| அமெரிக்கா |
உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான்.
பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை.
நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச் செய்திகளும், போர்களும், பொருளாதார வீழ்ச்சிகளும் உங்களுக்கு முற்றிலும் புதிய கோணத்தில் புரியும்.
ஏனென்றால், அமெரிக்காவின் அதிகாரத்தை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் ஒரே ஒரு நுட்பமான இயந்திரம் ஒன்று உள்ளது.
அமெரிக்க ராணுவம், அதன் பொருளாதாரம், தொழில் நுட்பங்கள், அரசியல் செல்வாக்கு என அனைத்தும் இந்த ஒரு அஸ்திவாரத்தின் மீதுதான் நிற்கின்றன.
அமெரிக்கா ஏன் இவ்வளவு சக்தி வாய்ந்தது என்று கேட்டால், பொதுவாகச் சொல்லப்படும் பதில்கள்: அதன் ராணுவ வலிமை, தொழில்நுட்பம் அல்லது பொருளாதாரத்தின் அளவு.
இவை உண்மைதான்,
ஆனால் இவை அடிப்படை 'காரணம்' அல்ல; இவை வெறும் 'விளைவுகள்.
அமெரிக்காவின் ஒட்டுமொத்த அதிகாரமும், உலக நாடுகளின் மீதான அதன் பிடியும் எதன் மேல் நிற்கிறது தெரியுமா? அந்த அஸ்திவாரத்தின்
பெயர்:
பெட்ரோ டாலர் (Petrodollar).
இதைப்புரிந்துகொள்ள நாம் 1970-களின் ஆரம்பக்காலத்திற்குச் செல்ல வேண்டும்.
அதற்கு முன், உலக நிதி அமைப்பு 'பிரெட்டன் வூட்ஸ்' (Bretton Woods) ஒப்பந்தத்தின் கீழ் இயங்கியது. அப்போது global reserve currency யாக இருந்த அமெரிக்க டாலருக்கு ஒரு உத்திரவாதம் இருந்தது: புழக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு டாலருக்கும் ஈடாக அமெரிக்க கருவூலத்தில் தங்கம் இருக்கும்.
எந்த நாடும் டாலரைக் கொடுத்துவிட்டு அதற்கு இணையான தங்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதுதான் டாலருக்கு ஒரு நம்பகத்தன்மையைக் கொடுத்தது.
1960-களில் அமெரிக்கா - வியட்நாம் போர் ஒரு சாதாரண போர் இடம்பெற்றது… அது சாதாரணமான போர் அல்ல, அது அமெரிக்காவின் கஜானாவைக் காலி செய்த போர்.
அரசாங்கம் தன்னிடம் இருந்த தங்கத்தை விட அதிகமான டாலர்களை அச்சடித்துப் போரை நடத்தியது.
இதைப் பார்த்த பிரெஞ்சு அதிபர் சார்லஸ் டி கோல் (Charles de Gaulle) உஷாரானார்.
1965-ல் அவர் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். பிரான்சிடம் இருந்த காகித டாலர்களை அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாகத் தங்கத்தைத் திருப்பிக் கேட்டார்.
போர்க்கப்பல்களை (French Ships) அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்திற்கு அனுப்பி, அங்கிருந்த federal reserve வங்கியிலிருந்து டன் கணக்கிலான தங்கத்தை ஏற்றிக்கொண்டு சென்றது.
இதைப் பார்த்த மற்ற நாடுகளும் பயந்துபோய் தங்கத்தைக் கேட்கத் தொடங்கின. அமெரிக்கா தன்னிடம் இருந்த தங்கத்தை இழந்து திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
1971-ல் அதிபர் ரிச்சர்ட் நிக்சன், "இனி டாலரைத் தங்கமாக மாற்ற முடியாது" என்று அறிவித்து 'Gold Window வை மூடினார்.
அன்று முதல் டாலர் வெறும் காகிதமானது. வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஓடும் ஒரு காகிதமாக மாறியது.
அப்படியென்றால், உலக நாடுகள் “நாம் ஏன் தொடர்ந்து டாலரை வைத்திருக்க வேண்டும்?”என்ற நிலைக்கு வந்தன.
டாலர் வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹென்றி கிஸிஞ்சர் (Henry Kissinger) 1974-ல் ஒரு மாஸ்டர் பிளான் போட்டார்.
அவர் சவுதி அரேபியாவிற்குச் சென்று ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்தார்:
அந்த ஒப்பந்தத்தில் சவுதி தனது கச்சா எண்ணெயை டாலருக்கு மட்டுமே விற்க வேண்டும். வேறு எந்த நாட்டு நாணயத்தையும் ஏற்கக்கூடாது.
அதற்கு கைம்மாறாக சவுதி அரச குடும்பத்திற்குத் தேவையான ராணுவப் பாதுகாப்பு, நவீன ஆயுதங்கள் மற்றும் அரசியல் பாதுகாப்பை அமெரிக்கா வழங்கும்.
