''முதல்வரய்யா... நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’ என்று எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் உ.பி. மாநிலம் கான்பூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 11-ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவர். இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அந்த மாணவர் ஒரு முஸ்லிம். இதனால், பள்ளியின் ஆசிரியர்களும் முதல்வரும் மீண்டும் மீண்டும் அவரை ‘டெர்ரரிஸ்ட்’ என வகுப்பறையில் அழைத்தனர். ஒவ்வொரு நாளும் அந்த மாணவரின் ஸ்கூல் பேக் சோதனையிடப்பட்டது. பள்ளியில் சேர்ந்து இரண்டு மாதங்களாகியும் ஒருவரும் அந்த மாணவருடன் பேசுவதில்லை. பேசக்கூடாது என்பது ஆசிரியர்களின் உத்தரவு. விளைவு அந்த இளம் மனம் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு எடுத்திருக்கிறது.
கடந்த வாரம், விருத்தாசலம் அருகே முதனை என்ற கிராமத்தில் அமராவதி என்ற 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காரணம், அந்த மாணவி தலித் என்பதை குறிப்பிட்டு பள்ளியின் ஆசிரியை மோசமாக வகுப்பறையில் திட்டியதன் விளைவு. வாட்ச்மேனாக பணிபுரியும் மாற்றுத் திறனாளி தந்தையின் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளிட்ட நான்கு பிள்ளைகளில் அமராவதிதான் மூத்தவர். நண்பர்கள் சூழ்ந்திருந்த வகுப்பறையில் ஆசிரியரின் சாதிவெறிப் பேச்சு அந்த பிஞ்சு மனதை தற்கொலை பாதைக்குத் தள்ளியிருக்கிறது.
மதவெறியும், சாதிவெறியும் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது என்பதும், அது இப்போது புத்துணர்ச்சியுடன் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் நமது பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல. பள்ளி ஆசிரியர்கள் சாதிப்பற்று கொண்டோராகவும், சாதிவெறியில் திளைத்தவர்களாகவும் இருந்தால் அது ஆதிக்க சாதி மாணவர்களின் மனங்களில் சாதியை மேலும் இறுக்கமாக்குகிறது. தலித் மாணவர்களை மேலும் ஒடுக்குகிறது.
குறிப்பாக, சாதிவெறி கொண்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியில், ஓரிரு தலித் ஆசிரியர்கள் இருந்தால் திட்டமிட்டு அவர்களை புறக்கணிக்கின்றனர். அவமானப்படுத்துகின்றனர். இந்த சூழலின் சாட்சியாக பயிலும் தலித் மாணவர்கள், தங்களுக்கு ஒரு அவமானம் நேரும்போது யாரிடம் முறையிடுவது என தெரியாமல் நிலைகுலைந்து போகின்றனர். அவர்களின் குரலை கேட்க ஒரு நாதியும் இல்லை. சாதிவெறிக்கு பொது சமூகம் வழங்கும் அங்கீகாரம் அவர்களை மேலும் அச்சத்தில் தள்ளுகிறது.
நன்றி!
வேதனை என்று மாறும் இந்நிலை ???
பதிலளிநீக்குசாதீய மதவாத சக்திகள் தலைஎடுதததால் இந்த அநியாயங்கள் பெருகத் தொடங்கியுள்ளதை மக்கள் உணர்ந்தால் நாட்டுக்கு நல்லது:(
பதிலளிநீக்குவேதனை தொடரும் வேதனை
பதிலளிநீக்கு