பக்கங்கள்

அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன் 29 2026

தோற்றுபோனவன்....




 



அறும் பாடு பட்டும்

முடியவில்லை அறிவை

வளர்க்க...................


பிறர் சொல் 

கேட்டு வளர்த்தேன்..  

கஷ்டமில்லாமல்

 தலைமயிரை.......


வயது முதிர்ச்சியால்

தலை மயிரையும்

வளர்க்க முடியாமல்

தோற்று போகிறேன்.


வெள்ளி 19 2026

எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!

 






இளமையில் அழகாக

இல்லை முதுமையில்

அழகாக இருக்கிறாய்.

                                         -  ஒரு பாட்டி சொன்னது

ஓடோடி சென்றேன்

கண்ணாடியில் பார்க்க

தேடியும் கிடைக்கவில்லை

கண்ணாடி.......பாட்டி

சொன்னது உண்மையாய்

இருக்கும்... இல்லையென்றால்

கண்ணாடி கிடைத்திருக்குமே...

               

செவ்வாய் 19 2026

ஒரு யோக்கியனின் நிலை...

 




வாய்ப்பு கிடைக்காதவர்கள்

 எல்லாம் யோக்கியர்கள் தான்

என்றார் வந்தவர்


என்னைத்தான் சுட்டுகிறார்

என நிணைத்து

அவருக்கு பதிலுரைத்தேன்

இல்லையே எனக்கும் 

பல வாய்ப்புகள்

வந்தது  வந்த

அந்த வாய்ப்புகளை

பயன் படுத்தாமல்

நான் யோக்கினாகவே

இருக்கிறேன். என்றேன்


சந்தேகம் கொண்டு

அப்படி இருந்திருக்க

முடியாதே பொய்

உரைக்கிறீர் என்றார்.


நம்பவில்லை என்றால்

இந்திய உளவு அமைப்பை

கொண்டு என்னை உளவு

அறிந்து என் யோக்கிய

தண்ட வாளத்தை வண்டவாள 

மாக்கலாம் என்றபோது


உங்களுக்கு கோளாறு

அதனால் யோக்கியனாய்

இருக்கிறாய் என்றார்.


என் தெரு மாக்கள்

பொட்டை.ஒம்போது

என சொல்வது

போல் இருக்கிறது.

எனக்கு விபரம்

தெரிந்த நாளிலிருந்து

டீ குடிப்பதில்லை, 

புகை பிடிப்பதில்லை

சாராயம் குடிப்பதில்லை

அதே போல் வாய்ப்பு

கிடைத்தும்  பயன்படுத்தாமல்

யோக்கியவனாகவே இருந்து

மடிகிறேன் யோக்கினாக

இருப்பதற்கு எந்த

பிரிதிபலனும்  வேண்டியதில்லை


வாய் முடி

மௌனமாக இருந்து

நூற்றில் ஒருவர்

இல்லை ஆயிரத்தில்

பெரும் ஆச்சரியத்துடன்

அங்கீகரித்தார்.

  


வெள்ளி 13 2026

துரியோதனனை வளைத்துபோட்ட பாஞ்சாலி....

 


என் தெருவுல கட்டண கூட்டு குடிநீர்க்கு குழாய் பதிக்க தோண்டியதில் ஏற்கனவே  ஆக்கிரமிப்பில் ஒத்தையடி பாதையாக இருந்த தெரு.. நடக்க முடியாத அளவுக்கு சீர் கெட்டு போயிருந்தது.

அதனால் என் இரு சக்கர வாகனத்த நிறுத்துவதற்கு இடமில்லாமல் தெரிந்தவர் கடை அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்கடைமுன் நிறுத்தி கடை படிக்கட்டில் உட்கார்திருந்தேன்.

எனக்கு முன்னமே இருவர் உட்கார்திருந்ததால் இடைவெளி விட்டு தள்ளியே உட்கார்ந்திருந்தேன். அவர்கள் என்னை கவனிக்கவில்லை.  அவர்கள் பேச்சில் கவனமாக இருந்தார்கள்.  அவர்கள் பேச்சில் பாதியை கேட்டாலும் முழு விபரமும் அறிந்து கொண்டேன். நான் அறிந்ததை இந்த உலகம்  தெரிந்து கொள்ள வேண்டும். என்ற கெட்ட எண்ணத்தில்... தெரிவிக்கிறேன்.


என் தெருவில் உள்ள ஒரு பெண்ணை பாஞ்சலியோடு ஒப்பிட்டு பேசினார்கள். பாஞ்சலிக்கு அய்ந்து புருசனாம்.. அவளுக்கு அய்ந்து புருசனாம். போதாது என்று துரியோதனனையும் ஆறாவது புருசனாக வைத்திருக்காளாம். அய்ந்து புருசர்களின் பெயர்களை சொன்னபோது இரண்டு பேர் யாரென்று தெரியவில்லை. மற்ற மூன்று பேர் நான் அறிந்தவர்கள். ஆறாவதாக துரியோதனன் எனக்கு தெரிந்தவன்.


மகா பாரத கதையில் பாஞ்சலிக்கு அய்ந்து புருசர்கள். துரியோதனனை வளைத்து போட்டாளா என்று எனக்கு தெரியாது. ஆனால் என் தெருவின் மகா பாரத நிகழ்வில் பாஞ்சாலி துரியோதனனை ஆறாவதாக  வளைத்துவிட்டாள்.

ஆறு பேரா...உண்மையா  ! என்று யோசித்தபோது  பிற்பாடு அது உண்மைதான் என்று தெரிந்தது. தெருவே பொறாமையில் கொதித்தது. அவளின் கணவனைத் தவிர....


பேசிக் கொண்டு இருந்தவர்களில் ஒருவர்  கேட்டார் .. பாஞ்சலிக்கு துரியோதனன் என்ன முறை வேண்டும் என்று.....

 அமர்ந்திருந்தவர்களில் .ஒருத்தி   சொன்னாள்   மச்சான் முறை என்று..


