டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது.
கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.
புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.
--------------------------
ட்ரைன் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது.
ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது.
இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார்.
தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை.
டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 'பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும்' என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை.
எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே, ரயில் வருவதை தெரிவிக்க.... தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார்.
அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்..........
ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர்.
ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது.
ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும்.
'விதி சற்றே வலியது'. அதனால் தானோ என்னவோ, அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது.
தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.
-------------------------
தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின,
''இன்னது நடக்கிறது...'' என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன.
நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும்.... ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர்.
இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுத்த இந்த 'அபாய அறிவிப்பை' உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள்.
அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள்.
இதில், 'நீச்சல் காளி' என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்.
அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும்.
இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.....
ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது .
ஆம். பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக மூடிக் கொண்டது.
ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது.
தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது.
எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்ப்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது.
------------------------------
இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை.
அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே.
மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.
புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடர்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி.
விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார்.
இந்திய அரசின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை ''தேசியப் பேரிழப்பு'' என்று அறிவித்தது.
இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது.
அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.
''காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம்'' என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, 'ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை' என்று.
மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர்.
இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதில் பயணித்த 115 பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர்.
பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் 'ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது' என்று குறிப்பிடுகிறார்.
தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.
தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது.
விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து.
''ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக'' ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது.
------------------------------ --
நிலமை இப்படி இருக்க தமிழகமோ புயலில் சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது.
டிசம்பர் 22 மாலை, ஜெமினியும் சாவித்திரியும் தனுஷ்கோடி கடலில் புனித நீராடிவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும் பொழுதே காற்றின் வேகம் மிகவும் பலமாக இருந்தது. மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது.
'அன்றைய இரவுப் பொழுது தனுஷ்கோடியில் இருக்க வேண்டும்' என்பது சாவித்திரியின் விருப்பம். விடாது அடித்த காற்றும் அடைமழை கொடுத்த எச்சரிக்கையும் ஜெமினியை தனுஷ்கோடியில் இருக்கச் சம்மதிக்கவில்லை.
சாவித்திரி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் ஜெமினி கண்டிப்புடன் எச்சரிக்கவே அன்றைய மாலை ரயிலில் ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றுவிட்டனர்.
புயலைப் பற்றி ஜெமினி மற்றும் சாவித்திரி பின்வருமாறு குறிபிடுகிறார்கள் :
"ஓயாம காத்து அடிச்சிட்டே இருந்தது. நிறைய நரி ஊளையிடற சத்தம் விடாம கேட்டுட்டே இருந்தது. புயல் காத்து அப்புறம் நரி ஊளையிடுற சத்தம், மழை எல்லாமே சேர்ந்து ஒருவித திகலாவே இருந்தது.
சினிமால தான் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கும். அன்னைக்கு நைட் எங்களால தூங்கவே முடியல."
"அடுத்த நாள் காலைல தனுஷ்கோடி மக்கள் எல்லாரும் ராமேஸ்வரம் நோக்கி ஓடிவாறாங்க. அவங்க நிலமைய பார்த்தப்போ தான் புயலோட தீவிரம் முழுசா தெரிஞ்சது.
அவங்க எல்லாரும் கையில பிணங்கள தூக்கிட்டு ஓடி வந்தாங்க. அந்தக் காட்சிய பாக்குறதுக்கே கொடூரமா இருந்தது." தங்கள் பேட்டியில் ஒருவித மிரட்சியுடன் அந்த காட்சியை விவரித்து இருகிறார்கள்.
------------------------
அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம்.
அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.
மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை ''மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்'' என்று அறிவித்தது.
தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.
ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து, ''மக்கள் வாழத் தகுதியற்ற...'' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து, அன்று தொலைந்த தனுஷ்கோடி... இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.
-------------------------
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது.
மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது.
இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன.
"ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்" என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர்.
சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது இல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.
அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம்.
சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள்.
மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர்.
வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.
சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், 'மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது' என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை!
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை தனுஷ்கோடிக்குச் சென்று வந்தேன் நண்பரே,
பதிலளிநீக்குவெற்றுச் சுவர்களை மட்டுமே காணமுடிந்தது
வேதனை
நான் இதுவரை சென்றதில்லை இனியாவது காண வேண்டும்
பதிலளிநீக்குநேரில் பார்த்த போது எனக்கும் மனதில் வலித்தது தோழரே :)
பதிலளிநீக்குபல தெரிந்திராத தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி.
பதிலளிநீக்கு//மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது' என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.//
மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் நடைபெறும் அபாயம்அமெரிக்க Flirido மாகாணத்திலும் உள்ளதே!