பொள்ளாச்சி விவகாரம்: துரோபதைகளும் சூர்ப்பனகைகளும்
தனியன்
சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன் (2016) இதே மார்ச் மாதம். உடுமலைப்பேட்டை. தான் பிறக்க நேர்ந்த சாதிக்கு வெளியே ஒரு தலித் இளைஞரைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறார் ஒரு பெண். அதைப் பொறுக்க முடியாமல் அந்தப் பெண்ணின் பெற்றோரும் அவரது சாதிக்காரர்களும் ஆட்களை ஏவி அந்த இளைஞரைப் பட்டப்பகலில் முச்சந்தியில் துள்ளத் துடிக்க வெட்டிக் கொன்றார்கள்.
அந்த ஒட்டுமொத்த கோரமும் காணொலியாகப் பதிவானது. ஊரும் சமூகமும் பெருமளவு வேடிக்கை பார்த்தன. புரட்சி எதுவும் வெடித்துவிடவில்லை. உண்மையில் உள்ளூர் மட்டத்தில் கொலை செய்வித்த பெற்றோருக்கான ஆதரவு மிகுந்திருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவர் பிறந்த ஊரில் பெரிய ஆதரவில்லை.
மூன்றாண்டுகள் கழித்து அதே மார்ச் மாதத்தில் பொள்ளாச்சியில் பல பெண்களை பலவந்தமாகப் பாலியல் வல்லுறவு செய்து, அதைப் படம் எடுத்து, அதைக் காட்டி மிரட்டி, சொல்ல முடியாத கொடுமைகளைச் செய்கிறது ஒரு கொடூரக் கும்பல். அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக நியாயம் கேட்கப் போன அவரது சகோதரரை ஆளும்கட்சியின் பதவியில் இருக்கும் இளைஞர் ஒருவர் அடித்து மிரட்டியதாக அந்தச் சகோதரரே புகார் செய்கிறார்.
பெண்களை பலாத்காரம் செய்த கும்பலைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதில் பாதகம் செய்தவர்களுக்கு ஆதரவாக ஆளும்கட்சிக்காரர் களமிறங்குகிறார். காவல் துறையும் இதை வெறும் “கைகலப்பு சண்டை” என்கிற அளவிலேயே கையாள்கிறதே தவிர, கைகலப்பின் மூலம் எது, அதன் பின்னிருந்த விபரீதம் என்ன என்று ஆராயாமல் விடுகிறது. அல்லது மூடி மறைக்கப் பார்க்கிறது.
காவல் துறையின் இந்த அணுகுமுறைக்கு மூன்று காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒன்று காவல் துறையின் தொழில்முறை அலட்சியம் அல்லது ஆளும்கட்சியின் அழுத்தம் அல்லது காவல் துறையும் இதை “சொந்த சாதிப் பிரச்சினையாக” மட்டுமே பார்த்து கட்டப் பஞ்சாயத்தாக முடிக்கப் பார்த்தது.
பிரச்சினை பெரிதான பின்பும் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய குற்றத்துக்குத் துணைபோன இந்த ஆளும்கட்சிக்காரர், தான் பாதிக்கப்பட்டவன், தனக்கு எதிராகத் தன் அரசியல் எதிரிகள் சதி செய்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடமே நேரில் சென்று புகார் கொடுக்கிறார். ஊடகங்களிடம் பேட்டி கொடுக்கிறார். அவரது கட்சியைச் சேர்ந்தவரும் உள்ளூர் அரசியல் பெருந்தலையும் தமிழ்நாட்டின் முதல்வருமானவரோ இதுகுறித்து இதுவரை வாயைத் திறக்கவே மறுக்கிறார்.
உண்மையில் நாம் வாழும் காலம் கொடுங்காலம்தான்.
இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே பிராந்தியத்தில் நடக்கின்றன. அதன் பெயர் கொங்கு மண்டலம். கடும் உழைப்புக்கும் தொழில்முனைப்புக்கும் பெயர்பெற்ற பிராந்தியம். திருப்பூர் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற பகுதி. பசுமைப் புரட்சியைச் செய்துகாட்டிய சி சுப்பிரமணியம் போன்ற ஜாம்பவான்களையும் விஞ்ஞான ஆய்வின் முன்னோடியான ஜி.டி.நாயுடுகளையும் உருவாக்கிய கொங்கு மண் இன்று பார் நாகராஜன்களையும் அவரது கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
இங்கே ஒப்பிடப்படும் இரு நிகழ்ச்சிகளும் நடந்தேறிய உடுமலைப்பேட்டைக்கும் பொள்ளாச்சிக்கும் 29 கிலோமீட்டர் தொலைவு. இரண்டு சம்பவங்களுமே பெண்களை மையப்படுத்தியவை. அவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பானவை.
