செவ்வாய் 05 2017

அரசு ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து பெரியார்





வக்கீல் தொழிலும், அரசு ஊழியமும் ஆங்கிலேய ஆட்சியின் பயனாய், இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இரண்டு துன்பங்கள். இவ்விரண்டும் இந்த நாட்டில் பிரபுத் தன்மையை காப்பாற்ற இருக்கிறதே தவிர, நியாயத்தைச் செய்யவோ, ஏழைகளைக் காப்பாற்றவோ இல்லவேயில்லை.


நாட்டில் இவ்வளவு ஒழுக்கக்குறைவும், நாணயக்குறைவும், தரித்திரமும், மக்களுக்குக் கஷ்டமும், அலைச்சலும், எதிரெதிரான ஏழைத்தன்மையும், பணக்காரத் தன்மையும் இருப்பதற்கு காரணமும் இவ்விரு தொழில்களே. ஏழைகளையும், மத்தியத்தர மக்களையும் தலையெடுக்க விடாமல் செய்து வருவது, இவ்விரு தொழில்களுமே தவிர, வேறொன்றுமில்லை.


சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதோடு, பணக்காரனாய் இருப்பவன் பணத்தின் மகிமையால், 100 க்கு 90 வழக்குகளில், தன் இஷ்டப்படி நியாயம் பெறுகின்றான். நீதிபதிகளும், வக்கீல்களும் ஏழை மக்கள் நீதி பெறுவதற்கு இடையூறாகவும், பணக்காரர்கள் தங்கள் இஷ்டப்படி நீதி பெறுவதற்கு அனுகூலமாகவும் இருக்கின்றார்கள்.

இன்றைய வக்கீல் முறையே, மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும். அதுமாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும் கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்வது சிறிதும் மிகைப்பட கூறுவதாகாது.

நமது நாட்டுப் பணக்காரர்கள் அநேகருக்கு அயோக்கியத்தனமும், ஆணவமும், நாணயக் குறைவும், நாட்டின் நலனுக்கு பொறுப்பற்ற தன்மையாய் நடந்து கொள்ளவும் காரணமே வக்கீல்கள்தாம். விவசாயிகள் பெரிதும் கடன்காரர்களாக இருப்பதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள்.

பிரச்சினைகளில் மக்களுக்கு அதிக நம்பிக்கையும், ஆசையும் ஏற்படுவதற்கு வக்கீல்களே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நாளுக்கு நாள் வழக்குகள் அதிகரித்துக் கொண்டே போவதற்கும், நீதிமன்றங்கள் அதிகமாக  கூடுவதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள். உண்மையை ஒளிக்காமல் தெளிவாய் சொல்லப் வேண்டுமானால், மக்கள் அயோக்கியர்கள் ஆனதற்கும், நாணயக் குறைவாய் இருப்பதற்கும் கூட, வக்கீல்களே மிகமுக்கிய பொறுப்பாளிகள் ஆவார்கள்.
வெள்ளைக்கார வக்கீல்களிடமும், வெள்ளைக்கார அதிகாரிகளிடமும் காணமுடியாத, அநேக ஒழுக்கக் குறைவுகளும், நாணையக் குறைவுகளும், நடுநிலையற்ற தன்மையும், நம் வக்கீல்களிடமும், அரசு ஊழியர்களிடமும் தாராளமாய் இருந்து வருகின்றன.
இதனால் ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்கள் வக்கீல் தொழிலுக்கும், அரசு ஊழியத்துக்கும் அருகதையற்றவர்களாகி விட்டனர்.

சிவில் நீதிமன்றங்களில், அழைப்பானை சார்பு செய்யும் சேவகன் முதல் குமாஸ்தா உள்ளிட்ட ஊழியர்கள் வரை, ஒழுக்கத்திலும், நாணயத்திலும், யோக்கியப் பொறுப்பிலும் மிக மிக மோசமாக நடந்து கொள்ள வெகுகாலமாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீதித்துறையில் லஞ்சமும், மாமூலும், மோசமும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அத்துறையின் தலைவர்கள் என எல்லோருக்கும் தாராளமாய் தெரிந்தும், வேண்டுமென்றேயும் அனுமதித்துக் கொண்டிருக்கும் அளவு, மனிதனால் சொல்லக் கூட தகுதியுடவை அன்று.

வக்கீல்களின் தொல்லைகளும், நீதிபதிகளின் தொல்லைகளும் ஒருபாகம் என்றால், மற்ற ஊழியர்களின் தொல்லைகள் சகிக்க முடியாதவையாகும். இந்தத் துறைகளில் சீர்திருத்தமோ, ஒழுங்கோ செய்வதற்கு ஒரு அரசியல்வாதியோ, தேசியவாதியோ கிடையவே கிடையாது.

இதனால், வலுத்தவன் இளைத்தவனை நேருக்கு நேராய் உதைத்துத் தொல்லைப்படுத்தி, அவனிடம் உள்ளதைப் பிடுங்குவதை விட, நீதிமன்றம் மூலமும், வக்கீல்கள் மூலமும் பிடுங்கிக்  கொள்வதும், தொல்லைப்படுத்தி அவனை ஒழிப்பதும் மிகவும் சுலபமானதும், சட்டப் பூர்வமானதுமான காரியமாகவே இருந்து வருகிறது.

