ஞாயிறு 21 2023

எளிய சோசலிச உண்மைகள்......

 






எளிய சோசலிச உண்மைகள் (1903) – பால் லஃபார்கே

தொழிலாளி : முதலாளி இல்லையென்றால் எனக்கு யார் வேலை தருவார்கள்?
சோசலிஸ்ட் : என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. இதை என்னவென்று பார்ப்போம். நாம் வேலை செய்ய மூன்று பொருட்கள் தேவை – அவை 1. தொழிற்சாலை 2. சில இயந்திரங்கள் 3. பொருளைச் செய்யத் தேவையான மூலப் பொருட்கள்
தொழிலாளி : சரி.
சோசலிஸ்ட் : தொழிற்சாலையைக் கட்டுவது யார்?
தொழிலாளி : கொத்தனாரும் அவருடன் பணியாற்றும் பிற தொழிலாளிகளும்
சோசலிஸ்ட் : இயந்திரங்களை நிர்மாணித்தது யார்?
தொழிலாளி : இயந்திரப் பொறியாளர்கள்
சோசலிஸ்ட் : நீங்கள் நெய்யும் பருத்தியை யார் விளைவித்தது? உன் மனைவி பின்னுவதற்கு தேவையான கம்பளியை யார் கொடுத்தது? மகன் வார்த்துக் கொண்டிருக்கும் இரும்புக்கான கனிமத்தை யார் தோண்டி எடுத்தது?
தொழிலாளி : என்னைப் போன்ற தொழிலாளர்கள், உழவர்கள், ஆட்டுக்காரர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் ஆகியோர்.
சோசலிஸ்ட் : ஆக, பிற தொழிலாளர்கள் நீங்கள் வேலை செய்வதற்குத் தேவையான ஆலைக் கட்டிடங்கள், இயந்திரங்கள், மூலப் பொருட்கள் ஆகியவற்றை உங்களுக்கு வழங்கியதனால்தான் உங்களால் வேலை செய்ய முடிகிறது, இல்லையா?
தொழிலாளி : உண்மைதான், பருத்தியோ, தறியோ இல்லாவிட்டால் நான் துணியை நெய்திருக்க முடியாது.
சோசலிஸ்ட் : அப்படியானால், உங்களுக்கு வேலை தருவது உங்கள் முதலாளி இல்லை. கொத்தனார், பொறியாளர், உழவர், சுரங்கத் தொழிலாளி ஆகியோர்தான். நீங்கள் வேலை செய்வதற்குத் தேவையானவற்றை உங்கள் முதலாளி எப்படி பெற்றார் என்று தெரியுமா?
தொழிலாளி : அவரை அவற்றை விலைக்கு வாங்கினார்.
சோசலிஸ்ட் : அவற்றை வாங்க அவருக்கு பணம் கொடுத்தது யார்?
தொழிலாளி : எனக்கு எப்படித் தெரியும்? அவருடைய தந்தை சிறிதளவு சொத்துக்களை விட்டுச் சென்றிருந்தார். ஆனால், இன்றைக்கு அவர் ஒரு கோடீசுவரர்.
சோசலிஸ்ட் : அவர் பெற்றுள்ள கோடிக்கணக்கான ரூபாய்கள், அவர் துணிகளை நெய்தோ, இயந்திரங்களில் கஷ்டப்பட்டு வேலை செய்தோ சம்பாதித்தனவா?
தொழிலாளி : அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எங்களை வேலை செய்ய வைத்துத்தான் கோடீசுவரர் ஆகியிருக்கிறார்.
சோசலிஸ்ட் : ஆக, அவர் சோம்பேறியாக இருப்பதன் மூலம்தான் பணக்காரர் ஆனார். கோடிகளை சம்பாதிப்பதற்கு அதுதான் ஒரே வழி. வேலை செய்பவர்களுக்கு தங்கள் வாய்க்கும், வயிற்றிற்கும் தேவையானது மட்டும்தான் கிடைக்கிது. ஆக, நீங்களும் சக தொழிலாளிகளும் வேலை செய்யவில்லையென்றால் , உங்கள் முதலாளியின் இயந்திரங்கள் துருப்பிடித்து விடாதா? பருத்தியெல்லாம் பாழாகி விடாதா?
தொழிலாளி : உண்மைதான்! நாங்கள் வேலை செய்யவில்லையென்றால் ஆலையிலுள்ள அனைத்தும் பாழாய்ப் போய்விடும்.
சோசலிஸ்ட் : ஆக நீங்கள் வேலை செய்வதால்தான் இயந்திரங்களும், உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களும் பாதுகாக்கப்படுகின்றன.
தொழிலாளி : உண்மைதான். நான் இந்த மாதிரி யோசிக்கவே இல்லை.
சோசலிஸ்ட் : ஆலையில் என்னென்ன வேலை நடக்கிறது என்பதை முதலாளி மேற்பார்வையிட்டு கவனித்துக் கொண்டிருக்கிறாரா என்ன?
தொழிலாளி : அப்படியெல்லாம் பெரிதாக ஒன்றும் கவனிப்பதில்லை. நாங்கள் எல்லாம் வேலை செய்கிறோமா என்பதைப் பார்க்க தினமும் ஒரு ரவுண்ட்ஸ் வருவார். ஆனால், அப்படி வரும்போது அசுத்தப்பட்டு விடும் என்ற பயத்தில், கைகளை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுப்பதே இல்லை. என் மனைவியும், மகளும் வேலை பார்க்கும் நூற்பாலையில், நான்கு முதலாளிகளுள் ஒருவரைக் கூட அவர்கள் பார்த்ததே இல்லை. என் மகன் வேலை செய்யும் பவுண்டரியின் கதையே வேறு. அது ஒரு வரையறுக்கப்பட்ட கூட்டுப் பங்கு கம்பெனி. அங்கு முதலாளிகளின் நிழலைக் கூட யாரும் பார்த்ததே இல்லை. அவர்கள் யாரென்பது கூட தெரியாது. இப்போது நானும் ஒரு ஆயிரமோ, இரண்டாயிரமோ பணம் சேர்த்து ஒரு ஷேர் வாங்கினால், ஆலைக்குள் கால் எடுத்து வைக்காமலேயே, ஆலை எங்கிருக்கிறது என்பது தெரியாமலே நானும் அந்த ஆலைக்கு முதலாளியாகி விடலாம்.
