பக்கங்கள்

சனி 09 2016

ஒரு போலீஸ் வழிப்பறி செய்த கதை,

நடு இரவு மணி இரண்டு..  பைக்கில் இருந்து இறங்கிய இருவர் ஒரு போஸ்டரை ஓட்டுவதற்கு தயாராக இருந்தனர்.

அந்த நேரம் ஒரு போலீஸ் வந்து ரெம்ப மரியாதையாக ..“டேய்.. என்னடா செய்யிறீங்க என்றான்.. அதற்கு அவர்கள் போஸ்டர் ஒட்டுறோம் என்றார்கள்
என்னது போஸ்டரா... என்னடா போஸ்டர் என்று வினவினான். அவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சார் என்றார்கள்... “எங்கே காட்டு பார்ப்போம் என்றான். அதற்கு அவர்கள்... ஒட்டின பிறகு பாத்துகங்க சார்” என்றுவிட்டு கண்ணீர்அஞ்சலி போஸ்டரை ஒட்டிவிட்டு போலீஸ்காரனை பார்த்தார்கள்.

அவன் அந்த போஸ்டரை படித்து பார்த்துவிட்டு, போத்தி ராஜா.. சரி..அதுக்கு பின்னாடி ஆசாரி ன்னு ஏன்டா போட்டேங்க..ஏய்..நில்லுங்கடா... என்றுவிட்டு அவர்களுக்கு அருகில் வந்து.. பைக்கு சாவியை எடுத்துக் கொண்டான்....

சாதிப் பெயரைபோட்டு போஸ்டர் ஒட்டக்கூடாது தெரியுமா...? என்று வினவினான்.... தேவர், நாடார், பிள்ளை, நாயுடு, இப்படி பல சாதி போஸ்டர் ஏற்கனவே நிறைய பேரு ஒட்டியிருக்காங்கல சார் என்று இருவரும் சொன்னபோது,

அது அப்ப.... இப்ப இப்படி சாதிப் பெயர் போட்டு ஒட்டக் கூடாது தெரியுமா..? எவ்வளவு படிச்சு இருக்கீங்க...  வாங்க ஸ்டேசனுக்கு  என்றார்.

போலீசைக் கண்டு அரண்டு போன இருவரும் அவர்களது செல்போனில் தெரிந்தவர்களுக்கு போன் செய்தனர்.. அவரிடம் விபரத்தை சொன்னார்கள். போனில் பேசியவர் போலீசை பேசச் சொன்னபோது. போலீசிடம் போனை கொடுத்தார்கள்.

போலீசு, செல்போனை வாங்கிப் கெத்தாக பேசினான்.... இன்ஸ்பெக்டர் உத்தரவு போட்டு இருக்கிறார்... அதனால்தான் நிப்பாட்டி வச்சிருக்கேன் என்றார். பிறகு..சரி. சரி... முடியாது..முடியாது பேசிவிட்டு போனை அவர்களிடம் தந்தார்.

தம்பிகளா...!! இந்த ஒருவாட்டி உங்கள மன்னிச்சு விட்டுடுறேன்...இன்ஸ்பெக்டருக்கு தெரிந்தால் ..உங்களுக்கு கம்பிதான்... அதனால... செல்போனில் பேசியவர்க்காக  அனுப்பி விடுகிறேன். உங்க ஏரியாவுக்குள்ளயே  ஒட்டங்கப்பா... என்றபடி. அவர்கள் கொடுத்த ரூபாயை எண்ணிப் பார்த்தவர்.... ஏய்..என்னயா. குறையுது?.   வேணாம் வேணாம் நடங்க என்றபோது.. திரும்பவும் அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, சரிப்பா...பாத்துப்போங்க..... என்றவர் வண்டியின் சாவியைக் கொடுத்தார்.