சவுதி ஒப்புக்கொண்டது, மற்ற ஒபெக் (OPEC) நாடுகளும் இதைப் பின்பற்றின.
'பெட்ரோ டாலர்' பிறந்தது.
இந்த ஒரு முடிவின் மூலம், தங்கம் இல்லாமலேயே டாலருக்கு உலக அளவில் நிரந்தரத் தேவை உருவானது.
எண்ணெய் வாங்க வேண்டும் என்றால் உலக நாடுகள் டாலரைத் தேடி ஓட வேண்டியிருந்தது.
எண்ணெய் இன்றி நவீன உலகம் இயங்காது. ஜப்பான், இந்தியா, ஜெர்மனி என எந்த நாடாக இருந்தாலும், அதன் தொழிற்சாலைகள் ஓட எண்ணெய் வேண்டும்.
அந்த எண்ணெயை வாங்க வேண்டுமென்றால் அவர்களிடம் டாலர் இருக்க வேண்டும்.
இது உலக அளவில் டாலருக்கான ஒரு நிரந்தரத் தேவையை உருவாக்கியது.
மக்கள் டாலரை நேசிப்பதால் அல்ல, தங்கள் நாடு முடங்கிவிடக் கூடாது என்பதற்காக டாலரைச் சேமிக்க வேண்டிய கட்டாயம் உருவானது.
இது டாலருக்கு ஒரு 'முடிவில்லாத' தேவையை உருவாக்கியது.
இதில் இரண்டாவது கட்டம் இன்னும் சுவாரசியமானது.
எண்ணெய் விற்று சவுதி போன்ற நாடுகள் சம்பாதிக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை அவர்கள் என்ன செய்வார்கள்?
அவர்கள் அதை மீண்டும் அமெரிக்காவிலேயே முதலீடு செய்கிறார்கள் (Petrodollar Recycling). அமெரிக்க அரசுப் பத்திரங்கள், பங்குகள் மற்றும் நிலங்களில் அந்தப் பணம் முதலீடு செய்யப்படுகிறது.
இதனால் தான் அமெரிக்கா சம்பாதிப்பதை விட அதிகமாகச் செலவு செய்ய முடிகிறது.
எவ்வளவு கடன் வாங்கினாலும், பெற்றோடொலரை வாங்க உலக நாடுகள் தயாராக இருக்கின்றன. அதாவது, உலகின் எண்ணெய் வர்த்தகம் மூலமாக அமெரிக்காவுக்குத் தேவையான முதலீடு உலக நாடுகளிடமிருந்தே கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
இதுதான் அமெரிக்காவை ஒரு உற்பத்திப் பொருளாதாரத்திலிருந்து 'நிதிப் பொருளாதாரமாக' (Financial Economy) மாற்றியது.
டாலர் என்பது வெறும் பணம் மட்டுமல்ல, அது ஒரு பயங்கரமான ஆயுதம்.
உலக நிதி அமைப்பே டாலர் உள்கட்டமைப்பில் இருப்பதால், அமெரிக்கா நினைத்தால் எந்த ஒரு நாட்டையும் இந்த அமைப்பிலிருந்து துண்டிக்க முடியும்.
ரஷ்யா, ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியதை நாம் பார்த்தோம்.
ஆனால், இந்த அளவிற்கு மீறிய ஆயுதமாக டாலரை பாவித்து உலக நாடுகளை மிரட்டல் என்பது ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் நம்மை முடக்கலாம் என்று பயந்த நாடுகள், டாலருக்கு மாற்றாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.
இந்த 'பெட்ரோ டாலர்' அமைப்பிற்கு யாரெல்லாம் சவால் விடுகிறார்களோ, அவர்களை அமெரிக்கா ஒவ்வொன்றாகக் குறிவைத்து அழித்து வருகிறது.
இதுதான் நீங்கள் செய்திகளில் காணும் பல போர்களின் உண்மைக் கதை.
2000-ஆம் ஆண்டில் சதாாம் உசேன் தனது எண்ணெயை டாலருக்குப் பதில் 'யூரோ'வில் விற்கப் போவதாக அறிவித்தார். 2003-ல் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்து அவரை வீழ்த்தியது. ஈராக் எண்ணெய் மீண்டும் டாலருக்கு மாறியது.
கடாபி ஆப்பிரிக்க நாடுகளுக்கென தங்கம் சார்ந்த தனி நாணயத்தை உருவாக்கி, எண்ணெயை அதில் விற்க முயன்றார். 2011-ல் நேட்டோ படைகள் லிபியாவைச் சிதைத்தன.
சிரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளும் டாலர் மேலாதிக்கத்திற்கு எதிராகவோ அல்லது அமெரிக்காவுக்குச் சாதகமற்ற எரிசக்திப் பாதைகளை உருவாக்கவோ முயன்றபோது சிதைக்கப்பட்டன.