சபதம் போட்டு துரியோதனை வளைத்து விட்டாள் பாஞ்சாலி


அது சரி...பாஞ்சாலிக்கு துரியோதனன் மச்சான் முறையா.??? நிஜந்தனா???

ஞாயிறு 08 2026

ஒரு திருமண விழாவில்..........

 





சார், வணக்கம்.. 

தங்களின் இல்ல 

விழாவில் கலந்து

கொண்டேன்.

 

விருந்து சிறப்பாக

இருந்தது விருந்து

 உண்ட பின்தான் 

தங்களுக்கு கால் 

பன்னுகிறேன்......


ஒரு சின்ன

கேள்வி தாங்கள்

பொண்ணு வீடா?

மாப்பிளை வீடா?

தெரியவில்லை. மொய்

செய்வதற்கு  கேட்டேன்

கோபித்துக் கொள்ள 

வேண்டாம்.  ஒகே

சார்  நன்றி!


புதன் 07 2026

துன்ப கடலைத் தாண்டும்போது தோணி ஆவது கீதம்

இரண்டு நாளா இந்த பாட்டுதான் என் மண்டைக்குள் உருட்டிக்கிட்டு. இருக்கிறது.  ஏன் ? என்று தெரியவில்லை... குரலா..இசையா..   பாட்டின் சோகமாக ..    

இல்லை ..படம் வெளிவருவதற்கு முன்பே பாடலை எழுதிய பட்டுக் கோட்டையாரின் மறைவா??   


அடுத்து எதுவந்து மண்டையை உருட்ட போகுதோ....????????





{துள்ளாத மனமும் துள்ளும்

சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும் வெல்லும் } x 2 -------------------- {துன்ப கடலைத் தாண்டும்போது தோணி ஆவது கீதம்} x2 அன்பு குரலில் அமுதம் கலந்தே அருந்த தருவதும் கீதம் எங்கும் சிதரும் எண்ணங்களையும் இழுத்து வருவது கீதம் இணைத்து மகிழ்வதும் கீதம் துயர் இருளை மறைப்பதும் கீதம் ---------------------------------- துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும் வெல்லும் ============================== {சோர்ந்த பயிரும் நீரை கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும்} x2 சாய்ந்த கொடியும் கிளையை கண்டால் தாவி அனைத்தே படர்ந்திடும் மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும் உறவு கொண்டாள் இணைந்திடும் அதில் உண்மை இன்பம் விளைந்திடும் --------------------------------------- துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும் வெல்லும்
33

வெள்ளி 05 2025

இது எனக்கு தேவையா...?







 வேலையும் இல்ல

அதனால்..

தூக்கமும் இல்ல

சிறிது நேரம்

நடந்து வரலாம்

என்றால்

வெளியில் போக

அச்சமாக இருக்கிறது

ஆங்கங்கே நாலு

கால் படைகள்

கூட்டம் கூட்டமா

உலாவிக் கொண்டு

 இருக்கின்றன....

எவன் வந்து

மாட்டுவான் என்று

காத்துகிட்டு இருக்கின்றன..

வயதான காலத்தில்

இது எனக்கு

தேவையா....??????

ஞாயிறு 19 2025

நினைவலைகள்.101

 அன்றும் இன்றும் தீபாவளி!!


1995-ம் வருடம் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு முதன்முதலாக என் வீட்டிற்கு மின் இணைப்பு பெற்ற நேரம்... மின் இணைப்பு பெற்ற பிறகு வரும் முதல் தீபாவளி..

பொதுவாக என் அம்மா  தீபாவளியை கொண்டாடுவதில்லை..அது செலவு பிடிக்கும் விழா என்று கூறுவார். எனக்கு புது சட்டை எதுவும் எடுக்கமாட்டார். என் அம்மா வேலை பார்க்கும் வீட்டிலிருந்து எனக்கும் என் அம்மாவுக்கும் புது துணிகள் கொடுத்துவிடுவார்கள். அந்த புது துணியை தீபாவளியன்று உடுத்தமாட்டார். புதிய துணியை தண்ணரில் நனைத்து காய்ந்த பின் பின்னொரு நாளில் உடுத்துவார். என் தாயின் பழக்கமே என்னையும் தொற்றிக் கொண்டது. எப்போதும் புது சட்டை எடுத்தாலும் தண்ணிரில் நணைத்து அலசிய பிறகே உடுத்துவேன்.

மின் இணைப்பு பெற்ற சில நாட்களில் பழைய தொலைக்காட்சி பெட்டி கருப்பு. வெள்ளை ஒன்றை குறைந்த விலையில் வாங்கி  .டீ டீ என்ற சென்னை தொலைக்காட்சி தமிழ் ஒளிபரப்பை மட்டும் விடுமுறை நாட்களில் பார்ப்பது. வழக்கம்

அன்று தீபாவளி  என் அம்மா கறி வாங்கி சமைத்து கொண்டு இருந்தார். அன்று சென்னை தொலைக்காட்சியில் இரவு பதினோரு மணியளவில் மாயபஜார் படம் ஒளி பரப்பினார்கள்..காலையில் இந்தி நிகழ்ச்சி ஒளி பரப்பி விடுவார்கள் என்பதால் தூங்காமல் என் அம்மாவுக்கு துனையாக விடிய விடிய முழித்து பார்த்த நினைவலைகள் இன்றைய தீபாவளியல் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தபோது நினைவுக்கு வந்தது.

செல்போன் வந்து விட்டதால் தொலைக்காட்சி பார்ப்பதை அடியோடு மறந்துவிட்டேன். தூக்கம் வராமல்   தவித்தபோது படுத்தபடியே போட்டோவில்  இருந்த என் அம்மாவை பார்த்தபோது அன்றைய தீபாவளி நினைவலைகள் வந்தது.காலையில் மறந்து விடும் என்பதால் இப்போதே பதிவிட்டேன்.

புதன் 08 2025

ஒரு நேரந்தான் பலிக்கும்...!!!

 





க்க்...க்க்....க்க்      க்க்   க்க்     ..............


“ சார் ..ஏன்? இப்படி விக்கல் எடுத்துகிட்டே இருக்கீங்க...தண்ணிய குடிங்க சார்”..


