ஞாயிறு 16 2023

சிதம்பரம் ரகசியமில்லை....

சிதம்பரம் கொலை வழக்கு  சிதம்பரம் பத்மினி


இன்றைய இளைஞர்களுக்கு சிதம்பரம் பத்மினி பற்றி அதிகம் தெரியாது.


சிறு அறிமுகம்.


1992 ம் வருடம்


நந்தகோபால் என்பவர் ஒரு கூலி தொழிலாளி. குழந்தைகள் இல்லை. பத்மினி மனைவி. கூலிஆனாலும் குதூகலமான வாழ்க்கை. இருவருக்கும் இளம் வயது.

அதிகாலை 3 மணியளவில் கதவைத்தட்டி திருட்டுகேஸ் என நந்தகுமாரை அண்ணாமலை நகர் காவல்நிலைய போலீஸ்காரர்கள் சிலர் அழைத்துச் சென்றனர்.

விடிந்தபோது கணவரைத் தேடி காவல்நிலையம் செல்கிறார் மனைவி பத்மினி.

கணவனைக் காணவிடாமல் போய் டிபன் கொண்டு வா, காபி வாங்கி வா, தண்ணீர் கொண்டு வா என அலைகழிக்கின்றனர்.அப்படியே ஓடி

ஓடி சொன்னதைச் செய்கிறார். உன் கணவன் தண்ணி கேட்கிறான் கொண்டு போ என்ற கிழட்டு போலீஸ் ,  அவனைப் பார்க்க வேண்டுமானால் எனக்கு முத்தம் கொடுத்துட்டுப் போ என்கிறான். கணவனைப் பார்த்தால் போதும் என அவள் அப்படியே செய்துவிட்டு போக எத்தனித்தப்போது அந்த கிழட்டுக்கட்டை அத்தண்ணீரையும் தட்டிவிடுகிறது.


ஸ்டேஷனில் இரவு விருந்துக்கு ஏற்பாடாகிறது. இரவு பணிக்கு வந்த  இரண்டு பெண் காவலர்களை சினிமாவுக்கு அனுப்பி விடுகிறார்கள். அவர்களும் நடப்பது ஓரளவு ஊகித்துக்கொண்டு போய் விடுகிறார்கள்.


பிறகு பத்மினி எதிரிலேயே நந்தகுமாரை தலைகீழாக தொங்கவிட்டு லத்தியால் அடிக்கிறார்கள்.

பிறகு அக்கணவன் முன்பாகவே பத்மினியின் புடவையை உருவி நிர்வாணமாக்குகிறார்கள். 5 பேர் சுற்றி நின்றுக்கொண்டு எங்கே இப்படி நடந்து போ, அப்படி திரும்பு என நடக்கவிட்டு ரசிக்கின்றனர். கணவன் துடிக்க, மனைவி கதற ஒன்றும் செய்ய இயலாத நிலை.5 பேரும் அவளை கணவன் முன்னாலேயே குத்திக்குதற நான்தான் சீரியர், நான்தான் பெரியவன் என நான் முந்தி நீ முந்தி என போட்டி வேறு. பாவிமகள் கதறி துடித்து மயக்கமானாள்.

மயக்கம் தெளிந்தபோது யாரிடமும் எதையும் சொல்லாமல் போய் சாப்பாடு செய்து கொண்டு வா, உன் கணவனை உன்னுடனேயே அனுப்பிவிடுகிறோம் என்றனர். எப்படியோ கணவன் கிடைத்தால் போதும் என ஓடுகிறாள். ஆனால் சிறிது நேரத்தில் அவளுக்கு வந்த செய்தி உன் கணவன் நந்தகோபால் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையம் அருகே இறந்து கிடக்கிறான் என்று.


மானம்,மரியாதை இழந்தும் நமக்கு கணவனும் இல்லையே என பதறியடித்து ஓடி அழுது புரள்கிறாள். ஊர் கூடி விட்டது. தாசில்தார் அப்பெண்ணை உடனடியாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக

சேர்க்க உத்திரவிடுகிறார்.