தனக்குப் பிடித்தவனோடு வாழவிரும்பும் பெண்களைச் சாதியின் பேரால் துரத்தித் துரத்திக் கொல்லத் துடிக்கும் குடும்பங்களும் அவர்களை ஆதரிக்கும் சமூகமும், பெண்களைச் சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கியவர்களைப் பாதுகாக்கும் ஆளும்கட்சி, காவல் துறை, ஊடகங்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் கடந்து செல்லப் பழகியிருக்கின்றன.
இதன் பின்னிருந்து இயக்கும் தனிமனித உளவியல், பொதுச் சமூகக் கருத்தியல் எது அல்லது எவை என்கிற கேள்வியைக் கேட்டாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
நமது சாதிய மதிப்பீடுகளே நமது கலாச்சார மதிப்பீடுகளாக, அரசியல் அளவீடுகளாக, அறச் சீற்றங்களின் அடிப்படையாக அமைந்திருக்கின்றன என்பதுதான் இதற்கு முதன்மைக் காரணம். அனுதினமும் அனைத்திலும் இவைதாம் நம்மை வழிநடத்துகின்றன. இதே அணுகுமுறையைத்தான் நாம் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகளும் அவர்கள் உருவாக்கும் அரசு இயந்திரமும் கடைப்பிடிக்கின்றன. நடைமுறைப்படுத்துகின்றன.
அதனால்தான் எந்த ஒன்றிலும் பாதிக்கப்பட்டவர் யார், பாதிப்பை ஏற்படுத்தியவர் யார், இருவரின் சாதி, மதப் பின்புலங்கள் என்ன என்பதைப் பொறுத்தே நாம் பொங்கி எழுகிறோம். அல்லது அமைதிகாத்து கவனமாகக் கடக்க முயல்கிறோம்.
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றமிழைத்தவர்களில் தலித்தோ, மதச் சிறுபான்மையினரோ சம்பந்தப்பட்டிருந்தால் இந்த விவகாரத்தை மாநில, மத்திய அரசுகளும் காவல் துறையும் தமிழக, இந்திய ஊடகங்களும் நீதிமன்றங்களும் அரசியல் கட்சிகளும் இப்படித்தான் கையாண்டிருக்கும் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?
கண்டிப்பாக இல்லை. இந்நேரம் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ரணகளமாகியிருக்கும். நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் தமிழ்நாட்டில் இதுவே முதன்மையான கருப்பொருளாக மாறியிருக்கும். 2014 தேர்தலில் 2ஜி விவகாரம் முதன்மைப்படுத்தப்பட்டதைப்போல.
டெல்லி நிர்பயா கொலை, நுங்கம்பாக்கம் சுவாதி கொலை போன்றவற்றுக்கு எதிராக பாஜக உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பான்மை அரசியல்கட்சிகளும் பெண்ணிய அமைப்புகளும் சினிமா பிரபலங்களும் இன்னுமுள்ள சமூகச் செயற்பாட்டாளர்களும் எழுப்பிய பரவலான கண்டனக் குரல்கள், நடத்திய போராட்டங்கள் நினைவிருக்கிறதா?
சூர்ப்பனகைகளும் துரோபதைகளும்
அப்படியான அறச்சீற்றங்கள் எவையும் இப்போது அரசியல் அரங்கிலோ (திமுக, இடதுசாரிப் பெண்ணிய அமைப்புகள் தவிர்த்து), அரசாங்க மட்டத்திலோ, சமூகத்திலோ, ஊடக வெளியிலோ பெரிதாக உருவாகாமல் இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை. ஏனெனில் இந்து மத இதிகாச புராணங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் நமது பொதுப்புத்தியில் துரோபதைகளுக்கான இடம் வேறு. சூர்ப்பனகைகளுக்கான இடமே வேறு.
துரோபதைகளைத் துகிலுரிய முயன்றால் நாம் துடிதுடித்துப்போகிறோம். அதை செய்யப் புகுந்த துச்சாதனன்களையும் அதற்கு ஆணையிட்ட துரியோதனன்களையும் வதம் செய்தே ஆக வேண்டும் என்று உணர்வு கொள்கிறோம்.
ஆனால், சூர்ப்பனகைகளின் மூக்கும் காதும் முலைகளும் அறுக்கப்பட்டாலும் நாம் அதற்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டோம். அதைவிடக் கொடுமை, அவற்றை அறுத்தெறிந்த ராம லட்சுமணர்களை தெய்வமாகத் தொழுவோம். உதாரண புருஷர்களாக வழிபடுவோம்.