சோசலிஸ்ட் : ஆக, அது ஒரு முதலாளியின் ஆலையானாலும் சரி, ஒரு கூட்டுப் பங்கு கம்பெனியானாலும் சரி, அங்கு முதலாளிகள் வருவது இல்லை அல்லது அவர் அங்கு இருக்கிறாரா என்பது, ஒரு பொருட்டே இல்லை. அப்படியானால், இந்தக் கம்பெனிகளிலெல்லாம் வேலை வாங்குவது யார்? வேலையை மேற்பார்வை செய்வது யார்?
தொழிலாளி : மேனேஜர்களும் ஃபோர்மேன்களும்தான்!
சோசலிஸ்ட் : ஆலையைக் கட்டியது, இயந்திரங்களைச் செய்தது, மூலப் பொருட்களை தயாரித்தது, இயந்திரங்களை இயக்குவது எல்லாமே தொழிலாளர்கள்தான் என்றால், தொழிலாளர்களை மேற்பார்வையிட்டு வேலை வாங்குவது மேனேஜர்களும், ஃபோர்மேன்களும்தான் என்றால், இந்த முதலாளிகள் என்னதான் செய்கிறார்கள்?
தொழிலாளி : நகம் வெட்டிக் கொண்டிருப்பதைத் தவிர, காலை ஆட்டிக் கொண்டிருப்பதைத் தவிர வேறெதுவும் செய்து நான் பார்த்ததில்லை.
சோசலிஸ்ட் : இங்கிருக்கும் அனைத்து முதலாளிகளையும் ஒரு ராக்கெட்டில் ஏற்றி, சந்திரனுக்கு அனுப்பி வைத்து விட்டால் கூட, இங்கு, எந்தவொரு வேலையும் நின்றுவிடப் போவதில்லை. உங்கள் முதலாளி, கடந்த ஆண்டு எவ்வளவு இலாபம் சம்பாதித்தார் என்று தெரியுமா?
தொழிலாளி : குறைந்தது ஒரு முப்பது கோடியாவது இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
சோசலிஸ்ட் : பெண்கள், குழந்தைகள் உட்பட எத்தனை பேரை அவர் வேலைக்கு வைத்துள்ளார்.
தொழிலாளி : ஒரு ஐநூறு பேர் இருக்கலாம்.
சோசலிஸ்ட் : அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குறிராகள்?
தொழிலாளி : மேனேஜர், ஃபோர்மேன்கள் அனைவரின் சம்பளத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், சராசரியாக ஒரு ஆளுக்கு ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாயைத் தாண்டியதில்லை.
சோசலிஸ்ட் : ஆக ஐநூறு தொழிலாளர்களும் சேர்ந்து, சம்பளமாக வருடத்திற்கு ஐந்து கோடி வாங்குகிறீர்கள். அது உங்களின் வாய்க்கும் வயிற்றிற்குமே சரியாக இருக்கும். ஆனால், எதுவுமே செய்யாமல், உங்கள் முதலாளி முப்பது கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு போய் விட்டார். இந்த முப்பது கோடி ரூபாய் எங்கிருந்து வந்ததென்று தெரியுமா?
தொழிலாளி : வானத்திலிருந்து அல்ல! பணம் மழையாகக் கொட்டி நான் எங்கும் பார்த்ததில்லை.
சோசலிஸ்ட் : உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளமானாலும் சரி, உங்கள் முதலாளி அடித்த இலாபமானாலும் சரி, இரண்டையும் உருவாக்கியது உங்கள் உழைப்பும், வியர்வையும்தான். அந்த உழைப்பினால் உருவான இலாபத்திலிருந்துதான், முதலாளி இயந்திரத்தையும் ஆலையையும் வாங்குகிறான்.
தொழிலாளி : உண்மைதான். இதை மறுக்கவே முடியாது.
சோசலிஸ்ட் : உங்கள் உழைப்பில் உண்டான பணத்திலிருந்துதான், முதலாளி புதிய இயந்திரங்களை வாங்குகிறான். அந்தப் பணத்திலிருந்துதான் ஆலைகளைக் கட்டுகிறான். அந்த ஆலைகளிலும் இயந்திரங்களிலும் வேலை செய்வது நீங்கள், உங்களை வேலை வாங்கி உற்பத்தியை இயக்குவது, உங்களைப் போலவே கூலி அடிமைகளான மேனேஜர்களும், ஃபோர்மேன்களும்தான்! பின்னர் இந்த முதலாளி எங்கிருந்து வந்தான்? அவன் வேலைதான் என்ன?
தொழிலாளி : தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிவதுதான்!
சோசலிஸ்ட் : தொழிலாளர்களிடமிருந்து திருடுவது என்று சொல்லுங்கள். அப்படிச் சொல்வதுதான் சரியானது. தெளிவானது!
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!
பால் லஃபார்கே என்ற பிரெஞ்சு சோசலிச வாதி 1903-ம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.



2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...