| பராசக்தி 2026 திரைப்படம் |
பராசக்தி !
சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து ..
வெளி வந்திருக்கும் படம் 'பராசக்தி'
தமிழ்நாட்டில் 1965-இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையும் ராணுவமும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக, பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு,
அதை ஜாலியன் வாலாபாக் உடன் ஒப்பிடலாம்
இந்த போராட்டத்தின் மிக மோசமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சியில் அப்போது என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் 1930களின் பிற்பகுதியில் இருந்தே இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன.
1937-இல் இந்தித் திணிப்புக்கு எதிராக முதல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ராஜாஜி தலைமையில் ஆட்சியமைத்தது.
முதலமைச்சராகப் பதவியேற்ற ராஜாஜி, சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில்,
மாணவர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் எனப் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள்
முதலமைச்சருக்குக் கடுமையாக எதிர்வினையாற்றினாலும் அரசு பின்வாங்கவில்லை.
1938ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி மாணவர்கள்
கட்டாயம் இந்தி படிக்க வலியுறுத்தும் வகையில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டுமெனக் கூறப்பட்டது.
முதற்கட்டமாக 125 பள்ளிக்கூடங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போதே,
இரண்டாம் உலகப் போர் வெடித்தது.
அந்தத் தருணத்தில் நாடு முழுவதும் இருந்த காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன.
இதையடுத்து, 1939ஆம் ஆண்டு அக்டோபரில் ராஜாஜியும் தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிப்ரவரி 21, 1940-இல் அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநர் ஜான் எர்ஸ்கின்,
இந்தி கற்பதை கட்டாயமாக்கும் அரசின் உத்தரவைத் திரும்பப் பெற்றார்.
அடுத்ததாக, இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1948ஆம் ஆண்டில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது
பள்ளிக்கூடங்களில் மீண்டும் இந்தியைக் கற்பிக்கும் முயற்சிகள் துவங்கின.
1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயமாக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இந்த முறை சென்னை மாகாணத்தில் இருந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளில்
இந்தி கட்டாயப் பாடமாகவும் தமிழ் பேசும் பகுதிகளில் விருப்பப் பாடமாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த முறையும் கட்டாய இந்திக்கு எதிரான போராட்டங்கள் துவங்கின.
இந்நிலையில், 1949ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்குப் பிறகு கட்டாய இந்தி திட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இதற்குப் பிறகு, 1965ஆம் ஆண்டு நெருங்கியபோது ..
இந்தி தொடர்பான அச்சம் தமிழ்நாட்டில் மீண்டும் உயிர்பெற்றது.
இதற்கு அடிப்படையாக அமைந்தது இந்தியாவின் அலுவல் மொழி தொடர்பான விவகாரம்.
இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே
இந்தியும் ஆங்கிலமும் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க அரசமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
அதற்குப் பிறகு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
அதன்படி, ஜனவரி 26, 1965க்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும்.
1965ஆம் ஆண்டு நெருங்க நெருங்க இந்தி பேசாத மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு 1963ஆம் ஆண்டு
'அலுவல் மொழிகள் சட்டம்' ஒன்றைக் கொண்டுவந்தது.
அந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவில், 15 ஆண்டுகள் கெடு முடிந்தபின்னும்
(1965ஆம் ஆண்டுக்குப் பிறகும்) இந்தியுடன் சேர்த்து ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழியாகத் 'தொடரலாம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது, "Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution,
the English language may, as from the appointed day, continue to be used in addition to Hindi"
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அதை "the English language shall" என்று மாற்ற வேண்டும் என
அப்போது தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.
"may" மற்றும் "shall" ஆகிய இரு சொற்களுக்கும் ஒரே பொருள்தான் என்பதால்
சட்ட வரைவில் திருத்தம் தேவையில்லை என்று வாதிட்டார் பிரதமர் நேரு.
முடிவில், திருத்தம் எதுவும் இல்லாமலேயே சட்டம் நிறைவேறியது.
இந்த நிலையில், 1964ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை
இந்தி பேசாத மாநிலங்களின் அச்சத்தை நிஜமாக்குவதைப் போல இருந்தது.
"From January 26, Hindi will become in term of the Constitution the official Language of the Union.
Although Provision has been made in the Official Languages Act, 1963,
for the continued use of English in addition to Hindi, it is expected that Hindi will be used for all official purposes of the Union after January 26, 1965"
என்று அந்த சுற்றறிக்கை குறிப்பிட்டது
அதாவது, 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் மத்திய அரசின் அலுவல் மொழியாக
இந்தியே பயன்படுத்தப்படும் என்பதுதான் இந்த சுற்றறிக்கையின் சாராம்சம்.