அப்போது அம்மாவட்ட செயலாளராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் விஷயமறிந்து மருத்துவமனை சென்று பத்மினியை நேரில் சென்று விசாரிக்கிறார். நடந்த கொடுமைகள் தெரியவந்தன.

கம்யூனிஸ்ட் கட்சி தலைமையும் மாதர் சங்கமும் பத்மினி கேசை கையில் எடுத்து களத்தில் இறங்கின. அதன் பின்பு பல நிகழ்வுகள்.


அடுத்த கட்டமாக


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போலீசிடமிருந்து பத்மினியை சிறிது காலம் காக்கும் பொருட்டு பத்மினியை சென்னையில் பாதுகாக்க என் கணவர் தோழர் ரவீந்திரதாஸிடம் ஒப்படைத்தனர்.அப்போது என் இரு பெண்களும் முறையே மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர்.

பரிதாப நிலையில் , படிக்காத கூலித்தொழிலாளி மனைவியாக, லத்தியாலும் பூட்ஸ் காலாலும் உதைபட்டு மிதிப்பட்ட நிலையில் பார்த்த எனக்கு மிகவும் சஞ்சலமாகிவிட்டது. பத்திரமாக பாதுகாக்கும் பொறுப்பு நம்முடையது என்றார் என் கணவர். என் பெண்களின் சுடிதார்களை அணிவித்து தலைமுடியை மாற்றி ( பத்மினிக்கு அடக்க முடியாதபடி முடி விரிந்து பரந்து இருக்கும்) கிட்டத்தட்ட இரண்டரை மாத காலம் பாதுகாத்தோம். பெண்கள்  கல்லூரிக்குச் சென்ற பிறகு நான்  என்னுடைய டைப்ரைட்டிங் வகுப்பில் அவளையும் ஒரு டைப் பயிலும் மாணவி போல அமர்த்திக் கொள்வேன்.


சென்னை நீதிமன்றத்திற்கு போகும்போது பெரும்பாலும் சட்டக்கல்லூரியில் படித்துவந்த மகள் ஹேமவந்தனாதான் கல்லூரிக்குப் போவதைப்போல் பஸ்சில்தான் அழைத்துப் போவாள். சில சமயம் மகன் கமலும் அழைத்துப்போவான். வழக்காடும் நேரத்தில் பயத்தில் வந்தனா கையையோ கமல் கையையோ இறுக்கி பிடித்துக் கொள்வாளாம்.

ஆனால் அவள் எந்த நிலையிலும் எந்த இடத்திலும் நடந்ததை அப்படியே மாற்றாமல் தைரியமாக கூறினார். குற்றவாளிகளை வரிசையாக அணி  நிற்க வைத்தபோதும் சரியாக அந்த 5 குற்றவாளிகளையும் அடையாளம் காட்டினாள்.

பத்மினியை சேதாரமில்லாமல் பாதுகாப்பது என்பது எங்களுக்கு ஒரு சவாலாகவே இருந்தது.


பிறகு நாங்கள் கட்சித் தலைமையின் உத்திரவுபடி பத்மினியை கட்சியிடம் ஒப்படைத்து விட்டோம். எங்களிடம் இருக்கும்வரை அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டோம்.

கட்சியின் முழு முயற்சியால் அவளுக்கு அரசு வேலை கிடைத்தது. எங்களுடமிருந்து சென்ற பிறகு பத்மினி எங்களை தொடர்பு கொள்ளவில்லை. ஆனால். அவள் வேலை செய்கிறாள் என நினைத்து ஆறுதல்  அந்த நல்ல காரியத்தை கட்சிதான் செய்தது.


நீண்ட நாட்களுக்குப்பிறகு கேள்விப்பட்டேன் ஒரு தோழர் முன்வந்து அவளை மணந்தார் என்றும்

ஆனால் அவரும் வெகு குறுகிய காலத்திலேயே காலமாகி விட்டார் என்றும் கேள்விப்பட்டேன். எந்த அளவில் உண்மை என அறியேன்.

எப்படி இருந்தால் என்ன? மகளே பத்மினி, எங்கிருந்தாலும் நீ நலமுடன் இருப்பாயாக!                                                    


நன்றி:

டி.சசிகலாதேவி

ரவீந்திரதாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...