வெள்ளி 05 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...21

 

4 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்


ஜெய்பீம் திரைப்படம் பார்த்தவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கலாம்!
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்திலுள்ள கம்மாபுரம் அருகில் உள்ளது முதனை கிராமம். இந்தப் பகுதியில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்கள் 1970கள் முதல் அங்கு வாழ்ந்துவந்தனர். (குரும்பர்கள் வேட்டை, மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுபவர்கள். வில் எய்வது இவர்கள் முன்னோர் தொழில்.) 90களின் மத்தியில், சுற்றுவட்டார கிராமங்களில் வயல் அறுவடைக் காலங்களில் குடும்பத்தோடு கூலி வேலைக்குச் செல்வது அவர்களது உபதொழிலாக இருந்துவந்தது.
1993ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில், கம்மாபுரத்திற்கு அருகிலுள்ள கோபாலபுரம் என்ற கிராமத்துக்கு இந்தக் குரும்பர் பழங்குடியினர் கூலி வேலைக்காகச் சென்றனர். அந்த ஊரில் தங்கியிருந்து விவசாயக் கூலி வேலைகளைச் செய்து, நெல்லைக் கூலியாகப் பெற்றுக்கொண்டு, சிலநாட்கள் கழித்து முதனை கிராமத்திற்குத் திரும்பியிருக்கிறார்கள்.
இந்த சமயத்தில் கோபாலபுரத்திலுள்ள ஒரு வீட்டில் அன்றைய கணக்கில் சுமார் 1.5லட்சம் மதிப்புள்ள 43.5 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 1,141 பணம் திருடுபோனது. இந்த வழக்கு தொடர்பாகக் கம்மாபுரம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டதும், வயலில் கூலிவேலை செய்ய வந்த குரும்பர் பழங்குடி மக்களைத் தேடிப்பிடித்து விசாரணைக்கு இழுத்துச் சென்றனர் கம்மாபுரம் காவலர்கள். (Crime No.107 of 1993 under Sections 457 and 380 I.P.C. – 20.3.1993)
போலீஸ் காவலில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடி இளைஞர் அவரது சகோதரர், சகோதரி மற்றும் மைத்துனர் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார். ராஜாக்கண்ணுவின் மனைவி, அவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை எனக் கெஞ்சியபோது, அவரும் காவலர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டனர்..
மறுநாள், ராஜாக்கண்ணு உடன் கைது செய்யப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிவிட்டதாகவும் அவர்கள் கம்மாபுரத்துக்குத் திரும்பவந்தால் உடனே போலீஸில் சொல்லவேண்டும் என்றும் ராஜாகண்ணு மனைவியிடம் மிரட்டும் தொனியில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அடித்து துன்புறுத்தப்பட்ட தன் கணவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பி ஓட வாய்ப்பில்லை என்றும், அவரை போலீஸார்தான் என்னவோ செய்துவிட்டார்கள் என்றும் அழுது தீர்த்த ராஜாக்கண்ணுவின் மனைவி, கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவியை நாடினார். ஆர்டிஓ, டிஎஸ்பி தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரைக்கும் புகார் கொடுத்துப் பார்த்தார்.
1993ல் அளிக்கப்பட்ட அவரது புகாரின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், “போலீஸார் விசாரணையில் ராஜாக்கண்ணு அடித்துக் கொலை செய்யப்பட்டார்” என நீதி விசாரணை கேட்டுத் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இருந்தபோதும் வெகுநாட்கள் கழித்தே இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது (S.C.No.183 of 1995).
அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு அவர்கள். அவரது உறுதுணையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில், ராஜாக்கண்ணு உட்பட மூவரின் நிலை குறித்து அறியத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் சாட்சியம் அளித்தனர். காவல்துறை சார்பில் தங்கள் மீது போடப்படும் பொய்வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
1996-ல் (அதிமுக ஆட்சி காலம் முடிந்த பிறகு) சென்னை உயர் நீதிமன்றம் ஓர் இடைக்காலத் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 3 சென்ட் நிலம், ரூ.2.65 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. கூடுதலாக இந்த வழக்கு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவுப்படி சிபிசிஐடி விசாரணை ஏற்படுத்தப்பட்டது.