இருந்தாலும் முக்கியமான சுற்றறிக்கைகள், அரசாணைகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும்
என்றார் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த குல்சாரிலால் நந்தா.
1965ஆம் ஆண்டு குடியரசு நாள் நெருங்க நெருங்க .
இந்தியை அலுவல் மொழியாக்குவதை எதிர்த்து போராட்டங்கள் தமிழ்நாட்டில் தீவிரமாகின.
ஜனவரி 26ஆம் தேதி துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார் தி.மு.கவின் பொதுச் செயலாளர் சி.என். அண்ணாதுரை.
ஆனால், இந்தியாவின் குடியரசு தினத்தை துக்க நாளாக அனுசரிப்பதை அனுமதிக்க முடியாது என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம்.
இருந்தபோதும் ஒரு நாள் முன்னதாகவே அதாவது ஜனவரி 25ஆம் தேதியே ..
மாணவர்கள் துக்க நாள் அனுசரிக்க வேண்டும் என இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர்கள் குழுவின் சார்பில் அறிக்கை வெளியானது.
இதற்கிடையில், ஜனவரி 22ஆம் தேதியே சி.என். அண்ணாதுரை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இருந்தபோதும் ஜனவரி 25ஆம் தேதியிலிருந்து அரசியல் சட்டம் எதிர்ப்பு, ஊர்வலங்கள் என
போராட்டம் தீவிரமடைய ஆரம்பித்திருந்தது.
சென்னையிலும் மதுரையிலும் இந்தப் போராட்டங்கள் தீவிரமாக நடந்தன.
ஆனால், பிப்ரவரி 12ஆம் தேதி பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு,
இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக அமைந்தது.
"திருப்பூரில் பிப்ரவரி பத்தாம் தேதி மாணவர்கள் ஒரு தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது,
அதனைத் தடியடி நடத்தி காவல்துறை கலைத்தது.
அந்த நேரத்தில் ஒரு காவலர் துப்பாக்கியால் சுட்டதில் 19 வயது மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம் தபால் நிலையத்தையும் ரயில் நிலையத்தையும் சூறையாடியது.
தந்திக் கம்பங்கள் பிய்த்தெறியப்பட்டன.
காவல் நிலையம் கொளுத்தப்பட்டது.
ஓரிடத்தில் இரண்டு காவல்துறை துணை ஆய்வாளர்கள் நிற்பதைப் பார்த்த ஒரு கும்பல்,
அவர்களைத் துரத்தியது.
முடிவில் அவர்கள் பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர்"
இதற்குப் பிறகு ராணுவம் வரவழைக்கப்பட்டது.
திருப்பூர் நகரம் வெறிச்சோடிப் போனது.
ஆனால், தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் போராட்டங்கள் மிகத் தீவிரமாக தொடர்ந்தன.
"பிப்ரவரி பத்தாம் தேதி மட்டும் காவல்துறை ஏழு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர்.
50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
உண்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும்"
மொழிப் போராட்டம் தீவிரமடைந்திருந்த நிலையில்,
மத்திய உணவுத் துறை அமைச்சர் சி. சுப்பிரமணியமும் பெட்ரோலியம் மற்றும் ரசாயனத் துறைக்கான மத்திய இணையமைச்சர் ஓ.வி. அளகேசனும்
தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், இந்தி எதிர்ப்புக்கான தமிழக மாணவர் போராட்ட கவுன்சில்,
பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.
இந்த முழு அடைப்புக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது.
ஆனால், பொள்ளாச்சியில் மிக மோசமான ஒரு சம்பவம் நிகழக் காத்திருந்தது.
"முழு அடைப்பு தினத்தன்று காலை பத்து மணி அளவில் பாலக்காட்டு சாலையில் உள்ள
தபால் நிலையம் முன்பாக சில மாணவர்கள் திரண்டிருந்தனர்.
பொதுமக்கள் பலரும் திரண்டிருந்தனர்.
காவல்துறையும் குவிக்கப்பட்டிருந்தது.
அந்த நேரத்தில் ஒரு மாணவர் தபால் நிலையத்தின் பெயர் பலகை மீதிருந்த இந்தி எழுத்துகளை அழிக்க முயன்று கொண்டிருந்தார்.
சிறிது நேரம் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள்,
அவரை இறங்கும்படி சொன்னார்கள்.
ஆனால், அவர் இறங்கவில்லை. இதையடுத்து, அவர் உடனடியாக இறங்கிவில்லையென்றால்
துப்பாக்கியால் சுடப்படுவார் என காவல்துறையினர் சொன்னார்கள்.
அப்போதும் அவர் இறங்கவில்லை. இதையடுத்து ஒரு காவலர் அவரைச் சுட்டார். அந்த மாணவர் கீழே விழுந்தார்.
இதையடுத்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த கூட்டம் காவலர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.
இதையடுத்து காவல்துறை அவர்களைத் தடியடி நடத்திக் கலைத்தது.
அங்கு கலைந்த கூட்டம் தாலுகா அலுவலகம் முன்பாக கூடி,
அதன் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.
இதற்குப் பிறகு சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து ..
மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
இதையடுத்து, கோயம்புத்தூரிலிருந்து ராணுவத்தின் உதவி கோரப்பட்டது."
நண்பகலில் ஆறு லாரிகளில் ராணுவத்தினர் பொள்ளாச்சியில் வந்திறங்கினர்.
அந்த நேரத்தில் கோயம்புத்தூர் சாலையில் இருந்த ஒரு தபால் அலுவலகத்தை ஒரு கூட்டம் தாக்க ஆரம்பித்திருந்தது.
அதைப் பார்த்த ராணுவத்தினர், அவர்கள் கலைந்து செல்லாவிட்டால் சுடப்படுவார்கள் என எச்சரித்தது.
அவர்கள் கலைந்து செல்லவில்லை.
இதையடுத்து ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடடில் பலர் கொல்லப்பட்டனர்.
கூட்டம் அங்குமிங்குமாக ஓடியது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு நான்கு வயது குழந்தையும் கொல்லப்பட்டது.
கூட்டம் கலைந்ததும், ராணுவத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் வீரர்,
துப்பாக்கியால் சுடப்பட்டு கிடந்த நான்கு வயதுக் குழந்தையை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கண் கலங்கினார் ..
"இதற்குப் பிறகு பல இடங்களில் திரண்ட கூட்டம் எல்லா அரசு அலுவலகங்களையும் தாக்க ஆரம்பித்தது.
சாலைகளில் கற்கள் உருட்டிவிடப்பட்டன.
ராணுவம் செல்வதைத் தடுக்க தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
தாலுகா அலுவலகம், பள்ளிக்கூடங்கள், தீயணைப்பு நிலையம், நீதிமன்றம் ஆகியவை சூறையாடப்பட்டன.
இதற்கிடையில் மேலும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.கச்சேரிச் சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராஜேந்திரன் என்பவர் படுகாயமடைந்தார்.
அதே நேரத்தில் மற்றொரு இளைஞர் 'என்னைச் சுடுங்கள்' என்று கூறிக்கொண்டே முன்னே வந்தார்.
அங்கு வந்த வீரர் ஒருவர் அவரைக் காலில் சுட்டார்.
அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு காலில் கட்டுப்போடப்பட்ட பிறகு மீண்டும் சாலைக்கு வந்த அந்த இளைஞர் போராட்டத்தில் இறங்கினார்.
அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு நடுத்தர வயது மனிதரின் ..
வயிற்றில் குண்டு பாய்ந்து பின்னால் வெளியேறியது.
அந்தத் தோட்டா அவருக்குப் பின்னால் ஒளிந்திருந்த பத்து வயது சிறுவனின் தலையில் பாய்ந்தது. இருவருமே கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்குப் பிறகு பொள்ளாச்சி போர்க்களத்தைப் போலக் காட்சியளித்தது.
ராணுவம் இயந்திரத் துப்பாக்கியை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மறுத்தார்.
1965 மார்ச் 27ஆம் தேதி சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சரும் இதே கருத்தைத் தெரிவித்தார்"
பொள்ளாச்சி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கை தொடர்பாக துல்லியமான தகவல்கள் இல்லை.
"பொள்ளச்சி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என சரியாகச் சொல்ல முடியாது.
ஆய்வு செய்து பார்க்கும் போது இறந்தவர்களின் எண்ணிக்கை 80 முதல் 100ஆக இருக்கலாம்.
அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாகவே குறிப்பிட்டது.
இதற்கு சரியான விடை ஒருபோதும் கிடைக்காமல் போகலாம். "
ஆலடி அருணா எழுதிய 'இந்தி ஏகாதிபத்தியம்' என்ற நூலும் இந்தச் சம்பவத்தை சுருக்கமாக விவரிக்கிறது என்றாலும் .
அதிலும் பொள்ளாச்சி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை இல்லை.
இதற்கு அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி வெளியான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்,
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பான விரிவான தகவல்களைத் தருகிறது.
"Military Acts to quell the Riots" என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் வெளியான செய்தியில் '
ராணுவம் மற்றும் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 வயது குழந்தை உட்பட பத்துப் பேர் கொல்லப்பட்டனர்' என்று குறிப்பிட்டது.
1965ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மிக மோசமான உயிரிழப்பு ஏற்பட்டது பொள்ளாச்சியில்தான் .
#தரவுகளின்_ஆதாரம் ..
#பிபிசி_கலெக்டிவ் .
- Velu Subramaniam)
(பகிர்வுப் பதிவு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை