தமிழக பல்கலைக் கழகங்களில் பாலியல் புகார்கள் இல்லாத பல்கலைக் கழகம் என்று எதுவுமே இல்லை. பி.எச்.டி ஆய்வுக்கான மாணவிகள் பேராசிரியர்களிடம் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம்; மாணவிகள் புகார் தந்தாலும், ‘பல்கலைக் கழகப் பெயர் கெட்டு விடும்’ என பிரச்சினையை அமுக்கி விடுவார்கள். இதோ ஒரு சாம்பிள்;
தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆம்… உலகிலேயே ஒரு மொழிக்கென, முதன் முதலாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் இதுவே.
தஞ்சாவூர்-திருச்சி சாலையில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு போன்றவற்றின் முதன்மையான உயர் ஆய்வை மேற் கொள்ளும் உயர்ந்த நோக்கத்துடன் கடந்த 1981-ம் ஆண்டு எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது.
ஆனால், தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்ட து முதல் இன்று வரை அங்குள்ள பேராசியர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து பின்னர் அப்படியே அடங்கி விடுகின்றன. குற்றச்சாட்டுக்குள்ளான எந்தவொரு பேராசிரியர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இது போன்ற ‘பலான’ செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்து அதன்மூலம் வெளி உலகுக்கு தெரிந்தால், ‘பல்கலைக்கழகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படும்’ என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறி, பல்கலைக்கழக நிர்வாகங்கள் பாலியல் சீண்டல்களுக்குள்ளான மாணவிகளை சமாதானம் செய்து குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர்களைக் காப்பாற்றி வருவதில் இந்த பல்கலையும் விதிவிலக்கல்ல.
2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது வாரம் ஒருநாள் காலை எனது மொபைலுக்கு ஒரு அழைப்பு. யாராக இருக்கும் என எண்ணியவாறு ‘ஹலோ’ என்றேன். மறுமுனையில் பேசியவர் டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையின் கன்சல்டிங் எடிட்டர் பகவான் சிங்.
“சில நாட்களுக்கு முன்பு நம்ம பேப்பரில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசியர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு என செய்தி அனுப்பினீர்கள். அது பிரசுரமானது. உங்ககிட்ட அது குறித்து என்ன ஆதாரம் இருக்கிறது?,” எனக் கேட்டார் பகவான் சிங். அவருக்கு சில விளக்கங்களை அளித்தேன். அவர் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது.
“அச் செய்தியில் துளியும் உண்மை இல்லை’’ என அந்த பேராசிரியர் மறுத்துள்ளார். அதோடு, ‘இன்னும் 15 தினங்களுக்குள் அச் செய்திக்கு நம்ம பேப்பரில் முதல் பக்கத்தில் மறுப்பு செய்தி வெளியிட வேண்டும்னும், இல்லையெனில் ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு, மான நஷ்ட வழக்கு போடப்படும்’ எனக் கூறி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அச்செய்தி தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் எடுத்துக்கிட்டு உடனடியாக புறப்பட்டு நாளை காலை சென்னைக்கு வாங்க,” எனக் கூறினார்.
இவை அனைத்திற்கும் காரணம் 2010-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி ‘Tamil university professor accused of sexual harassement’ என்ற தலைப்பில், ‘டெக்கான் க்ரானிக்கல்’ பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த எனது எக்ஸ்க்ளுசிவ் செய்தி.
அப் பல்கலைக் கழக தத்துவவியல் துறையின் தலைவர் பேராசியர் ரெங்கசாமி ஆய்வு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக குற்றஞ்சாட்டி ஏழு ஆய்வு மாணவிகள் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்டு, இந்திய மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பியிருந்த ஒரு கடிதமே இந்தச் செய்திக்கான காரணமாகும்.
அக் காலக்கட்டத்தில் ‘ம.ரா’ என்றழைக்கப்பட்ட ம. இராசேந்திரன் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர். தமிழக முதல்வர் கருணாநிதியின் நீண்டகால உதவியாளர் சண்முகநாதனின் மைத்துனர். அந்த ஒரே காரணத்திற்காக போதிய கற்பித்தல் அனுபவம் இல்லாத ம.இராசேந்திரன் பல்கலைக் கழக விதிமுறைகளை மீறி துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவிகள் துணை வேந்தர் ம.இராசேந்திரனிடம் மனு அளித்தனர். அந்த மனுவின் அடிப்படையில் பேராசிரியர் ரெங்கசாமி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததல், இந்திய மாணவர் சங்கம் (DIYF) சார்பில் துணை வேந்தரிடம் நவம்பர் -3, 2009 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதற்கு பிறகும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை துணை வேந்தர்.