வண்டிச் சாவியை வாங்கிக் கொண்டு விரைவாய் ஸ்டார்ட செய்து வண்டியை கிளப்பி சென்று மறைந்தனர்.அவர்கள் இருவரும்.

மறுநாள் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும்  அவர்களின் நண்பர்களும் உறவினர்களும்  தெரிந்தது.அழகாய் சட்டம் பேசி 500ரூபாய்  வழிப்பறி செய்தது.  போலி போலீஸ் என்று....

வெள்ளி 08 2016

நல்லா இருந்த ஊரும்..ஒரு சாராயக்கடையும்....

வாங்க  தம்பி..வாங்க..தம்பி... இந்த ஊரு ஒரு காலத்துல நல்லா இருந்த ஊரு தம்பி. சாதிமத வேறுபாடுகள் இருந்தாலும் அதுவால இந்த ஊரு நாசமா போனதில்ல தம்பி..

இந்த ஊருல...ஒரு பாப்பானோ, பிள்ளையோ இருந்தாலும்..அவிங்களால ஊரு ரெண்டு படாம இருந்த ஊரு தம்பி, எந்த கட்சியாக இருந்தாலும் அதால முட்டி மோதி சண்டையிட்டு போலீஸ் ஸ்டேசனுக்கெல்லாம் போகாத ஊரு தம்பி,

சொன்னா நம்ப மாட்டிங்க தம்பி, அரசாங்கம் இந்த ஊருல , என்னிக்கு சாராயக் கடையை திறந்ததோ.. அன்றையிலிருந்து இந்த ஊருக்கு சனியன் பிடித்து நாசமா போச்சு தம்பி...

வீரப்போர் புரிந்து நெஞ்சிலே வீரத் தழும்பு பெற்ற வீரத் தமிழனின் வாரிசசெல்லாம் சாராய தமிழனாக ஆகிட்டாங்க தம்பி,  புலியை முறத்தால அடிச்சு விரட்டிய வீரத் தமிழச்சிக எல்லாம்.. சாராயக் கடைய பாதுகாக்கும் போலீசிடம் லத்தி அடி வாங்கி ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலஞ்சுகிட்டு இருக்ககுதுக தம்பி,

என்ன செஞ்சும் சாராய சனியனை விரட்ட முடிய தம்பி, பொது நலத்துக்கு போராடியவங்கெல்லாம். இந்த ஊருக்காரங்கே ஒத்துழைப்பு கொடுக்காததினால... அவனவன் தன் சொந்த பொழப்ப பாக்க போயிட்டாங்க தம்பி.

ஒரு காலத்துல பல ஊருக்கு வழிகாட்டியா இருந்த ஊரு, இன்னிக்கு. சாராயக்கடையால நாசமா போச்சு தம்பி, நீங்க இருக்கிற ஊரு, கள்ளச் சாராயம் காய்ச்சி போலீஸ வண்டியிலேயே ஊரு ஊராக வித்த ஊரு தம்பி  உங்க ஊரும் நல்லா இருக்காதுன்னு தெரியும் தம்பி,

உங்க ஊரும், இந்த ஊரும் வேணான்னு நகரத்துக்கு போனாலும்.. அங்கு என்ன வாழுது. நகரம் நரகம் பிடிச்ச கதையாக ஆகிப்போச்சு தம்பி. இப்படியே போனா..நல்லா இருந்த ஊரு, நாசமா போனது மாதிரி, இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமா போவதை பார்க்க நீங்களும் நானும் இருக்க மாட்டோம் தம்பி.

மணி பணிரென்டாகிவிட்டது. இந்நேரம் கடைய திறந்திருப்பான்...குடிக்கிறவன் குடிக்காம திருந்தவதற்க்காக ரெண்டு மணி  நேரம் லேட்டா திறக்குறாங்கே.தம்பி .என்னடா எழவுன்னு கேட்டா..அரசாங்க உத்தரவுங்கிறான் தம்பி..

