திங்கள் 11 2024

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

 

                                                            கிளாரா ஜெட்கின்.






உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச் செல்லும் இலட்சியத்தோடு கம்யூனிஸ்ட்கள் பாசிச எதிர்ப்பியக்கத்தில் செயல்பட்டு வந்தனர். இந்த போராட்டத்தில் முக்கியமான பங்கினை வகித்தவர், கிளாரா ஜெட்கின்.


ரீச்டாக் என்று அழைக்கப்படும் ஜெர்மானிய பாராளுமன்றத்திற்கு 1920-ஆம் ஆண்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிளாரா ஜெட்கின். நாஜிகள் வெற்றி பெற்றிருந்த நிலையில் 1932 ஆகஸ்ட் 30 அன்று முதல் கூட்டம் நடந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டு மாஸ்கோவில் குடியிருந்த 75- வயது கிளாரா ஜெட்கின் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பெர்லின் வந்தார்.


அவர் சபைக்கு வந்தால் அவரை கொலை செய்து விடுவோம் என்று நாஜிகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.அதற்கெல்லாம் அஞ்சிடாமல் அவர் சபைக்கு வந்தார். சபையின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் சபையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்குக் கிட்டியது. தனது தொடக்க உரையில் அவர் பாசிசத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.”பாசிச எதிர்ப்புக் கூட்டணி” அமைக்க அறைகூவல் விடுத்தார்.


நிறைவாக அவர் விடுத்த வேண்டுகோள் இது:


“இதே ரீச்டாக்கில்,இதன் மூத்த உறுப்பினர் என்ற முறையில்,சோவியத் (சோசலிச) ஜெர்மனியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தை துவக்கி வைப்பேன்.அத்தகு சந்தோஷம் எனக்கு கிட்டிடும் என்று நம்புகிறேன்”.


மிக பாதகமான,மோசமான சூழலில் கூட சோசலிச மாற்றத்தின் மீதான உறுதியான நம்பிக்கையை அவர் கைவிடவில்லை. ஹிட்லர் அதிபராக பதவி வகித்த பயங்கரமான சூழலில், அவரது மனித விரோத பாசிச சித்தாந்தத்தை துணிவுடன் பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர், கிளாரா ஜெட்கின்


1857 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் ஜெர்மனியில் சாக்சனியில் கிளாரா ஜெட்கின் பிறந்தார். தாராள உள்ளம் கொண்ட தந்தையார் அவருக்குக் கல்வி கற்பித்தார். தொழிலாளி வர்க்க மக்களிடைக் கல்விப் பணி செய்த முதல் ஜெர்மனியப் பெண்மணி இவரே. மார்க்சியத்தால் ஈர்க்கப் பெற்ற தோழர், பிரடெரிக் ஏங்கெல்சின் நெருங்கிய, நம்பிக்கைக்குரிய நண்பரானார்.



ஆர்வம், துணிச்சல், அர்ப்பணிப்பு மனப்பான்மை மிக்கவர் என்று அனைவராலும் பாராட்டப் பெற்றவர். இவருடைய முயற்சி, பணி இவரைச் சர்வதேச சோஷலிஸ்ட் மகளிர் இயக்கத்தில் பணி செய்யத் தூண்டின. அவர் அவ்வியக்க மாநாட்டில் நியூயார்க் மகளிர் எழுச்சி நினைவாக மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். முழுமனதாக எதிர்ப்பின்றிப் பரிந்துரை ஏற்கப்பட்டது. அவர் கண்ட பெண்கள் இயக்கத்தில் 5 இலட்சம் உறுப்பினர்கள் இருந்ததாகக் கணிக்கப்பட்டது.


1848 ஆம் ஆண்டு பெர்லினில் வெடித்தெழுந்த தொழிலாளர் புரட்சியில் பலர் மடிந்தனர். மார்ச் 18 அவர்களுடைய நினைவு தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என முன் மொழிந்தவர் புரட்சிப் பெண்ணான கிளாரா ஜெட்கின். இவரே 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தொழிலாளி வர்க்க சோஷலிச இயக்கத்தின் ஈடிணையற்ற மாதர் தலைவியாக விளங்கியவர்.



முதன் முதலில் 1893 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பிறகுதான் பெண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க உரிமையும் வழங்கப்பட்டது. பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். இவை கிளாரா ஜெட்கின் கண்ட இயக்கத்தின் பலன்கள்.


