்காரர்கள், சிலர் அவரது கையைப் பிடித்து இழுத்து தள்ளினார்கள். இந்த களேபரத்தை பார்த்துக்கொண்டிருந்த ஸ்டாலின் மகள், போலீஸ்காரர்களை தடுக்க முயன்ற போது அவரையும் பிடித்து கீழே தள்ளினார்கள் பெண் போலீஸார்! நேரம் கிடைக்கும்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூர் சென்று வருவது ஸ்டாலின் வழக்கமாம். இம்முறையும் பெங்களூர் விரைந்து கொண்டிருந்த ஸ்டாலினுக்கு கலைஞர் கைது செய்யப்பட்டிருப்பதும், நீங்கள் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலும் சொல்லப்பட... உடனடியாக சென்னை திரும்பினார். போலீஸ்காரர்கள் தனது வீட்டில் நடந்து கொண்ட அட்டூழியத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மனைவி துர்காவுக்கும், மகளுக்கும் ஆறுதல் கூறிவிட்டு கட்சிக்காரர்களுடன் கிளம்பிய, ஸ்டாலின் கோபாலபுரம் வீட்டு விரைந்தார். தனது இளைஞரணியினரை அமைதியாக இருக்க அடிக்கடி கட்சிகாரர்களை தொடர்பு கொண்டு பேசிய ஸ்டாலின், போலீஸிடம் சிக்கினால் தனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என கருதியவர், கீழ்பாக்கம், டெய்லர்ஸ் சாலையில் இருந்த மாவட்ட செசன்ஸ் நீதிபதி அசோக்குமாரிடம் சரணடைய விரைவாக வந்தார். போலீஸ் படையும் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தது. நீதிபதியை சந்திப்பதற்கு முன்பு, நம்மிடம் பேசிய ஸ்டாலின், "அந்த அம்மா ஆட்சியில் நடந்த ஊழல்களை நாங்க ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறோம். அதுக்கு பழிவாங்கவே எங்க மீது வழக்கு, கைதுன்னு போடுறாங்க! இதை நாங்க சட்டப்படி, தைர்யமா சந்திப்போம்! மூட்டு, கால் வலி, இடுப்பு வலின்னு போய் படுத்துக்க மாட்டோம்!" என்றவரிடம் "உங்களை சி.பி.சி..டி.யினர் கைது செய்துள்ளனரா?" என்றபோது "யாரும் கைது செய்யவில்லை. நானே சரணடைய வந்துள்ளேன். ஏற்கனவே, என் மீது வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டபோது, நானே முன் வந்து கோர்ட்டில் ஆஜராகி அதை சந்தித்தேன். என் மடியில் கனமில்லை; அதனால் கோர்ட்டில் ஆஜரானேன். இப்போது என்னை யாரும் கைது செய்யவில்லை. நானே சரணடைய வந்திருக்கிறேன்!" என்று கூறிவிட்டு நீதிபதியை சந்திக்க மாடிபடி ஏறினார் பதட்டத்துடன். நீதிபதி அசோக்குமார் முன்பு ஆஜரான ஸ்டாலின் போலீஸ்காரர்கள் தனது வீட்டில் நடந்துகொண்ட அநாகரிகமான நடவடிக்கையை கூறிவிட்டு, "என்னை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள் அதனால் நானே சரணடைய வந்திருக்கிறேன்" என்றதை கேட்டுக் கொண்ட நீதிபதி, ஸ்டாலின் வக்கீல் ராஜஇளங்கோ, நீட்டிய சரண்டர் பெட்டிஷனை வாங்கிக் கொண்டார். "வாரண்ட் நோட்டீஸ் கொண்டு வந்திருக்கீங்களா?" என்று நீதிபதி கேட்க, "எங்களிடம் இல்லை; சி.பி.சி..டி.யினரிடம்தான் இருக்கிறது. அரைமணி நேரத்தில் கொண்டு வந்து விடுகிறோம்!" என்றவர், சி.பி.சி..டி. போலீஸாருக்கு ஸ்டாலின் இங்கு இருப்பதாக தகவல் அனுப்பினார். அதன் பின்பு நீதிபதியிடம் பேசிய வக்கீல் ராஜ இளங்கோ, "சென்னை மத்திய சிறையில் அடைக்க நீங்கள் தயவு செய்து உத்திரவிட வேண்டும்!" என்று கேட்க, அதற்கு தனக்குபவர்இல்லை என்று கூறிய அசோக்குமார், "இது பற்றி ஜெயில் அத்தாரிட்டியிடம்தான் நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும்" என்றார். "சென்னையிலே இருக்க வேண்டி நீங்கள் சிபாரிசு செய்யுங்கள்" என்று மீண்டும் ராஜ இளங்கோ மன்றாடியதும், "எவ்வித ரீசனும் இல்லாமல் எதுவும் என்னால் செய்ய இயலாது" என மறுத்தபோது... சென்னை சென்ட்ரல் ஜெயிலில் இருக்க வேண்டிய அவசியம் காரணத்தை தனி கோரிக்கையாக எழுதி கொடுத்தார் வழக்கறிஞர். இந்த மனுவில், சென்னை மேயராகவும், ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்..வாகவும், தி.மு..வின் இளைஞர் அணியின் தலைவராகவும் ஸ்டாலின் இருக்கிறார். சென்னையை தவிர வேறு சிறைகளில் தனக்கு பாதுகாப்பு கிடையாது என்றும், சென்னை எம்.எல்..வாக இருப்பதாலும் எனது உறவினர்கள் பலரும் சென்னையிலேயே இருப்பதாலும் சென்னை மத்திய சிறையில் இருக்கவே ஸ்டாலின் நினைக்கிறார். அதனால், அவரின் உயிர் பாதுகாப்பு கருதி சென்னையில் இருக்க உத்திரவிட வேண்டுகிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையும் ஏற்றுக் கொண்டு குறிப்பு எழுதிய அசோக்குமார் ஸ்டாலினை 15 நாள் ரிமாண்டில் வைக்க உத்திரவிட்டார். சி.பி.சி..டி. போலீஸாரிடமிருந்து ஒன்றரை மணி நேரமாக வாரண்ட் ஆர்டர் வராததால் நீதிபதி வீட்டிலேயே அமர்ந்திருந்தார் ஸ்டாலின்

