பக்கங்கள்

Thursday, October 27, 2016

அதிகாலை இரவு


                     


இருபதாம் நூற்றாண்டின் நடு காலத்தை கடந்து கடைசி கால கட்டத்தை நெருங்கி கொண்டியிருக்கும் ஒரு ஆண்டின் ஒரு காலத்தில் ஒரு நாள்..

தன் வீட்டீற்கு குடிப்பதற்கும் பொழங்குவதற்கும் தேவையான தண்ணீரை சற்று தூரத்தில் உள்ள பொது அடி குழாயில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகமுள்ள வலுத்த குடும்பங்கள் சில தண்ணீர் எடுத்து முடிக்கிற வரைக்கும் வரிசையில் காத்திருந்து பிறகு

இரவு பணிரெண்டு மணிக்குமேல்..  சதை பிடிப்பு இல்லாத ஊதி விட்டால் பறந்து போய் விழும் அளவுக்கு  சிறுவன் என்று சொல்லக்கூடிய  உடல்வாகு பெற்றுள்ள இளைஞன் என்ற பதவிக்கு தகுதியில்லாத அந்த இளைஞன் தன் தாயின் உத்தரவுக்கு பணிந்து, தாய் அடி குழாயில் தண்ணீர் அடித்துவிட தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் குடத்தை தூக்கி கொண்டு வீட்டை நோக்கி ஓடினான்.

வீட்டில் இருக்கும் குறைந்த பட்ச பானை, குடம், சட்டி முட்டிகளில் தண்ணீரை சிந்தாமல் சிதறாமல் நிரப்பி விட்டு திரும்பவும் ஓடினான் அடி குழாயை நோக்கி...

குழாயில் வரும் தண்ணீர் இரவு ஒரு மணிக்கெல்லாம் நின்றுவிடும் அதற்குள் தங்களைப் போன்று ஆள்பலம் பொருள்பலம் இல்லாதவர்களுக்கும் வழிவிட்டு தங்கள் வீட்டீற்கும் தண்ணீர் எடுக்கு வேண்டும் என்பதால் வீட்டிற்கும் குழாய்க்குமாக வேகமாக இயங்கி கொண்டு இருந்தான் அவன்.

ஒருவழியாக மணி ஒன்று ஆவதற்கு முன்னரே குழாயில் தண்ணீர் நின்றுவிட்டது.ஒரு சில பாத்திரங்களில் மட்டும் தண்ணீர் நிரப்ப முடியாமல் போய்விட்டது. அடுத்து குழாயில் தண்ணீர் வருகிற வரையில் சிக்கனமாக பயன் படுத்த வேண்டும். குழாயிலிருந்து அடி குழாயை கழற்றி விட்டு குழாயை வீட்டிற்கு தூக்கி வந்து பாதுகாப்பான் இடத்தில் வைத்தான்.

அவனின் தாய், தன்மகன் தண்ணீர் நிரப்பிய பானை குடங்களை பார்வையிட்டு, நிரம்பாமல் உள்ள தண்ணீரை வேறு குடங்களில் மாற்றி தண்ணீரை பாதுகாப்பாக வைத்துவிட்டு, தாயும் மகனுமாக சாப்பிட் ஆரம்பித்தனர். அவன் சாப்பிட்டுவிட்டு படுக்க போகும் சமயத்தில் இவனது வீட்டின் முன்  வந்து நின்ற இரண்டு காக்கி சட்டைகள் இவன் பெயரைச் சொல்லி அழைத்தது.

குரல் கேட்டு வெளியே வந்தவன். காக்கி சட்டைகளை கண்டதும் என்ன விசயம் என்றான். அதுகள் இவனை விசாரிக்க அய்யா அழைத்து வருவதாக சொன்னது. அவன் அம்மாவிடம் விபரத்தை சொல்லி பயமில்லாமல் இருக்குமாறு கூறிவிட்டு, வந்திருந்த காக்கி சட்டைகள பரபரக்க அதுகளுடன் சென்றான்...

வீட்டைவிட்டு ரோட்டுக்கு வந்த போது  நின்றிருந்த ஜீப்பில் ஏறினான் அது பல இடங்களுக்கு சென்று சில பேர்களை கவ்விக் கொண்டு ஜீப்பில் அடைத்து கொண்டு, அதிகாலை அந்தப் பகுதி காவல் நிலையத்தில் வந்து நின்றது.

