புதன் 07 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --57...





 பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு - நீதியின் காபரே நடனம்..          இப்பொழுதெல்லாம் நீதி மன்றத்தின் தீர்ப்புகள் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இருப்பதில்லை. தெருவில் நாய்கள் குரைப்பதையும், பன்றிகள் உறுமுவதையும், பையத்தியக்காரர்கள் உளறுவதையும் எப்படி இயல்பாக எடுத்துக் கொண்டு அதற்கு எந்த முக்கியத்துவமும் தராமல் கடந்து செல்கின்றார்களோ அப்படித்தான் நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மக்கள் கடந்து செல்கின்றார்கள்.


அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு அந்நியமான இடம், தங்கள் வாழ்க்கையில் என்றுமே அறிந்திராத, பார்த்திராத பணமும் பதவியும் அதிகாரம் உள்ள நபர்கள் தங்களுக்குள் பேரம் பேசிக் கொள்ளும் ஒரு சந்தை. பாவமன்னிப்பு சீட்டு விற்று பணம் சேர்த்த கிறிஸ்தவப் பாதிரிமார்களின் கதை நீதிமன்றத்திலும் நடந்தேறுகிறது.


அனைத்துமே சரக்காக மாற்றப்பட்ட முதலாளித்துவ சமூகத்தில் நீதி மட்டும் எப்படி சரக்காக மாறாமல் தன்னை காத்துக் கொள்ள முடியும்?. நீதி என்ற வார்த்தை வேண்டுமானால் அரூபமான ஒன்றாக இருக்கலாம் ஆனால் அந்த நீதியைப் பிரசவிக்கும் நீதிபதிகள் நம் எல்லோரையும் போல எல்லாவித அபிலாசைகளுக்கும் ஆட்படும் சாதாரண நரமனிதர்கள்தான்.


பணமும் பதவிகளும் எல்லோரையும் ஆட்டுவிப்பது போல நீதிபதிகளையும் ஆட்டுவிக்கின்றது. தீர்ப்புகள் அப்பட்டமாகவே விலை பேசி விற்கப்படுவதாக ஒவ்வொரு இந்தியனும் உறுதியாக உளமார நம்பும் அளவுக்கு நீதிமன்றத்தின் மீதான நம்பகத் தன்மை சிதைந்து கிடக்கின்றது.


நீதிமன்றங்கள் பற்றிய சமூகத்தின் இந்தப் பொதுப்பார்வைதான் நாட்டில் பெரும்பாலான மக்களை சுயமாகவே பழிதீர்த்துக் கொள்ளத் தூண்டுகின்றது. தங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதிமன்றத்தின் மூலம் நீதியை பெற்றுக் கொள்ளலாம் என்று ஒரு சாமானிய மனிதன் நம்பும்வரைதான் நீதிமன்றங்கள் என்பவை புனித இடங்களாக இருக்க முடியும்.


அது பொய்த்துப் போகும்போது ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான நீதியை தானே தேடிக் கொள்வான். அப்படியான உறுதியான அடி எடுத்து வைப்புகளை நோக்கியே இந்திய நீதிமன்றங்கள் இன்று சென்று கொண்டிருக்கின்றன. மோடி அரசு பதவியேற்றதில் இருந்து அதற்கான சமிக்ஞைகளை தொடர்ச்சியாக நீதிமன்றங்கள் தந்து வருகின்றது.

 

கடந்த 2004-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அவரைக் கொலை செய்ய முயன்றதாக இஷ்ரத் ஜஹான்(19), ஜாவீத் ஷேக் என்கிற பிரனேஷ் பிள்ளை, அக்பர் அலி ராணா, இஷன் ஜோஹர் ஆகியோரை என்கவுன்ட்டரில் குஜராத் காவல் துறை சுட்டுக் கொன்றது. இந்த என்கவுன்ட்டரை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, இது போலியான என்கவுன்ட்டர் என்று அறிக்கை சமர்ப்பித்தது.


அதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணையின்போது, என்கவுன்ட்டர் தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரிகள் பி.பி.பாண்டே, டி.ஜி. வன்சரா மற்றும் என்.கே. அமீன் ஆகியோரிடம் அரசுப் பணியாளர்களை விசாரிப்பதற்கு மாநில அரசிடம் அனுமதி கோர வேண்டும் என்ற அடிப்படையில் சிபிஐ அனுமதி கோரிய போது மோடி அரசு அதை மறுத்து விட்டது.


பிறகு மோடி பிரதமராகப் பதவியேற்றபின் சிபிஐ இந்த வழக்கை அப்படியே குழிதோண்டி புதைக்கத் திட்டமிட்டு செயல்பட்டது. கடைசி வரைக்கும் நீதிமன்றத்தில் சிபிஐ இந்தப் போலி என்கவுன்டர் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. இதைச் சாக்காக வைத்தே குற்றவாளிகளை குஜராத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.


துளசிராம் பிரஜாபதி கொல்லப்பட்ட வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவித்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சதாசிவம், ஓய்வு பெற்ற பிறகு கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றத்திலிருந்து தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வு பெற்ற பிறகு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற ‘பெருமையைப்’ பெற்றுக் கொண்டார்.


2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 இல் நடந்த சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, அதே ஆண்டு மே மாதம் மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு, அக்டோபர் மாதம் ராஜஸ்தான் ஆஜ்மீர் தர்க்காவில் நடந்த குண்டுவெடிப்பு, 2006 செப்டம்பர் மற்றும் 2008 மகாராஷ்டிராவில் மாலேகானில் நடந்த இரு குண்டுவெடிப்பு வழக்கு என மொத்தம் ஐந்து குண்டுவெடிப்புகளிலும் சேர்த்து மொத்தம் 119 பேர் கொல்லப்பட்டார்கள்.


இந்த ஐந்து குண்டுவெடிப்புகளையும் நடத்த சதி செய்த முக்கிய குற்றவாளிகளான அசீமானந்தா, பிரக்யாசிங் தாக்கூர் போன்றவர்கள் என்.ஐ.ஏவின் ஆசியுடன் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டார்கள்.


இவர்கள் எல்லாம் விடுதலை ஆனதைப் பார்த்த இந்த நாட்டின் நீதி அமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் சிபிஐ. என்.ஐ.ஏ, நீதிமன்றங்கள் என அனைத்துமே காவிமயமாக்கப்பட்டு சீரழிக்கப்பட்டதை உணராமல் இருக்க முடியாது. அதனால்தான் காவி பயங்கரவாதிகள் சம்மந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்பை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.


பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பும் அப்படித்தான். நிச்சயமாக சம்மந்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று உறுதியாக நம்பப்பட்டது. நமது நம்பிக்கையை சிபிஐயோ, நீதிமன்றங்களோ பொய்யாக்காமல் பார்த்துக் கொண்டன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பெற்ற அனைவருமே விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.


பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு, முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்றும், சமூக விரோத சக்திகள் பாபர் மசூதியை இடிக்க முற்பட்டபோது, குற்றம் சாட்டப் பெற்றவர்கள் அவர்களைத் தடுக்கவே முயற்சி செய்துள்ளனர் என்றும், தங்களது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள் மசூதியை இடிக்கத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ சமர்ப்பித்த ஆதாரங்கள் வலுவானவையாக இல்லாததால் அவை குற்றங்களை நிரூபிக்கப் போதுமானதல்ல என்று கூறியுள்ளது.


மேலும் மசூதி இடிக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிகழ்த்திய உரை என்று சிபிஐ ஆதாரமாக வழங்கியுள்ள ஒலிப்பதிவு தெளிவானதாக இல்லை என்றும், நீதிமன்றத்தில் சிபிஐ ஆதாரமாக வழங்கிய காணொளி, படங்கள், ஒலிப்பதிவுகள் ஆகியவற்றின் உண்மைத் தன்மை நிரூபிக்கப்படவில்லை, புகைப்படங்களின் நெகட்டிவ் நீதிமன்றத்தில் வழங்கப்படவில்லை, வீடியோ கேசட்டுகள் சேதமாகியிருந்தன போன்ற அற்ப காரணங்களைக் கூறி அனைவரையும் விடுதலை செய்திருக்கின்றது.


