சனி 22 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...54

 


குடியரசு தின அணிவகுப்பு நாடகம்
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு ராஜபாட்டையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுவதை - மாநிலங்களின், பொதுத்துறை நிறுவனங்களின் அலங்கார ஊர்திகள், ராணுவ வலிமையைக் காட்டும் வாகனங்கள், கொடியேற்றம், இவற்றை எல்லாம் - தொலைக்காட்சியில் எல்லாருமே பார்த்திருப்பீர்கள். தில்லியில் வசிப்பவர்கள் ஒரு முறையாவது நேரில் போய் பார்த்திருப்பீர்கள். (ஒருமுறை நேரில் பார்த்தவர்கள் மீண்டும் நேரில் போக விரும்ப மாட்டார்கள். அது வேறு விஷயம்)
என்னைப் பொறுத்தவரையில், இந்த குடியரசு தின அணிவகுப்பு என்கிற நாடகமே தேவையில்லாத ஆணிதான். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு வைக்கும் ஆணி. ஏன் இப்படிச் சொல்கிறேன்?
குடியரசு தினத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே ராஜபாட்டையின் இருபுறமும் மக்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டு விடும். வேலி போடுவது, மக்கள் அமர்வதற்கான அடுக்கடுக்கான படிகள் போன்ற இருக்கைகளை பலகைகளால் அமைப்பது போன்ற வேலைகள் நடக்கும். அப்புறம், குடியரசு தினத்துக்கு முந்தைய பத்து-பதினைந்து நாட்களில் மூன்று நாட்கள் ஒத்திகை நடைபெறும். அதில் கடைசி முறை முழுமையான ஒத்திகை – குடியரசுத் தலைவர் இருக்க மாட்டாரே தவிர, அவர் இருப்பதுபோலவே ஏற்பாடு செய்யப்பட்டு ஃபைனல் ரிகர்சல். ஒத்திகை நடக்கும்போதெல்லாம் அந்த வழியாக யாருமே போக முடியாது. வாகனங்கள் எல்லாம் திருப்பி விடப்படும். அதன் விளைவாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கேஸ்கேடிங் விளைவு போல தில்லி முழுவதையும் பாதிக்கும். பல்லாயிரம் வாகனங்கள் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு போக வேண்டியிருக்கும். அதனால் அவரவருக்கு பெட்ரோல் செலவும் கூடும், சுற்றுச்சூழல் மாசும் அதிகரிக்கும்.
குடியரசு தினம் முடிந்ததும், அமைக்கப்பட்ட வேலிகள், இருக்கைகள் எல்லாம் அகற்றப்பட இரண்டு மாதங்கள் ஆகும். அந்தப் பலகைகள் முதலானவை அவற்றுக்கான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, உடைந்தவை அகற்றப்பட்டு, மீண்டும் பச்சை வண்ணம் பூசப்பட்டு, அடுத்த குடியரசு தினத்துக்குத் தயாராக்கும் வேலை நடைபெறும். ஆக, இதற்கு மட்டுமே ஒரு துறையும் பலநூறு கோடிகளும் ஆண்டு முழுவதும் செலவாகிக் கொண்டேஇருக்கும்.
இதுதவிர, அலங்கார ஊர்திகள் நிறுத்துவதற்கான இடங்கள், வந்தவர்களைத் தங்க வைப்பதற்கான டென்டுகள், அவர்களுக்கு உணவு ஏற்பாடுகள், போக்குவரத்து ஏற்பாடுகள், அணிவகுப்பு ஊர்வலத்தில் எப்படி பங்கேற்க வேண்டும் என்பதற்கான பயிற்சி ஏற்பாடுகள், பயிற்சியாளர்கள் என பல நூறு கோடி ரூபாய் காலியாகும்.
அது தவிர, நீங்கள் பார்த்திருப்பீர்களே ராணுவ அணிவகுப்பில் வரும் வீரர்கள். அவர்களும் அந்த ஒரு மாதமும் தமது வேலையை விட்டுவிட்டு இந்த அணிவகுப்பில்தான் இருப்பார்கள். அதற்கு முன்பேகூட அவர்களில் யார் யாரைத் தேர்வு செய்வது என்பதற்கான ஏற்பாடுகளிலும் கணிசமான நேரமும், அவர்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகளும் விரயமாகும். அவர்களும் குடியரசு தினத்துக்கு முன்பாகவே தில்லிக்கு வந்து தங்கியிருப்பார்கள். எத்தனை ரெஜிமென்ட்டுகளிலிருந்து எத்தனை ஆயிரம் பேரின் உழைப்பும் நேரமும் இதில் வீணாகும்? எத்தனை கோடிகள் இதில் போகும்?
