தொளதொளத்த கால்சட்டை, இறுக்கமான கோட்டு, கால்களில் பெரிய பூட்சுகள், கையில் நடைக்கம்பு, முகத்தில் ஒப்பனை, பல்குச்சி அளவுக்கு மீசை, கோமாளி நடை – இப்படி ஒரு நாடோடித் தோற்றம் – – இதுதான் சார்லி சாப்லின். திரையில் அந்த உருவம் தோன்றிவிட்டால் போதும் – அரங்கத்தில் சிரிப்பு தொடங்கி விடும்.
இந்த நாடோடி உலகம் முழுவதும் மக்களைச் சிரிக்க வைத்தார். இந்திய, தமிழக மக்களுக்கும் அவரை ஓரளவு தெரியும். ஊமைப்படக் கோமாளி நடிகர் சார்லி சாப்லின்.
இன்றுள்ள அளவு தொழில்நுட்பம் வராத காலம் –ஒலி வசதி கூட இல்லை – வண்ணங்களில் எடுக்கமுடியாது; கறுப்பு – வெளுப்பு மட்டும்தான். எங்கு வேண்டுமானாலும் காமெராவை நகர்த்தக்கூடிய வசதிகள், சாதனங்கள் கிடையாது. பலப்பல வரம்புகள். இவ்வளவையும் மீறி, பேச்சு இல்லாத குறை கொஞ்சம் கூடத் தெரியாதபடி ஒரு மணி, இரண்டு மணிநேரம் பார்ப்பவர்களை ஈர்த்துவிடும் அற்புதத்தைத் திரையில் படைத்தார் சாப்லின். உலகில் தனக்கு முன்னால் நகைச்சுவைக் கலையை மனித நேயத்துடன் நடித்தவர்களின், கதைகள் எழுதியவர்களின் பாரம்பரியத்திலிருந்து அள்ளி எடுத்துக் கொண்டார் சாப்லின். அப்டன் சிங்ளேர், பிரெக்ட்,பெர்னார்டு ஷா, தாமஸ் மான், என்று எண்ணற்ற எழுத்தாளர்களிடமிருந்து, நிஜின்ஸ்கி போன்ற நாட்டியக் கலைஞரிடமிருந்து, ஹான்ஸ் ஐஸ்லர் போன்ற பாட்டாளிவர்க்க இசை மேதையிடமிருந்து, ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளிடமிருந்து, ஐஸன்ஸ்டீன், டான்லெனோ, மார்செலின், டன்வில், மார்க்ஷெரீடன், பிராங்க் காயின், ஜார்மோ போன்ற நகைச்சுவை நடிகர்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டார்.
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 ) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட்திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