இதைத் தொடர்ந்து, ‘டிசம்பர் 03, 2009 காலை மாநிலக்குழு உறுப்பினர் செ.ஸ்ரீவித்யா தலைமையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் . அதில் மத்தியக்குழு உறுப்பினர் ஜோ.ராஜ்மோகன் கண்டன உரையாற்றுவார்’ என்று இந்திய மாணவர் சங்கம் நோட்டீஸ்கள் அச்சடித்து வெளியிட்டிருந்தது.
அன்றைய தினம் ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்த எனது எடிட்டர் தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்ற மீட்டிங்கில் கலந்து கொள்ள நான் சென்னை சென்றிருந்தேன்.
மறுநாள் (வெள்ளிக்;கிழமை) தினமணி, தினமலர், தினத்தந்தி, தி இந்து, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளைப் புரட்டிய எனக்கு பெரும் அதிர்ச்சி. அதற்கு காரணம், மேற்படி ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி எந்தவொரு பத்திரிகையிலும் பிரசுரமாகி இருக்கவில்லை.
அதனால் எனக்கு மிகவும் பரிச்சயமான பத்திரிகையாளர் ஒருவரை தொடர்பு கொண்டு என்ன நடந்தது..? எனக் கேட்டேன்.
அதற்கு அவர்“நாங்கள் பத்திரிகையாளர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த இடத்தில் காத்திருந்தோம். பாதிக்கப்பட்ட அந்த ஏழு ஆய்வு மாணவிகளும் அங்கே இருந்தனர். ஆனால் அறிவித்திருந்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. அப்போது அங்கே வந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகி ஒருவர், தற்போது நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு , ஏழு ஆய்வு மாணவிகளையும் அங்கிருந்து வேகவேகமாக அழைத்துச் சென்று விட்டார்,” என்றார் .
இது எனக்கு வியப்பாக இருந்தது. எனக்கு தெரிந்தவரை கம்யூனிஸ்டுகள் மிகச் சிறந்த போராளிகள். அரசின் எந்தவொரு அடக்கு முறைக்கும் பயந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட போராட்டத்தை கைவிட மாட்டார்கள். தடையை மீறி போராட்டம் நடத்துவார்கள். அதனால், கம்யூனிஸ்டுகள் மீது எனக்கு எப்போதுமே அன்பு கலந்த ஒரு தனி மரியாதை உண்டு.
எனவே, நான் இந்திய மாணவர் சங்க அப்போதைய மாவட்டச் செயலாளர் கரிகாலனை மொபைலில் தொடர்பு கொண்டு கேட்டேன். ‘பின்னொரு நாளில் மக்களைத் திரட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக’ கரிகாலன் கூறினார்.
அவரது பதில் எனக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனுப்பிய புகார் மனுவின் நகல் மற்றும் அம் மாணவிகளின் தொடர்பு எண்களை அனுப்புமாறு கரிகாலனிடம் கேட்டேன்.
இதற்கிடையே தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் எனக்கு நன்கு பரிச்சயமான சிலரிடம் இது பற்றி விசாரித்தேன்.
ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தமிழ்ப் பல்லைக் கழக பதிவாளர் (பொறுப்பு) மற்றும் இரண்டு பேராசிரியர்கள் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி அலுவலகத்திற்கு சென்று அதன் மாவட்டச் செயலாளர் நீலமேகம் என்பவருடன் சுமார் இரண்டு மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.அதைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் நடத்தப்படாமலேயே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது’ என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நீலமேகத்தை தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்கு, ”இன்னொரு நாளில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்ற மழுப்பலான பதிலையே அவரும் கூறினார்.
இதற்கிடையே நான் கேட்டிருந்த ஆவணங்களை தராமல் இழுத்தடித்து வந்தார் கரிகாலன். எனவே, நான் சென்னையில் உள்ள இந்திய மாணவர் சங்க மாநில நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு இதுபற்றி முறையிட்டேன். அதன் விளைவாக, சில தினங்கள் கழிந்து திடீரென ஒருநாள் மேற்படி ஆய்வு மாணவிகள் கையெழுத்திட்ட புகார் மனுவின் நகலை எனது வீட்டிற்கே கொண்டுவந்து கொடுத்தார் இந்திய மாணவர் சங்க நிர்வாகி ஒருவர்.