இதுதவிர, ராணுவ வலிமையைக் காட்டுவது என்ற பெயரில், ராணுவத்துக்கு புதிதாக என்ன வாங்கப்பட்டதோ அதுவும் கொண்டு வரப்படும். அதற்கான ஏற்பாடுகள், அதற்கான சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள், சும்ந்து செல்வதற்கான வாகனங்கள், அதற்கான ஊழியர்கள், ராணுவத்தினர்... அவர்களுக்கான சம்பளம் எனப் பல கோடிகள்.
குடியரசு தினத்தன்று குதிரைப்படை வரும் பார்த்திருப்பீர்கள். அந்தக் குதிரைகளுக்கு வேறு வேலையே கிடையாது. இந்த ஒரு நாள் கூத்துக்காக சுமார் இருநூறு உயர் ஜாதிக் (!) குதிரைகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றுக்கென ஊழியர்கள், பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், ராணுவத்தினர், அலுவலகம், இன்ன பிற என ஆண்டு முழுவதும் செலவாவது எத்தனை கோடிகளோ தெரியாது. அதுதவிர, அணிவகுப்பில் நடந்து செல்லும் அந்த குதிரைகள் போடும் விட்டைகளை உடனுக்குடன் அள்ளுவதற்கு ஒரு நூறு பேர்! அவர்களுக்கான சம்பளம், பயிற்சி, ஏற்பாட்டுச் செலவுகள்!
அணிவகுப்பின் இடையிடையே கலைக் குழுக்கள் கலைநிகழ்ச்சிகளை வழங்குவதயும் பார்த்திருப்பீர்கள். அந்தந்த மாநிலத்திலிருந்து வந்தவர்கள், தில்லியில் உள்ள அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள என ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு திறமையைக் காட்டியபடி ஆடிக்கொண்டு வரும். அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி உடையணிந்திருப்பார்கள். அந்த ஆடைகளுக்கான செலவு, பயிற்சிகளுக்கான செலவு, ஒத்திகைக்கு வந்து போவதற்கான செலவு! இதில் ஒரு பகுதி செலவு அவரவரே செய்ய வேண்டியும் இருக்கலாம்.
குடியரசு தினத்தன்று ராஜபாட்டையின் இருபுறமும் – தார் சாலையின் இருபுறமும் இருக்கிற மண்பகுதியைப் பார்த்திருப்பீர்கள். அது சிவப்பாக இருக்கும் என்பதைக் கவனித்தது உண்டா? அந்த சிறப்பான ‘சிவப்பு மண்’ கொண்டு வந்து பரப்பப்படுவதற்கு எத்தனை கோடி போகுமோ தெரியாது.
மாநிலங்களின் ஊர்திகளின் வடிவமைப்பு அந்தந்த மாநிலத்தின் செலவு. அதற்கும் பல கோடி ரூபாய் செலவாகும். அதைக் கொண்டு வருவதற்கு, அதைப் பராமரிப்பதற்கு என அதற்கென ஊழியர்கள், அவர்களுக்கான செலவுகள்!
பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்கள், அவற்றின் வடிவமைப்பு, நிர்வாகம் என சில கோடிகள்.
பைக் சாகசங்கள் செய்வதற்கென ஒரு ராணுவக் குழு. அதற்கான பைக்குகளின் பராமரிப்பும் செலவுகளும். சிவப்பு வெள்ளை பச்சை நிறங்களில் வானில் பொடிகளைத் தூவிக்கொண்டு போவதற்கான விமானங்களுக்கான செலவுகள்.
இத்தோடு முடிகிறதா? வெளிநாட்டிலிருந்து ஒரு தலைவர் சிறப்பு விருந்தினர். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள். தங்குமிட வசதிகள். ஒபாமா போன்ற அமெரிக்கத் தலைவர்கள் வந்தால் சாணக்கியபுரியின் பெரியதொரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை மொத்தமாக அவர்கள் தம் கையில் எடுத்துக் கொள்வார்கள். ‘உன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் மயிருக்கு சமானம்... நான் எல்லாவற்றும் என் ஆட்களைக் கொண்டுவருவேன்’ என்று ஹோட்டல் மொத்தமும் அவர்கள்தான் இருப்பார்கள். ஆனாலும், காந்தி சமாதிக்குப் போகும்போதோ, பக்கத்தில் தாஜ் மஹால் பார்க்கப் போனாலோ அவர்களுக்கான பாதுகாப்பையும் நம்முடைய அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும். என்னதான் அவர்களுடைய தனி விமானத்தில் வந்தாலும், ஏர்போர்ட்டிலிருந்து ஹோட்டலுக்கு 20-25 கிமீ சாலையில்தான் வர வேண்டும். அந்தச் சாலையில் இருபுறமும் 50-100 மீட்டருக்கு ஒரு போலீஸ்காரர் – மழையோ, குளிரோ, வெயிலோ – துப்பாக்கியைப் பிடித்தபடி நின்றிருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் போலீஸ்காரர்கள்! அவர்களுடைய ஊதியம்?! அவர்களை அங்கங்கே கொண்டு போய் இறக்குவதற்கு எத்தனை வாகனங்கள்! விஐபி போன பிறகு அவர்களை திரும்ப அழைத்துப் போகவும் வாகனங்கள் வர வேண்டும். அதற்கு தில்லி போலீஸ் தரப்பில் ஆகும் செலவுகள் எத்தனை கோடிகள்!