வாங்க தம்பி. கூட்டத்தோடு கூட்டமா போயி, நாமாலும் ஒரு கட்டிங் போட்டுட்டு வந்திருவோம்.. வாங்க தம்பி. அட..வாங்க தம்பி, குடிக்கிறது. தப்பே இல்லேன்னுதானே அரசாங்கமே கடைய திறந்திருக்கு...   தம்பி குடிக்கிறது தப்பே இல்ல ... குடிக்காம இருக்கிறதுதான் தப்பு தம்பி இதோட, குடிக்கிறவங்களை தடுக்கிறது, கடைய அடைடான்னு  என்று போராட்டம் பன்றதுதான் தம்பி  குத்தம்.. சாரயவிக்கிற அரசாங்கத்த எதிர்க்கிறதுதான்

அங்க பாருங்க தம்பி  நாத்தமெடுத்த வாசகத்த..“ குடி குடியை கெடுக்குமாம், குடிக்காமல் இருப்பது அரசாங்க வருமானத்தை கெடுக்குமாம் பாத்தீங்கல்ல அரசாங்கத்து  வந்த கொழுப்ப”  அப்படியே  குடிக்காமல் இருப்பது உடல் நலத்தையும் கெடுக்கும்னு  போடாமல் விட்டுருக்கான் தம்பி.

என்னதம்பி என்னய இப்படி பாக்குறிங்க... குடிக்கா பேசுறேன்னா பாக்குறிங்க போங்க தம்பி, ஒங்கிட்ட சொல்றதுக்கு என்ன  இரகசியம் இருக்கு... உங்க கிட்ட நான் இப்படி ஸ்டெடியா பேசுறென்னா.... காலைல எழுந்தவுடன் இறக்கிய சரக்குதான் தம்பி.

 எப்படி சரக்கு கிடைச்சிருக்கன்னா யோசிக்கிறீங்க..தம்பி, அட. போங்க தம்பி .விவரம் தெரியாம இருக்குறீங்க.....எதுக்கு பார்ன்னு ஒன்னு வச்சிருக்கான்... விவரம் தெரியாமல் இருக்கக்கூடாது தம்பி....




புதன் 06 2016

“அம்மா”ன்னு அழைக்காத உயிரினம்....!!!



வணக்கம் நண்பா..நலமா..? என்று வந்தார் நண்பர். வந்தவர் என்னருகில் அமர்ந்து ஒரு கேள்வி கேட்பேன் அதற்கு சரியான பதிலை கூறு என்று விட்டு கேள்வியைக் கேட்டார்.

தமிழ்நாட்டில் “அம்மான்னு அழைக்காத உயிரினம் எது ? என்று நண்பர் கேட்டபோது நானும் சட்டென்று ஒரு கேள்வியைக் கேட்டேன். இரண்டுகால் உயிரினமா? நாலுகால் உயிரினமா? என்று...

நான் கேட்டதும் கெக்கே பிக்கே..ன்னு சிரித்தார். சிரித்து முடித்தப் பின், அம்மான்னு அழைக்காத இரண்டு கால் உயிரினம் தமிழகத்தில் இல்லையே நண்பா...என்றார்

நான் என் புருவத்தை உயர்த்துவதைக் கண்டதும்.“பாரு..புரட்சிப் படகரான மகஇக தோழர் கோவன் கூட அம்மான்னு அழைக்காம பாடல் பாடியதாக இல்லீயே நண்பா....நீங்க படிக்கும் வினவு தளம் கூட அம்மான்னு எழுதாம விட்டதில்ல நண்பா....  அதனால ரெண்டு கால் உயிரினத்தில் அம்மான்னு கூப்பிடாத உயிரினம் இல்லை. அதனால ரெண்டுகால் உயிரினத்த விட்டுட்டு நாலுகால் உயிரினத்தை சொல்லுங்க என்றார்.