இவ்வளவுக்குப் பிறகும், ஆய்வு மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் சீண்டல்கள் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் எந்தவொரு போராட்டமும் நடத்தாது எனக்கு ஆச்சரியமளித்தது. எனவே, எனக்கு ஓரளவு பரிச்சயமான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகி தோழர் உ.வாசுகியை தொடர்பு கொண்டு கேட்டேன்.
நான் சொன்ன தகவல்களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தோழர் வாசுகி, ”இது பற்றி மாதர் சங்க நிர்வாகிகள் உள்பட யாரும் இது வரை தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை, தற்போது தான் இப் பிரச்சினை எனக்கு தெரிய வருகிறது” என்று கூறினார்.
இது பற்றி தஞ்சை மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரித்து விட்டு, இரண்டு தினங்கள் கழித்து என்னை தொடர்பு கொண்ட தோழர் வாசுகி, இன்னும் இரண்டு தினங்களில் தஞ்சாவூருக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவிகளை நேரில் சந்தித்து பேசிவிட்டு, மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
பின்னர் சென்னையில் இருந்து கிளம்புவதற்கு முன், என்னை தொடர்பு கொண்டு பேசிய தோழர் வாசுகி, “நாளை காலை தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் சந்திப்போம், தோழர்,” என்றார்.
மறுநாள் காலை, எனது நண்பர் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் இரா.செம்பியனும் நானுமாக தோழர் வாசுகியை சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்றேன். ஆனால் அவர் துணை வேந்தரை சந்திப்பதற்காக தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு சென்றிருப்பதாக ஒரு நிர்வாகி கூறினார். இதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் தமிழ்ப் பல்கலைக் கழகம் விரைந்தோம்.
துணை வேந்தரை சந்தித்துவிட்டு வெளியே வந்த தோழர் வாசுகி, எங்கள் இருவரையும் கண்டதும் ’’கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வருமாறு” கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்று விட்டார்.
எனவே, நாங்கள் இருவரும் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தோம்.
ஆனால், என்ன காரணத்தினாலோ எங்களை சந்திப்பதை தோழர் வாசுகி தவிர்த்தார். அவர் அழைத்ததன் பேரிலேயே நாங்கள் இருவரும் அங்கே வந்திருந்தோம். ஆனால் எங்களை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அந்த அலுவலகத்தில் மற்றொரு அறையில் நடைபெற்ற மாதர் சங்க கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு வெளியே வராமல் காலம் கடத்தினார்.
நீண்ட காத்திருப்புக்கு பின்னர் பொறுமையிழந்த நாங்கள் அதிருப்தியை கூறி வருத்தப்பட்டோம். எப்போது பேசுவார் என்ற தகவலும் தரப்படவில்லை.
உடனே நான் அந்த அறைக்குள் சென்று “தோழர், உங்களுக்காகதான் நாங்கள் இருவரும் இவ்வளவு நேரமும் காத்திருக்கிறோம். பிளீஸ்..பேசுங்க’’ எனக் கேட்டேன்.
இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வேறு வழியின்றி, அந்த அறையில் இருந்து வெளியே வந்த தோழர் வாசுகி, “சொல்லுங்க. என்ன விஷயம்?” எனக் கேட்டார் எதுவுமே தெரியாதது போல.
”பாதிக்கப்பட்ட மாணவிகளை நேரில் சந்திந்து விசாரித்துவிட்டு, அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப் போவதாக கூறினீர்கள். தற்போது துணை வேந்தரை சந்தித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். இப்பிரச்சினையில் உண்மையில் என்னதான் நடக்கிறது என்பது தெரியவில்லை. ..’’ என நண்பர் செம்பியன் கூறினார்.
அதற்கு, “ஸாரி, தோழர். அதைப் பற்றி மட்டும் கேட்காதீங்க.. அது குறித்தெல்லாம் இப்போது நான் எதுவும் பேட்டி தர முடியாது. இப்போது உள்ளே எங்களது மாதர் சங்கத்தினருக்கு ஒரு பயிற்சி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேண்டுமானால், அது குறித்து பேட்டி தருகிறேன்,” என்றார், வாசுகி.
அவரது பதிலைக் கேட்டு நாங்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தோம். பலத்த ஏமாற்றத்துடன், கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டோம்.