வழக்கத்தையும் பழக்கத்தையும் மற்றாமல் பொழுது புலர்ந்தது. இரவில் அழைத்து வந்தவர்கள் அனைவரும் பூட்ஸ் சத்தமும் குரல் சத்தமும் கேட்டு அதிர்ச்சி அடைந்து கண்விழித்த போது.. காக்கி சட்டைகள் பல அட்டென்ஜ் போட்டு சான்டாட்டியில் நின்று கொண்டு இருந்தார்கள்... அதுகளுக்கு முன்னால் ஏழு அடி உயரமும் பெருத்த உருவம் ஒன்று நின்று கொண்டு கத்திக் கொண்டு நின்றது.

உத்தரவுக்கு ஏற்றபடி வரிசையாக நின்று இருந்த காக்கிகள்...காலால் தரையை உதைத்து கையால் துப்பாக்கியை டப்டப்டப் வென் அடித்து காட்டியது. சிறிது நேரங்கழித்து  எல்லாம் ஓய்ந்து மீண்டும் அமைதியானது.

காலை மணி பத்தாகிய போது, ஏழு அடி உயரமுள்ள அந்த உருவம் வந்தது. இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தவர்களை பிடித்து வரப்பட்டவ்கள்.அவர் முன் . நிறுத்தப்பட்டனர். இரு காக்கிகளிடம் அந்த பெரிய  காக்கி அதிகாரி உத்தரவு இட்டார்.

இரவில் அழைத்து வரப்பட்ட ஆறு பேர்களில் ஐந்து பேர்களின் வீட்டார்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்துவிட்டனர். நான்கு பேர் செல்வாக்குள்ள மேல் இடத்து சிபாரிசுகளால் விடுவிக்கப்பட்டனர். ஒருவர்  வக்கீல் மூலம் ஜாமீனில் சென்றார். இரவில் தன் தாய்க்கு தண்ணீர் எடுத்தவன் மீது மட்டும் வழக்கு பதியப்பட்டது.

வழக்கு பதியப்பட்டு காக்கி ஒருவரின் எழுத்து வேலை முடிவதற்கு இரவு ஏழு மணி ஆகிவிட்டது. அதன் பின் வழக்கு கட்டுடன்  இரு காக்கிகள் சூழ ஒரு ஆட்டோவில் ஏற்றப்பட்டு ஒரு பங்களா முன் அவன் இறக்கப்பட்டான், பின் வெள்ளைசட்டை வெள்ளை பேண்ட் அணிந்திருந்த குட்டையான ஒருவர் முன. நிறுத்தப்பட்டான்.

சில நேரம் காத்திருக்குபின்  வெள்ளை சட்டை அணிந்திருந்த  அந்த நீதபதி, இரு காக்கிகளை பார்த்து கோபம் கொண்டார் அவரின்  சில வசவுகளை ஏற்ற காக்கிகள் மௌனமாக கையெழுத்து போட்ட குறிப்புகளை பெற்றுக் கொண்டு மத்திய சிறைச்சாலையை நோக்கிச் விரைந்தனர்

விரைவாக வந்தும் இரண்டு மணி நேரத்து மேல் காக்க வைக்கப்பட்ட பின்

இந்தியாவின் இளைய தலைமுறையின் இளைய பிரதமர். கன்னியாகுமரியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டுவதற்க்காக இந்த வழியில் செல்வதால் முன்னெச்சரிக்கையாக காக்கிகள் ரோந்து சென்ற போது.. பாலத்துக்கு அடியில் அமர்ந்து சதித்திட்டம் தீட்டிக் கொண்டு இருந்த அந்த இளைஞனை சுற்றி வளைத்து“லபக்கென்று பிடித்துவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் கொண்டுவரப்பட்டான்...அவன்..
3 comments :

  1. தவிச்ச வாய்க்கு தண்ணீரைப் பிடித்தது ,சதி வேலையா :)

    ReplyDelete
  2. இந்திய, அதுவும் தமிழக காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அருமை நண்பரே

    ReplyDelete
  3. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com