நானும் “புருவத்தை நெரித்தால் புதிய உபாயம் தென்படும்” என்று தோழர் சொன்ன மாதிரி சிறிது நேரம் யோசித்தேன் சாராய ராணியை அம்மான்னு கூப்பிடாத நாலுகால் பிராணி எது என்று..  

சிறிது நேரங்கழித்து

நண்பரே, என் அறிவுக்கு எட்டிய வரையில் யோசித்து பார்த்த வரையில் “அம்மான்னு கூப்பிடாத  நாலுகால் உயிரினத்தில் முதலில் வருவது “நாய்தான் என்றேன்.

அடித்தாலும் மிதித்தாலும், கல்லைக் கொண்டு எறிந்தாலும். அது..தன்னை பெற்ற அம்மாவைக்கூட “அம்மான்னு கூப்பிடாது நண்பரே...

நண்பர் அடுத்து கேட்டார் அம்மான்னு கூப்பிடாது என்றால் பின் எப்படி கூப்பிடும் என்று கேட்டார்.

நண்பர்க்கு ரியலாக காட்டுனால்தான் புரியும் போல என்று நிணைத்து, லொள்....லொள்...லொள் என்று கத்தி நடித்துக் காண்பித்தேன்.

அட, ஆமா.... நாயி அம்மான்னு கூப்பிடாதுல்ல உண்மையிலே மனிதர்களைவிட நாய்தான் சுயமரியாதை உள்ளது என்று சொல்லிவிடலாம் போல என்று விட்டு அவரும் கத்தி பார்த்து, லொள்ளு...லொள்ளு லொள்ளு ..ன்னுதான் கூப்பிடுது என்றார்.அடுத்து எது என்றபோது..

பன்னி என்று நான் சொன்னபோது..“அவரே பன்னி மாதிரி உறுமி காண்பித்தார். வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன.

ஆக, தமிழ்நாட்டுல “அம்மான்னு கூப்பிடாத உயிரினம் இந்த ரெண்டு மட்டும்தானா..? என்று கேட்டார்.

எனக்கு தெரிந்து இதுதான். நண்பரே...மற்றும் ஆங்கிலம், இந்தி படித்த பெரிய அறிவாளிகளிடம் கேட்டால்..அவர்கள் கண்டு பிடித்து அவைகள் ஏன்? அம்மான்னு கூப்பிடவில்லை  என்று ஆய்வுக்கு உட்படுத்தி அதன் பிறகு முடிவுகளை தெரிவிப்பார்கள்.நண்பரே.என்றபோது...

“அய்யோ, அவிங்க ஆய்வுக்கு உட்படுத்தவே ஐந்து வருடத்துக்கு மேல் ஆகுமே நண்பா....என்றார்

அடுத்த அய்ந்து வருடம் கழித்து  நாயும் பன்னியும் ஓட்டு போட்டு மீண்டும அவர்களே !   ஆட்சிக்கு வந்த பின்  நாயும் பன்னியும் “அம்மான்னு கூப்பிட்டதாக ஆய்வில் கண்டுபிடித்ததாக தெரிவிப்பார்கள் என்றபோது 

நண்பர் ..., “அடடா.....வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டோமே”  என்று......பேந்த பேந்த முழித்தார்..

 ,

செவ்வாய் 05 2016

குடி வெறியால் விளைந்த பய வெறி....!!!..



என்றைக்கு அரசாங்கம் சாராயம் விற்க ஆரம்பித்ததோ, அன்றையிலிருந்து தான் சாராய வடிக்கையாளன் என்று பெருமையாக தன் குடிகார நண்பர்களிடம் பீற்றிக் கொள்வான் அந்தக் குடிகாரன்.

அந்தக் குடிகாரனின் குடிகார நண்பர்களும் தங்கள் பங்குக்கும் சில அருமை பெருமைளை கூறி அரசாங்க சாராயத்துக்கு வாடிக்கையாளர்கள் என்று அவர்களும் பீற்றிக் கொள்வார்கள்.

பெருமை பேசியே நிரந்தர குடிகாரனாக போய்விட்ட அந்தக் குடிகாரன் வேலை கிடைக்கும் நாட்களில் வேலை செய்து கிடைக்கும் கூலியில் பெரும்பகுதியை அரசாங்க சாராயக் கடைக்கு கொடுத்து. கடைக்கு சற்று அருகில் உள்ள இடத்தில் அமர்ந்து அரசு சாராயத்தை உள்ளே இறக்கிவிட்டு தள்ளாடிய படியே தன் வீடு வந்து சேர்வான்.

வீடு வந்து சேர்ந்தவுடன். தன் மனவியிடம்  கேடுகெட்ட வசவுகளுடன் தன் வீரத்தை காட்டுவான். குடிவெறியில் இருப்பவனிடம் எதுவும் பேசாமல் அவன் தெறிக்க விடும் வசனங்களையும் விழும் அடிகளையும் உதைகளையும், பொருத்தார் பூமியை ஆள்வார் என்பது போல் வாங்கிக் கொண்டு அமைதியாக இருப்பாள். பக்கத்து வீட்டீல் உள்ளவர்களுக்கும் நிரந்தர  நிகழ்வாக போய் விட்டதாலும் அவர்களின் வீடுகளிலும் இந்தக் கூத்துகள் நடப்பதால் எதுவும் கண்டு கொள்வதில்லை. எதிர்த்து எந்த முனு முனப்பும் செய்வது இல்லை

அரசாங்க சாராயத்தை குடித்துவிட்டு குடிவெறியில் வருபவன்களை கேட்க நாதியற்று போனதாலும் சனியன்களை தலைமுழகிவிட்டுச் செல்ல வேறு போக்கிடம் இல்லாத்தால். அடி உதை வாங்கி விதி வந்தால் சாவோம் என்று குடிகாரன்களின் மனைவி மார்கள் காத்திருந்தார்கள்.

அப்படி காத்திருந்தாள் அரசு சாராயக் கடையை திறந்த்திலிருந்தே தான் வாடிக்கையாளன் என்று தற்பெருமை பேசித் திரிந்த குடி வெறியனின் மனைவி.

பல நாளில் ஒரு நாள் அந்த நாளும் வந்தது போதை வெறியுடன் வந்தவன். வழக்கம் போலவே தன் மனைவியை வசவுகளுடன் அடித்துவிட்டு உதைத்துவிட்டு, போதையிலே அவள் அருகிலேயே படுத்து தூங்கியும்விட்டான்.

காலை. போதை தெளிந்து எழுந்தவன். தன் மனைவி எழுந்திருக்காமல் படுத்திருப்பதைக் கண்டான். அவள் பெயரைச் சொல்லி திட்டி எழுந்திருக்கச் சொன்னான். அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வருவதினால் கோபத்துடன் எழுந்து. அவளை காலால் எத்தினால். அவள் அசைவற்று கிடந்தாள்.

பதறிப்போன அவன் அவளை தொட்டு தூக்கி பார்த்தபோதுதான் அவனுக்கு உரைத்தது. தான் குடிவெறியில் அவளை  அடித்து உதைத்த்தினால் இறந்து போனது தெரியாமல் அவள் அருகில் படுத்திருந்த்து எல்லாம். தன் இரண்டு குழந்தைகளை பார்த்தான்

அதுகள் இரண்டும் இரவில்  நடந்த்து தன தாய் இறந்து போனது எதுவும் தெரியாமல் பக்கத்து குழுந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த்து.
குடிவெறியில் வரும்போது எதிரில் வரும் போலீசைக் கண்டு பயப்படாமல் வந்த குடிவெறியனுக்கு இப்போது போலீசை நிணைத்து பயவெறி தொற்றிக் கொண்டது. என்ன செய்வது என்றே தெரியாமல். ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் தவித்தான்.கைகள் கால்கள் நடுங்கின. தன் மனைவி முகத்தைப் பார்த்தான். இரவில் சத்தம் போட்டு வசவுகளை ஏசியவனுக்கு நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டது. அழ முடியவில்லை. பேச முடியவில்லை...பய வெறியால தவித்தான்.