இம்முறையானது பணக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாய் போய் விட்டதால், அவர்களும் சந்தோசத்தோடும், முழுப் பலத்தோடும் ஆதரிக்கிறார்கள்.

நடுநிலைமையற்ற அதிகாரிகளும், நாணயமும், ஒழுக்கமும், பொறுப்புமற்ற வக்கீல்களும், நீதிமன்ற ஊழியர்களும் தாங்கள் இந்த காரியங்களை செய்வதற்காக அடையும் ஊதியத்தையும், வரும்படியையும் பார்த்தால், உலகத்தில் எந்த யோக்கியமான நாணயமான மனிதனும், தொழிலாளியும் அடையும் ஊதியத்தை விட, எத்தனையோ மடங்கு அதிகமாக பெறுகின்றார்கள்.

ஒரு முன்சீப் என்பவர் (கீழ்நிலை சிவில் நிதிபதி) 300 ரூபாயில் ஆரம்பமாகி அக்கிரமங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக மாதம் 4500 ரூபாய் வரை பெரும் உயர்நீதிமன்ற நீதிபதி வரை உயர்த்தப்படுகிறார்.

வக்கீல் மாதம் 100 ரூபாய் முதல் அக்கிரமமும், அயோக்கியத்தனமும், நாணயக்குறைவும், பித்தலாட்டமும் செய்யும் அளவிற்குத் தக்கபடி படிப்படியாய் கெட்டிக்காரனாகி மாதம் 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வரை பெறும்படியான யோக்கியதை உடையவனாகிறான்.

ஒரு வழக்கு தொடுத்து 20 வருடத்திற்கு மேலாகியும், இன்னமும் முடிவுறாது இருக்கிறதென்றால், விசாரணை முறையில் இருக்கும் யோக்கியதையைச் சொல்ல வேண்டுமா?

உலகத்தார் எல்லோராலுமே ஒழுக்கமற்றதென்றும், நாணயமற்ற தென்றும், வெளிப்படையாய் தெரியும் படியாக நடந்து கொள்ளும் இத்தொழில்கள், “ஈனத் தொழில்களே”.




வக்கீல்களும், நீதிபதிகளும் ஒரே கூட்டத்தினராய் இருப்பது. அதாவது, வக்கீலே நீதிபதியாவதும், நீதிபதி வக்கீலாவதுமான முறை இருப்பது முதல் குற்றமாகும். வேறுபல நீதிபதிகளின் தீர்ப்புரைகளை மேற்கோள் காட்டி தீர்ப்புரைப்பது இரண்டாவது குற்றம். நியாய உலகம் சீர்பட வேண்டுமானால், அதில் ஒழுக்கத்திற்கும், நியாயத்திற்கும் சிறிதாவது இடமிருக்க வேண்டுமானால், முக்கியமாக இவ்விரண்டு முறைகளையும் ஒழித்து விட வேண்டும்.

மேலும், வக்கீல்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுவதையும், கணக்கு வழக்கில்லாமல் வக்கீல்களை தொழில் நடத்த அனுமதி கொடுப்பதையும், நிறுத்திட வேண்டும். வக்கீல்கள் பெருகுவது, இந்த நாட்டின் நியாயத்தையும், ஒழுக்கத்தையும், சாந்தியையும் (அமைதியையும்) கெடுப்பதற்கு ஏற்பட்ட விஷக் கிருமிகளை வளர்ப்பதற்கே ஒப்பாகும். 

ஆதாரம்: 10-05-1931 தேதியிட்ட குடியரசு வார இதழின் தலையங்கத்தில் இருந்து தேவைக்கு ஏற்ப சுருக்கியும், ஒருங்கிணைத்தும் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்கள்

2 கருத்துகள்:

  1. பெரியார் என்ன சொன்னாலும் அற்புதம்,அருமை என்று சொல்ல வேண்டியது தானே தமிழகத்தில் எழுதபடாத சட்டம். இன்னும் ஒருவரையும் காணோமே :)

    அரசு ஊழியர்கள் என்பவர்கள் இந்தியாவில், தமிழகத்தில் மக்களிடம் லஞ்சம் வாங்கி கொள்ளையடிக்கும் பயங்கரமான பிசாசுகளாக இருக்கின்றனர். ஆனால் மேற்குலக ஜனநாயக நாடுகளில் விசாவில் வசிக்கும் ஒரு இந்தியர் கூட ஒரு பைசா லஞ்சம் கொடுக்காம அரசு ஊழியர்களிடம் சென்று தனக்கு வேண்டியதை செயற்படுத்த முடியும்.
    மக்களிடம் கொள்ளை அடிக்கும் சிந்தனை கொண்ட இந்திய அரசு ஊழியர்களிடமே தண்டணைக்குரிய மாபெரும் தப்பு உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. பெரியார் அன்று சொன்னது ,இன்றும் பொருத்தமே!லஞ்சம்தான் பெரும்பாலான தீர்ப்புகளை நிர்ணயிக்கிறது !நியாயமான தீர்ப்பு வெகு சொற்பமே :)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...