பக்கங்கள்

செவ்வாய் 03 2026

இனி உத்தமவில்லன் ஏஐ

 




"மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் உறுதிப்படுத்த முடியாது என்பதே இக்கேள்வியின் தனிச்சிறப்பு. 

 

இதென்ன தத்துவ விசாரமா என்றால் இல்லை. இதுவும் ஏஐ விசாரம் தான். விளக்கமாகப் பார்ப்போம். 


அண்மையில் மெட்டா நிறுவனம் ஒரு பேட்டெண்ட் (காப்புரிமை) பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகத் தான் இது போன்ற விவாதங்கள். 


மெட்டா என்றால் என்னவென்று அறியாதவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு. 


இவர்களுடையது தான் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சோஷியல் நெட்வொர்க்குகள். மார்க் ஜக்கர்பெர்க் - அவர் தலைவர். அன்னவர்க்கே சரண் நாங்களே என்று தான் ஒட்டுமொத்த சோ.மீயும் ஓடிக்கொண்டிருக்கிறது.  


சரி. மீண்டும் காப்புரிமைக்கு வருவோம். 


ஒருவர் ஃபேஸ்புக்கில், இன்ஸ்டாவில் பரபரப்பாக இருக்கிறார். அனுதினமும் ஏதேதோ போஸ்ட் செய்கிறார். திடீரென்று இறந்துவிடுகிறார். என்னவாகும்?


ஒன்றுமே ஆகாது. சில பத்து, சில நூறு, சில ஆயிரம் ரிப்புகள் குவியும். கண்ணீர்த்துளி ஸ்மைலிகள் அணிவகுக்கும். அவ்வளவுதான். 'நெருநல் உளனொருவன்' என்று ஓரிருவர் கிரிப்பாகக் கமெண்ட் செய்வர். அதன் பின்னர் அனைத்தும் அதனதன் இயல்பில் தொடரும். 


அந்த மனிதர் இல்லை. ஆனால் அவருடைய சோஷியல் மீடியா ஐடிக்கள் இருக்கின்றன. அவை என்ன செய்யும்? 


இதைத் தான் மெட்டா தீவிரமாக யோசித்துள்ளது.  


இறந்துவிட்ட ஒருவரைத் திரும்பக் கொண்டுவர இயலாது. அவர் சார்பாகத் தொடர்ந்து அவருடைய ஐடிகளில் போஸ்ட் போட்டால் என்ன என்று யோசித்திருக்கிறார்கள். 


இங்கு தான் ஏஐயின் கைங்கரியம். போஸ்ட் போடுவது என்றால் எதையெதையோ போட்டுவைப்பது அல்ல. அவர் போலவே செய்வது. இதுகாறும் அவர் எழுதிய அனைத்தையும், அவர் லைக் செய்த, வெறுத்த அனைத்தையும் ஓர் ஏஐ மாடலிடம் கொடுத்துவிடுவது. பின்னர் அதிலிருந்து அந்நபரின் விருப்பு வெறுப்புகளைக் கொண்டு ஒரு டிஜிட்டல் குளோன் செய்வது. இனி அவர் சார்பாக அதுவே போஸ்ட் செய்யும். 


இது தான் மெட்டா பெற்றுள்ள பேட்டெண்ட்டின் சுருக்கம். 


இறப்பு தான் என்றில்லை. சில காலம் சோஷியல் மீடியா வேண்டாம் என்று ஒருவர் முடிவு செய்கிறார். ஆனால் அவரைப் பின் தொடரும் நபர்களின் கவனத்தை இழக்க விரும்பவில்லை. இப்போது அவர் ஏஐயிடம் செங்கோலை ஒப்படைத்துவிட வேண்டும். பின்னர் அதுவே ஆட்சி செய்யும். அந்நபர் போலவே. 


அதாவது இடைக்கால விலகல் என்றாலும் சரி, நிரந்தர விலகல் என்றாலும் ஏஐ பார்த்துக்கொள்ளும். விமானியொருவர் ஆட்டோ ஃபைலட்டை நம்பி விமானத்தை ஒப்படைப்பதில்லையா அது போலத் தான்.  


இதென்ன விநோதம் என்று தோன்றுகிறதா? இனி இதுபோன்ற பல்வேறு விநோதங்களை ஏஐ நிகழ்த்திக்காட்டும். 


ஏஐயால் நம்மைப் போலவே போஸ்ட் செய்யமுடியுமா என்பதல்ல கேள்வி. அவ்வாறு செய்வது முறையானதா? இப்புவியை விட்டுச் சென்றுவிட்ட ஒருவரைக் கலங்கப்படுத்துவது போலாகாதா? 


இறக்கும் முன்பு அவரே அனுமதித்திருந்தாலும் இது சரியா? அவற்றால் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், குற்றம் நிகழ்ந்தால் யாரைப் பொறுப்பாக்குவது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள். 


ஒரே ஓர் ஆறுதல். காப்புரிமை பெற்றுவிட்டோம் ஆனாலும் உடனே நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்கிறது மெட்டா தரப்பு. ஆனால் போட்டிகள் நிறைந்த டிஜிட்டல் உலகில் என்றென்றைக்கும் இதே நிலைப்பாட்டில் இருப்பார்களா என்று தெரியாது. 


பயன்படுத்தவே போவதில்லை என்றால் ஏன் உரிமை பெற்றுள்ளார்கள். 


ஒருவேளை இந்த வசதி பேஸ்புக்கில் வந்துவிட்டால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்களேன். 


நீங்கள் பேசுவது உயிருடன் இருக்கும் நபரா அல்லது அவருடைய டிஜிட்டல் ஆத்மாவா? இப்படியெல்லாம் மனக்குழப்பங்கள் எழும். 


கிரைம் திரில்லர் கதைகள் எழுதுபவர்களுக்கு செம கன்டெண்ட். இறந்த ஒருவர் சோஷியல் மீடியாவில் நிகழ்த்தும் சைபர் குற்றங்கள். இப்படியொரு கதையைப் பின்னாளில் யாரேனும் எழுதினால் அதற்கான உரிமையில் நமக்கும் பங்கு தர வேண்டும் :) 


"சாகா வரம் போல் சோகம் உண்டோ" என்றொரு பாடல் கேட்டிருப்பீர்கள். இனி ஏஐ தான் உத்தமவில்லன்.


நன்றி!  Dr. ks. kuppusamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இனி உத்தமவில்லன் ஏஐ

  "மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...