“ சார்.... இப்படி விடாமா விக்கல் எடுத்தா  அவருக்கு வேண்டியவங்க நிணப்பாங்க..சார்..!!”


“ என்ன சார்... நீங்க...அவருக்கு வக்காலாத்தா..??”


“இல்ல சார்.,  என் அனுபவத்த சொல்றேன்.”..ஃ


“ அவருக்குத்தான்  துணையுமில்லே.., இணையுமில்ல.. குடும்பமுமில்ல.      பிள்ளையுமில்ல..குட்டியுமில்ல... அவர..போயி யாரு சார்.. நிணப்பாங்க  ???”


“சார்.. நீங்க சொல்ற மாதிரி இல்ல சார்..., என்ன நிணக்கிறதுக்கு என் அக்கா இருக்காங்க... அக்கா வீட்டுக்காரர் என் மச்சான் இருக்காரு.... அக்கா பிள்ளைகளான மருமக....மருமகன்கள் இருங்காங்க சார். பத்தில் ஒன்பது தடவை நிணைக்காவிட்டாலும் ..ஒரு தடவையாவது நிணப்பாங்க சார்,...”

“ அப்படியா...!   அந்தக் கதை அங்கிட்டு .இருக்கட்டம் சார்.., இப்பா யாரு சார்.. நிணைக்கறாங்க...?”


“ என் அம்மா சார்  ”... 


“ என்னாது.  ஒங்க அம்மாவா”  ... சார்..காமெடி பன்னாதீங்க சார்.., அவுங்க இறந்து பத்து வருடத்துக்கு மேலாகுது....அவுங்க எப்படி உங்கள நிணப்பாங்க..கத விட்டாலும் பொருத்தமா  விடுங்க  சார்”..


“ என் அம்மா சாகும் தருவாயில் இருக்கும்போது..என்னை நினச்சுதான் கவலபட்டு ... “ என் புள்ளய தனியா விட்டுட்டு போறனென்னு” புலம்பி இறந்தாங்க சார்...”


“ பரவாயில்லையே.., சாகப்போற நேரத்திலாவது உங்க அம்மா..உங்களபத்தி நினச்சாங்களே..!!!”


“ அப்ப மட்டும் இல்ல சார், எப்பவுமே என் அம்மாவுக்கு என்மேல் ரெம்ப பாசம்  சார்.”  நானும் என் அம்மாவுக்கு எந்த இம்சையும் கொடுத்ததில்லை...சார்...” விக்கல் வந்தால் என் அம்மாதான் நினப்பாங்க..... தண்ணிய குடித்து விக்கல நிறுத்த மாட்டேன்...சார்... சிறிது நேரங்கழித்து தானா விக்கல் நின்று விடும் சார்...”


“ சார்.., அவரு சொல்வது உண்மைதான்... எனக்கும் அவரு மாதிரி விடாமல் விக்கல் வந்தது.... “உடனே  நான் எங்கம்மாவுக்கு போன் செய்து  “ என்னம்மா செய்யிற ..ன்னு கேட்டதுக்கு ”  “ உன்னத்தாண்டா நிணச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னாங்க சார்..”


“ என்ன சார்..நீங்க.. உங்கம்மா உயிரோடு இருக்காங்க... அவருடைய அம்மா இறந்து பத்து வருடமாச்சு ...  நீங்க சொல்வது மாதிரி பாத்தாக்கூட .  அவரு அம்மா மேல அளவுக்கதிமாக   பாசம் வைத்தததால்தான் அவரு விக்கல் எடுத்தால் அம்மா நிணைக்கிறாங்கன்னு நம்பலாம்.. எதுவும் ஒரு நேரந்தான் பலிக்கும் எல்லா நேரமும் பலிக்காது சார்  ” முதல்ல அத புரிஞ்சுக்கங்க சார்..

திங்கள் 13 2025

தாயை இழந்தவன் அனாதையானான்.......





 தாய் சொல்லை

 தட்டாதவன் மகன்


மகன் மேல் அளவற்ற 

பாசம் வைத்துள்ளார்

அந்த தாய்


ஒரு நாள்

தாயுக்கும் மகனுக்கும்

ஒரு விவாதம்..


இதுவரை  தாய்

சொல்லை தட்டாதவன் 

நான்தான் முன்னே

போவேன் என்றான்

 அந்த மகன்....


உன்னை விட்டு

என்னால் தனியாக

இருக்க முடியாது

நான்தான் முன்னே

போவேன் என்றார்

அந்த தாய்


உன்னை வழியனுப்பி

வைக்க  அக்கா

இருக்கிறார் மருமகன்

இருக்கிறார் அதோடு

பேரன் பேத்திகள்

இருக்கிறார்கள் எனக்கு

உன்னைத் தவிர

யாருமில்லை என்வே

நான்தான் முன்னே

போவேன் என்றான்

அந்த மகன்..

.

 தாய் சொல்லை தட்டாமல்

அவர்களை எல்லாம்

கரை சேர்த்துவிட்டவன்

உன்னை அவர்கள்

பார்த்துக் கொள்வார்கள்

நீ இருக்கும்போது

நான் போவதுதான்

எனக்கு நல்லது

அதுவே எனக்கு

நன்மை பயக்கும்

நிம்மதி கிடைக்கும

நான் சொல்வதை

தட்டாதே மகனே!

என்றார் அந்த தாய்


தாய் சொல்லை

தட்டாத அந்த

மகனின் தாய்

மகனிடம் சொன்னபடி

முன்னே சென்றுவிட்டார்


அக்கா..மச்சான்

மருமகள்கள் மருமகன்கள்

அக்காவின் பேத்தி

பேரன்கள் என்று

உறவுகள் இருந்தாலும்

தாயை இழந்த 

அந்த மகன் 

அனாதையாக

நிற்கிறான்








திங்கள் 18 2024

ஒரு அனுபவ குறிப்பு............

 






வெப்பமும் குளிரும் 

எல்லா இடங்களிலும்

ஒன்றுபோல் இருப்பதில்லை...


மனிதர்களின் எண்ணங்களும்

செயல்களும் ஒன்றுபோல் 

இருப்பதில்லை....

வெள்ளி 12 2024

நான் கண்ட கனவு எனக்கு பலித்தது....1


புத்தகத்தை திறந்து இரண்டு பக்கம் படித்து முடிக்குமுன்னே..தூக்கத்துல தல ஆடிவிடுகிறது. உடனே புத்தகத்தை மூடி வைத்து விட்டு தூங்க ஆரம்பித்து விடுவேன். நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கும்போது செல் ஒலி எழுப்பி விடுகிறது.. யாராச்சும் வரச் சொல்லி பேசுவாங்க.. வருவதற்கு ஒரு நேரத்த சொல்லி செல் போன நோண்டிகிட்டு இருக்கும்போதே திரும்பவும் தலை ஆட்டம் கண்டுவிடும். திரும்பவும் படுத்து சிறிது நேரம் தூங்குவேன்..

பகலில் நாயாய் மாடாய் அலைந்து விட்டு, இரவில் ஏழு மணிக்கு தொடங்கின்ற வேலை இரவு மூன்று மணிவரை முடியும். சில நேரங்களில் அந்த வேலை முடிந்துவிடும் .சில வேளைகளில் முக்கால் பங்கு வேலை முடிந்துவிடும் கால் பங்கு வேலை பாக்கியிருக்கும் அந்த வேலையை முடித்து விட்டு தூங்கலாம் என்று எண்ணிலாலும், தயார் படுத்தினாலும் முடியாது சோர்வு தட்டி அப்படியே தூங்கிவிடுவதும் உண்டு.

கொரனா காலத்திலும் கொரனா முடிந்த காலத்திலும் வேலை இல்லாத காரணத்தால் வேலை பார்த்து வந்த மருமக,மருமகன்கள் தனித்தனியாக வெவ்வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டபடியால் ஒரே ஆளாக பகலில் அலைவதும் இரவில் வேலை செய்வதுமாக  பழகிக் கொண்டேன்.

உண்ணுவதும் உறங்குவதும் விதிப்படி இல்லாமல்  வேலையின் நிலைமையை ஒட்டி மாறிவிட்டது.  ஒற்றைவழி வரும் வருமானத்தை வைத்தே ! கொரோனா வுக்கு முன் வாங்கிய  மிஷின் லோனும் . எனது சாப்பட்டுக்கும்  யாரிடமும் கையேந்தாமல் பயன் படுத்தி வருகிறேன்.

 வேலை இருக்கும் நாளெல்லாம் வேலை நாள்.. வேலை இல்லாத நாளெல்லாம் விடுமுறை நாட்கள்...அந்த விடுமுறை நாட்களில்தான் எத்தனை வேலைகள்

துணி துவைப்பது. இரு சக்கர வாகனத்தை பராமரிப்பது... அலுவலகத்தை சுத்தம் செய்வது இப்படி  வரிசையாக வேலை வந்தபடியே இருக்கும்.

தனிமரம் தோப்பாகாதுதான். என் அக்கா பிள்ளைகளை வளர்த்து அவர்களை ஆளாக்கி தனித்தனியாக செட்டில் ஆக்கி விட்ட காலம் அதிகம் கடந்து விட்டதால் ..நான்தோப்பாகுறதுக்கு எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இருப்பினும் அதற்க்காக நான் வருத்தப்படவும் இல்லை ஏக்கப்படவுமில்லை.

தனிமரமாக இருந்து வாழ்ந்து மடிவதுதான் என் நிலைமை என்றாகிவிட்டதால் அதற்க்காக கவலைப்படுவதுமில்லை. இருக்கும் வரை ஓடிக் கொண்டிருப்பேன்.

பகல்  நேரத்தில் தூங்கும் குட்டி தூக்கத்தினால் கனவு எதுவும் வருவதில்லை. செய்து கொண்டு இருந்த வேலைதான் மண்டைக்குள் குடைச்சலாக இருக்கும் இரவு இரண்டு மூன்று மணிக்கும் தூங்கும் நேரத்தில் தான் எனக்கு கனவு அதிகமாக வரும் அப்படிவரும் கனவுகள் சில நினைவுக்கும் வரும் பல நினைவுக்கு வராமல் மறைந்து   சம்பவம் நடந்து முடிந்த பின்தான் கனவாக வந்தது நினைவுக்கு வரும்.

கண்ட கனவுகளில் பத்துக்கு எட்டு ஒன்பது கண் முன்னே நடந்துவிடும். ஒன்று இரண்டு கனவுகள் நடந்து முடிந்து பின்புதான்....

அம்பானி. அதானி,டாட்டா. பில்லா மாதிரியான பணக்கார அதிபதிகளாக ஆகும் கனவெல்லாம் வந்ததில்லை..இனி வரப்போவதுமில்லை..அந்த கனவுக எல்லாம்  வந்தாலும் பலிக்கப் போவதில்லை.

இப்போதிலிருந்து

கனவு-1

என்னைத் தேடி இரண்டு காவலர்கள் வருகிறார்கள். என் வீட்டுக்கு வரும் தெருப் பாதை இருட்டாக இருப்பதால்  செல்போன் டார்ச்லைட்டில்  என் வீட்டிற்கு வருகிறார்கள். உறங்கி கொண்டியிருக்கும் என் முகத்தில் டார்சலைட் வெளிச்சத்தை அடித்தவாறே என்னை எழுப்பினார்கள்.  திடுக்கிட்டு கண்விழித்து எழுந்தேன். தூக்கம் கலையாமல் என்ன விபரம் என்றேன். எழுந்து வெளியே வரச் சொன்னார்கள்.

துண்டால் முகத்தை துடைத்துவிட்டு மேல் சட்டையை அணிந்து கொண்டு வெளியே வந்தபடியே என்ன விபரம் என்று கேட்டடேன். என்மீது புகார் கூறப்பட்டதாக அதை விசாரிக்க வந்ததாகவும் தெரிவித்தனர். புகாரை தெரிவித்தார்கள் என்ன புகார் என்று தெரியவில்லை. நான் மறுத்தேன் தெருவில் உள்ள பாப்பாத்தி மக மகன்கள்  என்னை சுட்டிகாட்டி வந்த காவலர்களிடம் புகார்களை தெரிவித்தார்கள். நான் என்னவென்று தெரியாமல்  முழித்தேன்.. சிறிது நேரத்தில் காலர்களில் ஒருவர் என்னை நிலையத்துக்கு வரும்படி கையோடு அழைத்து சென்றார். திடிரென்று ஒன்னுக்கு வரவே உறக்கத்திலிருந்து விழித்துவிட்டு வேகமாக கழிப்பறையை நோக்கி ஓடினேன். கழிப்பறையில் சாமி கும்பிட்டுகிட்டு இருக்குபோது கனவில் வந்தவை வரிசையாக வந்தன. என்ன புகார் மட்டும் தெரியவில்லை. வந்த கனவுப்படி எதிர்ப்பாரத்தபடியே இருந்தேன்

காலையில் கண்ட கனவு அன்று இரவு நடப்புக்கு வந்துவிட்டது.

நான் வெளியில் சென்றுவிட்டு இரவு ஒன்பது மணி வாக்கில் என் வீட்டுக்கு வந்தபோது என் வீட்டு மேற்கு புறத்தில் பாப்பாத்தி. மகள்களில் இருவர். மகன் இருவர் பேரன் பேத்திகள் கூட்டமாக குழுமியிருந்தனர்.  என்னவென்று நான் விசாரித்தேன். என் பேத்தி வளர்க்கும் இரண்டு நாய்களில் ஒன்று பாப்பாத்தி கடைசி மகளின் மகனை அதாவது பேரனை கடித்துவிட்டதாம்.. நாய் கடித்த காயத்தை பார்க்கலாம் பாப்பத்தி பேரனை கூப்பிட்டேன். மறுத்துவிட்டார்கள். பின் நான் என்ன செய்யவேண்டும் என்றேன். ஒன்னும் செய்ய வேண்டாம் என்றார்கள். சிறிது நேரத்தில் இரண்டு போலீஸ் கனவில் கண்டபடி செல் அடித்தபடி  என்னிடம் வந்தார்கள். அவிழ்த்து விட்டுஇருந்த சட்டை பட்டனை மாட்டியபடி நான்தான் என்றேன். வந்தவர்கள் இரண்டு பேரும் சவுண்டு விட்டார்கள் நாய் வளர்த்தால் கட்டிபோட்டு வளர்க்கனும் என்றார்கள். நான் அமைதியாக வீட்டுக்குள்ளே கட்டிபோட்டுத்தான் வளர்க்கிறேன். ஒன்-பாத் போவதற்க்காக நாய் வந்தபோது கடித்தவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். என்றுவிட்டு அமைதியானேன்


சிறிது நேரத்திற்கு பிறகு வந்த காவலர்களில் ஒருவர் சொன்னார். நாய் கடித்துவிட்டது. அதற்குண்டான ஆஸ்பத்திரி செலவை கொடுத்துவிடுங்கள் என்றார். சரி என்றேன். வந்தகாவலர்கள்  என் பெயர் வயது அப்பா பெயர் கேட்டவர்கள் சாதியை கேட்டார்கள் தோழர் என்றேன். பதில் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்கள். பாப்பாத்தி கடைசி மகளிடம் ஆஸ்பத்திரிக்கு சென்று எவ்வளவு என்று சொல் ஜிபே-ல் அனுப்பி வைக்கிறேன்.என்று விட்டு அப்பாடா ஒரு கனவு பலித்துவிட்டது என்று பெருமூச்சு விட்டபடி..ஆஸ்பத்தரி தொகையை எதிர்பார்த்தபடி காத்திருந்தேன்.

ஞாயிறு 05 2024

இனி நான்என்ன செய்ய....





 முன்பொரு காலத்தில்

ஓலைக்குடிசையில்

இயற்கையோடு இணைந்து

வாழ்ந்து  வந்தேன்..

இயற்கையோடு நான்

வாழ்வதை பிடிக்காத

சிலர் என் குடிசைக்கு

தீ வைத்தனர் பலமுறை

அவர்களிடமிருந்து தப்பிக்க

என் சக்திக்கு மீறி

ஓலை வீட்டிற்கு பதிலாக

மண்ணால் ஆன சுவரோடு

ஓடு வீடு போட்டேன்.

இயற்கையோ என்மீது

கோபம் கொண்டு  சூரியனின்

ஒளிக் கதிர் மூலம் என்னை

தாக்குகிறது இனி நான்

என்ன செய்ய.........

செவ்வாய் 09 2024

ஒரு நீண்ட மௌனம்...........

 







ஒரு வீட்டிற்கு 

வாசல் படி

 என்று இருந்தே

 ஆக வேண்டும்

அதே போல்

ஒவ்வொரு மனிதனுக்கும்

ஒரு வலி இருந்தே 

ஆக வேண்டும்

வலிப்போக்கனாகிய

எனக்கும் ஒரு

வலி இருக்கிறது

சொன்னால் வயதாகி

விட்டது அதனால்

புலம்புகிறேன் என்று

பலரும் பலவிதமாக

கதை அளப்பார்கள்

அந்தக் கதை

வேண்டாமே என்றுதான்

இந்த நீண்ட

மௌனம்

ஞாயிறு 21 2024

அடேங்கப்பா ராமா...!!!

 





ஃபேன் போட்டால்

 குளிர் அடிக்குது

ஃபேன் ஆப் செய்தால்

தலையிலிருந்து கால்

வரை கொசுக்கள்

கடித்து குதறுகிறது

கொசு கடியிலிருந்து

தப்பிக்க நிணைத்து

ஒரு போர்வையை

தலையை மூடி

படுத்தால் மூச்சு

திணறுகிறது இதைதான்

நாலுபக்கமும் இடி

என்றுரைத்தார்களோ   ????

அடேங்கப்பா ராமா!