ஏற்கெனவே ராமர் கோயில் கட்டிக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்து அதற்கான பணிகள் துவங்கப்பட்டு விட்டதால் மசூதியை இடிக்க காரணமானவர்களுக்கு ஒரு பரிசாகவே இந்தத் தீர்ப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருகின்றது. இது புரியாமல் சிலர் இது உச்ச நீதிமன்றத் தீர்ப்போடு இந்தத் தீர்ப்பு முரண்படுவதாக ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள்.


எப்படி சங்கரராமன் தன்னுடைய கழுத்தை தானே வெட்டிக்கொண்டு தன்னைத்தானே கொலை செய்து கொண்டாரோ, அதே போலவே பாபர் மசூதியும் தன்னைத் தானே இடித்துக் கொண்டது என்பதுதான் நீதிபதிகள் தங்களது தீர்ப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு சொல்லும் செய்தி.


ஆனால் நீதிமன்றங்களுக்கும், சிபிஐக்கும் ‘தெரியாத’ சில ரகசியங்களை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வது அவசியம். 


அத்வானி நடத்திய ரத யாத்திரையால் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாகவே பாபர் மசூதி இடிக்கப்பட்டது.


பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்கள் மும்பை, சூரத், கான்பூர், டெல்லி போன்றவற்றை ரத்தக் காடாக்கியது. ஏறக்குறைய 2000 பேர் உயிரிழந்தார்கள். டிசம்பர் 1992 தொடங்கி 1993 ஜனவரி வரை மும்பையில் நடந்த கலவரங்களில் மட்டும் 900 பேர் உயிரிழந்தனர். ஏறக்குறைய 9000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது.


இந்தக் கலவத்தை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.லிபரான் 16 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை செய்து 1029 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அளித்தார்.


அந்த அறிக்கையில் டிசம்பர் 6, 1992 அன்று நடைபெற்ற அயோத்தி நிகழ்வுகள் தன்னிச்சையாகவோ, திட்டமிடப்படாமலோ நடைபெறவில்லை என்றும் அவை திட்டமிட்டே நடைபெற்றது என்றும், வாஜ்பாய், அத்வானி, சுதர்சன், கல்யாண்சிங், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 68 பேர் முக்கிய குற்றவாளிகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பாக, இந்து தன்னார்வலர்களுடன் இருந்த புகைப்படக் கலைஞரான ப்ரவீன் ஜெயின் அன்று அங்கிருந்த பலர் இரும்புக் கம்பிகள், கோடாரிகள் போன்றவற்றை வைத்து, கட்டடத்தை தரை மட்டமாக்குவதற்கு பயிற்சி செய்ததை ஆதாரப்பூர்வமாக புகைப்படம் எடுத்திருக்கின்றார். இவர் லிபரான் கமிஷன் முன்பு வாக்குமூலம் அளித்ததோடு, சிபிஐ நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சாட்சியாகவும் ஆஜரானவர்.


2005 ஆம் ஆண்டி சிபிஐயின் முன்னால் இணை இயக்குனராக இருந்த மலோய் கிருஷ்ண தர் தன்னுடைய நூலில் பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிட்சத் போன்றவை 10 மாதங்களுக்கு முன்பே மசூதியை இடிக்கத் திட்டமிட்டதை அம்பலப்படுத்தியுள்ளார்.


இவை எல்லாம் சும்மா நீங்கள் தெரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்ட சில தகவல்கள்தான். மற்றப்படி மோடி ஆட்சிக்கு வந்தவுடன் காவி தீவிரவாதிகள் சம்மந்தப்பட்ட அனைத்து ஆதாரங்களும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவே உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.


- செ.கார்கி

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...