ஏனென்றால் துரோபதை உயர்சாதி இந்து ஆணின் அத்தனை அத்துமீறல்களுக்கும் உடன்பட்டுப் பயணித்த பெண். தன் விருப்பத்தை அவள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட அரச குல தருமத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கிறாள். தருமன் தன்னைப் பணயம் வைத்து தோற்ற பின் அழுது புலம்புகிறாளே தவிர பாண்டவர் ஐவரையும் எதிர்க்கவில்லை. நிராகரிக்கவில்லை. அவர்களின் ஆணை ஏற்று நடக்கும் தர்மபத்தினியாகவே இறுதிவரை அவர்களோடு பயணிக்கிறாள். எனவே, இந்து ஆண்மன உளவியலுக்கு துரோபதை தொழத்தக்க தெய்வம். போற்றத்தக்க பெண்ணுக்கான முன்மாதிரி. துரோபதையின் பெண்ணியப் புரட்சி என்பது பாரதி போற்றிப் பாடிய “காதலொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தே” ரகம்.
சூர்ப்பனகை தன் விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்கிறாள். தான் விரும்பிய ஆணை அடைய அவள் மீண்டும் மீண்டும் முயல்கிறாள். ஏற்கனவே திருமணமான ஆணான முருகன் வள்ளியை அடையத் திரும்பத் திரும்பத் துரத்தினால் அதை ஆஹாவென ரசிக்கும் இந்திய, தமிழ் ஆண்கள், அதே அணுகுமுறையை சூர்ப்பனகை என்கிற பெண் செய்யும்போது முகம் சுளிக்கிறார்கள். விளைவு, தன் காதல் விழைவை வெளிப்படையாகச் சொன்ன சூர்ப்பனகை வில்லியாகிறாள். அதற்கான தண்டனையாக அவளது மூக்கும் காதும் முலைகளும் அறுக்கப்பட்ட கேவலத்தைக் கண்டு ஆண் மனம் குற்றவுணர்வு எதையும் கொள்ளவில்லை. மாறாக, மறைமுகமாக குதூகலிக்கிறது. வெளிப்படையாகக் கொண்டாடுகிறது. “காமப் பிசாசும் அடங்காப்பிடாரியுமான சூர்ப்பனகையின் கொட்டத்தை உரிய முறையில் அடக்கிய” ராம லட்சுமணர்கள் இந்து ஆண்களின் ஆதர்சமாகிறார்கள்.
ஆதிமுதலே சுயமாகச் சிந்திக்கும் பெண், சுயமாக முடிவெடுக்கும் பெண், சுயமாக தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் பெண், சுயமாக வாழ விரும்பும் பெண்கள், ஆண்களின் ஆகப் பெரிய ஆழ்மன அச்சுறுத்தலாகவே இருந்துவந்திருக்கிறார்கள் என்பதற்கு இதிகாச சூர்ப்பனகைகளே சாட்சியங்கள். இந்திய, இந்து சமூகம் அத்தகைய பெண்களை இன்றும் அப்படித்தான் நடத்தும் என்பதற்கு பொள்ளாச்சி பெண்களே நம் சமகால சாட்சியங்கள்.
பொள்ளாச்சி விவகாரத்தில் “இந்த பொம்பளைங்க எதுக்கு முன்னபின்ன தெரியாதவன் கூட பழகுதுங்க? அவனுக கூப்பிட்டா எதுக்கு தனியா போகுதுங்க?” என்கிற கேள்விகளே மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன. இப்படி நடக்காமல் பெண்கள் தப்புவது எப்படி என்கிற உபதேசங்களே செய்யப்படுகின்றன. மீண்டும் மீண்டும்.
திட்டமிட்டுப் பெண்களை ஏமாற்றிய ஆண்களுக்கு எதிரான ஆத்திரமோ, விரும்பாத பெண்களை பலவந்தமாக வல்லுறவு செய்தவர்களுக்கு எதிரான வெறுப்போ இதைத் தடுத்திருக்க வேண்டிய, அல்லது கொடூரம் செய்தவர்களைத் தண்டித்திருக்க வேண்டிய அரசாங்கம், ஆளும்கட்சி மற்றும் காவல் துறைக்கு எதிரான கோபமோ உரிய அளவு உருவாகாமலிருப்பதன் பின்னிருக்கும் உளவியலும் இதுவே.
வழிபட துரோபதைகளையும் தண்டிக்க சூர்ப்பனகைகளையும் தேடிக்கொண்டே இருக்கிறது இந்திய, இந்து ஆண்மனம். இதிகாச காலம் முதல் 21ஆம் நூற்றாண்டு வரை இதில் பெரிய மாற்றம் நிகழவில்லை என்பதற்குப் பொள்ளாச்சி விவகாரம் சார்ந்த பொதுச்சமூக எதிர்வினைகளே சாட்சியங்கள்.
வேதனை
பதிலளிநீக்கு