சிபிசிஐடி விசாரணையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டானிலிருந்து காட்டுமனார்கோயில் செல்லும் பாதையில் உள்ள மீன்சுருட்டி அருகே ஓர் அடையாளம் தெரியாத ஆண் சடலம், ஏறத்தாழ ராஜாக்கண்ணுவின் அங்க அடையாளங்களுடன் விபத்தில் சிக்கியதாகக் கண்டெடுக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது.
இந்த முக்கியமான தடயத்தை மேலும் விசாரித்தபோது, அது ராஜாக்கண்ணுவின் உடல் என்று கண்டறியப்பட்டது. அதன் பின்னரே ராஜாக்கண்ணு மனைவியின் வழக்கு, கொலைவழக்காக மாற்றப்பட்டது.
முதலில் கடலூர் நீதிமன்றத்திலும் பின்னர், விருதாச்சலம் விரைவு நீதிமன்றத்திலும் நடந்த இந்த வழக்கில், ராஜகண்ணு காவல் நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டார். காவலர்கள் சாட்சியங்களை மிரட்டினர். அது தண்டனைச்சட்டம் பிரிவு 354-ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்டது.
ஆட்கொணர்வு மனு மூலம் இந்த வழக்கு தொடங்கப்பட்டிருந்தாலும், இரண்டு அமர்வு வழக்குகளில் விசாரணையைத் தொடங்கினாலும், 1995இல் (SC.183) பதியப்பட்ட வழக்கின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டதால் அதை வைத்து மேல்முறையீடு செய்து குற்றவாளிகள் சிலருக்கு விடுதலையும் கிடைத்திருந்தது.
ஆனால், 1997ல் சிபிசிஐடி பதிவுசெய்த கூடுதல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, (S.C No.150 of 1997) அந்த வழக்கின் விசாரணைகளும் 1995ஆம் ஆண்டின் முந்தைய வழக்கோடு தொடர்புபடுத்தப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில், நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.சி.ஆறுமுகப்பெருமாள் ஆதித்யன் ஆகியோர் அமர்வு, 2006-ஆம் ஆண்டில் ராஜாக்கண்ணு வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
♦♦♦
20-3-1993 அன்று ராஜாக்கண்ணு மீது நகைத் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் பொய்வழக்கு போடப்பட்டது. அவரது மனைவி (சாட்சி-1) சகோதரி (சாட்சி-6), மைத்துனர் (சாட்சி-3) உள்ளிட்டோர் குற்றத்தை ஒப்புக்கொள்ளச்செய்ய காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
அன்று முழுவதும் நடந்த காவல்துறை சித்ரவதைக்குப் பிறகு, இரவு 11.00 மணிக்கு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற தலைமைக் காவலர் மறுநாள் மாலை மூன்று மணிக்கு ராஜாக்கண்ணு நிலை கவலைக்கிடமானதும் அவரது மனைவியை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தினார். உடன் சாட்சிகளான பழங்குடிகள் 5 பேருக்கு தலா 10/- ரூபாய் பணம் கொடுத்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மாலை 6.00 மணிக்கு முதனை கிராமத்திற்குத் திரும்பிய ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு, மாலை 4.15 மணிக்கே ராஜாக்கண்ணு தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் ராஜாக்கண்ணுவைப் பார்த்ததாகவும் போலீஸ் தரப்பில் சாட்சி உருவாக்கப்பட்டது. (Crime No.114 of 1993 on 26.3.1993 at about 10.00 p.m. under the caption “man missing” )
ராஜாக்கண்ணுவுக்கு வேலை அளித்த, அரிசி ஆலை அதிபர் கோவிந்தராஜு தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு, அவரும் ராஜாக்கண்ணு தப்பிச்சென்றதற்கான போலீஸ் தரப்பின் சாட்சியாக்கப்பட்டார். (வழக்கு விசாரணையின்போதே கோவிந்தராஜு இறந்துவிட்டார்).
