சிலஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சுவாதி படுகொலை வழக்கு (இப்போது இந்தப் பெயர் பொருத்தமானதாக இருக்கவில்லை. எனவே சுவாதி கொலை வழக்கு என்பதை ராம்குமார் கொலை வழக்கு என்பதாக குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்) சுவாதி படுகொலை நிகழ்ந்ததிலிருந்து இன்றுவரை காவல்துறையின் நடவடிக்கைகளில் பல்வேறு ஐயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவை தீர்க்கப்படக் கூடாது என்பது மட்டுமல்லாமல் அவை எழுப்பப்பட்டிருக்கவே கூடாது என்பது போல் திட்டமிட்ட அலட்சியத்துடன் காவல்துறையின், ஊடகங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.

தமிழகத்தில் காவி பயங்கரவாதம் தன் நிகழ்ச்சிநிரலை நடத்த துடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் அதற்கு எல்லா வழிகளிலும், எல்லா நிலைகளிலும், எல்லா வாய்ப்புகளிலும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது; திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். சிற்சில போதுகளில் அவை அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. மாலேகான் தொடங்கி தென்காசி வரை அதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. சுவாதி கொலையிலும் கூட அவ்வாறான சதி மறைந்திருக்கக் கூடும் எனும் ஐயம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்றுக் கொண்டே வருகிறது.

அரசின் கட்டமைப்பு மக்களுக்கு எதிராக இருக்கிறது. மக்களைக் காப்பதும், மக்களுக்கு சேவை செய்வதும் அதன் நோக்கமல்ல, என்பதை தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன. இதற்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும். அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும் என்பது இன்றியமையாத தேவையாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், மக்களின் பக்கமிருந்து எழுந்திருக்கும் புலனாய்வு நடவடிக்கையாக ராம்குமார் கொலையின் பின்னணியிலிருக்கும் ஐயங்களை கோர்த்துக் காட்டியிருக்கிறது இந்த காணொளிப் பதிவு. (தற்போது இரண்டு பகுதிகள் வெளிவந்திருக்கின்றன. இன்னும் இரண்டு பதிவுகள் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவைகளும் வெளியாகும் போது இங்கே இணைத்துக் கொள்ளப்படும்)

அரசின், காவல்துறையின், ஊடகங்களின் செய்திகளை நம்பவே கூடாது என்பது மக்கள் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து வந்தடைந்திருக்கும் முடிவு. அதன் அடுத்த படியாக வந்திருக்கிறது இந்த காணொளிப் பதிவு. அரசின், அரசுத் துறைகளின், ஊடகங்களின் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் இது போல் மக்களால் கண்காணித்து வெளிப்படுத்த முடியாதா? செய்ய வேண்டும்.

ராம்குமார் கொலையில் நண்பர் திலீபன் மகேந்திரன் செய்திருக்கும் இந்த முயற்சி, அந்த வகையில் எடுத்து வைத்திருக்கும் மிகப் பெரிய எட்டு. வாழ்த்துகள் திலீபன் மகேந்திரன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்