விளையாடிய குழந்தைகள் வீட்டுக்குள் நுழைந்தபோது. அப்பன்தூக்கில் தொங்குவதைக் கண்டு வெளியில் வந்து உடன் விளையாடிய பிள்ளைகளிடம் சொல்ல... தீயாக பரவியது. அக்கம்பக்கம் எல்லோரும் குடிவெறியன் தூக்கில் தொங்குவதையும் அதன் கீழே அவன் மனைவி பிணமாக கிடப்பதையும் பரிதாப்ப் பட்டு வேடிக்கை பார்த்தனர்.

அரசாங்க சாராய கடைக்கு காவல் காக்கும் போலீஸ் வந்தது. கூட்டத்தை விரட்டியது. சாராய வடிக்கையாளனின் பொணத்தையும், குடிவெறியால் கொன்ற வாடிக்கையாளனின் மனைவி பொணத்தை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு சென்றது.

அந்தத் தெரு கூட்டத்தோடு குடிவெறியனின் இரு குழந்தைகளும். தன் தாய் தகப்பனை தூக்கி,  வண்டியில் ஏற்றிச் சென்றதை  பார்த்த வண்ணம் நிர்க்கதியாய் நின்றது.




திங்கள் 04 2016

பேத்திக்காக சிறை சென்ற பாட்டி



ஏழாவது படிக்கும் அந்தச் சிறுமியின் பெயர் பிரியங்கா, இருந்த போதும் பிரியங்காவுடன் படிக்கும் பள்ளி, மற்றும் வகுப்பு மாணவிகள் கூப்பிடுவது, குறிப்பிடுவது, சுட்டிக்காட்டுவது எல்லாமே  கஞ்சா பாட்டியின் பேத்தி என்றுதான்.

பிரியங்கா என்ற பெயரைவிட கஞ்சா பாட்டிபேத்தி என்ற பெயரே அந்தப்பள்ளி முழுவதும் பிரபலமாக விளங்கியது.

பிரியங்காவின் வகுப்பு ஆசிரியர் உள்பட அந்த அந்தப்பள்ளியின் ஆசிரியர்களோ.“பிரியங்காஎன்று பெயர் சொல்லி அழைக்காமல் கஞ்சா பாட்டி பேத்தி என்றே அழைத்தனர்.

பிரியங்காவுக்கோ, தன்னை எல்லோரும் தன் தோழி உள்பட கஞ்சா பாட்டி பேத்தி என்று அழைப்பது ஒருவிதமான  அவமானத்தையும் இகழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஒரு நாள் பிரியங்கா, மனக் குமுறலோடும் அழுகையோடும் , பள்ளி முடிந்து வந்தவுடன் தன்பாட்டியிடம் கொட்டித் தீர்த்தாள்.

“தன்னை எல்லோரும் “கஞ்சா பாட்டி பேத்திஎன்றே  அழைக்கிறார்கள். “நீ கஞ்சா விற்பது எனக்கு கேவலமாக இருக்கிறது.. நீ ..கஞ்சா விற்பதை நிறுத்தாவிட்டால் நான் பள்ளிக்கு போகப்போவதில்லை.. அதோடு நான் செத்துப் போவேன் என்று தன் பாட்டிக்கு  எச்சரிக்கை விட்டார்  சிறுமி பிரியங்கா......