அப்போது வக்கீல் இளங்கோ, பெயில் பெட்டிஷனை போட முயற்சித்தபோது, "சனி, ஞாயிறு என்பதால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. திங்கள்கிழமை அப்ளை செய்யுங்கள். இந்த விடுமுறை நாளில் பொறுமையாக அவர் மீது கூறப்பட்டுள்ள வழக்கை படித்து தெரிந்து கொண்டு பெயில் மூவ் பண்ணுங்களேன்; இப்போ ஏன் அவசரம்?" என்றார் நீதிபதி அசோக்குமார். இதற்கிடையே கிடைத்த சின்ன இடைவெளியில் ஸ்டாலினிடம், "உங்க மீது என்ன வழக்கு என்பது தெரியுமா?" என்று நாம் கேட்டபோது, "தெரியாது! எந்த வழக்காக இருந்தாலும் சட்டப்படி சந்திப்பேன்" என்று கூறிவிட்டு மௌனமாகிவிட்டார் ஸ்டாலின். சென்னை நகரில் கட்டப்பட்ட 11 பாலங்களில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த ஒரு வழக்கிற்காக 120() (கூட்டுசதி), 420 (மோசடி), 13(1); (2) (லஞ்ச ஒழிப்பு), 409 (அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது) 167 (பொது ஊழியராக இருந்து கொண்டு குற்றம் செய்வது) என்கிற ஆறு செக்ஷன்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது! 10.50-க்கு வந்த சி.பி.சி..டி. போலீஸார் ஸ்டாலினை கைது செய்து கீழே கொண்டு வந்தனர். "உங்க காரில் வருகிறீர்களா? எங்க வேனில் ஏறிக் கொள்கிறீர்களா?"" என்று போலீஸார் கேட்க, "போலீஸ் வேனிலே வருகிறேன்" என்று ஸ்டாலின் ஏறிக் கொள்ள திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தி.மு.. தொண்டர்கள் ஜெ.யின் அராஜக ஆட்சிக்கு எதிராக கோஷங்கள் போட்டனர். வேன், மத்திய சிறைச்சாலை நோக்கி விரைந்தது! ஸ்டாலினை மதுரை சிறைச்சாலையில் அடையுங்கள் என்று சிறை அதிகாரிக்கு வந்த உத்தரவின் பேரில் ஸ்டாலின் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்

 

 நன்றி!#ஜூனியர்_விகடன்  , (டிவிட்டர்)சங்கர்


விரிவான தகவலுக்கு இதை படிக்க..








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...