உனக்கு வந்த 

வாழ்வு. இருக்கே...





சனி 13 2024

திடீர் உடல்நலக்குறைவும்..பயமுறுத்திய லேப் பரிசோதனை முடிவுகளும்...





 கொரனாவுக்கு பின் நீண்ட நாட்களுக்கு பின்  அதாவது மூன்று வருடங்கள் கழிந்து  திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் முன்னெரிச்சைரிக்கையுடன் இருக்கும் நிலையை மீறி தோன்றிவிட்டது. அருகிலுள்ள கிளினிக் கொண்டு சென்றபோது அந்தக் கிளினிக் மருத்துவர்க்கு உடல்நலமில்லாததால் அவர் கிளினிக் வரவில்லை. அடுத்த கிளினிக் கொண்டு சென்றபோது அந்த மருத்துவர் வெளி வேலையாக வெளியே சென்றுவிட்டார். மூன்றாவதாக ஒரு கிளினிக்கில் சேர்க்கப்பட்டு, உடனடியாக உடலின் பின்புற அடிப்பாகத்தில் இரண்டு ஊசிகள் குத்தப்பட்டு, பின் குளுகோஸ் ஏற்றப்பட்டது.

இரண்டு, மூன்று. ஒரு வாரம் கழித்து  சிகிச்சை அளித்த மருத்துவர் சொன்னார் உங்களுக்கு டைபாய்டு காய்ச்சல், பி.பி.லோ, சுகர் அதிகமாகிவிட்டது, இருதய அடைப்பு உள்ளது. நான் சொல்லவில்லை லேப்பின் பரிசோதனை முடிவுகள் சொல்கிறது என்று லேப் முடிவுகளை காட்டினார்.

டைபாய்டு காய்ச்சல் குணமாகி, சுகர் குறைக்கபட்டு, பி.பிலோ, தடுக்கப்பட்டதற்கு முப்பதாயிரம் செலவழித்தபின்  இருதய அடைப்பு நீக்க  ஐம்பதாயிரம் பீஸ் என்று பேரம்பேசி, வீட்டிற்கு வந்து சேர்ந்தாயிற்று..

அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் இவ்வளவு செலவு ஆகியிருக்காதே என்று மருமக்களிடம் கேட்டபோது.. அங்கு சேர்த்தால் பிணமாகத்தான் திரும்ப வேண்டியிறுக்கும் என்று பதிலோடு.. அங்கு சேர்த்தால் உடனிருப்பவர்கள் யார் என்ற கேள்வியும் வந்தது.

சிகிச்சையில் இருந்தபோது  சுகர் நோயாளிக்கு உடனிருந்தவர் சொன்னார். காலில் உள்ள புண்ணை சுகமாக்குவதற்க்காக இதுவரை ஐந்து லட்சம் செலவழித்துள்ளதாக சொன்னார். அவரை பார்க்க வந்தவர் ஒருவர் அடுக்காக மாடிகளை கொண்ட தனியார் மருத்துவமனைகள் எல்லாம் உங்களின் நோயை போக்கவா கட்டியெழிப்பி உள்ளார்கள். அது சேவை என்ற பெயரில் காசு பறிக்கதானப்பா..

ஒரு வழியாக நல்ல நிலமைக்கு  வந்தவுடன் உண்ணாமல் உடுத்தாமல் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை  எடுத்து சிகிச்சைக்காக செலவழித்தவர்களுக்கு கொடுத்துவிட்டு.. சேமிப்பு இல்லாத நிலையில்

எந்த பழக்கமும் இல்லாதவனுக்கு டைபாய்டு சுரம், சுகர், இரத்த அழுத்த குறைவு, இருதய அடைப்பு.   . எதை சாப்பிட்டால் பித்தம் குறையும், தொலையும் என்ற ஆழ்ந்த யோசணையில் 2024-ல் 63 ஆண்டு முடிந்து 64 ஆண்டை நோக்கி,


புதன் 22 2021

ஆறாவது ஆண்டு நினைவு.........

 


யம்மா.....ஒனக்கு என்பதுக்கு மேல் வயசாச்சும்மா... இன்னும் பர ரன்னு வேலை செய்வேன்னு மல்லுகட்டதம்மா..  நான் சொல்றத கேட்டேன்னா.... நூறு வயசு வரைக்கும் இருப்பேம்மா.... அவர் சொல்லி முடிக்கும்முன்னரே அவருடைய தாய் இடைமறித்து சொன்னார்...


“ நூறு வயசு வரைக்கும் நான் இருந்தா.... அப்புறம் செத்த பிறகு யார்டா..? தூக்கி போயி என்ன. பொதைப்பா.....

“ யாரு இருக்காவா....    ஒம் மக ..மருமகன், ரெண்டு பேத்தி, ரெண்டு பேரன்கள்ல..வச்சுகிட்டு... யாரு இருக்காங்கன்னா  கேட்க்கிற.... எனக்குத்தான் உன்னவிட்டா யாரு  இருக்கா... மனைவி, மகன்.மகள், மனைவி வழி உறவுகள்னு யாரு இருக்கா.... உன் மகளுக்காக என்னை செக்குமாடாக்கிட்டேயம்மா.... எனக்கு  யாருமில்லாத காரணத்ததால்  ஒனக்கு முன்னாடி நான் போயிட்டா ...... நல்லாயிருக்குமுன்னு  சொல்றேன்..   அதக்கூட கேட்க மாட்டுறீயேம்மா....


நீ சொல்வதை கேட்க முடியாதுடா......நான்தான் முன்னாடி போவேன்.. நீதான் என்னை தூக்கி போகனும்--- அதற்குத்தான் ஒன்னை பெத்தென் வளத்தேன். உன் கடமையை  செய்டா...   .

