பக்கங்கள்

Wednesday, July 24, 2013

நிம்மதியா போய் கிட்டு இருந்த பொழப்புல மண்ணள்ளி போட்டது வினவு.

வினவு-ஆறாம்  ஆண்டு பிறந்த நாளுக்காக .வினவு்-ன் அய்ந்தாண்டு பதிவுகளைப்பற்றி வினவு- வின் வாசகர்கள். அவரவர் பார்வையில் வினவு- குறித்து தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஆரம்பத்தில்  புதிய கலாச்சாரம் புத்தக விற்பனையில் எனக்கு ஏற்ப்பட்ட
அனுபவத்தைப்போல, நண்பர் பால்ராஜ் அவர்களுக்கு.வினவு-வைப்பற்றி அவர்க்கு ஏற்ப்பட்ட அனுபவத்தை உள்ளது உள்ளபடி கூறுகிறார். அவர் அனுபவத்தையும் படித்துப் பாருங்கள்

 

முன்னெல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு. நினைச்சா சினிமா, பசங்களோட வாரா வாரம் தண்ணி, அப்பப்போ நெட்டுல பிட்டு...  இணையத்துல சும்மா மேம்போக்கா சுத்திக்கிட்டு இருந்தவன, "போடா, போய் வினவு படி" ஒருத்தன் சொன்னான். அன்னிக்கி பிடிச்சுச்சு சனி. நிம்மதியா போய் கிட்டு இருந்த பொழப்புல மண்ணள்ளி போட்டது வினவு.

 

வினவு படிக்க ஆரம்பிச்சதுல இருந்தே இம்சையும் ஆரம்பிச்சுருச்சு. ஊருக்குள்ள நாலு பேரு கூட நல்லதா நாலு வார்த்தை பேச முடியல.  

இப்படித்தான் ஒரு நாள் அதிகாலை எட்டறை மணிக்கு, கண்ணு முழிச்ச கையோட பல்லு கூட விளக்காம டீக்கடைக்கு போய் பேப்பர (தினத்தந்தியோ என்ன எழவோ) பொரட்டிக்கிட்டு நின்னேன். 

கன்னித்தீவு கூட படிக்காதவன் பேப்பர் படிக்கிரானேன்னு சுத்தி 
இருந்தவுக ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் பேப்பர் படிக்கறதுக்காண்டியே டீ கடைக்கு போவதுன்னு பழக்கமாயிருச்சு. வினவு படிக்கப்போய் பேப்பர் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். 

வினவு சனியன் அத்தோட விடல, ஒரு நாள் பேப்பர்ல ஒரு விபத்து பற்றி செய்தி. அரைபாடி லாரி ஒண்ணு டூவீலர் மேல ஏறி ஒருவர் சாவுன்னு செய்தி.

டீ கடைல அவனவன் இதபத்தி தான் பேசிக்கிட்டு இருக்கான், ஆனா அவனவனும் கண்டபடி பேசிக்கிட்டு இருக்கான். "தண்ணிய போட்டு போய் மோதியிருப்பான்" ங்கறான் ஒருத்தன். இன்னொருத்தன் 

"இந்த லாரிகாரங்களே இப்படித்தான்" ங்கறான். "டூவீலர்காரன் பிளேன்ல போரா மாரி போய்ருப்பான்" ங்கறான் இன்னொருத்தன். 

எனக்கு பயங்கரமா கோவம் வந்துருச்சு ,"என்னய்யா பேசுறீங்க, ரோட்ட கேவலமா போட்டு காசு பாத்த காண்டிராக்டர், லஞ்சம் வாங்கிக்கிட்டு ஓட்ட வண்டிக்கு எஃப்சி குடுத்த ஆர்டிஓ, இன்னும் ரெண்டு டிரிப் அடிச்சா 200 ரூவா கிடைக்குமேன்னு நினக்க வைக்கிற டிரைவர் வீட்டு நிலைமை, முக்குக்கு முக்கு திறந்து வைத்திருக்குற டாஸ்மாக் எல்லாம் தான் காரணம். இது விபத்து கிடையாது அரசு செய்த படுகொலை" ன்னு ஆத்து ஆத்துன்னு ஆத்தினேன் பாருங்க ஒரு சொற்பொழிவு

 (உபயம்_வினவு தந்த அறிவு). அவனவன் எம்மூட்டு பிள்ளைக்கு இம்பூட்டு அறிவாங்குற மாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அப்புறம், பேச ஆரம்பிச்ச வாய் நிக்கவே இல்ல. (வினவ நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தறேன்).  அரசியல், சினிமா, அது இது என்று எத எடுத்தாலும் சொற்பொழிவுதான்.