குடியரசு தின நாடகம் எல்லாம் அரங்கேறிய பிறகு இன்னொரு நாடகம் நடக்கும். அதன் பெயர் Beating Retreat. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ஆம் தேதி இந்த நாடகம் அரங்கேறும். இதைப் பார்ப்பதற்கு அழைப்பிதழ் கிடைப்பது மிகவும் கடினம்.
ராஜபாட்டையின் ஆரம்பத்தில் உள்ள விஜய் சவுக்கில் (வெற்றிச் சதுக்கம்) இது நடைபெறும். பக்கத்திலேயே இருக்கிற குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குடியரசுத் தலைவர் அதற்கென இருக்கும் பாரம்பரிய அலங்கார வண்டியில் வந்து இறங்குவார். பிரதமரும் இருப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை. (ஆளில்லாத குகைக்கே கையாட்டுகிற பிரதமர், அங்கே கொஞ்சம் கூட்டத்தையும் பார்த்துவிட்டால் சும்மா இருப்பாரா...? சுற்றிச்சுற்றி வந்து கையாட்டுவார்)
இதிலும் ராணுவ வீர்ர்கள், குதிரைகள், ராணுவ பாண்டு வாத்தியக் குழுக்கள் இடம்பெறும். (கூகிள் அடித்துப் பார்த்தால் வீடியோக்கள் கிடைக்கும்.)
சரி, Beating Retreat என்பதன் பொருள் என்ன தெரியுமா? போரில் இறங்கிய ராணுவம் மாலையில் போரை நிறுத்திவிட்டு முகாமுக்குத் திரும்புவதுதான் Beating Retreat.
17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிரிட்டிஷ்காரர்கள் துவக்கி வைத்து வழக்கத்தை இப்போதும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கே எங்கே போருக்குப் போனார்கள்? எங்கிருந்து திரும்பினார்கள்?
இதற்கு எத்தனை கோடிகள் செலவு?!
இதையெல்லாம் நீங்கள் ஆர்டிஐ-யில் கேட்டால்கூட பதில் கிடைக்காது. ஏனென்றால், பல்வேறு அமைச்சகங்கள் தனித்தனியாக செலவு செய்யும். பாதுகாப்புத்துறை, உள்துறை, பொதுப்பணித்துறை, என ஒவ்வொன்றும் தனித்தனி தலைப்புகளில் செய்யும். சிலசெலவுகளை குடியரசு தினச் செலவாகவே காட்ட மாட்டார்கள், வேறு கணக்குகளில் காட்டுவார்கள்.
2015இல் யாரோ ஒருவர் தகவல் உரிமைச் சட்டத்தின்படி கேட்ட கேள்விக்கு 350 கோடி ரூபாய் செலவானதாக பதில் கிடைத்திருக்கறது. அது பொதுப்பணித்துறை செலவு.
மேலே நான் குறிப்பிட்ட விவரங்களின்படி, ராணுவம், ராணுவத்தினர் ஊதியம் என எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால், என்னுடைய உத்தேச மதிப்பீட்டில் குறைந்த்து 2000 கோடி ரூபாய் இந்த ஒரு நாள் கூத்தில் போகும் என்று நினைக்கிறேன்.
இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டின் குடியரசு தினத்துக்கு 2000 கோடி செலவாவது பெரிய விஷயமா என்று சிலர் கேட்கலாம்.
குடியரசு தின விழாவில் குடியரசு என்கிற கொள்கைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா, அதில் குடியரசு தினம் என்ற வகையில் என்ன காட்டப்படுகிறது என்று யோசித்தால், ஏதும் இல்லை என்பது புரியும். குடியரசுத் தலைவர் உப்புச்சப்பில்லாத ஓர் உரையாற்றுவார். அத்தோடு சரி. குடியரசு தினத்துக்கும் ராணுவ வலிமையைக் காட்டுவதற்கும் என்ன தொடர்பு?
சீனா, கொரியா, இந்தியா இந்த மூன்று நாடுகள்தான் இப்படிப்பட்ட நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். வேறெந்த நாடுகளிலும் இப்படி நடப்பதாகத் தெரியவில்லை. அப்படியே சில நாடுகளில் நடப்பதாகவே இருந்தாலும், இப்போதும் பலகோடிப்பேர் வறுமையில் இருக்கும் நம் நாட்டில் இதுபோல சில ஆயிரம் கோடிகளை வீணடிப்பது தேவையற்றது.
பி.கு. - அலங்கார ஊர்திகள் சர்ச்சை குறித்து அடுத்த பதிவில் வரும்.
எவனும் தேசபக்திப் பாடம் எடுக்க வரத்தேவையில்லை.

1 கருத்து:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...