சாதிவெறி இன்ஸ்பெக்டர் இலஞ்ச வழக்கில் கைது. வேட்டுவெடித்து கொண்டாடிய மக்கள்.
தேனி மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்மாறன், கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இப்பகுதி மக்களிடம் பணம் பறிப்பதையே தம் கடமையாக செய்து கொண்டிருந்த தமிழ்மாறன், ஒரு கைகலப்பு வழக்கில் லஞ்சம் கேட்டு, அது விஜிலென்ஸ் புகாராக ஆகி, நேற்று கையும் களவுமாக காவல் நிலையத்திலேயே பிடிபட்டார். தமிழ்மாறன் பணியாற்றிய இடங்களிலெல்லாம் இலஞ்சத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டவர். அதன் பலனாகவே இன்றைக்கு கம்பி எண்ணுகிறார். மேலும், தமிழ்மாறன் இலஞ்சப் பேர்வழி மட்டுமல்ல, மோசமான சாதிவெறியனும் கூட.
தேவர் சாதியைச் சார்ந்த இவர் விருதாச்சலம்-பெண்ணாடம் பகுதிகளுக்கு திட்டமிட்டே நியமிக்கப்பட்டவர். இவர் விருதாச்சலத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றிய போது, அன்றைய வி.சி.யின் அரசியல் குழுத்தலைவர் திருவள்ளுவன் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராணடுக்குப் பிறகு விடுதலையானதையொட்டி இயக்கத்தினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டியை ஆள் வைத்து கிழித்தார். 'அவன் என்ன தியாகியாடா?' என்று கேட்டு சுவரொட்டி ஒட்டியவர்களை தாக்கினார். இதுபோன்ற பல சம்பவங்கள் அவரது சாதிய முகத்தைக் காட்டினாலும், தமிழகமே அதிர்ந்த ஒரு சாதியாணவப் படுகொலையில் கை நனைத்ததுதான் முக்கியமானது.
2003 இல் விருதாச்சலம் அருகே உள்ள புதுக்கூரைப் பேட்டையில்வைத்து, வன்னியர்களால் விஷம் கொடுத்து, எரித்துக் கொல்லப்பட்ட காதலர்களான முருகேசன்(பறையர்)-கண்ணகி(வன்னியர்)யின் சம்பவத்தில் தமிழ்மாறனுக்கும் பங்கிருக்கிறது. அவர்கள் இருவரும் கொல்லப் படுவதற்கும் முன்னவே, காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும், விரைந்து சென்று குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, கொல்லுவதற்கு அனுமதிக்கொடுத்துவிட்டு திரும்பிய அயோக்கின்தான் இந்த இன்ஸ்பெக்டர். அப்போதே இந்த நபரின் தில்லுமுல்லு மக்களிடம் வெறுப்பை உருவாக்கியது.ஆனாலும் எந்த பதற்றமும் இல்லாமல் இலஞ்சத்தில் மூழ்கிக் கிடந்திருப்பது இப்போது தெரிகிறது. குற்றங்களை தொடர்ந்து செய்வதில் அவ்வளவு தீவிரம்.
எங்கும் இல்லா அதிசயமாக இவர் கைதை மக்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியிருக்கிறார்கள். கைவிலங்கிட்டு கொண்டு செல்லுங்கள் என்று முழங்கியிருக்கிறார்கள் அவர்கள். அந்தளவுக்கு மக்களிடம் 'நல்ல பெயரை' சேர்த்து வைத்திருக்கிறார். இடையில் புகுந்த இந்து முன்னணியினர், போலீஸ் மீது கல்வீச்சில் இறங்க, தடியடியும் நடந்திருக்கிறது. ஆனாலும் அனைத்து மக்களும் தமிழ்மாறன் கைதானதில் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.
தடியடியை தவிர்த்து இருக்க வேண்டும் காவல்துறை. ஒருவன் கல்லெறிந்தான் என்பதற்காக நூற்றுக்கும் அதிகமானவர்களை, அதுவும் வன்முறையை நாடாமல் இலஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவளித்த எளிய மக்களைத் தாக்குவது கண்டனத்திற்குரியது.
இத்தகைய சாதிவெறி போலிஸ் தமிழ் மாறனை உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்
மாற வேண்டும்...
பதிலளிநீக்குஆம் மாற வேண்டும்.
பதிலளிநீக்கு