செவ்வாய் 21 2014

மகனே,அருமை மகனே..............


அருமை மகனே,
உன்னிடம் நான் கேட்கவிரும்புவதெல்லாம், ஒன்றே ஒன்று தான்.
என்னை மன்னிப்பாயா மகனே?

வெறிச்சோடிக்கிடக்கும் இந்த இரவில், ஓ ஓ ஓ வென அலறியபடி ஓடவேண்டும் போல் இருக்கிறது எனக்கு. தனியன் ஆகிவிட்டது போல் உணர்கிறேன்.

இருந்தாலும், இறுதிவரை நான் முயற்சித்துக் கொண்டுதான் இருந்தேன் என்பதை நீ நம்புவாயா மகனே. இறுதிவரை நான் உன்னை கை விட்டுவிடவில்லை என்பதை நீ நம்புவாயா?

எத்தனை பேர், எத்தனை பிரபலங்கள், எத்தனை நடிகர்கள், எத்தனை நிறுவணங்கள், எத்தனை அறக்கட்டளைகள், எத்தனை டிரஸ்டுகள், எத்தனை மருத்துவமனைகள், எத்தனை பயணங்கள், எத்தனை படிகள்.... உனக்காக நான் யார் யாரிடம் கையேந்தினேன் என்பதை என்னால் முழுமையாக நினைவில் வைக்க இயலவில்லை மகனே.

யாரும் மறுக்கவில்லை. யாருமே மறுக்கவில்லை. தங்களால் இயன்றதை தந்து உதவியவர்கள் சிலர். உதவுவதாக வாக்கு தந்தவர்கள் ‍‍_ வாக்கு மட்டுமே தந்தவர்கள் _ பலர். யாருமே மறுக்கவில்லை மகனே, யாருமே மறுக்கவில்லை.

நீ பிறந்தபோது என்னோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவர்களை விட, உனக்காக உதவி கேட்டு நான் சென்ற போது உடன் வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் மகனே.

இருந்தாலும்....... என்ன செய்வது? உன் அப்பன் ஒரு பட்டறை தொழிலாளி தானே. தினம் ரூ 150/‍ கூலிவாங்கும் கூலித்தொழிலாளிதானே. ஒரு கூலிக்காரனுக்கு இரண்டு லட்சத்தி எழுபத்தி இரண்டாயிரம் என்பது மிகப்பெரும் தொகை மகனே. மிகப்பெரும் தொகை.

நீ வளர்த்து பெரியவன் ஆனதும் என்னவாக ஆகியிருப்பாய்?
டாக்டராக? இஞ்ஜினீயராக? கலெக்டராக? போலீசாக?...
அப்படித்தான் மகனே நானும் என் சிறு வயதில் பதில் கூறினேன். ஆனால் பட்டறை தொழில்தான் எனக்கு வாய்த்தது. உனக்கும் அப்படித்தான் வாய்த்திருக்கும். நடுவில் இந்த மிகப்பெரும் தொகை மட்டும் குறுக்கிடாதிருந்தால், உனக்கும் என்னைப் போலத்தான் வாய்த்திருக்கும். இங்கே எல்லோருக்கும் அப்படித்தான் வாய்க்கிறது.

நீ இரண்டு மாத குழந்தையாக இருந்தபோது மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டாய். சளி தொந்தரவாக இருக்கும், ஜான் டாக்டரிடம் ஒரு ஊசியும், சுரேஷ் மெடிகல்ஸில் மருந்தும் வாங்கிக் கொடுத்தால் சரியாகிவிடும் என நினைத்தேன். என் போன்றவர்களுக்கு அதுதானே இயல்பாய் தோன்றும். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஜான் டாக்டருக்கு உன் சளி மசியவில்லை. பின் யார் யாரையோ பார்த்து, எங்கெல்லாமொ அலைந்து, என்னென்ன பரிசோதனைகள் எல்லாமோ செய்த பிறகுதான் சொன்னார்கள், உன் இருதயத்தில் ஏதோ ஒரு வால்வு இல்லை என்றும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும். ஏற்கனவே தாமதமாகி விட்டது என்றும் என் மீது குறைபட்டுக்கொண்டார்கள். எனக்கெப்படி தெரியும் மகனே.
என்றாலும், அப்போழுது கூட நான் யோசிக்க வில்லை, "உடனே செய்ய வேண்டும் என்றால், செய்து விடுங்கள்" என்றுதான் கூறினேன். மறுத்துவிட்டார்கள். உனக்கு ஆப்பரேஷன் செய்யும் வசதி அரசு ஆஸ்பத்திரியில் இல்லையாம். சென்னையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மட்டும் தான் உள்ளதாம்.