அதன் பிறகு அவர் தாயிடம்  எதுவும் சொல்வதில்லை....சொன்னாலும் அவர் கேட்கமாட்டார்....  நாளாகி வாரமாகி, மாதமாகி. வருடமாகி கழிந்த ஒருநாள் அவரின் எழுந்து  நடமாட ஒரு ஊன்றுகோல் வாங்கி கொடுத்தார்

அவரின் தாய் என்ன நினைத்தாரோ ..அந்த ஊன்றுகோலை கடைசி வரைக்கும் பயன்படுத்தவில்லை. ஊன்றுகோல் இல்லாமல் தனியாக எழுந்து நிற்க முயன்றபோது தவறி விழுந்து இடுப்பெலும்பு பலத்த சேதமாகி  படுக்கையில் விழுந்தார்.

எலும்பு முறிவு மருத்துவமனைக்கு தூக்கி சென்று காண்பித்தபோது.. நல்ல மனது உள்ள அந்த மருத்துவரோ  தாயார்  வயது முதுமை அடைந்துவிட்டார் இடுப்பு எலும்பை சரி செய்ய முடியாது.. சில நாட்கள்தான் உயிருடன் இருப்பார் . வேறு மருத்துவமனைக்கு  சென்று பணத்தை கட்டி ஏமாற வேண்டாம். வலிக்கு ஊசி போட்டு சில மாத்திரையும் தந்து. வீட்டுக்கு  போங்கள் என்று அனுப்பி வைத்தார்.


வீட்டுக்கு வந்து படுத்த படுக்கையாக இருந்தவர் உயிர் பிரிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தன் மகனை ஈனக்குரலில் பல தடவை அழைத்தார். அந்த தாயின் பேரன் பேத்திகளும் அவரிடம் வந்து கூறிய போதும்  போகவில்லை

 சத்தியம் சர்க்கரை பொங்கல் என்று தெரிந்த போதும்..சாகப்போகும் தருவாயில் இன்னும் ஏதாவது  வாக்கு ,சத்தியம் என்று கேட்டுவிட்டால் அதை நிறைவேற்ற இந்தச் சூழ்நிலையில்  நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே. எல்லா வகையான ஆசைகளை எல்லாம் துறந்து ...கொடுத்த வாக்கை நிறைவேற்றவே தனக்கு  ஐம்பத்திஐந்து வயதாகிவிட்டது. அதனால் அவரின் தாய் உயிர் பிரியும் வரை அருகில் செல்லவில்லை. தாய் இறந்தபின்தான்   அதற்க்காக வருத்தப்பட்டார்.

சரியாக 20.09.2015 -ல் இரவு எட்டுமணி  வாக்கில் அவரின் தாய் பிரிந்தது.  முதன்முதலில் அவரின் உற்ற நண்பர் செல்வம்தான் முதலில் வந்தார்..பின் அவர் தமக்கையிடமும் அரின் கணவரிடமும்  சடங்கு சம்பிரதாயம், மூடநம்பிக்கை அற்ற வழியில் தன் தாயின் உடலை எரியுட்டுவதற்கு ஒப்புதலை பெற்றார். பின் அதற்கான செலவுக்கான பணத்தை தயார் படுத்துவதற்கு வெளியில் சென்றார்.

ஆட்டம் பாட்டம். கொட்டு ரேடியா. நீர்மாலை போன்ற எந்தவித சடங்கு  சாத்திரம் எதுவுமில்லாமல்   நன்றாக குளிப்பாட்டி. துக்கம் விசரிக்க வருபவர்கள் பார்த்தால் தூங்குவதுபோல் தெரிகிற மாதிரி ஐஸ் பெட்டியில் வைத்து மாலையில் நல்ல நேரம் பார்க்காமல் ஆம்புலன்ஸ் வண்டியில்  கோயிந்தா..கேயிந்தா என்ற கோஷமிடாமல்.  மாலைகளை ரோட்டில் போட்டு துவம்சம் செய்யாமல்  மிக அமைதியான முறையில்  சற்று தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரியூட்டினார்.... தாயை  இழந்து அனாதையான அந்த மகன்.



திங்கள் 20 2021

என் தாயார் நினைவு தினம்..

 

                                                                       எனது தாயார்


இன்று...

புரட்டசியாக..

பௌர்ணமியாக..

இருக்கட்டும்

ஆனால்

இன்றைய..

20.09.21

என்பது

எனக்கு

என் தாயார்

நினைவுதினம்.

மட்டுமே

தெரியும்....

புதன் 15 2021

சித்தம் கலங்க வைத்த செல்போன் அழைப்புகள்...!!!!!

 




ஏற்கனவே...அவருக்கு அடித்த அடியில் செவிப்பறை கிழிந்ததால் வலது காது கேட்காமல் போய்விட்டது.... தற்போது கொரோனா அழைப்பில் போயி சிக்கி தவித்து மீண்டு வந்ததால் இடது காதும் அவுட்டு ஆகி, பார்வையும் குறைந்தது, ஏதோ ஒரு அனுமானத்தில் பிறர் பேசுவதை புரிந்து கொண்டு  இலை காய்ந்து உதிருவது போல தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறார். இதில் அவர் மூத்தகுடிமக்கள்  வரிசையில் சேர்ந்துள்ளதால்.. இனி அவ்வளவுதான் என்ற நினைவில்....அந்த நாளைப் பற்றி நினைவில்லாமல் வருவாய் குறைந்து கடன்கள் பெருகி யுள்ளதை நினைத்து  ஓடிக் கொண்டிருந்த வேலையில்... 


அவர் வைத்திருக்கும் ஜீ பைவ் செல் போனுக்கு  முதல் ஒரு அழைப்பு வந்தது. பேசும் குரல் பெண்ணா..அல்லது சிறு பிள்ளையா என்று அவரால் கணிக்க முடியவில்லை.

சித்தம் கலங்க வைத்த முதல் அழைப்பு:

அண்ணே!...... வணக்கம்ன்ணே.....

 ம்..வணக்கம்......

நல்லாயிருக்கீங்களா ...ண்ணே..!

நல்லாயிருக்கேன்.....

சரி்கண்ணே...... அப்புறம்    ன்ணே!  நீ்ங்க ரெண்டு மாசமா  வட்டி கொடுக்கலண்ணே! இந்த மாசத்த சேர்த்துமூனு மாத வட்டிய கட்டுங்கண்ணே...