 ஒரு நாள் டீ கடைக்காரர் தனியாக கூப்பிட்டு, "தம்பி, உங்கப்பாவ எனக்கு ரொம்ப நாளா தெரியும், அதனால சொல்றேன் இனிமே டீ குடிக்க வேற கடை பாத்துக்குங்க" என்று விட்டார். இவ்வளவிற்கும் நான் கடன் சொல்லவே மாட்டேன்.

இப்படியான காலத்தில் தான் ஒறமொற (உறவு) ஒண்ணு வீட்டிற்கு வந்தது. ஊர்கதை எல்லாம் பேசியான பின், வந்தவன் சும்மா இல்லாமல், "தங்கச்சிக்கு நல்ல இடம் இருந்தா சொல்லு பங்காளி" என்றது. உரம், பூச்சி மருந்து எல்லாம் போட்டு மூக்குக்கு கீழே மயிர் விவசாயம் செய்யும்

அந்த ஜந்துவிடம், "சூப்பர் பையன் ஒருத்தன் இருக்கான். நல்ல வேல, நல்ல சம்பளம், கெட்ட பழக்கம் ஒன்னும் கிடையாது (இது மட்டும் பொய். அவரும் வினவு படிப்பார்) சாதி மட்டும் வேறு. நீ ம்னு சொல்லு ஒடனே முடிச்சுருவோம்" என்றேன். 

ஏதோ நான் வேண்டுமென்றே அந்த ஜந்துவின் வேட்டியை உருவி வீதியில் விட்ட மாதிரி, மானம் போச்சி, அது போச்சி, இது போச்சி என்று கண்ட படி கத்தி விட்டு போனது அந்த ஜந்து. வீட்டில் உள்ளவர்களோ, என்னை எந்த கோவில் பூசாரியிடம் மந்திரிக்கலாம் என ஆலோசிக்கிரார்கள். பைத்தியகார பய பட்டம் மட்டுமே பாக்கி.

 

சரி ஆணியே புடுங்க வேண்டாம், வினவு படிக்கவே வேண்டாம், என முடிவெடுத்து பேஸ்புக், டிவிட்டர் என்று 2 நாள் சுற்றினேன்.


அங்கியும் அம்மாளுக விட்டேனா பார் ன்னு வினவுல இருந்து ரெண்டு ரெண்டு வரிய டிவிட்டி உசுர வாங்குறாக. முழுசா படிக்கலின்னா எங்கே ருத்திரன் சார் கிட்ட போகவேண்டி வந்துருமோன்னு எனக்கே டவுட் வந்துருச்சு.............


*குடும்பத்தோட சினிமா பாத்து எவ்வளவு நாள் ஆச்சு ?( அஞ்சு வருசமாம். வினவு சொல்ராரு.)

*மேலுக்கு முடியலன்னு ஆஸ்பத்திரிக்கு நிம்மதியா போக முடியுதா? (தனியார் மருந்து கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு, தேவையற்ற மருந்து எழுதும் டாக்டர். அரசு மருத்துவமனை அவலம். மருத்துவ சேவையிலிருந்து விலகும் அரசு.... வினவு கட்டுறைக டான்னு மூளைல ஆஜராயிரும்ல)

*பிள்ளைய பள்ளிகூடத்துல கூட சேக்க முடியல. எப்பப்பாரு அரசு பள்ளி, தனியார் பள்ளி, கட்டண கொள்ளைன்னு.....

    வீட்டில் மனைவின் முனுமுனுப்புகள் வரவர வால்யூம் அதிகமாகிறது.

 

இவ்வளவு ஏன் இன்று காலை கக்கூசுக்கு போய்விட்டு குண்டி கழுவும் போது, சுத்தம் செய்யும் இந்த கையை நொட்டான் கை (ஒட்டான் கை) என இழிவு படுத்தும் சமூகம் பற்றி கோவங்கோவமாய் வந்தது.

 

வேறு வழியில்லை. வினவு படித்து மூளை குழம்பி போவதை விட. அம்மணக்கட்டை ஊரில கோவணங் கட்டி பயித்தியமாவதை விட‌....

அனைவரையும் வினவு படிக்க வைத்து எல்லோர் இடுப்பிலும் துணி கட்டிவிட வேண்டியது தான்.

 

பால்ராஜ்1 comment :

  1. சில தறுதலைக்கு வேணா வினவு வெவரமான ஆளா தெரிந்தா பரவாயில்லை, ஆனா அவுரு எல்லாரையுமே அவுரு அளவுக்கு அறிவாளி ஆக்கி வாழ்கையை கோட்டை விட இல்ல வழி சொல்றாரு தந்திரமா

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com