அங்கும் போனோம் தானே மகனே. உனக்குத் தெரியுமே. "2,72,000/‍ ரூபாய் கட்டுங்கள், மறுநாளே இருதய ஆப்பரேஷன் செய்துவிடலாம்" என இருதயமே இல்லாதவர்கள் போல் பேசினார்களே. நீயும் தானே உடன் இருந்தாய்.

உனக்கு வைத்தியம் பார்க்கும் வசதி அரசு மருத்துவமனைக்கு இல்லை. அந்த வசதியோ, வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் இருக்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பல கோடி ரூபாய்கள் சலுகை தரும் அரசுக்கு, ஒரு ஆப்பரேஷன் செய்ய வசதி இல்லையாம். வசதி இல்லாத அரசு, அய்ம்பதாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு வசதியாக ஒதுங்கிக் கொண்டது. மீதம் பணத்திற்கு எங்கே போவது?

ஆனாலும் கூட நான் முயற்சித்தேன் மகனே. காசு கொண்டுவருவதாக உறுதி கூறினேன். உன் 3ஆம் மாதத்தில் அறுவை சிகிச்சை செய்ய நாள் குறித்தார்கள். அம்மாவின் நகைகளை விற்றேன். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அண்டை அசலார் உதவினார்கள். நாள் நெருங்கியது. தேவையான பணம் சேரவில்லை. ஆப்பரேஷன் நடக்கவில்லை. 4ஆம் மாதம் தேதியை மாற்றினார்கள். சிலர் சில நடிகர்கள் தருவதாக கூறினர். அவர்களிடம் ஓடினேன். சிலர் சில நிறுவணங்களை காட்டினர். அங்கே ஓடினேன். என்னென்னவோ அறக்கட்டளைகள், டிரஸ்டுகள், கழகங்கள். அனைவரிடமும் ஓடினேன்.

இருப்பதை வைத்து ஆப்பரேஷன் செய்யக்கோரி ஆஸ்பத்திரி போனேன். கொடுத்ததற்கு ரசீது போட்டுவிட்டு, "வெகுதாமதமாகி விட்டது, பொருப்பில்லாமல் இருக்கிறீர்களே, மீதப் பணத்தையும் கொண்டுவாருங்கள்" என புன்னகை மாறாமல் விரட்டினான் வரவேற்பறையில் இருந்த இளைஞன். அந்த பளிங்குத் தரையில் எழுந்த என் செருப்பின் சத்தம் கூட என்னை விரட்டியது மகனே.

6ஆம் மாதம் தேதி குறித்தார்கள். நான் ஓடிக்கொண்டே இருந்தேன். நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களும், அவர்களின் நண்பர்களும் கூட உதவினார்கள். தேதி நெறுங்குகிறது. பணம் சேரவில்லை. நீயும் காத்திருக்கவில்லை. மிகமிக அமைதியாக, நேற்று காலைப் பொழுதில் நீ மரித்துப் போனாய். மூக்கிலும், காதிலும், வாயிலும் இரத்தம் கசிய, கண்கள் விட்டத்தில் எதையோ தேட, பிராண வாயுவை உள்ளிழுக்க முடியாமல் உன் இருதயம் மெள்ள மெள்ள தனது துடிப்பை நிறுத்திக் கொண்டதாக அப்போது உன் அருகில் இருந்த உன் அத்தை கூறினாள்.

நீ ஏன் மகனே ஜான் டாக்டரின் ஊசிக்கு அடங்காத நோயுடன் பிறந்தாய் ?

சுடுகாட்டுக்கு வந்த நண்பன் ஒருவன், " அநியாயமா குழந்தைய கொன்னுட்டியேடா" என்று என்னை திட்டினான்.

நானா மகனே...
நானா...

நான் மட்டுமா?

ஆம்.
நானும் தான் மகனே.. என்னை மன்னிப்பாயா?

அன்புடன்
உன் அப்பன்.



_____ பால்ராஜ் .

1 கருத்து:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...