கேட்றேன்னு தப்பா நினைக்காதி்ங்க.....நீங்க யாரு? உங்க பேர சொன்னா புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்...

என்னாண்ணே... இப்படி கேட்டுடிங்க...என்ன தெரியலையா....?  இல்ல வட்டி கேட்டவுடனே... ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறி்யா...?  இப்படி நடிக்கிற வேலய எல்லாம் எங்கிட்ட வச்சுகிடக்கூடாது  வைய்யடா  போன... நாதாரி...


அய்யோ.. யாருன்னே    தெரிலைய... யாருண்ணு  கேட்டது க்கு நாதாரின்னு ஒரு வசவ வாங்கிக் கொண்டார்.


சித்தம் கலங்க வைத்த இரண்டாம் அழைப்பு :


தம்பி கணேசா....எங்க போயிகிட்டு இருக்க......


 பேங்குக்கு போயிட்கிட்டு இருக்கிறேன்.

என்ன பணம் எடுக்கவா......?

ம்ம்.... ஒன்னும் கேட்கலையே......

கொர்.... கொர்இஇ கொர் கிர்்்ர்ரஃ.

அண்ணே... நீங்க பேசுவது கேட்கலைண்ணா... நீங்க ஆப் பன்னுங்க நான் பேசுறேன்

கட் கட்.................... 


கிர் கிர்..கிர்..... ஹலோ...நா..... தம்பி கணேசன்  பேசுறேன்ங்க.....

தம்பி கணேசனா....? எங்கிருந்து  பேசுறீங்க...... யாரு  நீங்க...?

சார், ஒரு நிமிசத்துக்கு முன்னாடி என்னிடம்  பேசுனிங்கல்ல...... நீ்ங்க பேசினது சரியா கேட்காதினால...ஆப் பன்னி...நா பேசுறேன்னு்க......

ஒரு நிமிச்சத்துக்கு முன்னாடி நான்  பேசினேனா.....!!! வைய்யா போன....ராங் நம்பர்ய்யா..........


எம்பேர கரெட்டா சொல்றாங்க...யாருன்னு கேட்டா  ராங் நம்பருன்னு சொல்றாங்கே சற்று கோபத்துடன் புலம்பினார்.

புலம்பியபடி  சற்று தூரம் சென்றவர் திகைத்தபடி நின்றுவிட்டார். என்னடா இங்கிருந்த பேங்க காணோம் -  சுற்றும் முற்றும் பார்த்தார் வங்கியை காணவில்லை. எதிரே வந்தவரிடம்.

சார்.., இங்கே பேங்க் இருந்ததே..எங்கே சார், என்று கேட்டார். இவர் கேட்டது அவருக்கு கேட்கவில்லை... சே...ச்சே... எல்லாருக்கும் காது கேட்காமல் போச்சோ..

வேறு ஒருவரிடம் கேட்க..அவர்..இங்க பேங்க் இல்ல..சற்று தூரம் சென்றால் அங்கு ஒரு பேங்க் இருக்கிறது என்றார். பிறகுதான் அவருக்கு தெரிந்தது மறந்துபோய் பேங்க்கை கடந்து விட்டது..திரும்பி பேங்க் நோக்கி நடந்தார்.


சித்தம் கலங்க வைத்த மூன்றாம் அழைப்பு

மூன்றாவது முறையாக செல் ரிங் அடித்தது. ஜீ பைவ் போனை உற்று பார்த்தார். ஒருதடவைக்கு இரண்டு முறையாக உற்று பார்த்தார். யரென்னு பெயரில்லாமல் போன் நம்பர் மட்டும் காட்டியது.. இந்தத் தடவை பேசுபவர் யார் என்று முதல்லே கேட்டுவிட வேண்டும் என்று உறுதி எடுத்து. போன் அட்டென் ஆனார்.


ஹலோ....

வணக்கம்...

நல்லா இருக்கீங்களா..?ஃ

 ம் நல்லா இருக்கேன்.....

வீட்டில இருக்கீங்கலா.... வெளியில இருக்கீங்களாஃஃஃஃ

பேங்க்குக்கு போய்கிட்டு இருக்கேன். சார்.. நீங்க யாருன்னு சொன்னா தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

என்னாது.. நா...யாருன்னு தெரியலைய்யா...

தெரியல சார்......

குரலை கேட்டுமா தெரியவில்லை.....

போன்ல கொறன்னு கொறன்னு சத்தம் வருவதால் சரியா கேட்கல சார்,

நா... யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.....

 சார்.. ரெண்டு காதும் அவுட்டு, கண் பார்வையும்  மங்கல்.... என்னால கண்டு பிடிக்க முடியல சார், செல்வா..வாவா சார்,


செல்வா... யாரது...

 நீ்ங்க செல்வா வான்னு கேட்கிறேன் சார்.

இத்தன வருட பழக்கத்தில் என் குரலை கண்டுபிடிக்கமுடிலையா...

முடியலைன்னுதான் சார் யாருன்னு கேட்கிறேன்.     

ம.உ.பா.மை மாவட்ட செயலர்  பேசுகிறேன்.

.................. ...............              ...........................

சாரி  தோழர்..   சாரி  தோழர்...

இப்ப தெரிந்ததா.......

தெரிந்தது தோழர்.....


...............................................................


அடிக்கிற வெய்யிலும் அழைத்த செல்போன் அழைப்புகளும் அவரை சித்தம் கலங்க வைத்துவிட்டது..அய்யோ பாவம் ...


புதன் 08 2021

சுய நலமே சமூக நலனாக..........

 



கடைசியாக இழுத்துக் கொண்டிருந்த

“சமூக பொது நலன் ” என்ற 

உயிர் பிரிந்தது.......


எல்லோரும் அழுதார்கள் ..துடித்தார்கள்

வீர உரையாற்றினார்கள்  தங்களின்

சுயநலத்தை மறைத்துக் கெண்டு.....

தோற்றுபோனவன்....

  அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல்  கேட்டு வளர்த்தேன்..   கஷ்டமில்லாமல்  தலைமயிரை....... வயது முதி...