வெள்ளி 01 2016

மக்கள் அதிகாரம். தமிழ்நாடு.. பத்திரிக்கைச் செய்தி

டந்த பிப்ரவரி 14, 2016 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் திருச்சியில் டாஸ்மாக் ஒழிப்பு மாநாடு நடத்தினோம். அதில் கலந்து கொண்டு பேசிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர். காளியப்பன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், டாஸ்மாக் பணியாளர் சங்க செயலாளர் தோழர். தனசேகரன், உதவும் கைகள் அமைப்பின் ஆனந்தியம்மாள், நாகர் கோவிலைச் சேர்ந்த வாள்வீச்சு வீரர் டேவிட் ராஜா ஆகியோர் மீது 124A (தேசத்துரோகம்), 504, 505 – 1B இ.த.ச ஆகிய பிரிவுகளின் கீழ், சுமார் ஒன்றரை மாதத்திற்குப் பின், 26.03.2016 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் சிலரைக் குறிப்பிட்டு, ஒன்றாம் வகுப்பு மாணவி பாரதி, ஐந்தாம் வகுப்பு மாணவி காவ்யாஸ்ரீ ஆகிய சிறுமிகளையும் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இது அப்பட்டமான அரசியல் சட்ட மீறல் மட்டுமல்ல, மாபெரும் மனித உரிமை மீறலுமாகும்.


மூடு டாஸ்மாக்கை எனப்பாடிய கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன. அவரை போலீசுக்காவலில் விசாரிக்கக் கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அதற்கு எதிரான மேல்முறையீட்டையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தில்லி ஜே.என்.யு மாணவர் கண்ணையா குமார் மீதும் அவருக்கு ஆதரவாகப் பேசிய ராகுல்காந்தி, யெச்சூரி, கேஜ்ரிவால் ஆகியோர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராடும் மக்களுக்கு எதிராக போலீசு இத்தகைய கடும் சட்டப்பிரிவுகளை முறைகேடாகப் பயன்படுத்துகிறது. தேசத்துரோக சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், டாஸ்மாக்கை மூடு என்று பேசியதற்காக, எங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் கோரிக்கையான டாஸ்மாக்கை மூடுவது என்பதைப் பரிசீலிக்காமல் பேசியவர்களை மிரட்டுவது, ஒடுக்குவது என்பது, டாஸ்மாக்கால் ஆதாயம் அடையும் சாராய முதலாளிகளுக்கும் ஊழல் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுவதாகும். இதனால் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். இதுபோன்ற பொய்வழக்கு, சிறை, என்ற அசுறுத்தல்கள் மூலம் , டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாது.
தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத செயல்களை கண்டிக்கிறோம்.
தேர்தல் ஆணையம் சாதாரண மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. கல்யாண வீட்டில் மைக்செட் போடுவதற்கு கூட என்னைக் கேட்டுத்தான் போட வேண்டும் என்கிறது பறக்கும் படை. தேர்தலோடு தொடர்பில்லாத டாஸ்மாக் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தடுப்பதும் சுவர் எழுத்தை அழிப்பதும் விதிமீறல் வழக்கு போடுவேன் என்று மிரட்டுவதும் சிறு வியாபாரிகள் சாதாராண நடுத்தர மக்களை குற்றவாளிகள் போல கண்காணிப்பது. பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை எல்லாம் நேர்மையாக தேர்தல் நடத்தப்பட போவதுபோல காட்டும் நாடகமே.
மாற்றுக்கருத்தை பேச அனுமதிப்பதும், ஒருவரின் தவறை சுட்டிக்காட்டி விமர்சிப்பதும் தான் ஜனநாயகம். ஆனால் தேர்தலுக்கு தொடர்பில்லாத பிரச்சாரங்களைக்கூட தேர்தல் அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. இந்தப் புகாரை தேர்தல் ஆணையர் திரு.ராஜேஷ் லக்கானி பரிசிலிக்கவே மறுக்கிறார். இது ’ஜனநாயகத் தேர்தல்’ நடத்துவதாகக் கூறும் தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரப் போக்காகும்.
தன்மீது யாரும் புகார் கூறாத போதே தனது காரை பரிசோதனைக்கு உட்படுத்தும் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, சிறுதாவூர் பங்களாவில் பெரும் பணத்துடன் கண்டெய்னர் லாரிகள் நிற்கின்றன என்று புகார்கள் எழுந்த பின்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஓட்டுக்கட்சிகளின் வார்டு மெம்பர் முதல் மந்திரி வரை உள்ளவர்களின் ஊழல் பணம் எந்த இடத்தில் எந்த பினாமியிடம் உள்ளது என்பது தெரிந்தும் பறக்கும் படை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோரிடம் 30000 கோடி வரை போயஸ் தோட்டத்தாய் ‘விசாரிக்கப்பட்டு’ எழுதி வாங்கப்படுவதாக நாடு முழுவதும் செய்திகள் வந்த போதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஜெயலலிதா அரசின் மாவட்டச் செயலாளர்கள் போல செயல்பட்ட பல ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போதும் மாவட்ட ஆட்சியர்களாக , தேர்தல் அதிகாரிகளாக உள்ளனர். இது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா?
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழல் நாணயத்தின் இருபக்கங்கள் என்பது ஊரறிந்த உண்மை. தேர்தலுக்கு முன்புவரை லஞ்ச ஊழலில் திளைத்த அதிகாரிகள்தான் இன்றைய தேர்தல் அதிகாரிகள் என்பதை மக்களை முட்டாள்களாக கருதுவதாகும்.
தமிழத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடிநோயாளிகளை வைத்துக்கொண்டு, டாஸ்மாக் கடையை மூடாமல் நேர்மையான தேர்தலை நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் சொல்வது மிகப்பெரிய மோசடியாகும்.
மக்கள் அதிகாரம் என்றைக்கும் இந்த அமைப்பு முறையிலான தேர்தலில் பங்கேற்காது. காரணம், இது தேர்தல் அமைப்பு முறையே தோற்றுப்போனது. இது உண்மையான ஜனநாயமும் இல்லை. அரசுக் கட்டமைப்பு முழுவதும் அதற்கு விதிக்கப்பட்ட கொள்கைகளை, விதிமுறைகளை கடைபிடிக்காது அவற்றை மீறுகிறது. மக்களுக்கு வேண்டாத சுமையாகிப்போனதுடன் எதிர்நிலை சக்தியாக மாறி நிற்கிறது. ஆற்று மணற்கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாதுமணற்கொள்ளை, தனியார்கல்விக் கொள்ளை, சுற்றுச்சூழல் கேடு, என அனைத்தும் இந்த அரசு அதிகார கட்டமைப்பில் சட்டத்தை, விதிமுறைகளை மீறியே நடத்தப்படுகின்றன. நீதிமன்றமும் இவற்றை தடுக்காது இத்தகைய குற்றவாளிகளை பாதுகாக்கிறது. பாதிக்கப்படும் மக்கள் போராடினால் போலீசு பொய் வழக்குப் போட்டு அடக்குமுறை செலுத்துகிறது. நீதிமன்றம் போலீசின் இத்தகைய அடக்குமுறைகளை கண்டிக்காது போலீசோடு உடன்படுகிறது. ஒட்டுமொத்த மக்களுக்கும் நாட்டுக்கும் எதிராக மாறியுள்ள இந்த அரசுக் கட்டமைப்பை அகற்றும் போராட்டத்தில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரத்தின் கொள்கை நிலைபாடு. இந்த அரசுக் கட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கையும் மதிப்பும் இழந்துவிட்டார்கள். யார் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என அதை தங்கள் மொழியில் பேசுகிறார்கள். தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
தோழமையுடன்