இந்த நிகழ்வுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கமோ, ஜனநாயக மாதர் சங்கமோ எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை.
அதன் பின்னரே, ஆய்வு மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லைக் கொடுத்த எனது செய்தி டெக்கான் க்ரானிக்கல் பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளியானது.
இப்போது அதுவே அப் பேராசிரியர் மான நஷ்ட ஈடு கேட்டு எனது அலுவலகத்துக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் விடும் அளவுக்கு பிரச்சினையாகி விட்டது.
இத்தனைக்கும் இக்குற்றச்சாட்டு குறித்து பல்கலைக் கழக துணை வேந்தர் ம.இராசேந்திரன், தஞ்சை மாவட்ட கலெக்டர் எம்.எஸ்.சண்முகம் ஆகியோரை தொடர்பு கொண்டு அவர்களது கருத்துக்களையும் கேட்டேன்.
குற்றச்சாட்டுக்குள்ளான பேராசியரை தற்போது துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக துணை வேந்தர் ம.இராசேந்திரன் தெரிவித்து இருந்தார். அதை என்னுடைய செய்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துணை வேந்தருக்கு அறிவுறுத்தியிருப்பதாக மாவட்ட கலெக்டர் எம்.எஸ்.சண்முகம் கூறியிருந்தார். இந்த சண்முகம் வேறு யாருமல்ல, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களில் ஒருவர்.
இச்சம்பவம் நடைபெற்றபோது, செந்தில்வேலன் என்ற இளம் ஐபிஎஸ் அதிகாரி தஞ்சை மாவட்ட எஸ்.பி. அவர் வேறு யாருமல்ல. தற்போதைய உளவுத்துறை ஐ.ஜி.
குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் மீது போலீஸார் என்ன காரணத்தினாலோ, வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. சட்டப்படி உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இந்நிலையில், எனது கன்சல்டிங் எடிட்டர் பகவான் சிங் என்னிடம் அச் செய்தி குறித்து சிறிது நேரம் விசாரணை நடத்தினார். அதன் பின்னர், அலுவலக மேனேஜர் குரு பிரசாத், செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் ஆகியோர் என்னை பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் அழைத்துச் சென்றனர்.
எனது செய்தியையும்,, நான் தந்திருந்த ஆவணங்களை வாங்கிப் பார்வையிட்ட வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், “வெரி குட். செய்திக்கான அனைத்து ஆதாரங்களையும் உங்க ரிப்போர்ட்டர் வைத்திருக்கிறார். அதோடு பல்கலைக்கழக துணை வேந்தரிடமும் வெர்ஷன் வாங்கி அதை செய்தியாக்கியுள்ளார். இக் குற்றச்சாட்டு பொய் எனில், அவரை துறைத் தலைவர் பதவியில் இருந்து ஏன் துணை வேந்தர் நீக்கியுள்ளார்?,” எனக் கேட்டார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.
அதோடு, “இப்போதைக்கு அவர் அனுப்பியுள்ள வழக்கறிஞர் நோட்டீசுக்கு பதில் எதுவும் அனுப்ப வேண்டாம். வேண்டுமானால், நீங்க மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு போடுங்க. உங்கள் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க தயார் என பதில் நோட்டீஸ் அனுப்பலாம்,” என்றார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.
பின்னர் நான் தஞ்சாவூர் புறப்பட்டு வந்துவிட்டேன்.அவர்கள் நோட்டீஸ் விட்டதுடன் ஜகா வாங்கிக் கொண்டனர். நீதிமன்றம் செல்லவில்லை. குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் ரெங்கசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படாததுடன், ஒருசில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் அவர் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுப்பப்பட்டது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே பலமுறை அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அவர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் ரொம்ப ‘ஜாலியாக’ பணிபுரிந்துவிட்டு தற்போது நிம்மதியாக பணியிலிருந்து ஓய்வும் பெற்று விட்டார்.
இது, உயர்கல்வி நிறுவனங்கள் பாலியல் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம். போராடும் இயக்கங்கள் சில நேரங்களில் இவ்விதமாகவும் நடந்து கொள்கிறார்கள். ஆக, மாணவிகளின் துணிச்சலும், ஊடகங்களின் சமரசமற்றத் தன்மையும், சமூகத்தின் அறச் சீற்றமும் தான் இதற்கு தீர்வைத் தரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை