புதன் 17 2015

' வேங்கடகணபதி "

படம்-kadugu-agasthian.blogspot.com

உண்ட மயக்கம் தீர உறங்க முடியாத அவஸ்தையில் கல்லாப்பெட்டி முன் அமர்ந்து நெளிந்து கொண்டிருந்தேன்.  தலைக்குமேல் மின்விசிறி ரீங்காரத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தது.  வெளியே போய் ஒரு புகை போட்டு வரலாம் என எழுந்தபோது ,  கையில் கைத்தடியுடன் ஒரு பெரியவர் கடைக்குள் நுழைந்தார். 


யாரோ ஒரு வாடிக்கையாளர் என்ற நினைப்பில்,  "வாங்க சார்" என அழைத்து "என்ன வேணும்" என்றேன் .

அவரோ பதில் ஏதும் கூறாமல் ஓரமாக இருந்த ஒரு ஸ்டூலை கடை நடுவே இருந்த மின்விசிறிக்கு நேராக வைத்து அமர்ந்து கொண்டார்.
"கொஞ்சம் இந்த பேன போடுறீங்களா?" என்றார்.

சற்றே எரிச்சலுடன் கடைப்பையனுக்கு சாடை காட்டவும், அவன் மூலையில் உள்ள சுவிச்சை தட்டினான்.

இப்போதாவது என்ன வேண்டும் என சொல்வார் என அவரை நோக்கினேன். படிய வாரிய பாதிக்கும் மேல் வெளுத்த தலை, தினமும் மழிக்கும் முகம், கண்ணாடி, சற்று பூசினாற்போல உடம்பு.  65 - 70 வயது இருக்கும்.  அரைக்கை சட்டையும் பேண்டும்.இரண்டு நிமிடங்களில் எழுந்த அவர், "ரொம்ப தேங்ஸ் சார்" எனசொல்லியபடி நடையை கட்டினார்.

வியாபாரம் செய்யாமல், தம்மடிக்கவும் விடாமல் , வெறுமனே காற்று வாங்கிச் சென்ற அவர் மீதான கடுப்பில் "யார்டா இது" என பையனிடம் எரிந்து விழுந்தேன்.

பேன் சுவிச்சை அணைத்த படியே, "தெரிலணே, அப்பாவுக்கு தெரியும் போல.  வந்து பேசிட்டுருப்பாரு"  என்றான்.

அதற்கு பிறகும் ஒருசில முறைகள் அந்த பெரியவர் வந்தார்.  வரும் போதெல்லாம் நடப்பவையும் ஒரே விசயம் தான்.  அதே போல மதியம் 2 - 3 மணி உச்ச வெய்யிலில் தான் வருவார்.  இரண்டு நிமிடங்கள், அதிகபட்சம் மூன்று நிமிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பி விடுவார்.  வேறு எதுவும் -அப்பா எப்படி இருக்கிறார், வியாபாரம் எப்படி இருக்கு -  எதுவுமே பேச மாட்டார்.

பிறகெல்லாம் அவர் வரும்போது "வாங்க" என அழைப்பதைக் கூட விட்டுவிட்டேன். வருவார், ஸ்டூலை எடுத்துப் போட்டு அமர்வார், பையன் பேன் போடுவான்,  காற்று வாங்கிவிட்டு "தேங்ஸ் சார்" கூறிவிட்டு போய்விடுவார்.

ஒரு முறை அவர் வந்த போது, வழக்கம் போல் ஸ்டூலை எடுக்காமல் நேரே கல்லாவில் இருந்த என்னிடம் வந்தார்.

"என் பாக்கி எவ்ளோன்னு பாருங்க" என்றார்.

ஒன்றும் புரியாமல் விழித்த என்னிடம் , "போன வாரம் அப்பாட்ட சாமான் வாங்கினேன்.  பாக்கி கொடுக்கணும்.  எழுதி வெச்சுருப்பாரு பாருங்க.  நாப்பது ரூவான்னு நெனைக்கிறேன்.  எம் பேர போட்டு சீட்ல எழுதி வெச்சுருப்பாரு.  பேரு வேங்கடகணபதி" என்றபடி ஸ்டூலில் அமர்ந்தார்.
அவர் கூறியபடி சீட்டு இருந்தது.  அவர் வாங்கிய பொருட்களின் விபரம், அவற்றின் விலை, மொத்த தொகை ரூ.390/-, வாங்கிய பணம் ரூ.350/-, பாக்கி ரூ.40/- என எல்லா விவரங்களும் சீட்டில் இருந்தது.

சீட்டை பார்த்துவிட்டு பணத்தை எண்ணிக் கொடுத்தார்.  "டவுன் பஸ்ஸுக்கும் காப்பி சாப்பிடவும் அன்னிக்கி பணம் வேண்டி இருந்திச்சி.."
என சொல்லிவிட்டு, வழக்கமான "தேங்ஸ் சார்" கூறிச் சென்றார்.

பிறகெல்லாம் அவரது வருகை அரிதாகி விட்டது.  மாதம் இரண்டு மூன்று முறைகள் வந்து கொண்டிருந்தவர் , மாதம் ஒருமுறை வருவதே பெரிது என்றானது.

மொட்டை வெய்யிலில் ஒரு நாள் தன் மனைவியுடன் வந்தார்.  அவர் மனைவிக்கு அவரைவிட உடல் உபாதைகள் அதிகம் போலும்.  கணவரின் கையை பிடித்துக் கொண்டு தள்ளாடி நடந்து வந்தார்.   வழக்கம் போல அமர்வதற்கு இரண்டு ஸ்டூலை எடுத்து வைத்தார் பெரியவர்.  அந்த அம்மாள் பெரியவர் போன்று இல்லை.  நொய் நொய் என  வாய் ஓயாமல் எதையாவது கேட்டுக் கொண்டே இருந்தார்.  உங்க கூட பொறந்தவங்க எவ்வளவு பேர், ஏன் இன்னும் கல்யாணம் முடிக்கல ,  கடைக்கு கரண்டு பில் எவ்வளவு வருது,  இந்த பொருள் என்ன விலை, இது, அதை கொஞ்சம் எடுத்துக் காட்டுங்களேன் .

காட்டினேன்.  அதற்கான விலையைக் கேட்ட போது, பேரம் பேசுவதற்கு உதவியாக  விற்பனை செய்து வரும் விலையில் இருந்து 50/-ரூபாய் அதிகமாக கூறினேன்.  அந்த அம்மாள் பெரியவரை பார்த்து , "இத எடுத்துக்கலாமாங்க" என கேட்டார்.  பெரியவரோ பதில் ஏதும் கூறாக கூறாமல் மணிப்பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டார்.

என்னால் மெல்லவும் முடியவில்லை, துப்பவும் முடியவில்லை.  தேவையின்றி விலையை அதிகமாக சொல்லி விட்டோமே என்று குடைந்தது.  எனினும் கூடுதலாக விலை சொன்னதை ஒப்புக்கொள்ளும் மனமில்லை.  நம்பிக்கை போய்விடுமே , அடுத்து வர மாட்டார்களே என்ற கவலை.  அமைதியாக பணத்தை கல்லாவில் போட்டேன்.

"ரொம்ப தேங்ஸ் சார்" போய்விட்டார்கள்.   வேலைகளின் ஊடாக ஒரு சில மணிகளில் ஏமாற்றிய உறுத்தல் காணாமல் போனது.
நெடு நாட்களுக்குப் பின் அதிசயமாக மாலை வேளையில் பெரியவர் வந்தார

கையில் ஒரு கிப்டு பார்சலை திணித்து , "அப்பா கல்யாண பத்திரிகை கொடுத்தாரு ,  உடம்பு சரியில்ல , வர முடியல.  வாழ்த்துக்கள் .  அப்பாட்ட சொல்லிருங்க." சென்று விட்டார்.

பார்சலை பிரித்துப் பார்த்தேன்.  சுவிச்சை போட்டால் 'ஓம், ஓம்' என ஜெபிக்கும் மிசின் .   நமக்கு இது எதற்கு என உடனிருந்த வேறு ஒரு நண்பருக்கு கொடுத்து விட்டேன்.

சிறிது நேரத்திற்கு பிறகு தான் மண்டையில் உரைத்தது ,  ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்காமல் அனுப்பி விட்டோமே என்று.  கல்யாணத்திற்கு வந்திருந்தால்,  சாப்பாடு போட்டிருப்போம்.   ச்சீ..  நம்மை பற்றி என்ன நினைப்பார் என தோன்றியது.