வெனிசுவலா ஒரு உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு கொண்ட நாடு. இவர்கள் டாலரைத் தவிர்த்து 'பெட்ரோ' (Petro) என்ற கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்த முயன்றபோது, மிகக்கடுமையான பொருளாதாரத் தடைகளால் அந்த நாடு முடக்கப்பட்டது.
தற்போது அமெரிக்காவின் மிக முக்கியமான இலக்கு ஈரான். ஈரான் பல ஆண்டுகளாகத் தனது எண்ணெயைச் சீனா போன்ற நாடுகளுக்கு டாலர் அல்லாத நாணயங்களில் (யுவான், தங்கம்) விற்று வருகிறது.
டாலரை ஒரு 'ஆயுதமாக'ப் பயன்படுத்தி ஈரானை உலக வங்கி அமைப்பிலிருந்து அமெரிக்கா துண்டித்துள்ளது.
ஈரான் உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நாடுகளில் ஒன்று. ஆனால், அவர்கள் டாலர் அல்லாத வேறு நாணயங்களில் எண்ணெய் விற்க முயற்சிக்கும் போதெல்லாம், அமெரிக்கா அவர்கள் மீது கடுமையான 'பொருளாதாரத் தடைகளை' (Sanctions) விதிக்கிறது.
அமெரிக்கா ஈரானை 'SWIFT' எனப்படும் சர்வதேச பணப் பரிமாற்ற அமைப்பிலிருந்து துண்டித்தது. இதன் பொருள், ஈரான் தனது எண்ணெயை விற்று பணத்தைப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்பது ஒரு காரணம் என்றாலும், அதன் ஆணிவேர் ஈரான் டாலரின் மேலாதிக்கத்தை ஏற்க மறுப்பதுதான்.
ஒரு நாடு டாலரை மீறிச் சென்றால், அந்த நாட்டை உலகப் பொருளாதாரத்திலிருந்தே அமெரிக்காவால் துண்டிக்க முடியும் என்பதற்கு ஈரானே நேரடி உதாரணம்.
சமீபத்திய 2026 மோதல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் இந்த 'பெட்ரோ டாலர்' அதிகாரத்தைக் காப்பாற்ற நடக்கும் போராட்டங்களே தவிர, அணுசக்திப் பிரச்சனைக்காக அல்ல.
இப்போது முதல்முறையாக 50 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் நிகழ்கிறது.
சீனா தனது சொந்த நாணயமான 'யுவான்' (Yuan) மூலம் ஈரானிடமிருந்தும், இப்போது சவுதியிடமிருந்தும் எண்ணெய் வாங்கத் திட்டமிடுகிறது.
அரை நூற்றாண்டு கால அமெரிக்க விசுவாசத்தைத் தாண்டி, இப்போது சீனாவுடன் நெருங்கி வருகிறது சவுதி.
இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் டாலரைத் தவிர்த்துவிட்டு தங்கள் சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளன.
ஈரான் இப்போது சீனாவின் உதவியுடன் இந்த டாலர் வலையை உடைக்கப் பார்க்கிறது.
பெட்ரோ டாலர் அமைப்பு உடைந்தால், உலக நாடுகள் டாலரைச் சேமித்து வைப்பதைக் குறைத்துக்கொள்ளும்.
அமெரிக்க அரசுப் பத்திரங்களை யாரும் வாங்க மாட்டார்கள். இதனால் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயரும், பங்குச் சந்தை சரியும், சாதாரண அமெரிக்கர்களின் சேமிப்பு கரையும், டொலர் மீதான நம்பிக்கை என்பது மெதுவாகக் கசிந்து, பின் ஒரே இரவில் ஆவியாகிவிடும்.
நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் ஒரு அமைப்பு, ஒரு வருடத்தில் நடந்துவிடாது, ஆனால் அது நடக்கத் தொடங்கிவிட்டது
அதற்கான அஸ்திவாரம் இப்போது திட்டமிட்டு பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது என்பதுதான் நிதர்சனம்.
இன்று நீங்கள் செய்திகளில் பார்க்கும் உக்ரைன் போர் முதல், தைவான் பதற்றம் வரை எல்லாவற்றிற்கும் பின்னால் இருக்கும் ஒரே அடிப்படைக் கேள்வி இதுதான்:
"உலகம் எரிசக்தியை வாங்க எந்த நாணயத்தைப் பயன்படுத்தப் போகிறது?"
இந்தக் கேள்விக்கான பதிலைத் தீர்மானிப்பவர்களே 21-ஆம் நூற்றாண்டின் உலகத்தை ஆளுவார்கள்.
கடந்த 50 ஆண்டுகளாக அந்தப் பதில் அமெரிக்காவிடம் இருந்தது.
இப்போது முதல்முறையாக அது சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
50 ஆண்டுகால பெற்றோடொலர் ஆதிக்கம் முடிவுக்கு வரவேண்டும்.
புதிதாக ஒரு அமைதியான உலகம் ஒன்று உருவாக வேண்டும்
படித்ததில் தெரிந்தது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை