பக்கங்கள்

ஞாயிறு 06 2026

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை.

நிஷாந்தினி அவரது குடும்பம் தொட்டப்பநாயக்கனூரில் வசித்து வருகிறார்கள். பழனிச்சாமி அவரது மகளான நிஷாந்தினி தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும் மேல்நிலை கல்வி படிப்பிற்கு அருகாமையில் உள்ள பூச்சிப்பட்டிக்கு நிஷாந்தினி மற்றும் அவரது தாயாருடன் சென்று பூச்சிப்பட்டியிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு முதல் பிரிவில் (1st Group) பள்ளியில் சேர்ந்துள்ளனர். ஆனால் நிஷாந்தினிக்கு முதல் பிரிவில் படிக்க விருப்பமில்லை. அடுத்த நாளே நிஷாந்தினி அவர்களது தாயாரும் பூச்சிப்பட்டியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு பிரிவுகளை மாற்றி தருமாறு கேட்டுள்ளனர். ஆசிரியர் மார்கன்டையன் மறுத்து பிரிவுகளை மாற்றித் தர முடியாது முதல் பிரிவில் படித்தால் படியுங்கள் இல்லையென்றால் டீசியை வாங்கிக்கொண்டு பள்ளியில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

பதினோராம் வகுப்பு மாணவி நிஷாந்தினி விருப்பமில்லாமல் கிட்டத்தட்ட 20 நாட்கள் பள்ளிக்குச் சென்று மேலும் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என்று அவரது வீட்டில் பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.
அதைத்தொடர்ந்து வேறு பள்ளியில் சேர்க்கும் விதமாக நிஷாந்தினியும் அவரது தாயாரும் உசிலம்பட்டியிலுள்ள டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளியில் சேர்வதற்காக சென்றுள்ளனர். அங்கு பள்ளி சேர்க்கை மற்றும் விடுதி சேர்க்கை கட்டணம் மொத்தம் ரூ 12,000 என்பதால் அதற்கான வசதிகள் இல்லை என்பதால் அடுத்தபடியாக உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்வதற்காக சென்றுள்ளனர்.

அங்கு தலைமையாசிரியரிடம் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்காக வந்துள்ளோம் என்று கூறியபோது சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார். பிறகு தலைமையாசிரியரிடம் மீண்டும் சென்று கேட்டபோது, ஏன் இடையில் வந்துருக்க, நீ என்ன தப்பு செஞ்சிட்டு வந்த என்று சொல்லி பூச்சிப்பட்டியில் உள்ள மேல்நிலை பள்ளிக்கு போன் செய்துள்ளார். அங்கு போன் எடுக்கவில்லை என்பதால் பத்தாம் வகுப்பு வரை படித்த தொட்டப்பநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு போன் செய்து நிஷாந்தினி பற்றி விசாரித்துள்ளார்.

இவ்வாறு விசாரித்தபோது நிஷாந்தினி படிப்பில் எப்படி என்றும் அவரது கேரக்டர் எப்படி என்றும் கேட்டபோது நிஷாந்தினி நன்றாக படிக்கக்கூடிய மாணவி பத்தாம் வகுப்பில் 400 க்கும் மேலான மதிப்பெண்களை பெற்றுள்ளார் மேலும் எந்த சச்சரவுகளும் இல்லாத அமைதியான ஒழுக்கமான குணம் கொண்டவள் என்றும் கூறியுள்ளார்கள்.

பிறகு தலைமையாசிரியர் அலுவலகத்தில் நிஷாந்தினியின் தாயார் கைகட்டி நின்றிருந்தபோது நிஷாந்தினி அவரது தாயாரை கையில் கிள்ளி கையை எடுக்குமாறு சைகையில் கூறியுள்ளார். அதற்கு தலைமையாசிரியரான விமலாதேவி, "என்னடி எம்முன்னாடியே உன் அம்மா கிட்ட ஏதோ சொல்ற என்ன" என்று மிரட்டியுள்ளார். நிஷாந்தினி மிரட்டியபயத்தில் "இல்ல அம்மாவை கை கட்டி நிக்க வேணான்னு தான் சொன்னேன்" என்று கூறியுள்ளார். தலைமையாசிரியர் உடனே, "ஏன் உங்க அம்மா கை கட்டக்கூடாதா? நீங்கல்லாம் கைகட்டி நிக்க கூடாதா? உங்களுக்கு அவ்வளவு திமிரா? போடி வெளியே" என்று அவமதித்து பேசியதும் நிஷாந்தினி மனமுடைந்து கண்ணீரோடு தலைமையாசிரியரின் அலுவலகத்திலிருந்து வேகமாக ஓடிச் சென்றுள்ளார். எங்கும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளார். பின்னாலே நிஷாந்தினியின் தாயார் நில்லுமா நில்லு என்று கத்தியவாறு பின் தொடர்ந்து சென்றுள்ளார். நிஷாந்தினி வேகமாக வெகுதொலைவில் சென்று விட்டதால் அவரது தாயாரினால் நிசாந்தினியை நெருங்க முடியவில்லை. பிறகு அவ்வழிப்போக்கில் வந்த ஒருவர் அவரது பைக்கில் கொண்டு போய் விடுகிறேன் என்று ஏற்றிக்கொண்டு நிஷாந்தினிடம் இறக்கி விட்டார். நிஷாந்தினியின் தாயார் நிஷாந்தினியிடம் ஆட்டோ அல்லது பஸ்ஸில் வீட்டிற்கு செல்வோம் நில்லுமா என்று சொல்லியுள்ளார்.

ஆனால் நிஷாந்தினியோ, நான் வரமாட்டேன் நீ போம்மா என்று சொல்லி வேகமாக நடந்து போகிறார். அதைத்தொடர்ந்து நிஷாந்தினியின் தாயார் நில்லுமா கால் வலிக்குது ஆட்டோவில் போகலாம் என்று கூறியபடி பின் தொடர்ந்து சென்றுள்ளார். உசிலம்பட்டியில் இருந்து நல்லமாபட்டி வரை 5 கிலோமீட்டர் நடந்தே சென்று கால் வலியின் காரணமாக இருவரும் தொட்டப்பநாயக்கணூருக்கு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளனர். நிஷாந்தினி இரவு சாப்பிடாமல் உறங்கிவிட்டார்.

மறுநாள் 25.08.2026 காலையில் நிஷாந்தினியிடம் அவரது தாயார், அக்காவும் நீயும் பூச்சிப்பட்டி பள்ளிக்குச் சென்று டீசியை வாங்கிவர சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

பிறகு வேலையில் அனுமதி கேட்டு நிஷாந்தினியின் தாயார் பூச்சிப்பட்டி பள்ளிக்கு டீசி வாங்க சென்றபோது "எதுக்கு டிசி வாங்குறீங்க என்ன பிரச்சனை உங்களுக்கு என பள்ளியில் கேட்டார். நிஷாந்தினியின் தாயார், "நீங்க தான் சார் காரணம் நாங்க கேட்கும்போது நீங்களே குரூப் மாத்தி கொடுத்து இருந்தீங்கன்னா இங்கேயே படிச்சிருக்கும் எம்புள்ள நீங்க தான் மாத்தி கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்க"என்று சொல்லியுள்ளார்.

பிறகு இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவுகள் எப்போதும் போல் இல்லாமல் திறந்தபடி இருந்துள்ளது. நிஷாந்தினியின் தாயார் வீட்டிற்குள், வெளியே, மாடி என்று எல்லா பக்கமும் நிஷாந்தினியை தேடியுள்ளார். வீட்டினுள் ஓர் அறை மட்டும் பூட்டி இருந்ததை கவனித்து அதன் சாவித்துளையில் பார்க்கையில் நிஷாந்தினி நின்றிந்தபடி தெரிந்துள்ளது. கதவை திறக்குமாறு தட்டிக்கொண்டே கேட்டுள்ளனர். ஆனால், நிஷாந்தினி கதவை திறக்கவில்லை. பிறகு வீட்டாரும் அக்கம்பக்கத்தினரும் கூடி கதவை உடைத்துப் பார்க்கையில் நிஷாந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு நின்றபடி இருந்தார்.

பூச்சிப்பட்டி அரசுப் பள்ளியில் பாடப்பிரிவுகளை மாற்றித் தாராத காரணமும், உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரான ஆதிக்கச்சாதியை சார்ந்த விமலாதேவி, நீங்கல்லாம் கைகட்டி நிக்க கூடாதா? உங்களுக்கு அவ்வளவு திமிரா? போடி வெளியே" என்று அவரது சாதி வெறிச்செயலானது, தலைமையாசிரியருக்குறிய பண்புகளின்றி தகாத வார்த்தைகளில் இழிவுபடுத்தியதும் தன் சுயமரியாதையை அவமதித்ததும் முக்கிய காரணமாக மனம்நொந்து மன உளைச்சலாகி மனரீதியாக பாதிப்படைந்த நிஷாந்தினி தனது உயிரை மாய்த்துக்கொண்டார் என்பதை பிள்ளையை இழந்த பெற்றோர்கள் பெரும் வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...