சி.ராஜு, வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.

மூடு டாஸ்மாக் மாநாட்டில் பேசியவர்கள்


6 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை
    இந்த தேர்தலிலாவது மக்கள் திருந்த வேண்டும் அரசியல்வாதிகள் திருந்த வேண்டிய அவசியம் இல்லை

    பதிலளிநீக்கு
  2. #தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்#
    அறிந்ததை செயல் படுத்தும் காலம் விரைவில் வரும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் நன்கு அறிவு சுடர் விட்டு எரியும் திறமை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தான் தெளிவாக தெரிந்ததே. இருந்தாலும் சுவாமிஜீயின் நல்லெண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.

      நீக்கு
  3. இந்த தேர்தலில் மக்கள் திருந்துவார்களா
    இல்லை அரிசியல் வியாபாரிகளை திருத்துவார்களா...?

    பதிலளிநீக்கு
  4. மூடு டாஸ்மாக்கை என்ற கோவன், மாணவிகள் வேண்டுகோள் நியாயமானது. அவர்கள் மீது தேசத்துரோகம் குற்றம்சாட்டபட்ட அநீதியியை சொல்லும் போது, தில்லி ஜே.என்.யு மாணவர் கண்ணையா குமாரை இங்கே தூக்கி பிடித்து கொண்டுவருவது பொருத்தமற்றது.

    பதிலளிநீக்கு
  5. மக்கள் திருந்துவார்களா? இல்லை மே 16ம் மற்றொரு உண்மையான முட்டாள்கள் தினமாகிவிடுமோ...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....