ராஜாக்கண்ணு மனைவி, குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தொடர் முயற்சிகளைத் தடுக்க, களவுபோன நகைகளை எங்கே வைத்திருக்கிறாய் என ராஜாக்கண்ணு மனைவி மற்றும் குழந்தைகள் மீண்டும் போலீஸாரால் துன்புறுத்தப்பட்டனர். பழங்குடியினரான ராஜாக்கண்ணு மனைவி மற்றும் அவரது தரப்பு சாட்சிகளை ஆடைகளை அவிழ்க்க வைத்து சித்ரவதை செய்தனர். எல்லா துன்பங்களுக்கு மத்தியிலும் சட்டப்போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை.
வழக்கு சிபிசிஐடி கைக்கு மாறிய பிறகே, 23.3.1993 அன்று மீன்சுருட்டியில் ஒரு கோவிலுக்கு அருகிலுள்ள பொதுஇடத்தில் ராஜாக்கண்ணுவின் சடலம் அடையாளம் காணப்பட்டது. சென்னை கும்பகோணம் சாலையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் வழியாக, காவல் நிலையத்தில் காயங்களுடன் பார்த்த தன் கணவர் ராஜாக்கண்ணுவை முதன்முதலாக அதுவும் இறந்த நிலையில் புகைப்படமாகப் பார்த்தார் அவரது மனைவி.
ராஜாக்கண்ணு கஸ்ட்டி மரணத்துக்குக் காரணமானதோடு, அவரது சடலத்தை அப்புறப்படுத்தி, சாட்சிகளை மிரட்டித் துன்புறுத்தி, தடயங்களை அழித்தது ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட கம்மாபுரம் காவலர்கள் 5 பேருக்கு (A1, A2, A3, A4, A5,) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அரசு மருத்துவமனை மருத்துவருக்கு (A6) மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கி, விருதாச்சலம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்கள் தவிர, இந்த வழக்கில் தொடர்புடைய ஓய்வுபெற்ற டிஎஸ்பி, கம்மாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் உள்பட 12 பேரைக் கைது செய்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏறத்தாழ 13 ஆண்டுகள் நீண்ட சட்டப்போராட்டம் நடத்திய ராஜாக்கண்ணுவின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு இறுதிவரை உறுதுணை புரிந்தவர் அப்போதைய கம்மாபுரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த கோவிந்தன். இந்த வழக்கில் வெற்றிபெறும் வரை கோவிந்தன் திருமணமே செய்துகொள்ளவில்லை. (தீர்ப்பு வந்த 2006ஆம் ஆண்டில் அவரது 39ஆம் வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது.)
பல்வேறு மிரட்டல்கள், சமரசப் பேச்சுவார்த்தைகள், அதிகார மீறல்கள் அனைத்தையும் மீறி இந்த வழக்கில் வாதாடி நீதி பெற்றுத் தந்ததில் வழக்கறிஞர் கே.சந்துருவின் பங்களிப்பு முக்கியமானது. அசாத்தியமானதும் கூட.
தன் கணவனுக்கு நிகழ்ந்த அநீதி, தன் சமூகத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம் இனி தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கும் நடைபெறக்கூடாது என்று அன்றைக்கு நீதிமன்றத்தின் படியேறிய ராஜாகண்ணுவின் மனைவியின் நிஜப்பெயர் பார்வதி. 76 வயதான அவர் இன்றும் விருத்தாச்சலம் முதனை கிராமத்தில் வசித்துவருகிறார்.
கார்த்திக் புகழேந்தி
4 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்


2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்