பேத்திக்கு ஏற்பட்ட அவமானத்தையும் மனக்குமுறலையும் எச்சரிக்கையையும்  கண்டு பதைபதைத்த பிரியங்காவின் பாட்டி, மனதில் தீர்மனமாக ஒரு முடிவு எடுத்து, தன் பேத்தியிடம் உறுதிபட தெரிவித்தார்.
இனிமேல். எந்தச் சூழ்நிலையிலும் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் கஞ்சா விற்கும் தொழிலை செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தார்.

அன்றையிலிருந்து பிரியங்காவின் பாட்டி கஞ்சா விற்கும் தொழிலை நிறுத்திவிட்டு, மானமுள்ள வேலைக்கு சென்று விட்டார்.

ஒரு மாதம் கடந்து சில நாள் ஆனபிறகு ஒருநாள், பிரியங்காவின் பாட்டியைத் தேடி  அப்பகுதி போலீஸ் வந்து காவல் நிலையத்துக்கு கூட்டிச் சென்றது. காவல் நிலையத்தின் ஆய்வாளர். அந்தப் பாட்டியிடம் மாதா மாதம் வரும் மாமூல் சென்ற மாத்த்தில் கொடுக்காத மாமூலை ஏன் கொடுக்கவில்லை என்று விசாரித்துக் கொண்டு இருந்தான்.

தன் பேத்திக்காக, கஞ்சா விற்கும் தொழிலை கைவிட்டதாகவும் , தன் பேத்திக்கு கொடுத்த வாக்குறிதிக்காகவும் தாம் இனிமேல் கஞ்சா விற்கப்போவதில்லை என்று காவல் ஆய்வாளரிடம் கூறினார்.

அந்தக் காவல் ஆய்வாளரோ, பிரியங்காவின் பாட்டி சொன்னதை கேட்டு ஏளனமாக சிரித்துவிட்டு, மாதம் மாதம் எங்களுக்கு மாமூல் கிடைக்க வேண்டும் அதனால்  நீ கஞ்சா விற்க வேண்டும்  இல்லை என்றால் உன்னை கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் தள்ளுவோம். அதனால் எதிர்த்து எதுவும் பேசாமல் கஞ்சா விற்று மாத மாதம் மாமூல் கட்டுற வழியைப் பார். என்று மிரட்டியபடி கண்டிப்பு செய்தான்..

காவல் ஆய்வாளரின். மிட்டலுக்கும் கண்டிப்புக்கும் பயப்படாத அந்த மூதாட்டி,என் தலைமுறையோடு இந்த ஈனத் தொழில் ஓழியட்டும் சிறை சென்றாலும் பரவாயில்லை.. இனிமேல் கஞ்சா விற்கப் போவதில்லை என்று உறுதியுடன் கூறினார்..

கோபம் கொண்ட ஆய்வாளர் ரைட்டரை கூப்பிட்டு,. இந்தக் கிழவி வீட்டில் கிலோ கணக்கில் கஞ்சா கைப்பற்றதாக பதிவு செய்து குண்டர் சட்ட செக்சனைபோட்டு  வழக்கு பதிவு செய் என்று உத்தரவிட்டான்.

தன் பேத்திக்காக கஞ்சா விற்கும் தொழிலை கைவிட்ட பாட்டி,  மீண்டும் போலீசின் மாமூலுக்காக மீண்டும் கஞ்சா விற்கச் சொன்ன காவல் ஆய்வாளரின் மிரட்டலையும் மீறி, கஞ்சா விற்க மறுத்தற்க்காக, கஞ்சா விற்றதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிறார்  

இது பிரியங்காவிற்கு வருத்தமாக இருந்தாலும் கஞ்சா பாட்டி பேத்தி என்ற அவப் பெயர் மறைவதில் பெருமையாக இருந்தது.

 கூடவே, போலீஸ.ஸ்டேசன் மாமூலுக்காக, கஞ்சா விற்க மறுத்த பிரியங்காவின் பாட்டி பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்  என்ற செய்தியும் வைரலாக பரவியது.. 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...