அடுத்த முறை கடைக்கு வந்த பெரியவர்,  நேராக என்னிடம் வந்து, தயங்கித் தயங்கி ," இங்க, பக்கத்துல ரேடியோ ரிப்பேர் செய்ய வந்தேன்.  50/- ரூவா கொறையுது.  தந்தீங்கன்னா அடித்த வாட்டி வரும்போது திருப்பித் தந்துர்றேன் " என்றார்.

யோசிக்காமல் கல்லாவில் இருந்து பணத்தை எடுத்தேன்.  முன்பே அவரிடம் 50/- ரூபாய் கூடுதலாக வாங்கியதும் நினைவிற்கு வந்தது.
பணத்தை நீட்டினேன்.  " எம்பேரு வேங்கடகணபதி. எழுதி வெச்சுக்கங்க.  அப்பாக்கு தெரியும்" .  பணத்தை வாங்கிக் கொண்டார்.  "ரொம்ப தேங்ஸ் சார்".

நான் எழுதி வைக்கவில்லை.  

அந்த பணம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி என விட்டுவிட்டேன்.   வந்தால் சிரமம்.  மீண்டும் மீண்டும் பணம் கேட்கக்கூடும்.  வராவிட்டால்,  50/- ரூபாயோடு போய்விடும் என்ற எண்ணமும் ஒரு காரணம்.

அதே போல பெரியவரை கொஞ்ச நாட்களாகவே காணவில்லை.  அவரை மறந்தே கூட போய்விட்டேன். 

அன்று ஏதோவொரு வேலையாக கடையில் கணக்குப்பிள்ளையை அமர்த்திவிட்டு வெளியே போய்விட்டு, மாலை  கடைக்கு வந்தேன்.

நடந்த வியாபாரம், கொடுக்கல், வாங்கல் வரவு விபரங்கள் எல்லாம் என டீ  குடித்துக் கொண்டிருக்கும் போது கணக்குப்பிள்ளை, "வேங்கடகணபதிங்குறது யாருய்யா?" என்றார்.

"கட கஸ்டமர் தான் கணக்குப்பிள்ளையா.  வந்துருந்தாரா.  50/-ரூவா அவர் தரணும்"

"அவர் சன் வந்துருந்தாரு.  பணத்த குடுத்துட்டாரு.  அவரு இல்லியாம்யா".
"என்ன கணக்குப்பிள்ளையா"

"கிட்னி பெயிலியராம்.  4 மாசம் ஆஸ்பத்திரில  இருந்தாராம்.  அப்பத்தான் கடைல காசு வாங்குனத சொன்னார். கொஞ்சனா முன்ன முடிஞ்சுருச்சாம்." 

டீ தொண்டைக்குள் இறங்க மறுத்தது.  கணக்குப்பிள்ளை பேசிக்கொண்டே இருந்தார்.

"பற்று சீட்டு எதுவும் காணல .  அதான் பணத்த தனியா கிளிப்புல வெச்சுருக்கேன்........


---பால்ராஜ்


18 கருத்துகள்:

  1. மிகவும் பிடித்திருந்தது கதை.

    பதிலளிநீக்கு

  2. வேங்கட கணபதி
    சில உள்ளங்களின் எண்ணங்களை எழுத்துக்கள் வண்ணமிட்டு காட்டியது வலிப்போக்கரே! தெளிவான நீரோட்டம்போன்ற நடையழகு சிறப்பு ரசித்தேன்.
    தொடர்க வேங்கட கணபதி வெற்றி கண்பதி உமக்கு!
    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  3. மனதில் பதிந்த நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கதையா...? / உண்மை சம்பவமா...? எதுவென்றாலும் நெகிழ்ந்தேன்...

    கவனிக்க : பதிவு சைடில் இருக்கும் Gadget வரை செல்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொன்ன பிறகுதான் கவனித்தேன. நன்றி! அய்யா அடுத்த பதிவில் சரி செய்து விடுகிறேன் அய்யா...

      நீக்கு
  5. இது கதையா? கற்பனையா? தெரியல, ஆனால் மனம் கனக்கிறது, ஆனாலும் 50 ஆட்டைய போட்டது நியாயமா? பதிவு ரொம்ப அருமை விலிப்போக்கரே,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானபதிவிடுவது எதுவும் கற்பனையே அல்ல அய்யா.... நன்றி! அய்யா...

      நீக்கு
  6. பிள்ளையார் வாழ்க நண்பரே நான் நேற்று கருத்துரை போட்டிருந்தேனே...

    பதிலளிநீக்கு
  7. இப்போதும் உள்ளம் கலங்குது!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...