பெண், மனைவியாகவோ, தாயாகவோ பிறரைச் சார்ந்து வாழ்க்கை நடத்துபவள் என்னும் இழி நிலைமை மாறவேண்டும் என்றார் கிளாரா. ஆண்களுக்குச் சரிநிகராக வேலை செய்து கூலிபெறும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனித்து நின்று எல்லா வழிகளிலும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது அவருடைய பல நோக்கங்களில் ஒன்று. இது, இன்று மாதர் பொருளாதார சுதந்திரம் பெற்று எவரையும் சாராது நம்பாது தனித்து நின்று வாழ முடியும் அதற்குப் பொருளாதார நிலை உறுதியாக அமைய வேண்டும் என்னும் முழக்கத்தில் பிரதிபலிப்பது காணலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மேல் தட்டு வர்க்கப் பெண்டிருடனோ அவர் இயக்கத்துடனோ தொடர்பு கொள்ளக் கூடாது என்பது கிளாராவின் உறுதியான கருத்து. குழந்தை வளர்ப்பும், குடும்பப் பராமரிப்பும் சமுதாயக் கடமைகளாக ஆக்கப்படவேண்டும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆள்பட்டவையாக அவை இருத்தலாகாது என்று கருதினார். அவர் காலத்திலேயே அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் பெண்கள் உழைப்பில் ஈடுபட்டால் ஆண் தொழிலாளர்கள் உரிமைகளும், ஊதியமும் பறிக்கப்படும் அல்லது பாதிக்கப்படும் என்று இவரோடு வாதாடினார்கள். இவர்களைத் தம் வாதத்திறமையால் வென்றார் ஜெட்கின்.



பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் உழைக்கும் வர்க்க ஒற்றுமை, உயிர்நாடியானது.இதுவே பாசிசத்தை முறியடிக்கும் பலமான சக்தியாகத் திகழும்.இதனை உருவாக்கிட, மனச்சோர்வுக்கு இடங்கொடுக்காத வகையில் தொடர்ச்சியான முயற்சிகள் வேண்டும்.


“ஒவ்வொரு தொழிலாளியிடமும் உயர்ந்த வர்க்க உணர்வினை அவரது சிந்தனையில் சிறிதுசிறிதாக ஏற்படுத்த வேண்டும். இந்தப் பணியை நாம் செய்யும்போதே பாசிசத்தை இராணுவரீதியாக தூக்கி எரிந்து வெற்றி காண்பதற்கான தயாரிப்பும் நடைபெறுகிறது.”என்றார் கிளாரா


லெனினைச் சந்தித்த போது அவர், “கலை மக்களுக்குச் சொந்தமானது. உழைக்கும் மக்களிடை ஆழ வேர் விட்டிருப்பது; அவர்களை ஈர்ப்பது; அவர்களால் நன்கு உணரப் பெற்று உவந்து வரவேற்கப்படுவது. இலக்கியம் என்பது உழைப்பாளர் உள்ளங்களிலிருந்து கிளர்ந்து பீறிட்டெழும் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பது அவர்களுடைய வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருப்பதோடு அதனை உயர்த்துவதும் ஆகும்” என்று சொல்லியதாகக் கூறுகிறார்.


ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஜெர்மனியில் பாசிசம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. உழைப்பாளி வர்க்கம் கொடிய அடக்குமுறைக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்று எச்சரித்த கிளாரா ஜெட்கின், எச்சரித்த சில நாட்களிலேயே 1933 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாளன்று மாஸ்கோவில் காலமானார்.


பாசிசத்தை வீழ்த்தி வெற்றி காணும் பணியை ‘நுண்ணிய’ மட்டத்திலிருந்து துவங்க வேண்டுமென்பது கிளாராவின் வழிகாட்டுதல். பாசிசத்தை வீழ்த்துவதற்கும்,சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதற்கும் இது உதவிடும். உலகினைப் பாதுகாக்கும் போரில் ஈடுபட்ட கிளாரா ஜெட்கின் போன்ற தீரமிக்க கம்யூனிஸ்ட்களின் பங்கும் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும்.



“முதலாளித்துவத்தின் ஜனநாயகம் என்பது ஆளும் முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமே. சுரண்டல் தன்மையுள்ள, அடிமைப்படுத்தும் முதலாளித்துவ சமூகத்தில் நடைபெறும் எல்லாவிதமான சீர்திருத்தங்களும் வெறும் ஒட்டு வேலைகள்தான் ”


 


Tags:clara zetkinகிளாரா ஜெட்கின்சோவியத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

மாணவிகளின் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு ..

தமிழக பல்கலைக் கழகங்களில் பாலியல் புகார்கள் இல்லாத பல்கலைக் கழகம் என்று எதுவுமே இல்லை. பி.எச்.டி ஆய்வுக்கான மாணவிகள் பேராசிரியர்களிடம்  எதிர...